Wednesday, August 23, 2017

சிவகங்கை சீமையில் சூப்பர் சுற்றுலா

பதிவு செய்த நாள்23ஆக
2017
00:36




இயற்கை எழில் கொஞ்சும் பிரான்மலை, கட்டடக்கலையை பறைசாற்றும் செட்டிநாடு வீடுகள், பக்தி மணம் கமழும் ஆன்மிக தலங்கள் என, சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. சரியான வழிகாட்டுதல் இல்லாததால் பல ஆண்டுகளாக சுற்றுலா மேம்பாடு அடையாமல் இருந்தது. தற்போது சுற்றுலாத்துறை பயணிகளுக்கு வழிகாட்டி வருகிறது. 

திட்டமிடலோடு சுற்றினால் இரண்டு நாட்களில் மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் ரசித்து விடலாம். அவற்றில் சில...

செட்டிநாடு அரண்மனை

காரைக்குடி, பள்ளத்துார், ஆத்தங்குடி மற்றும் கோதமங்கலம் பகுதிகளில் காணப்படும் செட்டிநாடு வீடுகள் கலைநயத்துடன் கட்டப்பட்டவை. இறக்குமதி செய்யப்பட்ட உயர்வகை மரங்கள், கண்ணாடி வேலைப்பாடுகளுக்கு பிரசித்தி பெற்றவை. காரைக்குடியில் இருந்து 10 கி.மீ.,ல் செட்டிநாடு அரண்மனை உள்ளது. வேலைப்பாடுகள் மிகுந்த அந்த அரண்மனையை கட்டி முடிக்க இரண்டு ஆண்டு ஆகியது. கட்டட பொருட்கள் பெரும்பாலும் கிழக்கு ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அரண்மனையில் விலையுயர்ந்த தேக்கு, பளிங்கு, கிரானைட் கற்களால் செய்யப்பட்ட பெரிய துாண்கள் நிறைந்த அகண்ட தாழ்வாரம் இருக்கிறது. கல்யாணம், மத சடங்குகள் நடக்கக்கூடிய விசாலமான முற்றம் உள்ளது. அரண்மனை குடும்பத்தினர் பயன்படுத்திய விலையுயர்ந்த பழமையான பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு 1,900 சதுர அடியில் ஒன்பது கார்கள் நிறுத்தும் அளவிற்கான அறைகள் மற்றும் 'லிப்ட்' வசதியும் உள்ளது.

பேசாத குழந்தையும் பேசும்

'கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்...' என்பர். இத்தகைய பெருமையுடைய கம்பனின் சமாதி நாட்டரசன்கோட்டை அருகே உள்ளது. வாய் பேசாத குழந்தைகள் சமாதி மண்ணை சாப்பிட்டால், பேச்சாற்றல் உண்டாவதாக கூறுகின்றனர். பெரியோர் திருநீறாக பூசுகின்றனர். சமாதியில் காலை 7:௦௦ மணிக்கு ஒருவேளை பூஜை நடக்கும்.

ரூ.5.83 கோடியில் மேம்பாட்டு பணி

2011 முதல் 2014 வரை சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்கு 5.83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திருமலை, நாட்டரசன்கோட்டை, திருக்கோஷ்டியூர், இடைக்காட்டூர் போன்ற இடங்களில் பயணிகளுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. காரைக்குடியில்
சுற்றுலா வரவேற்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா குறித்த விபரங்களுக்கு 04565 232 348 ல் தொடர்பு கொள்ளலாம்.ஜெயக்குமார், மாவட்ட சுற்றுலா அலுவலர்

நாட்டரசன்கோட்டை

இது சிவகங்கையில் இருந்து 7 கி.மீ., ல் உள்ளது. இங்குள்ள கண்ணுடையநாயகி அம்மன் கோயில் 18ம் நுாற்றாண்டில் நகரத்தாரால் கட்டப்பட்டது. சுயம்பாக அம்மன் அருள்பாலிக்கிறார். அம்மன் நின்ற நிலையில் எட்டு கைகளுடன் உடுக்கை, சூலம் ஏந்தி, இடது காலில் அசுரனை வதம் செய்வது போல் காட்சிதருகிறார். இக்கோயில் கட்டட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. தை முதல் செவ்வாய் கிழமை 'செவ்வாய் பொங்கல்' நடக்கிறது. கோயில் முன் நகரத்தார் ஒன்று கூடி பொங்கல் வைப்பர். வெண் பொங்கல் மட்டுமே வைக்கப்படும். தொடர்ந்து அம்மனுக்கு 100 க்கும் மேற்பட்ட கிடா வெட்டி, அபிஷேகம் செய்கின்றனர். பொங்கல் விழாவில் நகரத்தாரின் வரன் தேடும் படலமும் நடக்கும். அமெரிக்கா, தாய்லாந்து, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் பங்கேற்கின்றனர்.

ஆன்மிக தலமிக்க பூமி

ஆன்மிக தலங்கள் நிறைந்த பூமி சிவகங்கை. 'செவ்வாய் பொங்கல்' போன்ற ஏராளமான பாரம்பரிய விழாக்களும் உள்ளன. அவற்றை தமிழகம் மட்டுமின்றி உலகளவில் சுற்றுலாத்துறை பிரபலப்படுத்தினால், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களுக்கு தங்குமிடம், உணவகம் குறித்து சுற்றுலாத்துறை வழிகாட்ட வேண்டும்.

கோ.மாரி, சமூக ஆர்வலர்

காரைக்குடியில் தமிழ்த்தாய் கோயில், கண்ணதாசன் நினைவகம், செட்டிநாடு கால்நடை பண்ணை, திருப்புத்துாரில் மருதுபாண்டியர் நினைவகம், சிவகங்கையில் வேலுநாச்சியார் நினைவகம், அரண்மனை, கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில், திருமலை, ஏரியூர் என, அடுக்கி கொண்டே செல்லலாம்.

காளையார்கோவில்

இது சிவகங்கையில் இருந்து 18 கி.மீ., ல் உள்ளது. இங்குள்ள சொர்ணகாளீஸ்வரர் கோயில் பாண்டிய நாட்டின் 10 வது தேவார தலமாக கருதப்படுகிறது. 150 அடி உயரமுடைய ராஜகோபுரம், ஆனைமடு எனப் பெயர் பெற்ற தெப்பக்குளம் சிறப்பு அம்சம்.

குன்றக்குடி

காரைக்குடியில் இருந்து 10 கி.மீ., உள்ளது. இங்குள்ள முருகன் கோயில் ஆயிரம் ஆண்டு பழமையானது. தைப்பூசம், திருகார்த்திகை, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் சிறப்பாக நடக்கும். மலையடிவாரத்தில் மூன்று குகைக் கோயில்கள் உள்ளன. இவை அனைத்தும் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. இங்கு கற்கால கல்வெட்டுகள் உள்ளன.

பிள்ளையார்பட்டி கோயில்

இது பழமையான குகை கோயில். மூலவர் ஆறு அடி உயரத்தில் வலம்புரி நிலையில் காணப்படுகிறார். இக்கோயிலில் காணப்படும் 15 க்கும் மேற்பட்ட கல்வெட்டு குறிப்பு கோயிலில் தொன்மையை கூறும். விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கோலாகலமாக நடக்கும். காரைக்குடியில் இருந்து 12 கி.மீ., ல் உள்ளது.

வேட்டங்குடி சரணாலயம்

திருப்புத்துாரில் இருந்து எட்டு கி.மீ.,ல் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் உள்ளது. இது வேட்டங்குடி, பெரிய கொள்ளுக்குடி, சின்ன கொள்ளுக்குடி ஊர்களின் நீர்நிலைகளில் 40 எக்டேரில் அமைந்துள்ளது. உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, இரவு நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்தி நாரை போன்ற 217 வகையான எட்டாயிரம் வெளிநாட்டு பறவைகள் மழைக்காலத்தில் இங்கு வருகின்றன. பறவைகள் முட்டையிட்டு அடைகாப்பதற்கு ஏற்ற இடமாக உள்ளது. நவம்பர், பிப்ரவரிக்கு இடைப்பட்ட மாதங்களில் சென்று பார்வையிடலாம்.

பிரான்மலை

இயற்கை எழில் கொஞ்சும் பிரான்மலையில் கொடுங்குன்றநாதர் கோயில் உள்ளது. இங்கு சிவன், சுயம்பு மூர்த்தி உள்ளார். பாதாளம், பூமி, மலை என மூன்றடுக்கு கொண்டதாக இக்கோயில் உள்ளது. தேவாரப்பாடல் இடம்பெற்ற 274 சிவாலயங்களில் 194 வது தலம் இது. இத்தலத்தின் விருட்சம் உறங்காப்புளி மரம். பல நுாற்றாண்டுகளாக இருக்கும் இம்மரம் பூக்கும், காய்க்கும். ஆனால் பழுக்காது. காய்ந்த நிலையிலேயே புளியங்காய் உதிர்ந்து விடும். மங்கைபாகர் சன்னதிக்கு மேலே ஒரு பாறையில் 'பெயரில்லா விருட்சம்' என்ற பெயரில் ஒரு செடி உள்ளது. இந்த செடி பூப்பதில்லை. இத்தலம் சிங்கம்புணரியில் இருந்து கி.மீ., 6 ல் உள்ளது.

இடைக்காட்டூர் சர்ச்

இது பிரான்சில் உள்ள ரய்ம்ஸ் கதீட்ரல் சர்ச்சை போன்று 1894ல் கட்டப்பட்டது. இடைக்காட்டூர் சர்ச்சில் உள்ளும், புறமும் 153 தேவ துாதர்களின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தேவாலயப் பீடத்தில் 40 புனிதர்களின் போதனைகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த சர்ச் சுண்ணாம்பு கற்கள், ஓடுகளால் கட்டப்பட்டது. ஜன்னல் கண்ணாடிகளில் பூ வேலைப்பாடு, இயேசு கிறிஸ்துவின் சிலுவை பயணத்தை சித்தரிக்கிறது. சர்ச்சின் உட்பகுதி குளிராக இருக்கும் வகையில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இது மதுரையில் இருந்து ராமேஸ்வரம் ரோட்டில் 36 கி.மீ.,ல் உள்ளது.

ஆயிரம் ஜன்னல் வீடு

இந்த வீடு காரைக்குடியில் 20 ஆயிரம் சதுர அடியில் மிக விசாலமாக அமைந்துள்ளது.
1941 ல் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு கட்டப்பட்டது. இவ்வீட்டில் 25 பெரிய அறைகள், ஐந்து பெரிய கூடங்கள் உள்ளன.

திருக்கோஷ்டியூர் கோயில்

திருப்புத்துாரில் இருந்து சிவகங்கை ரோட்டில் 10 கி.மீ.,ல் உள்ளது. இது 108 வைணவ தலங்களில் ஒன்று. பொதுவாக வைணவ தலங்களில் பெருமாள் நின்ற, அமர்ந்த, சயன கோலங்களில் காட்சி தருவார். திருக்கோஷ்டியூரில் மூன்று கோலங்கள் மட்டுமல்லாது நான்காவதாக நர்த்தன நாயகனாகவும் காட்சி தருகிறார்.

பட்டமங்கலம்

இங்குள்ள தட்சிணாமூர்த்தி கோயில் 500 ஆண்டு பழமையானது. சிவலிங்கத்தின் பின்புறமுள்ள உள் தலத்தில் கிழக்கு நோக்கி பார்த்தவாறே ஐந்து தலை கொண்ட சண்முகநாதர், வள்ளி, தெய்வானை சகிதமாக எழுந்தருளியுள்ளார். இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் ஒரே தலம்.

No comments:

Post a Comment

212 PG medical seats vacant after Round 2

212 PG medical seats vacant after Round 2 TIMES NEWS NETWORK 29.12.2024 Ahmedabad : Following the second-round allocations for postgraduate ...