சென்னை, :'முதல்வர் பழனிசாமி மீது, அதிருப்தி ஏற்பட்டுள்ளதால், அவருக்கு அளித்து வந்த ஆதரவை, வாபஸ் பெறுகிறோம்' என, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர், கவர்னர் வித்யாசாகர் ராவிடம், நேற்று கடிதம் அளித்தனர். அதன்பின், சென்னையில், தினகரன் வீட்டில் கூடி, பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, தலித் சமூகத்தை சேர்ந்தவரை முதல்வராக்குவது குறித்து ஆலோசித்தனர். இந்த தகவல் தெரிந்ததும், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களை, கோடிகளை கொடுத்து வளைக்க, ஆளும் தரப்பு தீவிரமாகி உள்ளது.
பலத்தை நிரூபிக்க, இரு தரப்பினரும், தில்லாலங்கடி வேலைகளில் இறங்கியுள்ளதால், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 19 பேரும், சகல கவனிப்புகளுடன், புதுச்சேரி கடற்கரை சொகுசு விடுதியில், தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.சென்னையில், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர், நேற்று காலை, 10:00 மணிக்கு, கவர்னர் மாளிகைக்கு சென்றனர்.
அங்கு கவர்னர், வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, தனித்தனியே கடிதம் அளித்தனர்.
அதிருப்தி
கடிதத்தில், அவர்கள் கூறியுள்ளதாவது:பிப்ரவரியில், முதல்வர் பழனிசாமி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்து, நாங்கள் கையெழுத்திட்டு, தங்களிடம் கடிதம் வழங்கினோம். பின், சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தபோது, முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக ஓட்டளித்தோம்.தற்போது, முதல்வர் பழனிசாமி மீது, அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவர், தன் அதிகாரத்தை, முறைகேடாக பயன்படுத்துகிறார்; பாரபட்சமாக நடந்து கொள்கிறார்; அரசு இயந்திரத்தை,
தவறாக பயன்படுத்துகிறார். அதனால், ஊழல் அதிகரித்துள்ளது. அவர் ஊழல் செய்வதாகவும், ஊழலுக்கு துணை போவதாகவும், பல்வேறு தரப்பிலும் புகார்கள் எழுவது, எங்கள் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது.ஆகஸ்ட் முதல் வாரத்தில், ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், 'தற்போதைய ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளது' என, குற்றம் சாட்டினார். இது, முதல்வர் பழனிசாமி அரசு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. தற்போது, அவரை தன் அமைச்சரவையில் சேர்த்து, துணை முதல்வர் பதவியை, பழனிசாமி வழங்கி உள்ளார். இது, முதல்வர் பாரபட்சமாக செயல்படுவதையும், அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதையும்,
ஊழலுக்கு துணை போவதையும் காட்டுகிறது.அதனால், முதல்வர்பழனிசாமி, தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டார். எங்களுக்கும், அவர் மீது நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது. எனவே, அவருக்கு அளித்த ஆதரவை, திரும்ப பெறுகிறோம்.அதேநேரத்தில், நாங்கள், அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினராகவும், அக்கட்சி, எம்.எல்.ஏ.,வாகவும் தொடர்கிறோம். இந்த விஷயத்தில் தலையிட்டு, சட்டப்படியான நடவடிக்கைகளை, நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
பெரும்பான்மை
சட்டசபையில், அ.தி.மு.க.,விற்கு, 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில், 19 பேர், முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாக, கவர்னரிடம் கடிதம் கொடுத்து உள்ளதால், அரசுக்கு பெரும்பான்மை வாபஸ்இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தும் நிலை ஏற்படுமானால், பழனிசாமி அரசுக்கு சிக்கல் ஏற்படும்.எனவே, தினகரன் பக்கம் நிற்கும் எம்.எல்.ஏ.,க்களை, கோடிகளில்
விலை பேச, ஆளும் தரப்பு வலை விரித்துள்ளது. அது தொடர்பாக, ரகசிய பேரம் நடப்பதை அறிந்த தினகரன், தன் ஆதரவாளர்களை, புதுச்சேரிக்கு கடத்தி விட்டார். அங்குள்ள, 'விண்ட் ப்ளவர்' சொகுசு விடுதியில், 19 பேரும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்காக, அங்கு, 30 அறைகள், 'புக்' செய்யப்பட்டு உள்ளன.இதற்கிடையில், பழனிசாமி அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, தலித் சமூகத்தை சேர்ந்த, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருவரை முதல்வராக்க, தினகரன் தரப்பு திட்டம்தீட்டியுள்ளது. அதன் வாயிலாக, கட்சியில் கணிசமாக உள்ள, தலித் சமூக எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பக்கம் வந்து விடுவர் என, தினகரன் தரப்பினர் கருதுகின்றனர்.இது குறித்து, சென்னையில், நேற்று ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தி உள்ளார். அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, சசிகலா தம்பி திவாகரன் கூறுகையில், ''தற்போது சபாநாயகராக உள்ள, தலித் சமூகத்தை சேர்ந்த தனபாலை, முதல்வர் பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும்,'' என, கூறியுள்ளார்.
ஆட்சி கவிழ வாய்ப்பு குறைவு!
தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை, திரும்பப் பெறுவதாக, கவர்னரிடம் கடிதம் கொடுத்திருந்தாலும், ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதாக, சட்டசபை செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:எம்.எல்.ஏ.,க்கள் அளித்த கடிதம் அடிப்படையில், பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வருக்கு கவர்னர் உத்தரவிடலாம்.அவ்வாறு உத்தரவிட்டால், சட்டசபை கூட்டப்படும். கூட்டத்தில், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமானால், குறைந்தபட்சம், 24 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரித்து கையெழுத்திட வேண்டும்.
தற்போது, தினகரனிடம், 19 எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் உள்ளனர். 24 பேர் முன்மொழியாவிட்டால், தீர்மானம் தள்ளுபடி செய்யப்படுவதாக, சபாநாயகர் அறிவித்து விடுவார். எனவே, தி.மு.க.,வினர் ஆதரித்தால் மட்டுமே, முதல்வர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும்.மேலும், எம்.எல்.ஏ.,க்கள் அளித்துள்ளகடிதத்தில், முதல்வர் பழனிசாமி மீது, நம்பிக்கை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக தொடர்வதாகவும் தெரிவித்துள்ளனர். இது, முரண்பாடாக உள்ளது. எனவே, அந்த கடிதத்தை, கவர்னர் ஏற்க மறுக்கவும் வாய்ப்புள்ளது.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர விரும்பினால், சபாநாயகரிடம் கடிதம் அளிக்க வேண்டும். சட்டசபை நடைபெறும் போது தான், அதை சபாநாயகர்
எடுத்துக் கொள்வார். இப்போதைக்கு, சட்டசபை கூட வாய்ப்பு இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment