முதலில் 'கருப்பு; பகுத்தறிவு, பெரியாரிஸ்ட்' என்றார். பிறகு சிகப்புக்கு அடையாளமாக கேரள முதல்வரை சந்தித்தார். அதே வேகத்தில் டில்லியில் கேஜ்ரிவாலிடம் பேசினார். அதே வேகத்தில் சென்னைக்கு வந்து, 'அரசியலில் தீண்டாமை என்பதே இல்லை. பாஜகவின் வலதுசாரி கொள்கைகள் எனக்கு அதிருப்தி அளிக்கிறது. ஆனால் அதேசமயம், குறைந்தபட்சம் செயல்திட்டம் உருவானால் பாஜகவுடன் தொடர்பு வைத்து கொள்ள தயங்க மாட்டேன்!' என்றும் பிரகடனம் செய்கிறார். அப்புறம் பார்த்தால்,
'காவி சட்டையோட ஓட்டுகளை ரஜினியை வைத்தும், கருப்பு சட்டையோட ஓட்டுகளை என்னை வைத்தும் வாங்குவதற்காக நாங்கள் களமிறக்கப்படுகிறோம் என்று கூறுவதற்கு ஆதாரம் வேண்டும். தமிழகம் சீர்குலைந்திருக்கிறது. அதை சீர் செய்வதுதான் முதல் கடமை. நாங்கள் இரண்டு பேருமே ஊழலுக்கு எதிரானவர்கள். இப்போது இருக்கும் கடும் நோயிலிருந்து தமிழக மக்களை சரி செய்து விட்டு இந்திய அரசியல் குறித்து பேசலாம். மோடி ஆட்சியின் அலை எங்கள் மீது பட்டால் உடனடியாக விமர்சனங்களை வைப்போம்!' என்று நீட்டி முழக்குகிறார். 'இந்த பேச்சுக்கள் எல்லாமே அறிவு ஜீவித்தனமானதா? ஏழை எளிய மக்களுக்கானதா? இரண்டுமே அல்லாமல் அந்நியப்பட்டதாக அல்லவா இருக்கிறது?' என்று குறிப்பிடுகிறார்கள் 'கமல் ஒரு மகா குழப்பம்!' என்ற கருத்தோட்டத்தில் நீந்திக் கடப்பவர்கள்.
என்ன ஆச்சு கமலுக்கு? எத்தனையோ பேர், எத்தனையோ அரசியல் கருத்துகளை தற்சமயம் உதிர்த்தாலும், இவர் கருத்துகள் மட்டும் முன்னிலைப்பட்டு பேசப்படுவது ஏன்? அவரின் நோக்கம்தான் என்ன? நிச்சயம் கட்சி ஆரம்பிக்கத்தான் போகிறாரா? அது வெற்றிகரமானதாக இருக்குமா? ஊழலற்ற ஆட்சியை அவர் கொடுக்கக் கூடியவரா? தற்போதைய தமிழக அரசியல் சூழலில் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசமும், அவரின் முன்னுக்கு பின்னான அறிவு ஜீவித்தனமான பேச்சுகளும் என்ன எதிர்காலத்தில் என்ன மாதிரியான சூழலை ஏற்படுத்தும்? என்றெல்லாம் அதில் நிறைய கேள்விகள். இதை புரிந்து கொள்வதற்கு கமல்ஹாசனுக்கு முந்தையதான தமிழக அரசியலை முன்நிறுத்தி பார்த்து நகர்வது நல்லது.
தமிழகத்தை பொறுத்தவரை மக்களிடம் பிரபல்யம் பெறாத ஒருவர் அரசை எத்தனை விமர்சனங்கள் செய்தாலும் அது பெரிதாக எடுபடுவதில்லை. ஆட்சியில் இல்லாத காலத்தில் திமுக தலைவர் கருணாநிதி தினம் ஓர் அறிக்கை, நாளிரண்டு தொலைக்காட்சி பேட்டி என்று அளித்து வந்ததால் அவரின் விமர்சனங்கள் எதிர்நிலை சக்தியான அதிமுக ஆட்சியின் அச்சாணியையே உலுக்கியது. அதைப் பற்றி பகிரங்க வெளிப்பாடுகள் காட்டாவிட்டாலும், அதையொட்டி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்காவாவது செய்தார் ஜெயலலிதா.
அவருக்கு முந்தைய எம்.ஜி.ஆர். காலமும் அப்படியே. தன் ராமாவரம் தோட்டத்திற்கு வருபவர்களை விட, கோபாலபுரம் வீட்டிற்கு யார் செல்கிறார்கள்; அங்கே நடக்கும் அரசியல் நகர்வு என்ன என்பதை கண்காணிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தது கட்சி மாச்சர்யங்கள் கடந்து அத்தனை பேருக்கும் தெரியும். இந்த நிலை வெற்றிடமானது ஜெயலலிதா ஆஸ்பத்திரி வாசம், தொடர்ந்து அவரது மரணம்.; அதைத் தாண்டி கருணாநிதி மவுனமான காலத்திற்கு பின்புதான். இதன் பின்பு அரசு கட்டிலில் தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல் நிலை ஆனது.
ஸ்டாலின், ராமதாஸ் போன்ற அரசியல் தலைகளின் கடும் விமர்சனங்கள் கூட வீரியமின்மையாய் போன நிலையில், விஜயகாந்த், வைகோ போன்றவர்கள் ஆட்சிக்கு எதிர்நிலையில் பெரிய அளவில் விமர்சனங்கள் கூட வைக்கவில்லை.
ஜெயலலிதா ஆஸ்பத்திரி வாசம், அவர் சிகிச்சையில் இருந்த காலத்தில் வந்த சில தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், தேர்தல் கமிஷனுக்கு பதிக்கப்பட்ட அவரின் கட்டை விரல் ரேகை, அவர் உடல் நிலை குறித்து அவ்வப்போது பரவிய வதந்திகள், அந்த வதந்தி பரப்பியவர்கள் மீது பாய்ந்த வழக்குகள், ஜெயலலிதா இட்லி, பிரட் சாப்பிட்ட கதையை ஒப்பித்த அமைச்சர்கள். ஜெயலலிதாவின் திடீர் மரணம், அவர் உடலின் இறுதி அஞ்சலிக்கு பிரதமர் உள்ளிட்ட அனைத்து தலைவர்களின் வருகை, பன்னீர்செல்வம் பதவி விலகல், சசிகலா பொதுச்செயலாளர் தேர்வு, பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு, சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை தீர்மானம், ஸ்டாலின் சட்டை கிழிந்து வெளியே வந்த காட்சி, பிறகு சட்டப்பேரவைத் தலைவர் மீது எதிர்க்கட்சி தலைவர் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் என வரும் பல்வேறு தமிழக சரித்திர சம்பவங்களும், அதையொட்டி நடந்த அரசியல் விமர்சனங்களும், தாக்கீதுகளும் அப்போது விழலுக்கு இறைத்த நீராகவே காட்சியளித்தது.
இந்தக் காட்சிகள் எல்லாம் நீர்த்துப் போன விஷயங்களாக மாறியதற்கு ஒற்றைக் காரணம் 'மோடியின் அரசு' என்பதை அந்த மைய அரசின் பிரதிநிதிகள் ஒப்புக் கொள்ளா விட்டாலும், அவர்களின் மனசாட்சி கண்டிப்பாக அதை ஒப்புக் கொண்டே தீர வேண்டும்.
ஒருவேளை கருணாநிதி பேசும் சக்தியுடன் இருந்திருந்தால் தமிழக அரசியலில் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? நடக்க விட்டிருப்பாரா? என்பதை அரசியல் விமர்சகர்கள் பலரும் பேசி உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தார்கள் என்பதே நிஜம். அதே சமயம் பொதுமக்களின் மனோநிலையும் அவ்வாறே இருந்தது என்பதை மறுக்க முடியாது.
சரியோ, தவறோ தங்களால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு என்னதான் ஆயிற்று என்கிற கோபதாபங்கள் அவர்களுக்குள் உருண்டோடியது. அதை பொய் சொல்லியோ, எதுவும் சொல்லாமலோ ஓட்டிக் கொண்டு பதவி சுகம் அனுபவிக்கும் ஆளும் பதவியில் உள்ளவர்கள் மீது படு கோபமும் வந்தது. சுருக்கமாக சொன்னால் நாட்டிலேயே, உலகிலேயே இந்த அளவு சகிப்புத்தன்மை உள்ள மக்கள் வேறு எங்கும் இருக்க மாட்டார்கள் என்பதை தமிழக மக்கள் இந்த காலகட்டத்தில் உலகுக்கே உணர்த்தியிருக்கிறார்கள்; இன்னமும் உணர்த்திக் கொண்டேயிருக்கிறார்கள் என்பதே உண்மை.
இந்த கோப உணர்ச்சி வெளிப்பாடுகள் அதிமுக அமைச்சர்கள் மீது மட்டுமல்ல; அதை காப்பாற்றி வரும் மோடி அரசின் மீதும் தமிழக மக்களுக்கு அதிருப்தி மிகுந்தது; மிகுந்து கொண்டுமிருக்கிறது. அதை சமூக வலைதளங்கள் மூலம் நீக்கமற காண முடிகிறது. இந்த சூழ்நிலையில்தான் ஆபத்பாந்தவன் போல் ரஜினி வந்தார். 'சிஸ்டம் கெட்டு விட்டது!' என்றார். பிறகு, 'போர் வரட்டும் பார்க்கலாம்!' என்றார். அதைத் தொடர்ந்து ரஜினியின் பக்கம் தன் பார்வையை திருப்பியது மீடியாக்கள். அதனால் தமிழக அமைச்சர்கள் மத்தியில் முணுமுணுப்பு எழுந்தது. என்றாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ள தயங்கினர்.
அந்த சமயம்தான் கமலின் 'பிக்பாஸ்' வருகை. சின்னத்திரை வரலாற்றில் இந்த அளவு ஒரு நிகழ்ச்சியை மக்கள் பார்த்திருப்பார்களா என்ற சந்தேகத்தை ஒரு மாயையாகவே கிளப்பியது அந்நிகழ்ச்சி. அதில் இடம் பெற்ற கமல்ஹாசனுக்கு இளைய தலைமுறை முதல் பெண்கள் வரை கொடுத்த வரவேற்பு புதிய உற்சாகத்தை மூட்டியது. ஓவியா, காயத்திரி, ஜூலி, ஆரவ், சிநேகன் என வரும் சகலகலா நடிக பட்டாளங்களின் வழி ஜொலித்த ஜொலிப்பிலிருந்து அம்பு போல் புறப்பட்ட கமல் அரசியல் பேசினார்.
ரஜினி சிஸ்டம் சரியில்லை என்று சொன்னதற்கு பெரிதாக பிரதிபலிப்பு காட்டாத அமைச்சர்கள் ஆளாளுக்கு கமல் மீது கடுமை காட்டினார்கள். 'ஜெயலலிதா இருந்த வரை வாய்திறக்காத கமல் இப்போது எப்படி பேசுகிறார். அவர் இருந்திருந்தால் பேசுவாரா? பேச முடியுமா?' என்றெல்லாம் கேள்விகள். மக்களோ அதை ரசித்தார்கள். கமல்ஹாசனாவது ரஜினி போல் மறைமுகமாக இல்லாது நேரடியாக போட்டுத் தாக்குகிறாரே என மகிழ்ச்சி அடைந்தார்கள்.
'விஸ்வரூபம்' படம் வெளியிடுவதில் பிரச்சனை வந்தபோது அதை வெளியிட அனைத்து வகையிலும் உதவி செய்தவர் ஜெயலலிதா. இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் நடத்தும்போது என்னென்ன தொந்தரவுகள் இதே அமைச்சர்கள் கொடுத்தார்களோ? திரைமறைவில் நடந்தது யாருக்கு தெரியும். ஜெயலலிதா இருந்திருந்தால் கமலை இப்படி அமைச்சர்கள் பேச முடியுமா? பேசி விட்டு இருக்க முடியுமா?’ என்கிற மாதிரியான கருத்துகள் மக்களிடமே புறப்பட்டது.
இது போன்று மக்களிடம் கிடைத்த ஊக்கமும், உற்சாகமும், பிக்பாஸ் வெற்றியும் கமலை முன்னை விடவும் கூடுதலாக அரசியல் பேச வைத்தது. புதுக்கட்சி தொடங்குவேன் என அறிவிக்கும் அளவுக்கு கொண்டு போனது.
பிறகென்ன? கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்கிறார். அப்புறம் டில்லியில் கேஜ்ரிவாலை பார்க்கிறார். அதே சமயம்போகிற இடமெல்லாம் பேட்டிகள்தான். கருத்துகள்தான்.
'பயணத்துக்கான பாதையை வகுத்துக் கொண்டுதான் மக்களிடம் பேச வேண்டும். நான் முதல்வர் ஆகத் தயார் என்று நான் சொல்லவில்லை. முட்கிரீடம் என்பது நிர்வாக ரீதியில் உள்ள அனைவருக்குமே வரும். ஒரு அரசு இத்தனை சீரழிந்த பிறகு யார் கைக்கு வந்தாலும் அவர்களுக்கு சூட்டப்பட போவது முட்கிரீடம்தான்!' என்றார்.
'அரசியலில் ஞானம் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். தமிழகத்தில் கமல்ஹாசன் என்றில்லை, மாற்றம் தேவை என்பது மக்களின் மனதில் உள்ளது. திராவிட கட்சிகள், மற்ற கட்சிகளை மக்கள் விரும்பவில்லை. ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் சேருவதுதானா மக்களுக்கு முக்கியம். யார் யார் கூட சேர்ந்தா எனக்கென்ன. ஆனால் நல்லாட்சி நடைபெறவில்லையே. மக்கள் சந்தோஷமாக இருந்தால் மட்டுமே நல்லாட்சி நடைபெற்றதாக அர்த்தம்!' என்றும் ஆவேசப்பட்டார்.
'இனி ஆட்சிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் இத்தனை நாட்கள் நடந்த அநியாயங்களுக்கு முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். தகர்க்கப்பட்ட சுவர்களை எல்லாம் மீண்டும் கட்ட வேண்டும். அரசு கஜானாவை நிரப்ப வேண்டும். கேள்வி கேட்கும் மக்கள் பிரதிநிதிகள் குறைந்து கொண்டே வருகிறார்கள்!' என்றார்.
'என்னை யாரும் பின்னால் இருந்து இயக்கவில்லை. என்னுடைய கபாலத்தில் இருந்து இயக்கப்படுகிறேன். பெரியார் என்பவர் ராமானுஜரின் வழித்தோன்றல். அதற்காக இருவரும் கூறியது ஒன்று என்று நான் சொல்லவில்லை. உயிருக்கு ஆபத்துடன் ராமானுஜர் செய்தது சமூக சேவை. அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றவர் காந்தி. அதற்கடுத்த கட்டத்துக்கு தமிழகத்துக்கு தேவை என்று எண்ணியதால் பெரியார் அதை வேறு ஒரு கட்டத்துக்கு கொண்டு சென்றார். இவர்கள் அனைவரும் சமூகத்துக்கு தேவையானவர்கள்தான்!' என்று சொல்லடுக்குகளால் அடுக்கினார்.
அதே வேகத்தில், 'நான் திராவிடர் கழகத்தின் உறுப்பினரும் அல்ல. திமுகவின் உறுப்பினரும் அல்ல. எனக்குப் பிடித்த நபர்கள் இந்த கட்சிகளில் இருந்திருக்கிறார்கள். எனக்கு பிடித்த சிந்தனைகள் இந்த கட்சிகளில் இருந்திருக்கிறது. பெரியாரிஸ்ட் என்று சொல்லும் கமல் எப்படி 'தேவர் மகன்', 'சபாஷ் நாயுடு' ஆகிய படங்களை எடுத்தார் என்று கேட்கிறீர்கள். மதுவிலக்கை பற்றியோ அல்லது மதாச்சாரியார்களை பற்றியோ படம் எடுத்தால் மது இருக்க வேண்டும், மதாச்சாரியும் இருக்க வேண்டும். 'சபாஷ் நாயுடு'வில் எதைப் போற்றுகிறேன் என்பதை பார்க்க வேண்டும். எதை கிண்டல் செய்கிறேன் என்பதைப் பார்க்க வேண்டும். சிவன் பார்வதி பேசுவதை பெரியார் புராணமாக எழுதியுள்ளார். அதற்காக அவர் அவரது கொள்கையில் இருந்து மாறிவிட்டார் என்று அர்த்தமா?' என்று கேள்வி கேட்டார்.
'அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா இட்லி சாப்பிடவில்லை என்று இந்த முறையாவது உண்மையை பேசியதில் சந்தோஷம். இந்த பொய்யில் சில ரகசியங்கள் புதைந்து கிடப்பதாக மக்களும் நினைக்கிறார்கள், நானும் நினைக்கிறேன். என்னால் இயக்க முடிந்தால் அந்த ரகசியங்கள் வெளிவர வைக்க முடியும். ஆனால் அதற்கு ஆவன செய்ய வேண்டிய அமைப்புகள் இருக்கின்றன. உண்மைகள் வெளிவரும் வரை காத்திருக்க வேண்டும்!' என்றார். அதன் உச்சகட்டமாகத்தான் பாஜக ஒன்றும் தீண்டத்தகாத கட்சியல்ல; தேவைப்பட்டால் பாஜகவுடன் கைகோப்பேன் என்றும் பொங்கினார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் மரணத்தைத் தடுக்காத அரசு அகல வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக கருத்து தெரிவித்திருக்கிறார். இதற்கிடையே தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மரணங்கள், நீட் தேர்வு குறித்தெல்லாம் போட்டுத் தாக்கினார்.
இதில் வேடிக்கையான விஷயம். இத்தனையும் கமல் அள்ளி வீசிக் கொண்டிருக்க, போர் வரட்டும், சிஸ்டம் சரியில்லை என்று தெரிவித்த ரஜினிகாந்த் அமைதி காத்தார். 'சத்குரு நதி மீட்புப் பயணத்துக்கு மட்டும் வாய்ஸ் கொடுத்து விட்டு, தொடர்ந்து அமைதி காக்கிறார். குறிப்பாக செப்டம்பரில் அவர் சந்திக்க வேண்டிய ரசிகர்கள் சந்திப்பு கூட நடக்கவில்லை. அது இனி நடக்குமா என்றும் தெரியவில்லை.
இங்கேதான் அனைத்து வகை குழப்பங்களும் சங்கமிக்கின்றன. எப்படி?
''முதல்வர் கிரீடம் மட்டுமல்ல; மிகப் பிரபலப்பட்டவர்களே ஆனாலும், அரசியல் கட்சி ஆரம்பிப்பது என்பதும் அவ்வளவு சுலபமான காரியமல்ல. அப்படியே அவர்கள் ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு வென்று, ஆட்சியை பிடித்தாலும் ஊழலற்ற ஆட்சியை கமல் உதிர்க்கிற வீர வசனம் போல் நடத்துவதும் சாத்தியமில்லை என்பதை, அவர் நம்பும் இளைஞர்கள் மற்றும் சினிமா ரசிகர்களே ஒப்புக் கொள்கிறார்கள். ஒரு தொழிலதிபரிடம் நிதி வாங்காமல் கட்சியை நடத்த முடியுமா? தேர்தலை சந்திக்க முடியுமா? அந்தக் காலம் போல் தன் பாக்கெட்டில் உள்ள காசை செலவு செய்து கொடி நட்ட, கம்பம் தூக்கவெல்லாம் அடிமட்டத் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணினால் அது நம் முட்டாள்தனம். இன்றைக்கு ஒரு வார்டில் உள்ள தெருக்கள் தொடங்கி, உபவட்டம், வட்டம், மாவட்டம், மண்டலம் வாரியாக எந்த அசைவு அசைக்க வேண்டுமானாலும் காசுதான் வேணும்.
அதற்கு தொழிலதிபரிடம் போய் நிற்கத்தான் வேணும். நாளைக்கு ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களுக்கு மறைமுக, நேரடி சலுகைகள் செய்துதான் ஆகவேண்டும். அதில் ஊழல், முறைகேடு புறப்பட்டே தீரும். முதலில் கருப்பு என்றவர், பிறகு காவிக்கும் ஆதரவு என்று பல்டியடித்த கமல் ஊழலற்ற ஆட்சி என்ற கருத்திலேயே இங்கே அடிபட்டுத்தான் போகிறார். இது ரஜினிக்கும் பொருந்தும். அதை அவர்கள் புரியாமல் எல்லாம் இல்லை.
அப்படியானால் மற்ற அரசியல்வாதிகளை போலவே இதுவும் ஒரு வெற்றுக்கோஷம்தான் என்பதை ஒப்புக் கொள்கிறார்களா? இதை மக்கள் மட்டும் நம்பத் தயாராக உள்ளார்களா? கமலுக்கும், ரஜினிக்கும் உள்ள பிரபல்யம் அவர்கள் இணைந்து நின்று தேர்தலை சந்தித்தால் வெற்றி வாய்ப்பை அள்ளித்தர வாய்ப்புண்டு. அதுவே தனித்தனியாக நின்றால் ரஜினி வாங்குகிற ஓட்டு கூட அவருக்கு கிடைக்காது. ரொம்ப சுலபமாக திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு வந்து சேரும்!'' என்கிறார் அதிமுகவில் 45 ஆண்டுகாலமாக பணியாற்றும் நிர்வாகி ஒருவர்.
''நாங்கள் ஆரம்பத்தில் ரஜினியின் குரலாகத்தான் கமல் பேசுகிறார் என்று நினைத்தோம். ஆனால் இப்போது அப்படியில்லை. ரஜினி அரசியலுக்கு வருவதன் மூலம் முதலில் பாதிப்படையும் கட்சி எது என்று பார்த்தால் அது நிச்சயம் திமுகதான். ஏனென்றால் பெரும்பான்மை அதிமுக தொண்டர்கள், பெண்கள் ரஜினியையே மாற்றாக எண்ணி ஓட்டு போடுவார்கள். அவர் ஒரு வேளை அரசியலுக்கு வராமல் இருந்தால் அந்த ஓட்டுகளில் பெரும்பான்மை திமுகவிற்குத்தான் சேரும். விஜயகாந்த் கட்சி இன்றைக்கு இருக்கிற நிலைமை தெரியும். எனவே தேமுதிக வெற்றி பெறும் இடத்தில் இல்லை என்ற சூழல் ஏற்படும்போது அதற்கான ஓட்டுகளும் கூட இங்கேயே விழ வாய்ப்புண்டு. இந்த நிலையில், 'ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது; வந்தாலும் வெல்லக் கூடாது!' என்ற தேவை திமுகவிற்கு மட்டும்தான் உள்ளது. அதற்காக ஏவப்பட்ட தொனியே கமலின் திடீர் அரசியல் பிரவேசம் காட்டுகிறது. திமுகவின் தந்திரத்திற்கு கமல் பலியாகி விட்டது போலவே தோன்றுகிறது. அதை உணர்ந்துதான் ரஜினி தற்போதைக்கு அரசியல் வெளிப்பாட்டை ஒத்தி வைத்திருக்கிறார் என கருதுகிறோம்!'' என்கின்றனர் கோவையை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் சிலர்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் என்பது நீண்டகால திட்டமிடலின் வெளிப்பாடு; ஆனால் கமலின் அரசியல் வெளிப்பாடு திடீர் என உதயமானது என்பதற்கும் சில விஷயங்களை முன்வைத்தே பேசினர் அவர்கள். அப்படி அவர்கள் கூறியதன் சாரம்சம்:
''விஜயகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தான் வெளிப்புறப் படப்பிடிப்புக்கு போகும் பகுதிகளில் எல்லாம் ஓய்வு நேரங்களில் தேடித்தேடி தனக்கென ரசிகர் மன்றங்களை உருவாக்கினார். அதற்கு அவரின் ரசிக முன்னோடிகளே எப்பவும் தயாராக இருந்தனர் என்பது வரலாறு. உதாரணமாக உடுமலைப்பேட்டையில் அவர் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு 55 நாட்கள் தங்கியிருந்த காலத்தில் அதன் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 60க்கும் மேற்பட்ட மன்றங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவர் படப்பிடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது மாநில, மாவட்டத் தலைவர்கள் சிலர் கிராமம் கிராமமாக செல்வார்கள். அங்குள்ள 13 வயது முதல் 20 வயதுள்ள இளைஞர்கள் வரை பேசுவார்கள். அந்த ஊரின் பிரச்சினைகளைப் பற்றி கேட்பார்கள்.
உங்க ஊருக்கு விஜயகாந்த் வருவார். நீங்கள் தயாராக இருங்கள். மன்றம் ஆரம்பிக்க, கொடியேற்ற ஒரு இடம் ஏற்பாடு செய்யுங்கள் என்பார்கள். ஒரு பிரபல நடிகர் தன் ஊருக்கே வரும்போது, தன்னை பெரிய மனுஷன் ஆக்கிக் கொள்ள யார்தான் விருப்பப்படமாட்டார்கள்? இந்த செலவுகளுக்கு மன்ற நிர்வாகிகளே பணம் கொடுப்பார்கள். பிறகென்ன மன்றம் தயாராகும். கொடிக்கம்பம் நிறுத்தப்படும். ஒரு நாளில் விஜயகாந்த் வருவார். கொடியேற்றுவார். அந்த ஊரே வரும். வேடிக்கை பார்க்கும். விஜயகாந்துடன் படம் பிடித்துக் கொள்வார்கள். அப்புறம் அந்த மன்றத்தை சேர்ந்தவர்கள் விஜயகாந்தை விட்டு விலகுவார்களா? மாட்டார்கள்.
அப்படித்தான் தமிழகம் முழுக்க 20 ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்ட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மன்றங்களுக்கு அரசியல் பயிற்சி கொடுத்து உருவானது தேமுதிக. இதன் நிலை இப்படி என்றால் ரஜினிக்கு மன்றங்கள் என்று எடுத்துக் கொண்டால் இப்பவும் பதிவு செய்யப்பட்டவை ஒரு மாவட்டத்திற்கு 4 ஆயிரம் வீதமும், பதிவு செய்யப்படாதவை அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலும் உள்ளது. இப்படி 32 மாவட்டங்களுக்கு கணக்கிட்டால் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மன்றங்களுக்கு மேல் உள்ளது. அதில் சென்னை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் சராசரி எண்ணிக்கையை விட கூடுதலாகவே இருக்கிறது. இவற்றின் செயல்பாடுகளும் திருப்திகரமாக உள்ளது.
இதே எண்ணிக்கையில் உள்ள அஜித் ரசிகர்களை எடுத்துக் கொண்டால் அதில் பாதி ரஜினி ரசிகர்களாகவும் உள்ளார்கள். இவர்களும் துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டுதான் உள்ளார்கள். இவ்வளவு ஏன்? விஜய் ரசிகர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் அகில இந்திய தலைமை, மாநிலத் தலைமை, மாவட்டத் தலைமை, இளைஞர் அணி தலைமை, மாநகரத் தலைமை என மன்றங்களைப் பிரித்து பதிவு எண்கள் கொடுத்திருப்பதோடு, தமிழகம் முழுக்க உள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தலைமை மன்றம் என உருவாக்கி அதற்கும் பதிவு எண் வழங்கியிருக்கிறார்.
இப்படிப் பார்த்தால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 800 முதல் 1000 மன்றங்கள் வரை முழுமையான செயல்பாட்டில் வைத்துள்ளவர் அவரே. இதனால் ரஜினி, அஜித், விஜய் கட்சி ஆரம்பித்தால் உடனடியாக இந்த மன்றங்களை எல்லாம் உடனே கட்சியாக மாற்ற முடியும். அவர்கள் உடனே களத்தில் இறங்கி தேர்தல் பணியாற்றக் கூடிய அளவில் தயார்படுத்தவும் முடியும். ஏற்கெனவே ரஜினி, அஜித் ரசிகர்கள் ஒவ்வொரு பகுதியிலும் திமுக அல்லது அதிமுகவிடம் தேர்தல் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் கமல்ஹாசனை பொறுத்தவரை ரசிகர் மன்றங்கள் நற்பணி மன்றங்களாகத்தான் செயல்பட வேண்டும் என்றும், அரசியல் கூடவே கூடாது என்று அறிவித்து நீண்ட காலமாகி விட்டன. அவர்களும் அவர் பேச்சுக்கு கட்டுப்பட்டு பொதுச் சேவையில் மட்டுமே இறங்கி வருகின்றனர். தப்பித்தவறி கூட அரசியல் பக்கம் தலை வைப்பதில்லை. அதனால் மன்றங்களின் வளர்ச்சியும், செயல்பாடும் பாதித்திருக்கிறது. அந்த வகையில் மாவட்டத் தலைமை நற்பணி மன்றம் மற்றும் நகரத் தலைமை மன்றம் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. அவர்களின் கீழ் மாவட்டத்திற்கு 300 மன்றங்கள் இருந்தாலே மிக அதிகம். அப்படியிருக்க, எந்த ஒரு முன்னேற்பாடும், திட்டமிடலும் இல்லாமல் திடீரென அரசியல் பேச்சு, அரசியல் கட்சி என்று அவர் இறங்குவது எத்தகையதொரு ஆபத்தில் முடியும்.
இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த காலத்தில் அவரை விடவும் அதிக ரசிகர் மன்றங்களை கொண்டிருந்தவர் சிவாஜி கணேசன். ஆனால் அவரால் தேர்தல் அரசியலில் வெல்ல முடியவில்லையே. அரசியலில் எம்.ஜி.ஆரை அங்கீகரித்தவர்கள், சிவாஜி கணேசனை நடிப்பின் சிகரமாக வைத்து உச்சிமோந்தார்கள் என்பதே வரலாறு. இதையெல்லாம் சிந்திக்காதவர் இல்லை கமல்ஹாசன். அப்படியானால் எந்த திட்டமிடலும் இல்லாமல் அரசியல் பேச்சுகளை உதிர்ப்பதும், சமூகத்தின் மீதும், மக்களின் மீது அக்கறை உள்ளவராக பொங்குவதும், கேரள முதல்வர், டில்லி முதல்வர் சந்திப்பு நடத்தி பரபரப்பு உருவாக்குவதும் யாருக்கான அரசியல், யாரை வரவிடாமல் வைப்பதற்கான அரசியல், யாரை குழப்புவதற்கான அரசியல் என்றுதான் யோசிக்க வேண்டும்.