பாலியல் வன்முறைகளும், கட்டாயக் காதல் வற்புறுத்தல்களும், இணங்காவிடில் பெண்களைக் கொல்ல முற்படும் அக்கிரமப் போக்குகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சின்னஞ்சிறு குழந்தைகள் தொடங்கி எண்பது கடந்த கிழவிகளைக்கூட விட்டு வைக்காத ஓநாய்கள் பற்றிய செய்திகள் நன்மக்களைப் பதற்றமுறச் செய்து கொண்டிருக்கின்றன. இது சமுதாயச் சீரழிவு என்று பத்திரிகைகள் புலம்புகின்றன. ஆனால் இது சமுதாயச் சீரழிவு ஆகாது. இது திருந்த மறுக்கும் ஆண்மக்களின் சீரழிவேயாகும். பெண் என்பவள் தங்களின் இன்பத்துக்காக மட்டுமே படைக்கப்பட்டவள் எனும் ஆணாதிக்கப் போக்கிலிருந்து ஆண்கள் இன்னமும் விடுபடவே இல்லை என்பதையே பாலியல் வன்முறைகள் உணர்த்துகின்றன. இல்லாவிடில், அந்தப் பெண் எதிர்ப்புக்காட்டி மிரட்டாமல் இருந்திருந்தால் அவளைக் கொன்றிருக்க மாட்டோம்' என்று அண்மையில் ஒருவன் திருவாய் மலர்ந்திருப்பானா?
ஆண்களின் சீரழிவை ஒட்டுமொத்தச் சமுதாயச் சீரழிவு என்று விமர்சித்துப் புலம்பிக்கொண்டிருப்பதோடு பத்திரிகை ஆசிரியர்கள் நிறுத்துவதில்லை. இந்தியாவில் இப்படிப்பட்ட கேடுகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்து வருவதாகவும், பிற நாடுகளில் இவை மிக அதிகம் என்றும், ஏதோ உலகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் போய் இத்தகைய ஆண்களின் பாலியல் வன்முறைகளை நேரில் பார்த்துக் கணக்கு எடுத்துவைத்திருப்பது போலவும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்!
இத்தோடு இவர்களின் புலம்பல் நிற்பதில்லை. உலக நாடுகளிலேயே இந்தியாதான் பெண்களைத் தெய்வமாக மதித்துப் போற்றுவதாகவும் பெரும்பாலான பிற நாடுகளில் ஆண்தெய்வங்கள் மட்டுமே இருப்பதாகவும் எழுதிவருகிறார்கள்.
கேரளாவில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டாடப்பட்டு வரும் நவராத்திரி விழாவின் நாயகி தேவி - பெண். ஆனால், கோவிலிலும் அரண்மனை வளாகத்திலும் ஏன், வெளியில் உள்ள மண்டபத்திலும் கூட இவ்விழாவின் போது பெண்களைப் பார்க்கவே முடியாது. வெகு தொலைவில் இருந்துகொண்டு இசையை ரசிக்கலாம். அவ்வளவுதான்!
தேவி ஒரு பெண். அவளுக்கு நடக்கும் விழாவில் பெண்கள் ஏன் கலந்துகொள்ளுவதில்லை?' எனும் கேள்வி சாஸ்திரீய சங்கீதத்தைக் கற்கத் தொடங்கிய ஒரு 16 வயதுச் சிறுவனுக்குத் தோன்றியது. அதை மாற்ற அவன் முனைந்தபோது அரச குடும்பத்திலிருந்தோ, வெளியிலிருந்தோ ஒருவர் கூட அவனுக்கு ஆதரவு அளிக்கவில்லை. தேவிக்காக நடக்கும் விழாவில் பெண்கள் கலந்துகொண்டே ஆகவேண்டும்; பெண் இசைக்கலைஞர்களும் பங்கேற்கவேண்டும் என்று தொடர்ந்து 22 ஆண்டுகள் அவர் போராடினார். 2006 இல் அவருக்கு வெற்றி கிட்டியது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பாடல் ஆசிரியை 86 வயது பாரசால பொன்னம்மாவை இவ்விழாவில் பாட வைத்தார்.
இந்தப்போராளி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் புகழ் பெற்ற மன்னரான சுவாதித் திருநாள் ராமவர்மாவின் வழியில் வந்த பிரபல வீணை, மற்றும் கர்நாடக இசைக்கலைஞர் அஸ்வதி திருநாள் ராமவர்மா. அரச வம்சத்தினர் எனும் உணர்வே தமக்கு இருந்ததில்லை என்றும், தம்மை எப்போதும் ஒரு பாடகராக மட்டுமே தாம் கருதி வந்துள்ளதாகவும் இவர் கூறியுள்ளார். இவர் இசைமேதை பாலமுரளிகிருஷ்ணாவிடம் 18 ஆண்டுகள் இசை பயின்றார்.
பெண்மையைப் போற்றுவதெல்லாம் ஏட்டில் மட்டுமே உள்ளது. நடைமுறையில் துளியும் இல்லை. இருந்தால், இந்துமதப் பெண்கள் பத்துக் குழந்தைகள் பெற வேண்டும் என்று சொல்லும் இரக்கமின்மை அரசியல் தலைவர்களிடம் இருக்குமா? (அண்மையில் ஒருவர் ஐந்து என்று கூறியுள்ளார்.) பிள்ளைகளுக்குச் சோறு போடுவதும், அவர்களைப் படிக்க வைப்பதும் பெரும் பாடாகிவிடும் என்பதுதான் ஆண்களின் கவலையாக இருக்கிறதே தவிர, ஒவ்வொரு பிள்ளைப்பேற்றின் போதும் உயிர் போய் உயிர் வரும் - அல்லது வராமலே போகும் - தாயின் நிலைபற்றி சிந்திப்பதே இல்லை. ஆண்களைப் பொருத்தவரை, அதிகப் பிள்ளைகள் இருப்பது பொருளாதாரப் பிரச்னை மட்டுமே. இப்படிப்பட்ட ஆண் அறிவுஜீவிகளும், அரசியல்வாதிகளும் நிறைந்துள்ள நாட்டில் பெண்களாவது தெய்வங்களாய்ப் போற்றப்படுவதாவது!
புராண காலத்திலிருந்தே இந்தியாவில் பெண்கள் துதிக்கப்பட்டு வருகிறார்களாமே! என்ன பிதற்றல் இது! இது உண்மையானால், கைம்பெண்களை உடன்கட்டை ஏற்றி எரிக்கும் கொடூர வழக்கம் இருந்திருக்குமா? ராஜஸ்தானில், சில ஆண்டுகளுக்கு முன்னர், ரூப் கன்வர் எனும் பெண் உடன்கட்டையில் ஏற்றி எரிக்கப்பட்டது பற்றிய சமூக ஆர்வலரின் கேள்விக்கு, ஒரு பெண் தானாக முன்வந்து உடன்கட்டை ஏறினால் அதைத் தடுக்கக்கூடாது என்று பிதற்றுவாரா இந்து மதத் தலைவர் ஒருவர்?
இதற்கும் பாலியல் வன்முறைக்கும் என்ன தொடர்பு என்று நினைக்க வேண்டாம். பெண் என்பவள் ஆணின் அடிமை என்னும் நினைப்பே இது போன்ற நிகழ்வுகளின் அடிப்படை. தனது அண்ணனின் மனைவி வலுக்கட்டாயமாய் உடன்கட்டை ஏற்றப்பட்ட கொடுமையைத் தடுக்க முடியாது அன்று மனம் வெதும்பிய சிறுவன் ராஜா ராம்மோகன் ராய், பின்னாளில் வெள்ளைக்கார வைசிராய் லார்ட் வில்லியம் பெண்ட்டிங்கின் உதவியுடன் சட்டமியற்றி அதைத் தடுத்திராவிட்டால் இன்றளவும் கூட அது தொடர்ந்துகொண்டிருக்குமோ என்னவோ!
தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் நாத்திகம் பெருமளவில் தலைஎடுத்துவிட்டதாலேயே இத்தகைய சீரழிவுகள் நேர்ந்துள்ளன என்றும் சிலர் விமர்சிக்கிறார்கள். அதாவது பாலியல் வன்முறையாளர்கள் அனைவருமே நாத்திகர்கள் என்பதைப்போல. அதே சமயம் நாத்திகத்தைப் பரப்ப எவ்வளவுதான் முயன்றாலும் நாளுக்கு நாள் கோயிலுக்குப் போகிறவர்களின் கூட்டம் பெருகிக்கொண்டுதான் இருக்கிறது என்று நாத்திகர்களைக் கிண்டலடித்தும் இவர்கள் மகிழ்கிறார்கள். என்னே முரண்பாடு!
முன்பெல்லாம் நன்னெறி வகுப்புஎன்ற பெயரில் கல்விக்கூடங்களில் நீதி போதனைகள் பற்றிய வகுப்பு நடக்கும். இப்போது அது அறவே இல்லையாமே? முன்பு இருந்த இவ்வகுப்புகளில் கூடப் பெண்ணடிமைத்தனமே மிகுதியாய் போதிக்கப்பட்டு வந்தது. (அருந்ததி, நளாயினி என்றெல்லாம் உதாரணங்கள் காட்டி பெண்கள் இளிச்சவாய்களாய்' இருக்கவேண்டும் என்றே கற்பிக்கப்பட்டது.) தெருக்களில் உள்ள திரைப்பட ஆபாச விளம்பரங்கள், சில பத்திரிகைகளில் வரும் முக்கால் நிர்வாணப் படங்கள், தொலைக்காட்சி அசிங்கங்கள் ஆகியவற்றைக் காவல்துறை ஏன் வளரவிட்டுக் கொண்டிருக்கிறது? அது சார்ந்த சட்டங்களை ஏன் செயல்படுத்துவதே இல்லை? தொலைக்காட்சிக்குத் தணிக்கையே இல்லையாமே? அது ஏன்?
அத்தனை ஆண்களும் பாலியல் வன்முறையாளர்களோ, சிறுமிகளிடம் வம்பு செய்பவர்களோ அல்லர். ஆனால் அப்படிபட்டவர்கள் பெருகுவதற்கான அடித்தளமே அமைக்கப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரம் கற்பழிப்பு வழக்கில் ஒரு நீதிபதி, அந்தப் பெண் எதிர்ப்புக்காட்டியதற்கான அடையாளங்கள் இல்லை. எனவே அவளது சம்மதத்துடன்தான் பாலியல் வன்முறை நிகழ்ந்துள்ளது' என்று கூறி வழக்கையே தள்ளுபடி செய்தாரே? நினைவிருக்கிறதா?
வீட்டுக்குள் அதிரடியாய்ப் புகும் கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி ஆண்களை மிரட்டி அவர்களிடமிருந்து அலமாரிச் சாவியை வாங்கிக்கொண்டு அதைத் திறந்து பொன்னையும் பொருளையும் வாரிச்செல்வதுண்டே? ஆண்கள் சம்மதித்துத்தான் கொள்ளை நடந்தது' என்று காவல்துறை வழக்கை ஏற்க மறுத்தால் அது சரியே என்பதை ஒப்புக்கொள்ளுவோமா? பெண் அச்சத்தில் உறைந்து போகக் கூடாதா? இதைக்கூடப் புரிந்து கொள்ளாதவர்களா நீதிபதிகள்?
பல்லாண்டுகள் முன் ஒரு பத்திரிகை கருக்கலைப்புப் பற்றிய கலந்துரையாடலை நிகழ்த்தியது. அதில் கலந்துகொண்ட அனைவருமே ஆண்கள். மருந்துக்குக்கூட ஒரு பெண் அதில் இல்லை! இது எப்படி இருக்கு? இந்தக் காரணங்களால் தான் மகளிர் இட ஒதுக்கீடு கேட்கிறார்கள்.
பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தாலும் அதனால் பயனில்லை. அவர்களின் கணவன்மார்கள்தான் திரைமறைவு அதிகாரிகளாக இருந்து அவர்களை ஆட்டி வைப்பார்கள். எனவே இட ஒதுக்கீடு கூடாது' என்பது ஒரு சாராரின் வாதம். இருக்கட்டுமே! ஆண்களின் விருப்பமே அதுதானே? ஆனால், எல்லாப் பெண்களையும் அப்படி ஆட்டுவிக்க இயலுமா? தமிழ்நாட்டில் ஒரு பஞ்சாயத்துத் தலைவி தன் கணவர் தன் நடவடிக்கைகளில் தலையிடுவதாய்ப் புகார் செய்தாரே! ஏதோ ஐந்துக்கு இரண்டாவது தேறும்தானே?
ஒரு நீதிபதியே தவறிழைப்பதைத் தட்டிக்கேட்க நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் பெண் உறுப்பினர்கள் இருக்க வேண்டாமா? எனவே கல்விச் சீர்திருத்தம், ஆன்மிகம் ஆகியவை மட்டுமே இந்தச் சீரழிவைச் சரிசெய்யப் போதுமானவை அல்ல. சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களின் பங்களிப்பு இருந்தாக வேண்டும்.
நியாயமான எண்ணங்களை மாணவர்களின் உள்ளங்களில் விதைக்கும் வண்ணமாய் நம் கல்விமுறையையும் அடியோடு மாற்றி அமைப்பது அடுத்த தலைமுறை மாணவர்களையேனும் திருத்தக்கூடும்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.