Friday, September 21, 2018

மாவட்ட செய்திகள்

அரசு பல் மருத்துவக்கல்லூரியில் வாய்முக புனரமைப்பு மையம் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்




சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரியில் ரூ.1.14 கோடியில் வாய்முக புனரமைப்பு மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
பதிவு: செப்டம்பர் 21, 2018 05:00 AM

சென்னை,

சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரியில் ரூ.1.14 கோடியில் முப்பரிமான மாதிரி வடிவ அச்சு, டி.எம்.ஜே. ஆர்த்ரோஸ்கோப்பி போன்ற அதிநவீன கருவிகளுடன் கூடிய வாய்முக புனரமைப்பு மையம் மற்றும் திசை திருப்பல் கருவி, மாணவர் உடற்பயிற்சி மையம், ரத்த தான முகாம், கல்லூரிக்கான புதிய பஸ் ஆகியவற்றை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ, கல்லூரி முதல்வர் டாக்டர் விமலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:- சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரியில் புதிய கட்டிடங்கள், அதி நவீன உபகரணங்கள் போன்றவை வழங்கப்பட்டு ஒப்புயர் மையமாக உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது தொடங்கப்பட்டு உள்ள அதிநவீன உபகரணமான முப்பரிமான மாதிரி வடிவ அச்சு மூலம் 3-டி அச்சிடுதல் தொழில் நுட்பத்தை கொண்டு பல்வேறு சிகிச்சைகள் சிறப்பாக வடிவமைக்க முடியும். இதனைக் கொண்டு எலும்புகளில் உள்ள தேய்மானம் அறுவை சிகிச்சைக்கான மாதிரி வடிவம் போன்றவற்றை அறுவை சிகிச்சைக்கு முன்பே கணித்து மிக நுட்பமான அறுவை சிகிச்சை செய்து வாய் முக புனரமைப்பு செய்திட முடியும்.

மேலும், இக்கல்லூரியில் வாரம் இருமுறை பல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ரூ.30 லட்சம் மதிப்பில் நடமாடும் பல் மருத்துவ வாகனம் விரைவில் தொடங்கப்படும். அரசு பல் மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆரோக்கியத்துக்காக உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் உள்ள 2-வது மாடி மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024