Friday, September 21, 2018

சிறப்புக் கட்டுரைகள்

வங்கிகள் இணைப்பு: யாருக்கு லாபம்?




மத்திய அரசு பரோடா வங்கி, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி என்ற மூன்று பொதுத்துறை வங்கிகளை இணைப்பது என்றும் இவை ஒரே பொதுத்துறை வங்கியாக செயல்படும் என்றும் திடீரென அறிவித்துள்ளது.
பதிவு: செப்டம்பர் 20, 2018 10:30 AM

வங்கிகள் இணைப்பு அறிவிப்பு என்பது மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை இணைக்க வேண்டும் என்ற கொள்கை முடிவை பிரதிபலிப்பதாகும். இன்றைய தேவையாக வங்கிகளை அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி அனைத்து மக்களுக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும். இதற்கு பதிலாக இந்த இணைப்பினால் எந்தவித பலனுமில்லை.

முதலாவதாக வங்கிகள் இணைப்பின் மூலமாக வங்கிகள் நன்றாக செயல்படும் என்ற கருத்து தவறானது. கடந்த ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகள் ஐந்தையும் இணைத்தது. ஆனால் இதன்பின் எந்தவித மாற்றங்களும் நடைபெறவில்லை. மாறாக கிளைகளை மூடுவது, வராத கடன் எண்ணிக்கை அதிகரிப்பு, வங்கி ஊழியர்களை குறைத்தது, வங்கியின் ஒட்டுமொத்த வியாபாரம் குறைந்தது போன்றவற்றையே பார்க்க முடிந்தது. இந்த இருநூறு ஆண்டுகளில் பாரத ஸ்டேட் வங்கி நஷ்டத்தையே அடையவில்லை. ஆனால் வங்கி இணைப்பிற்கு பிறகு கடந்த ஆண்டில் நஷ்டத்தில் உள்ளதை பார்க்க முடிந்தது. ஒட்டுமொத்த துணை வங்கிகளின் வராத கடன் 31.03.2017-ம் ஆண்டு வரை சுமாராக ரூ.65 ஆயிரம் கோடியும் பாரத ஸ்டேட் வங்கியின் வராத கடன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் கோடியும், ஆக மொத்தம் ரூ. 1 லட்சத்து 77 ஆயிரம் கோடியாக இருந்தது. அது தற்போது 2018-ல் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதை பார்க்க முடிகிறது. எனவே வங்கிகள் இணைப்பு வாராக்கடன் குறைய உதவாது என்பது தெளிவாகிறது.


வங்கித்துறையில் இன்று நாம் சந்தித்து வரும் மிகப்பெரிய சவால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாராக்கடனேயாகும்.

நமது முக்கிய கோரிக்கையே மத்திய அரசு வாராக்கடனை வசூலிப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே. மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி, வேணுகோபால் தூத் போன்றவர்கள் வங்கிகளை ஏமாற்றியது வங்கித்துறையே அதிரவைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இது போன்ற ஏமாற்றும் பெரிய நிறுவனங்களின் பெயர்கள் இன்று தினம் தினம் பத்திரிகைகளில் பார்க்க முடிகிறது. பொதுத்துறை வங்கிகள் 21-ல் 19 வங்கிகள் நஷ்டத்தில் உள்ளன. 21 பொதுத்துறை வங்கிகளின் மொத்த லாபம் 31.03.2018 அன்று ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 565 கோடி. வாராக் கடனுக்காக வங்கிகள் ஒதுக்கீடு செய்தது ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் கோடி. இதன் காரணமாக வங்கிகளின் நிகர நஷ்டம் ரூ.85ஆயிரம் கோடியாகும்.

இதன் காரணமாக வங்கிகளில் வாராக்கடனை வசூலிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் முக்கியமாக அவர்களை குற்றவாளிகள் என அறிவிக்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை அறிவிப்பதற்கு மாறாக இந்த 3 வங்கிகள் இணைப்பு என்பது மக்கள் மத்தியில் கவனத்தை திருப்பும் நடவடிக்கையாக பார்க்க முடிகின்றது.

பரோடா வங்கி, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கியின் மொத்த வாராக்கடன் ரூ.80 ஆயிரம் கோடியாகும். இதை வசூலிக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவதே மத்திய அரசின் இந்த இணைப்பு நாடகம் என்பதை பார்க்க முடிகிறது.

எனவே மத்திய அரசின் இந்த இணைப்பை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பது மட்டுமல்லாமல் இதை திரும்ப பெறவேண்டும் மற்றும் மறு பரிசீலனை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறது.

சி.எச்.வெங்கடாசலம்,
பொதுச்செயலாளர் ,
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024