Friday, September 21, 2018


ஆர்.டி.ஓ., அதிகாரி மனைவியின் வங்கி லாக்கர்கள் 25ல் மதிப்பீடு

Added : செப் 20, 2018 21:37

விழுப்புரம், லஞ்சம் வாங்கி, கைதாகி உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர், மனைவியின் வங்கி லாக்கர்கள் வரும், 25ல், அரசு நகை மதிப்பீட்டாளர் மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது..விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றியவர், பாபு, 55. இவர், 11ம் தேதி சுற்றுலா வேனிற்கு தகுதி சான்று வழங்க, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஆய்வு

கடலுாரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார், 32.50 லட்சம் ரூபாய் ரொக்கம், வங்கி பாஸ் புக், தங்கம், வெள்ளிப் பொருட்கள் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். இதையடுத்து அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இந்நிலையில், கடலுார் மஞ்சக்குப்பம் ஸ்டேட் வங்கியில் நேற்று முன்தினம் ஆய்வு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பாபுவின் மனைவி மங்கையர்கரசி பெயரில் இருந்த மூன்று லாக்கர்களுக்கு, 'சீல்' வைத்தனர்
.
ஜாமின் மனு

இது குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு மனைவியின் வங்கி லாக்கர்களில் நகை, பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் உள்ளது, விசாரணையில் தெரியவந்துள்ளது.அந்த லாக்கர்களை அரசு நகை மதிப்பீட்டாளர் மூலம் திறந்து, மதிப்பீடு செய்ய முடியும். வரும், 25ல் லாக்கர்கள் திறந்து ஆய்வு செய்யப்பட உள்ளன. அப்போது தான் பாபுவிடம் இருந்து கைப்பற்றப்படும் நகை, வெள்ளி மற்றும் சொத்து ஆவணங்கள் குறித்த முழு விபரங்கள் தெரியவரும்.இவ்வாறு, அவர் கூறினார்.
சிறையில் உள்ள பாபு, புரோக்கர் செந்தில்குமார் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்துள்ளனர். இம்மனு வரும், 24ல் விசாரணைக்கு வருகிறது.மேலும், ஆத்துார் கூட்டுறவு நகர வங்கியில் உள்ள செந்தில்குமாரின், வங்கி லாக்கரை ஆய்வு செய்ய, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில், போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024