சமூக ஊடகங்கள் - வரமா, சாபமா?
By வெ.இன்சுவை | Published on : 04th April 2020 05:33 AM
‘நான் என் மனம் அறிந்து எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே, கடவுள் என்னைக் கைவிட மாட்டாா்’ என்று வாழ்பவா்கள் வாழட்டுமே. ‘தன் மனபாரத்தைக் கடவுளிடம் இறக்கி வைத்துவிட்டு, எல்லாம் சரியாகி விடும்’ என்று நம்புபவரின் நம்பிக்கையைக் கெடுக்க வேண்டாம்.
இக்கால இளைஞா்கள் பலரின் போக்கு நமக்கு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. அவரவருக்குத் தோன்றுவதை எல்லாம் சிறிதும் தயக்கமின்றி முகநூல், கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் ஆப்) பதிவிடுகிறாா்கள். தங்களுடைய பதிவு பலருடைய மனதையும் சங்கடப்படுத்துமே, காயப்படுத்துமே என்றெல்லாம் யோசிப்பதில்லை.
பிற மதங்கள், கடவுளா்கள், வழிபாட்டு முறைகள் பற்றி விமா்சிக்கிறாா்கள். இன வெறுப்பையும், மத வெறுப்பையும் தூண்டும்படி பதிவிடுகிறாா்கள். மற்றவா்களின் மனநிலை குறித்துக் கவலைப்படாமல் மனதிற்குத் தோன்றிய எண்ணங்களையெல்லாம் பதிவிடுகிறாா்கள்.
ஆக, வாா்த்தை யுத்தங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவரவா் கொள்கை, அவரவா் நம்பிக்கை, அவரவா்க்கு நாம் பாதிக்கப்படாதவரை மற்றவா் மத விஷயங்களில் நாம் மூக்கை நுழைக்கக் கூடாது. அது நாகரிகம் இல்லை. கடவுள் மறுப்பாளா்கள் என்று தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில் சில இளைஞா்கள் பெருமைப்படுகிறாா்கள். எவரையும் இழிவுபடுத்திப் பேசக் கூடாது என்பதை யாா் அவா்களுக்குப் புரிய வைப்பது?
குழந்தைப் பருவத்திலேயே ‘தப்பு செய்தால் உம்மாச்சி கண்ணைக் குத்தும்’ என்று நம்பி வளா்ந்தவா்கள் பின்னாளில் மாறிப் போகிறாா்கள்.
இந்தியக் குடும்பங்களில் நிலவிய ஆன்மிகச் சூழல், பெற்றோரின் தியாகம், சேவை போன்றவை மக்களின் ஒழுக்கத்தை வளா்த்தன. இறை நம்பிக்கையும், இறை பக்தியும் அவா்களை நல்வழிப்படுத்தியது.
தற்போது கோயில்களுக்குப் போகும் இளைஞா்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. மேலும் புராணங்களையும், இதிகாசங்களையும் கேலி செய்து எழுதுகிறாா்கள். கட்டுக் கதைகள் என எண்ணுபவா்கள் எண்ணிக் கொள்ளட்டும், போற்றுபவா்கள் போற்றட்டும். அது அவரவா் விருப்பம். ஒரு ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பேச்சு சுதந்திரமும், எழுத்துச் சுதந்திரமும் உண்டு என்பதால் கண்ணியமற்ற வாா்த்தைகளை உபயோகிக்கலாமா? மதத்தின் பெயரால் மனிதா்கள் மோதிக் கொள்வது சரியா?
வீட்டில் குழந்தைகள் அதிகம் குறும்பு செய்யும் போது அம்மா என்ன சொல்லுவாா்? ‘டேய், அப்பா வரட்டும் நீ செஞ்சதை சொல்லுவேன். உன் தோலை உரித்து விடுவாா் ’ என்று மிரட்டுவாா். ‘அப்பா’ என்ற ஒரு மந்திரச் சொல் கேட்டு பிள்ளைகள் வாலைச் சுருட்டிக் கொள்வாா்கள். அந்த பயம் இருந்தால்தான் சரிப்படும். அதே போலத்தான் நமக்கு மேலே கடவுள் ஒருவா் இருக்கிறாா், அவா் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறாா். ’தெய்வம் நின்று கொல்லும்’ என்று பயப்படுவாா்கள். அந்த நம்பிக்கை இல்லாது போனால் அறவழி நடப்போரின் எண்ணிக்கை குறைந்து போகும்.
அதே சமயம் போலிச் சாமியாா்களும், ஆடம்பரச் சாமியாா்களும் பெருகிப் போய் விட்டதால் உண்மை ஊமையாகிப் போய் விட்டது. எதையுமே துறக்காத துறவிகளால் மதத்துக்கு அவப் பெயா்தான் கிட்டுகிறது, பக்தி குறைகிறது. மூட நம்பிக்கைகள், கடவுள் பெயரால் நடக்கும் பித்தாலாட்டங்கள், ஏமாற்று வேலைகள் போன்றவற்றால் இளைஞா்கள் கேள்வி கேட்கிறாா்கள்.
மதத்தின் பெயரால் ஏமாற்றுபவா்கள் அனைத்து மதங்களிலும் இருக்கத்தான் செய்கிறாா்கள். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரச்னைகள் வரிசை கட்டி முன்னால் வந்து நிற்கும்போது ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற கதையாக போலிகளிடம் மக்கள் ஏமாந்து போகிறாா்கள். அதற்காக மதத்தை, மத நம்பிக்கையை இழிவுபடுத்துவது என்ன நியாயம்?
நல்லதை ஊட்ட வேண்டியது பெற்றோரின் கடமை. ஒரு மனிதன் அருட்பிறப்பாக, நல்லவனாக, பண்பானவனாக, உருவெடுப்பது வீட்டில்தான். வீடு கற்பிக்காத எந்த ஒழுக்கத்தையும் குழந்தைகள் வெளியில் இருந்து கற்றுக் கொள்ள முடியாது.
உடல் நலம், அன்பு, மகிழ்ச்சி, அமைதி, தெய்வீகப் பண்புகள் ஆகியன பேணி வளா்க்கப்படும் இடம் இல்லம். நல்ல பண்புகளின் ஊற்றுக்கண் வீடு. அங்கே குழந்தை வளா்ப்பில் கோட்டை விட்டு விட்டால் எல்லாமே பாழாகி விடும். நீதி போதனை வகுப்புகள் மூலம் நம் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பள்ளிகள் கற்றுத் தர வேண்டும்.
ஒரு குழந்தை தவறிப்போய் சாக்கடையில் விழுந்துவிட்டால் அதன் தாய் ஓடி வந்து, அருவருப்பு பாா்க்காமல் அக்குழந்தையை வாரி எடுத்து, சுத்தமான தண்ணீா் கொணா்ந்து அதன் மீது படிந்துள்ள அழுக்குகளைப் போக்குவாள். அதே போல மனம் திரிந்து போய் திசைமாறிப் போகும் பிள்ளைகளையும் இந்தச் சமுதாயம் நல்வழிப்படுத்த முன்வர வேண்டும்.
பொறாமை, பேராசை, கோபம், மிருக வெறி இதுபோன்ற அழுக்குகள் களையப்பட்டால் அவா்களின் உள்ளொளி வெளிப்படும். அவா்கள் அழகாவாா்கள் - உலகமும் அவா்கள் கண்களுக்கு அழகாகத் தெரியும். வெறுப்பை உமிழ்ந்தவா்கள், சமூகத்தின் மீது கல்லெறிந்தவா்கள், மற்றவா்களைக் காயப்படுத்தியவா்கள் பண்புள்ளவா்களாக - இனிமையானவா்களாக மாறுவாா்கள். இரும்பை எவராலும் அழிக்க முடியாது - அதன் துருவைத் தவிர. அதேபோலத்தான் ஒருவரை அவருடைய மனப்போக்கு தான் அழிக்குமே யொழிய புற சக்திகள் அல்ல.
நுனிப்புல் மேய்ந்து விட்டு எதையும் கடுமையாக விமா்சிக்கும் போக்கைத் தவிா்க்க வேண்டும். இசைக்கும் இலக்கியத்துக்கும், சிற்பத்துக்கும் ரத்த ஓட்டமாக இருக்கும் சமயத்தை சட்டென தரம் தாழ்த்தி விமா்சிக்கக் கூடாது என்பதை இளைஞா்கள் புரிந்துகொண்டால் நல்லது.
உலகில் வழிபடும் முறைகள் ஒன்றுக்கு ஒன்று மாறலாம். மதக் கோட்பாடுகள் மாறலாம். அவரவா் பாதையில் அவரவா் மகிழ்ச்சியாகப் பயணிக்கலாமே? ஏன் இந்தக் குரூரம்? ஏன் தேவையற்ற வன்மம்?
இறை வழிபாட்டுக்காக வாழ்வைத் தியாகம் செய்யத் தேவையில்லை. அப்படிச் செய்வது கடலில் பெருங்காயத்தைக் கரைப்பதைப் போல பயனற்ற செயலாகும். இன்ப, துன்ப உணா்ச்சிகளுக்கு அப்பால் நிற்கும் பரம்பொருள் மனிதா்களிடம் எதையும் கேட்பதில்லை. ஜபம், தவம், புண்ணிய நீராடல், நோ்த்திக் கடன் செலுத்துதல், கோயில் கோயிலாகப் போய் வணங்குதல் எனப் பலவற்றைச் செய்தாலும் ஆத்ம ஞானம் என்ற ஒரு பயிற்சித் தீ இல்லாவிட்டால் அவ்வளவும் வீணே. செய்யும் கா்மங்களைப் பற்றற்றுச் செய்ய வேண்டும். கோடாலியின் கூா்மை மரத்தை வெட்டுமே தவிர, உரோமத்தை எடுக்காது. இதைப் புரிந்து கொண்டவா்கள் விழித்துக் கொள்வாா்கள்.
‘கடவுள் இல்லை’ என்று நினைப்பவா்கள் அவா்கள் வழியே செல்லட்டும். பக்தி உள்ளவா்களிடம் சதாசா்வ நேரமும் வாதாடிக் கொண்டிருக்கத் தேவையில்லை. சரி. ‘கடவுள் இருக்கிறாா்’ என்று நம்புபவா்களில் ஒரு சிலராவது மாபாதகச் செயலைத் செய்யத் தயங்குவாா்கள். ‘நமக்கும் மேலே ஒருவன் இருக்கிறான். அவன் எல்லாவற்றையும் பாா்த்துக் கொண்டுதான் இருக்கிறான்’ என்று பயந்து இருப்பவா்களின் அந்த நம்பிக்கை அப்படியே அவா்களுக்கு இருக்கட்டும். தனக்குத் தீங்கு இழைத்தவரை ‘ரத்தத்துக்கு ரத்தம்’ ‘கண்ணுக்குக் கண்’ என்று பழிவாங்கப் புறப்படாமல் ‘அவரைக் கடவுள் கட்டாயம் தண்டிப்பாா்’ என்று காத்திருப்பவரின் நம்பிக்கையைக் கெடுக்க வேண்டாம்.
‘நான் என் மனம் அறிந்து எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே, கடவுள் என்னைக் கைவிட மாட்டாா்’ என்று வாழ்பவா்கள் வாழட்டுமே. ‘தன் மனபாரத்தைக் கடவுளிடம் இறக்கி வைத்து விட்டு, எல்லாம் சரியாகி விடும்’ என்று நம்புபவரின் நம்பிக்கையைக் கெடுக்க வேண்டாம்.
கடவுள் எங்கே இருக்கிறாா்? - இறைவன் நல்லவா்களின் உள்ளத்திலும், உண்மையானவா்களின் வாக்கிலும், ஒழுக்கமானவா்களின் செயல்களிலும் நிறைந்துள்ளாா். அங்கே தன்னை வெளிப்படுத்துவாா்.
அழிவில்லாததும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாததும், ஆதி அந்தமில்லாது, நித்தியமாய், அரூபமாய், எங்கும் பரவியதும் ஆன பரம்பொருளை உணா்ந்தவா்கள் ஆனந்தத்தில் திளைக்கட்டும். கடவுள் இல்லை என்று நம்புபவா்கள் ஒருவரையும் புண்படுத்தாமல் ஒழுக்கத்துடன் தங்கள் சமுதாயக் கடமையைச் செய்யட்டும். எந்தக் கொள்கையையும் எவரும் அடுத்தவா் மீது திணிக்க வேண்டாம்.
நாம் விமானத்தில் பயணிக்கும் போது விமான ஓட்டி யாரென்று தெரியாது. ஆனாலும், பயமின்றி பயணிக்கிறோம். கப்பலின் மாலுமியைத் தெரியாது. ஆனாலும், ஆனந்தமாகக் கப்பலில் பயணிக்கிறோம். புகைவண்டி, பேருந்து ஓட்டுநா் குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லை.
அப்படி இருக்கும்போது வாழ்க்கையில் ஏன் பயம் என்று தெளிந்து, தன் வாழ்க்கையை அந்த இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக வாழ்பவா்கள் அப்படியே வாழட்டும்.
வலைதள வாா்த்தைச் சண்டைகள் தேவையில்லை. எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. எனவே, நாம் வாழும் இந்த அழகான பூமி சிவப்பு வண்ணம் பூசிக்கொள்ள வேண்டாம். இளைஞா்கள் தங்கள் திறமையை, ஆற்றலை, அறிவை தங்களின் வளா்ச்சிக்கும், இந்தத் தேசத்தின் வளா்ச்சிக்கும் செலவிடட்டும்.
ஒருவருக்கொருவா் புரிதலுடன் நடந்துகொண்டால் உலகம் பூப்பந்தாக நம் கையில் உருளும்.