மளிகை, காய்கறி கடைகள் திறந்திருக்கும் நேரம் மேலும் குறைப்பு: பழனிசாமி உத்தரவு
By DIN | Published on : 04th April 2020 04:56 PM |
சென்னை: தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களான மளிகை மற்றும் காய்கறி போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை மேலும் குறைத்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இயங்கி வந்த கடைகள், இனி காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஏப்ரல் 5-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக் கடைகளும் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி பிறப்பித்திருக்கும் உத்தரவில், தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மக்கள் நடமாட்டத்தை மேலும் கட்டுப்படுத்த, அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6.00 மணி முதல் 2.30 மணி வரை அனுமதிக்கப்பட்டிருந்த கால அளவை நாளை ஞாயிற்றுக்கிழமை (5.4.2020) முதல் குறைத்து, காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதிக்கப்படும்.
இதை அனைத்து பொதுமக்களும் கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
மேலும் தமிழக முதல்வர் பழனிசாமி கூறியிருப்பதாவது,
காலை நேரங்களில் சந்தை பகுதிகளில் கூடுதல் கூட்டத்தை தவிர்க்கவும், கூடுதல் சமூக விலகலை கடைபிடிப்பதை உறுதி செய்யவும், தன் ஆர்வலர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றை வீடுகளுக்கே சென்று வழங்க அரசு தரப்போடு இணைந்து சமூக ஆர்வலர்கள் செயல்படலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment