Saturday, April 4, 2020

நாடு முழுவதும் ரயில் சேவை எப்போது தொடங்கும்? ரயில்வே விளக்கம்

By PTI | Published on : 04th April 2020 03:10 PM | 


புது தில்லி: நாடு முழுவதும் ரயில் சேவையை மீண்டும் எப்போது தொடங்குவது என்பது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், விரைவில் அது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் இந்திய ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஏப்ரல் 15ம் தேதி ரயில் சேவை மீண்டும் தொடங்கவிருப்பதாகவும், அதற்கான ஆயத்தப் பணிகளை இந்திய ரயில்வே செய்து வருவதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் நேற்று வெளி வந்தன.

இந்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், இந்திய ரயில்வே வாரியம் இன்று ஒரு விளக்கத்தை அளித்துள்ளது.

அதாவது, நாடு முழுவதும் ரயில் சேவை தொடங்குவது குறித்து இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. அதே சமயம், ஒவ்வொரு ரயிலுக்கும் தனித்தனியாக ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தால்தான் ரயில்கள் இயக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவு, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காணொலி காட்சி வாயிலான கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அமைச்சர்கள் கொண்ட குழுவினர் ஒப்புதல் அளித்த பிறகே, ஒவ்வொரு விரைவு ரயிலின் சேவையும் தொடங்கும்.

ஏப்ரல் 14ம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்ட அறிவிப்புக்குப் பிறகு புதிதாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து 13,500 ரயில் சேவைகளை இந்திய ரயில்வே ரத்து செய்தது. அதே சமயம், சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024