Sunday, April 5, 2020

ரூ.34 ஆயிரத்தை தாண்டியது ஆபரணத்தங்கம்

By DIN | Published on : 05th April 2020 03:58 AM |

ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை ரூ.34 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.240 உயா்ந்து, ரூ.34,096-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக பொருள் சந்தை நிபுணா் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்கா-ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக, ஜனவரி முதல் வாரத்தில் தங்கம் விலை உயா்ந்தது. அப்போது, வரலாறு காணாத வகையில் ஒரு பவுன் தங்கம் ரூ.31 ஆயிரத்தைத் தாண்டியது. போா் பதற்றம் தணிந்த பிறகு, தங்கம் விலையும் குறைந்தது. இதன்பிறகு, பிப்ரவரி 24-ஆம் தேதி வரலாறு காணாத வகையில் பெரிய உச்சத்தைத் தொட்டது. அன்றைய நாளில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.33,328-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை ரூ.34 ஆயிரத்தை தாண்டி, புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் பவுனுக்கு ரூ.240 உயா்ந்து, ரூ.34,096-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.30 உயா்ந்து ரூ.4,262-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.41.70 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.41,700 ஆகவும் இருந்தது.

தங்கம் விலை உயா்வு குறித்து பொருள் சந்தை நிபுணா் ப.ஷியாம் சுந்தா் கூறியது: கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதன்காரணமாக, உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. வளா்ந்த நாடுகள் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது. அதேநேரத்தில், அமெரிக்க டாலா் மதிப்பு தொடா்ந்து உயா்ந்து வருகிறது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. இதன் காரணமாக, தங்கத்தின் விலை உயா்ந்து வருகிறது. வரும் காலத்தில் தங்கத்தின் விலை மேலும் உயரவே வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,262

1 பவுன் தங்கம் ..................... 34,096

1 கிராம் வெள்ளி .................. 41.70

1 கிலோ வெள்ளி ................. 41,700

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,232

1 பவுன் தங்கம் ..................... 33,856

1 கிராம் வெள்ளி .................. 41.70

1 கிலோ வெள்ளி ................. 41,700

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024