Tuesday, February 3, 2015

உன்னோடு போனதே அண்ணா...!



'அ'... மொழிக்கு முதல் எழுத்து. அண்ணா... பல கட்சிகளுக்கு முன்னெழுத்து. இன்றைய அரசியல்வாதிகள் பலருக்கும் அவர்தான் தலையெழுத்து!

இன்றும் அந்த மனிதரைக் கொண்டாடுவதற்கு, அவரது பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மட்டும்தான் காரணமா? இல்லை, அத்துடன் அவரிடம் இருந்த அரசியல் நாகரிகமும் பண்பாடும்தான் காரணம். தனக்குக் கீழே இருந்த தம்பிகளை மதித்தார். அதிகாரத்தைப் பங்கிட்டுக்கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர்களை அரவணைத்தார். குடும்பம் வேறு, கட்சி வேறு என்று நினைத்தார். அவர் வளர்த்த நாகரிகம் இன்றைய அரசியல்வாதிகளால் பின்பற்றப்பட்டால், சமூகமே மேம்படும்!அண்ணாவின் கதையைத் தேடினால், 'உன்னோடு போனதே அண்ணா!' என்றுதான் சொல்லத் தோன்றும். அந்த ஏக்க காலத்தின் சில சொச்சங்கள் மட்டும் இங்கே...

பழிக்குப் பழி!: தி.மு.க. அப்போது எதிர்க்கட்சி. அறிவிக்கப்பட்ட போராட்டத்தை அடக்குவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா, நெடுஞ்செழியன், சம்பத், என்.வி.நடராஜன், மதியழகன் ஆகிய ஐந்து பேரை போலீஸ் கைது செய்தது. வண்டியில் ஏற்றும்போது அண்ணாவின் தோளில் கிடந்த துண்டு கீழே விழுந்தது. அந்த அதிகாரி தனது கையில் வைத்திருந்த தடியால் துண்டைத் தூக்கிஎறிந்தார். குனிந்து எடுத்த அண்ணா, கோபத்தைக் காட்டாமல் தோளில் போட்டுக்கொண்டார். கமிஷ னர் அலுலலகம் அழைத்து வரப்பட்ட அண்ணாவை சேரில் உட்கார்ந்து சிகரெட் பிடித்தபடியே விசாரித்தார் அந்த அதிகாரி. அப்போதும் அமைதியாகவே இருந் தார் அண்ணா.

சில ஆண்டுகளிலேயே தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது. அண்ணா, முதலமைச்சர் ஆனார். அந்த அதிகாரிக்கு பயம் வரத்தானே செய்யும். தனது பதவியை ராஜினாமா செய்தார். அண்ணா அதைஏற்க வில்லை. ''எந்த ஆட்சி வந்தாலும் போனாலும், அதிகாரிகள் நிரந்தரமானவர்கள். விலகத் தேவைஇல்லை'' என்று அந்த அதிகாரியை வரச் சொன்னார். வெட்கப்பட்டபடியே அவரும் வந்தார்.

சில மாதங்களுக்கு பிறகு... தி.மு.க-வின் முன்னாள் மேயர் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய், தான் சொல்வதைத்தான் இன்ஸ்பெக்டர் செய்ய வேண்டும் என்று கட்டளை போட்ட தகவல் அந்த உயரதிகாரிக் குத் தெரிய வந்தது. அண்ணாவின் காதுக்குத் தகவலை கொண்டுபோனார். ''இப்படி ஒருவர் செய்தால், நீங்கள் என்ன செய்வீர்களோ... அதையே செய்யுங்கள். இனி, என்னைக் கேட்க வேண்டாம்'' என்று உத்தரவு போட்டார் அண்ணா!



அண்ணன் குரல்: அதிகாரிகளை கட்சிக்குஅப்பாற் பட்டவர்களாகப் பார்க்க வேண்டும். அவர்களும் அப்படியே நடக்க வேண்டும்!

கட்சி வேறு, ஆட்சி வேறு!: தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது அண்ணா வெளியிட்ட ஓர் அறிக்கை, ஆட்சியாளர்களின் சட்டப் புத்தகமாக அமையும் அளவுக்கு முக்கியமானது.

''கட்சி என்பது ஒன்று; சர்க்கார் என்பது வேறு ஒன்று; நாடு என்பது இன்னொன்று. கட்சியைவிட சர்க்கார் நிரந்தமானது. சர்க்காரைவிட நாடு நிரந்தரமானது. கட்சிகள் தோன்றலாம், மறையலாம், மாண்டும் போகலாம். ஆனால், சர்க்கார் நிரந்தரமானது. ஆகவே, கட்சிக் காரியங்களுக்கு சர்க்காரைப் பயன்படுத்தும்எண்ணத்தை விட்டுவிட வேண்டும். கட்சியும் சர்க்காரும் தனித்தனியாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மோதுதல் இருக்கக் கூடாது, இணைந்தும் போய்விடக் கூடாது. தனித்தனித் தன்மையுடன் தனித்தனியாக இயங்க வேண்டும். அதிகாரிகளை நேரடியாக அணுகிக் காரியம் சாதிக்கும் முறை நமது ஆட்சியில் இருக்கக் கூடாது'' என்றார்.

அண்ணன் குரல்: ஆளுங்கட்சி என்பதால் கட்சிக்காரர்கள் அனைவரும் அதிகாரம் செலுத்தக் கூடாது!
குடும்பமா... கிட்ட வராதே!: முதலமைச்சராகப் பதவிஏற்கும் நிகழ்ச்சிக்கு உறவினர்கள் யாரும் வரக் கூடாது என்று சொல்லிவிட்டார் அண்ணா. ஆனால், அவரின் மனைவி ராணிக்கு அந்தக் காட்சியைப் பார்க்க ஆசை. புறப்படும்போது அண்ணா அழைத்துப் போவார் என்று நினைத்தார். ஆனால், அண்ணா அமைதியாக கார் ஏறிவிட்டார்.

மறுநாள் நுங்கம்பாக்கத்தில் அண்ணாவின் வீட்டுக்கு அரசு அலுவலர்கள் புதிய நாற்காலிகள், சோபாக்களை கொண்டுவந்து வைத்தார்கள். அதை எங்கே வைக்க வேண்டும் என்று ராணி சொல்லிக்கொண்டுஇருக்கும் போது வீட்டுக்குள் நுழைந்த அண்ணா, ''எல்லாத்தையும் எடுத்துட்டுப் போங்க'' என்றார். விதிமுறைப்படிதான் செய்கிறோம் என்று அலுவலர்கள் சொன்னபோதும் தேவையில்லை என்று அனுப்பிவைத்த அண்ணா, ''ராணி... எனக்கு இந்தப் பதவி நிரந்தரமல்ல. நாளைக்கே ஆட்சி போய்விடும். அப்போது இவர்களே வந்து சோபாவை எடுத்துட்டுப் போயிடுவாங்க. அப்ப உன்னோட மனசுதான் வருத்தப்படும். நமக்கு இந்த நாற்காலியே போதும்'' என்று பக்கத்தில் இருந்த மூங்கில் நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தார்.’

அண்ணன் குரல்: குடும்பம் வேறு, கட்சியும் ஆட்சியும் வேறு!

அரசியல் வேண்டாம்!: தி.மு.க. வேர் பிடிக்க ஆரம்பித்த காலம். செ.அரங்கநாயகம் அப்போது பள்ளிக்கூட ஆசிரியர். ''தி.மு.க. சார்பு ஆசிரியர்களை ஒன்றுசேர்த்து ஒரு சங்கம் ஆரம் பிக்கலாமா?'' என்று கேட்க, அண்ணா மறுத்தார்.

''கல்வி அனைவருக்கும் பொதுவானது. அதில் அரசியலைப் புகுத்தக் கூடாது'' என்ற அண்ணா, மாணவர்கள் அரசியலுக்கு வருவதையும் விரும்பவில்லை. ''அரசியல் ஈடுபாடு இருக்கலாம். ஆனால், படித்து முடித்ததும்தான் பங்கேற்க வேண்டும். அரசியல் என்பது அத்தை மகள் மாதிரி. திருமணத்துக்கு முன் சுத்திச் சுத்தி வரலாமே தவிர, தொட்டுவிடக் கூடாது'' என்றார்.

அண்ணா முதல்வரானதும், ஒரு கோயிலில் அறங்காவலர் விஷயத்தில் சர்ச்சை எழுந்தது. ''கட்சிக் காரர்களை கோயில் அறங்காவலர்களாகப் போடக் கூடாது'' என்று உத்தரவிட்ட அண்ணா, அதற்கு இரண்டு காரணங்களும் சொன்னார்.

''கட்சிக்காரங்களுக்கு கோயில் ஐதீகம், விதிமுறைகள் தெரியாது. இது கோயிலுக்கு இழப்பு. கட்சிக்காரர்களை அறங்காவலராப் போட்டா, அவங்க கோயில்ல தர்ற பொங்கலைச் சாப்பிட்டுட்டு, அங்கேயே தூங்கிடுவாங்க. இது கட்சிக்கு இழப்பு!'' என்றார்.

அண்ணன் குரல்: அரசியல் லாபங்களுக்காக யாரையும் பலியிடக் கூடாது!

பதவி ஆசையில்லை!: தி.மு.க. ஆரம்பித்தபோது தலைமைப் பதவியை பெரியாருக்காக காலியாக வைத்திருப்பதாகச் சொல்லி பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் அண்ணா.
அந்தப் பதவியையும் தானே கடைசி வரை வகிக்கக் கூடாது என்று நினைத்து ''சுற்று முறையில் பதவி அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்'' என்றார். இரண்டு ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்தவர், நெடுஞ்செழியனைக் கட்சியின் பொதுச் செயலாளராக ஆக்கினார். ''தம்பி வா! தலைமை ஏற்க வா! உன் ஆணைக்குக் கட்டுப்பட நான் தயாராக இருக்கிறேன்'' என்று அறிவிக்கும் அளவுக்கு பக்குவப்பட்டு இருந்தார். நெடுஞ்செழியனுக்கு அடுத்தது யார்... மதியழகனா, என்.வி.நடராஜனா என்ற சிக்கல் தி.மு.க-வில் பலத்த சலசலப்பை ஏற்படுத்த, வேறு வழியில்லாமல்தான் மீண்டும் பொதுச் செயலாளரானார் அண்ணா.

1967... ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் எதிர்ப்பு. தி.மு.க. கூட்டணிதான் ஆட்சியைக் கைப்பற்றும் என்ற நிலை. தான் சட்டமன்றத்துக்குப் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வானால்தான் முதல்வராக முடியும் என்ற நினைப்புகூட இல்லாமல் தென்சென்னை எம்.பி. பதவிக்குப் போட்டியிட்டார் அண்ணா!

அண்ணன்குரல்: அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். பதவியை எதிர்பார்த்தே எப்போ தும் கணக்குப் போடக் கூடாது!

தனது குறைபாட்டை தானே சொன்னார்!: 'யாருக்கும் பயப்பட மாட்டேன்... எதிர்ப்பு எனக்கு தூசு!' என்றுதான் தலைவர்கள் பேசுவார்கள். தலைவர்கள் யாரும் தங்களின் குறைபாட்டை மறந்தும் சொல்ல மாட்டார்கள். அண்ணா அதற்கு நேர் எதிர்!

''எனக்கு நிறையக் குறைகள் உண்டு. சொகுசாக இருப்பது மாதிரி நிறையக் கனவுகள் காண்பேன். சிறுசங்கடம் வந்தாலும், பெரும் குழப்பம் புகுந்துவிடும். எதிரிகள் பிரமாண்டமானவர்கள் என்ற அச்சம் எனக்கு எப்போதும் உண்டு. ஊர்வலம் என்றாலே எனக்குப் பிடிக்காது. என்னிடம் வந்து பலரும் பல விஷயங்களைச் சொல்கிறார்கள். ஆனால், அதைக் கேட்டுக்கொள்வது போல நான் பாவனைதான்காட்டுகிறேன். பலவற்றை கேட்டுக்கொண்டதே இல்லை. அசகாயசூரத்தனமாகப் பேசுவது என்றாலே எனக்கு அச்சமாக இருக்கிறது'' என்றார்.


அண்ணன் குரல்: பொது வாழ்க்கையில் இருப்பவர் தனது குறைபாடுகளைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும்!


நோயை ஒப்புக்கொண்டார்!: தலைவர்கள் இப்போதெல்லாம் சாதாரணமாக மருத்துவமனைக்குப் போனால்கூட, அது வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள். நடிகர்களைவிட தலைவர்கள்தான் 'இமேஜ்' பற்றி அதிகமாகக் கவலைப்படுகிறார்கள். ஆனால், அண்ணா தனது உடல்நலம் பற்றி பகிரங்கமாக எழுதினார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அண்ணா மறைந்தது 1969-ல். ஆனால், அதற்கான அறிகுறிகள் பத்தாண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. இதற்கான அறிகுறி வந்து, டாக்டரைப் போய் பார்த்துவிட்டு வந்ததும் பக்கம்பக்கமாக திராவிட நாடு பத்திரிகையில் எழுதி னார். 'உன்னிடமின்றி வேறு யாரிடம் சொல்லப் போகிறேன்' என்ற பீடிகையுடன் ஆரம்பித்த அண்ணா, கழுத்தின் பின்புறத்தில் கட்டி இருப்பதைச் சொன்னார். ''இடது தோளில் எலும்புக்கும் சதைக்கும் இடையில் உள்ள மெல்லிய பாகம் தடித்துப்போய் என்னால் கையைத் தூக்க முடியவில்லை'' என்று சொன்னார். ''என்னுடைய உடலமைப்பே அதிக அளவு அலைந்து கட்சி வேலை பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது'' என்றார்.

அண்ணன் குரல்: தலைவர்களின் வாழ்க்கை பகிரங்கமாகச் சொல்லவேண்டியது. அதை கட்சிக்காரர்களும் பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும்!

மாற்றார் மீதும் மதிப்பு!: ''தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். ஆனால், மற்ற கட்சித் தலைவர்கள் அனைவரும் சட்டமன்றத்துக்குள் வர வேண்டும்'' - 1967 தேர்தல் பிரசாரத்தின்போது அண்ணா சொன்னது.

தேர்தல் முடிவுகளை டிரான்சிஸ்டர் வைத்துக் கேட்டுக்கொண்டு இருந்தார் அண்ணா. முதல் முடிவு, பூங்கா நகர். கூட்டணிக் கட்சியான சுதந்திரா வேட்பாளர் ஹண்டே வெற்றி. மகிழ்ச்சி அடைந்தார். அடுத்ததாக, மாயவரம் தி.மு.க. வேட்பாளர் கிட்டப்பா வெற்றி. துள்ளிக் குதித்தார். அடுத்ததாக விருதுநகர் காமராஜர் தோல்வி. துவண்டுபோனார் அண்ணா.

''காமராஜர் எல்லாம் தோற்கக் கூடாதுய்யா!'' என்று கலங்கினார். ''ஜெயிச்சது நம்ம கட்சிதானே'' என்று பக்கத்தில் இருந்த கவிஞர் கருணானந்தம் கேட்க, ''காமராஜ் தோற்கக் கூடாதுய்யா.நாட்டுக்காக உழைச்சவரை எப்படித் தோற்கடிக் கலாம்?'' என்றார் அண்ணா. பதவியேற்றதும், ''காமராஜர் எங்களுக்கு ஆலோசனை சொல்ல வேண் டும்'' என்று அவரை நேரில் பார்க்கப் போனார். யாரை வீழ்த்தி தி.மு.க. வெற்றிபெற்றதோ, அந்த முதலமைச்சர் பக்தவத்சலத்தைப் பார்த்து ஆசி வாங் கினார்.

அரசியல் அதிசயமாக நடந்த சம்பவம், பெரியாரையும் பார்க்கப் போனதுதான். பெரியாரிடம் இருந்து பிரிந்த அண்ணா, 18 ஆண்டுகள் அவரை எதிர்த்து கட்சி நடத்தினார். இரண்டு இயக்கங்களும் தகுதி குறைந்த விமர்சனங்களைக்கூட செய்துகொண்டன. தேர்தலில் தி.மு.க-வை எதிர்த்து பெரியாரே பிரசாரம் செய்தார். ஆனால், வெற்றி பெற்ற அண்ணா, ''இந்த ஆட்சியே உங்களுக்குக் காணிக்கை!'' என்றபோது பெரியாரால் பேச முடியவில்லை. 'அண்ணா வந்து பார்த்தபோது கூச்சத்தால் குறுகிப்போனேன்' என்றுதான் பெரியாரால் சொல்ல முடிந்தது.

அண்ணன் குரல்: அனைவரிடமும் அன்புசெலுத்து. நன்றியை நெஞ்சில் நிறுத்து!

- ப.திருமாவேலன்

குஷ்பூவை ஏன்தான் இப்படி மாட்டி விடுறாங்களோ?




மதுரை: மதுரையில் நடிகை குஷ்பூவை பாரத மாதா தோற்றத்தில் சித்தரித்து பேனர் வைக்கப்பட்டதற்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது குஷ்பூவுக்கு வாடிக்கையாகிவிட்டது. அவர் சும்மா இருந்தாலும், அவர் சேருகின்ற கட்சியினர் சும்மா இருக்க மாட்டார்கள் போலிருக்கிறது.

தமிழ் சினிமாவில் மிக உச்சத்துக்கு சென்ற நடிகையான குஷ்பூ, பிரபலமாக இருந்த அந்த காலகட்டத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னி என்பதை கடந்து, கடவுள் நிலைக்கு ரசிகர்கள் அவரை உயர்த்தி வைத்தனர். திருச்சியில் கோயில் கட்டி வழிபாடு நடத்தினார்கள். ஹோட்டல்களில் குஷ்பூ இட்லி விற்கப்பட்டது. அப்போது அது பரபரப்பாக பேசப்பட்டது.

அதற்குப்பின் தங்கர்பச்சன் நடிகைகளை இழிவாக பேசிவிட்டார் என்று சொல்லி அவரை மேடையில் மன்னிப்பு கேட்க வைத்து புரட்சி செய்தார். அதன் பின் ஒரு வார இதழில் திருமணத்துக்கு முன்னாள் பெண்கள் பாதுகாப்பாக உடலுறவு வைத்துக் கொள்ளாலாம் என்று பேட்டி கொடுக்க, அதனால், அவருக்கு எதிராக அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தினார்கள்.

தமிழகம் முழுவதும் நாற்பது நீதிமன்றங்களில் வழக்குகள் போட்டார்கள். அவர் நீதிமன்றத்திற்கு சென்ற இடங்களில் எல்லாம் செருப்பு, அழுகிய தக்காளிகளை வீசினார்கள். அனைத்தையும் தைரியமாக எதிர்கொண்டார் குஷ்பூ.

இந்நிலையில் ஜெயா டி.வி.யில் அவர் நடத்திய ஜாக்பாட் நிகழ்ச்சி, அவர் அணியும் ஜாக்கெட்டுகளுக்காகவே பிரபலமானது. அந்த சமையத்தில் அ.தி.மு.க. அனுதாபி போல காட்டி வந்தவர், திடிரென்று தி.மு.க.வில் சேர்ந்து முக்கிய பேச்சாளர் அளவிற்கு பிரபலமானார். இதைத்தொடர்ந்து, சன் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்ட மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஜட்ஜியாக பணியாற்றினார். இதற்கிடையே குஷ்பூ கற்பை பற்றி பேசியது தவறில்லை என்று நீதிமன்றம் இவரை வழக்கிலிருந்து விடுவித்தது.

தி.மு.க.வில் இருந்து கொண்டே ஸ்டாலினை பற்றி எகிடுதகிடாக பேட்டி கொடுக்க திருச்சியில் இவர் தங்கியிருந்த ஹோட்டல் முன் தாக்குதல் நடத்த தி.மு.க.வினர் திரண்டனர். பின் போலீஸ் பாதுகாப்புடன் சென்னை சென்றார். சென்னை வீட்டிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இப்படி எப்பொழுதும் பரபரப்பாக வலம் வந்தவர் சமீபத்தில் காங்கிரசில் சேர்ந்தார். தோல்வியில் சோர்ந்து கிடந்த காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமானார்கள். அங்கு பல கோஷ்டிகளுக்கிடையே தனியாக குஷ்பூ கோஷ்டி ஒன்று எல்லா ஊர்களிலும் உருவாகிவிட்டது. இதையடுத்து, சமீபகாலமாக மேடைகளில் பா.ஜ.க.வை வெளுத்து வாங்கி வருகிறார்.

இந்நிலையில், பாரத மாதாவாக குஷ்பூவை சித்தரித்து மதுரை காங்கிரஸ்காரர்கள் வைத்த விளம்பர பேனர் ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மதுரை, உத்தங்குடி பகுதி இருபத்தி எட்டாவது வார்டு காங்கிரஸ் நிர்வாகிகள் குடியரசு தின வாழ்த்து சொல்லி வைக்கப்பட்ட பேனரில், இந்தியா வரைபடத்திற்குள், தேசியகொடியுடன் சிங்கத்தின் மேல் பாரத மாதாவாக குஷ்பூ இருப்பதுபோல் சித்தரித்து வைத்திருந்தார்கள். இந்த விளம்பரம் நீண்டநாட்களாக இந்த பகுதியில் காட்சி தந்தும் யாரும் அதை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் பா.ஜ.க. நிர்வாகி ஹரிகரன் என்பவர், இந்த பேனர் பாரத மாதாவை இழிவு படுத்துவதுபோல் உள்ளது. எனவே, காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, அந்த பேனர் அகற்றப்பட்டாலும் நடவடிக்கை வேண்டுமென்று பா.ஜ.க.வினர் தொடர்ந்து வற்புறுத்த இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் குஷ்பூவையும் சேர்ப்பார்களா என்பது பற்றி தெரியவில்லை. எப்படியோ இந்த வழக்கின் மூலமாக மீண்டும் குஷ்பூ சர்ச்சைக்குள் வந்து விட்டார்.

இதே போல் சில வருடங்களுக்கு முன் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை கன்னிமேரியாக சித்தரித்து தொண்டர்கள் கட்டவுட் வைக்க, பெரும் சர்ச்சையாகி, கிறிஸ்துவர்கள் போராட்டங்கள் நடத்தியதோடு, அடுத்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்காமலும் புறக்கணித்தனர்.

அதுபோல் அழகிரியை முருகக்கடவுள் போல் சித்தரித்ததால் இந்து அமைப்புகள் அப்போது போராட்டங்கள் நடத்தின. மேலும், நடிகர் ராஜினி, விஜய் போன்றவர்கள் கடவுளாக சித்தரிக்கப்பட்டதாலும் பல எதிர்ப்புகளை சந்தித்திருக்கிறார்கள். தற்போது குஷ்பூவும் அதே சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

குஷ்பூ என்றாலே பரபரப்புதான்.

செ.சல்மான்

உங்கள் பிரியாணியில் சிக்கனா...பூனைக்கறியா?




அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை செய்தி. சென்னையில் புற்றீசல் போல சாலையோர கடைகள் செயல்படுகின்றன. இங்கு சுகாதாரம் என்பதை எழுதி வைத்து பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம். பெயரளவுக்கு கூட சுகாதாரத்தை இத்தகைய கடைகள் கடைப்பிடிப்பதில்லை.

அதோடு இங்கு சமைக்கப்படும் உணவுப் பொருட்களின் தரமும் படுமோசம். உணவு பொருட்களின் விலை குறைவு என்பதால் இந்தக் கடைகளில் கூட்டம் அலைமோதுகின்றன. ருசிக்கு சாப்பிடாமல் ஏதாவது பசிக்கு சாப்பிட வேண்டும் என்று நினைப்பர்களின் கூட்டம் இங்கு அதிகம். சாப்பிட்டு விட்டு பிறகு அவர்களுக்கு ஏற்படும் உபாதைகள் பல.


சமீபத்தில் இத்தகைய சாலையோர தள்ளு வண்டிக்கடைகளில் சிக்கன் என்ற பெயரில் பூனைக்கறி பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதற்காக வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகளைப் பிடிக்க ஒரு கும்பல் சென்னையில் செயல்படுகிறது. இந்த கும்பல் பூனைகளைப் பிடித்து அதன் கறிகளை குறைந்த விலைக்கு சாலையோர தள்ளுவண்டி கடைகளுக்கு விநியோகம் செய்து விடுகிறது. இந்த கறிகளுடன் மசாலா சேர்த்து அதை சிக்கன் என்று சில கடைக்காரர்களும் விற்றுவிடுகின்றனர்.

குறைந்த விலைக்கு சிக்கன் 65 கிடைக்கிறது என்று மக்களுக்கும் அதை விரும்பி சாப்பிடுகின்றனர். இதை சாப்பிடுபவர்களுக்கு எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. இதனால் சென்னை சாலையோர தள்ளுவண்டிக் கடைகளில் சிக்கன் என்ற பூனைக்கறி விற்பனை படுஜோராக விற்பனை நடந்து வருகிறது. இதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளும் கண்டுக்கொள்வதில்லை.
பூனைக்களுக்கு ஏற்பட்ட இந்த திடீர் மவுசு காரணமாக இப்போது சென்னையில் பல வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் மாயாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பூனைகள் மாயமாகிய சில நாட்கள் மட்டும் அவற்றை தேடும் உரிமையாளர்கள் அதன்பிறகு அதை மறந்து விடுகின்றனர். இது பூனைகளை திருடும் கும்பலுக்கு வசதியாக உள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் செங்குன்றத்தில் 20 பூனைகளும், பல்லாவரத்தில் 13, ஐ.சி.எப். அயனாவரத்தில் 6, ஆவடியில் 1 என மொத்தம் சென்னையில் 40 பூனைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக 'பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா' என்ற அமைப்பினர் தெரிவிக்கின்றனர். கோட்டூர்புரம் பகுதியில் பூனை வெட்டப்பட்ட பிறகு அதன் தோலை இந்த அமைப்பினர் கண்டுப்பிடித்துள்ளனர். இதுபோன்று சென்னையில் பல இடங்களில் பூனைகள் திருடப்படுவது குறித்த விவரங்கள் வெளியில் தெரிவதில்லை என்று அந்த அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து 'பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா' என்ற அமைப்பின் உறுப்பினர் அஸ்வத் கூறுகையில், "கால்நடைகளை துன்புறுத்துவது பாவம். அவற்றை நேசிக்க வேண்டும். குறிப்பாக வீடுகளில் வளர்க்கப்படும் பூனை, நாய், பசு ஆகியவற்றின் மீது பரிவு, பாசம் நமக்கு கட்டாயம் தேவை. பூனைகளை கறிக்காக வெட்டிக் கொலை செய்வது குற்றம். இதுகுறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக பூனைகளை கொன்றவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கும் பதிவு செய்து இருக்கிறோம். கடந்த 30.12.2014ல் ஐ.சி.எப். காவல்நிலையத்தில் வைத்தியலிங்கம் என்பவர் மீது 6 பூனைகளை இறைச்சிக்காக கொண்டு சென்றாக புகார் கொடுக்கப்பட்டு பூனைகள் மீட்கப்பட்டுள்ளன" என்றார்.

'புட் ஸ்டாண்டர்ஸ் சேப்டி அத்தாரிட்டி' வழிகாட்டுதலில் ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் ஆகியவற்றை சாப்பிடலாம். முயல், புறா, பூனை போன்றவற்றை சாப்பிட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதையொல்லாம் அசைவ உணவுப்பிரியர்கள் கண்டுக்கொள்வதில்லை. கண்டதை சாப்பிட்டு உடல் நலத்தையும், ஆயுள் நாட்களையும் குறைத்து வருவது வேதனைக்குரியது.




சென்னையில் விற்கப்படும் பிரியாணியிலும் இப்போது தில்லுமுல்லு நடப்பதாக பெயர் வெளியிட விரும்பாத சுகாதார அதிகாரி ஒருவர் கூறினார். சென்னை பெரியமேடு பகுதியில் சில கடைகளில் விற்கப்படும் பிரியாணி அனைத்தும் சாப்பிட தகுதியற்றவைகள். ஏனெனில் இங்கு சப்ளை செய்யப்படும் கறிகள் அனைத்தும் வடமாநிலங்களிலிருந்து சென்னைக்கு ரயில், பஸ் ஆகியவை மூலம் கொண்டு வரப்படுகின்றன. இதற்காக பல நாட்களுக்கு முன்பே கறிகளை வெட்டி எந்தவித பதப்படுத்தல் இல்லாமல் அப்படியே அனுப்பி வைக்கின்றனர். இதனால் அந்தக்கறிகளைக் சாப்பிடும் போது பல்வேறு பாதிப்புகள் நிச்சயம் ஏற்படும்.

ஒரு சில நட்சத்திர ஓட்டல்களில் சிக்கன் 65 தயாரித்து நாட்கள் கடந்தாலும் அது மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை சாப்பிடும் போது கட்டாயம் பாதிப்பு ஏற்படும். இதனால் நீண்ட நாட்களாக ஓட்டல்களில் சாப்பிடுபவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதியாவது மருத்துவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

சில டாஸ்மாக் பார்களில் விற்கப்படும் அசைவ உணவுகளின் தரம் படுமோசம். குடிபோதையில் இருப்பவர்கள் அதையெல்லாம் கண்டுக்கொள்வதில்லை. சைடு டிஸ் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருக்கின்றனர். முன்பெல்லாம் காடை என்று காகத்தின் கறி சில ஓட்டல்களில் பயன்படுத்தப்பட்டது. இப்போது சிக்கன் என்ற பெயரில் பூனைக்கறி விற்பனை சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தில் பட்டைய கிளப்புகிறது.

எனவே அசைவ உணவுகளை வெளி இடங்களில் சாப்பிடுபவர்கள் இதையெல்லாம் உணர வேண்டும். அதற்காக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. தரமான அசைவ உணவுகள் கிடைக்கும் இடங்களை தேர்வு செய்வது புத்திச்சாலித்தனம்.

உணவே மருந்து என்ற காலம் மாறி அது விஷம் என்ற நிலைமை ஆகிவிட்டது.

-எஸ்.மகேஷ்

உலகக்கோப்பையை வெல்வதே முக்கியம்; இந்தியாவிடம் தோற்றால் கவலையில்லை: இன்சமாம்


பாக். முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக். | கோப்புப் படம்.

உலகக்கோப்பையை பாகிஸ்தான் வெல்லும்பட்சத்தில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தால் அதைப்பற்றி கவலையில்லை என்று முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கூறியுள்ளார்.

"இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை வெல்லும் பட்சத்தில் இந்தியாவுடன் தோற்றாலும் கவலையில்லை.

1992-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளுக்கு ஒரு மாதம் முன்பு ஆஸ்திரேலியா சென்றோம். 6 பயிற்சிப் போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வியடைந்தோம், ஆனால் கோப்பையை வென்றோம்.

அங்கு உள்ள பிட்ச்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வது முக்கியம், இந்த விதத்தில் இந்தியாவுக்கு கூடுதல் அனுகூலம் உள்ளது. அங்கு ரிவர்ஸ் ஸ்விங் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்காது, காரணம் இரு முனைகளிலும் இரு பந்துகள் என்பதால் பந்தின் பளபளப்பு மாறாது.” என்றார்.

கேப்டன் தோனி இந்திய அணியின் மிகப்பெரிய பலம்: இன்சமாம்

"ஒரு கேப்டனாக தோனி இந்திய அணியின் மிகப்பெரிய பலம் என்றே நான் கருதுகிறேன். உலகக்கோப்பை போன்ற பெரிய போட்டித் தொடர்களில் அனுபவமிக்க ஒரு கேப்டன் என்பது மிகப்பெரிய பலம். இந்திய அணி நெருக்கடியில் இருக்கும் போதெல்லாம் தோனி என்ற ஒருவரே அந்த அணியை மீட்டுள்ளார். எண்ணற்ற போட்டிகளை அவர் தனிநபராக வெற்றிபெற்றுக் கொடுத்துள்ளார்.

எனவே நெருக்கடி தருணங்களை சிறப்பாகக் கையாள்வது என்ற விஷயத்தில் மற்ற கேப்டன்களை விட தோனியே சிறந்தவர்." என்றார்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42, டீசல் விலை ரூ.2.25 குறைப்பு....Published: February 3, 2015 19:10 IST

கடந்த ஆகஸ்ட்டிலிருந்து 10-வது முறையாக பெட்ரோல் விலையும், கடந்த அக்டோபரிலிருந்து டீசல் விலை 6-வது முறையாகவும் குறைக்கப்பட்டுள்ளது. | கோப்புப் படம்.

நாடு தழுவிய அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு முறையே ரூ.2.42 மற்றும் ரூ.2.25 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை செவ்வாய் கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக சரிந்து வருகிறது. அதன் எதிரொலியாக, எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை குறைப்பை அறிவித்துள்ளன.

டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.56.49 என்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 46.01 என்றும் குறைகிறது.

உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப, இந்த விலை குறைப்பு மாறுபடும். அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.58.96 என்றும் டீசல் விலை ரூ.49.09 என்றும் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 10-வது முறையாக பெட்ரோல் விலையும், கடந்த அக்டோபரில் இருந்து 5-வது முறையாக டீசல் விலையும் குறைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

பெட்ரோல் விலைக் குறைப்பு விவரம்:

சென்னையில் லிட்டர் ரூ.61.38 என்பது ரூ.2.42 குறைந்து லிட்டர் ரூ 58.96 ஆகிறது.

டெல்லியில் லிட்டர் ரூ.58.91 என்பது ரூ.2.42 குறைந்து லிட்டர் ரூ.56.49 ஆகிறது.

நம்பினால் நம்புங்கள்... ஒரு மணி நேரம் முன்னதாக வந்து சாதனை படைத்த ரயில்




திருநெல்வேலி: இந்திய ரயில்வே சரித்திரத்திலேயே இதுவரை நிகழ்ந்திராத ஒரு அதிசயம் இன்று நடந்துள்ளது. குறித்த நேரத்தில் ரயில்கள் வருவதையே அதிசயமாக பார்ப்பது நமது வழக்கம். அப்படி குறித்த நேரத்தில் வந்தால், ஒருவேளை நேற்று வரவேண்டிய ரயிலோ என்ற சந்தேகத்துடன் பார்ப்போம்.

 இத்தகைய சூழ்நிலையில், இன்று சென்னையிலிருந்து திருநெல்வேலி வந்த திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி 5 நிமிடம் முன்னதாக வந்து சாதனை படைத்தது. வழக்கமாக காலை 8 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும் இந்த ரயில் காலை 6:55க்கு எல்லாம் தாழையூத்து வந்து விட்டது. ஆனால் ரயில் ஒரு மணி நேரம் முனனாலேயே வரும் என்று எதிர்பார்க்காத திருநெல்வேலி ரயில் நிலைய ஊழியர்கள், அந்த ரயில் வழக்கமாக வரும் முதல் நடைமேடையை காலியாக வைக்காததால், ரயிலை தாழையூத்திலேயே நிறுத்தி வைக்க நேர்ந்தது.

 பின்னர் நடைமேடை தயாரானதும் ரயில் தாழையூத்திலிருந்து புறப்பட்டு திருநெல்வேலி ரயில் நிலையம் வந்தடைந்தது.இவ்வாறு ஒரு மணி நேரம் முன்னதாகவே ரயில் வந்தது குறித்து, ரயில் பயணிகள் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்ததாக அந்த ரயிலின் கார்டு தெரிவித்தாலும் ஒரு சின்ன சந்தேகம். இந்த ரயில் இரவு நேரத்தில் பயணித்துள்ளது. இப்படி ஒரு மணி நேரம் முன்கூட்டியே வந்ததால் வழியில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் சரியாக இறங்கி, ஏற முடிந்ததா? ஒரு மணி நேரம் முன்கூட்டியே இவ்வாறு ரயில் பயணிக்க ரயில் விதிமுறைகள், சிக்னல்கள் எப்படி அனுமதித்தன? 

எப்படியோ ஒரு கின்னஸ் சாதனை படைத்த ரயில் ஓட்டுநருக்கு வாழ்த்துக்கள்.

ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு, சமையல் எரிவாயுவுக்கு வழங்கும் மானியத்தை, 'கட்' செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

புதுடில்லி: ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு, சமையல் எரிவாயுவுக்கு வழங்கும் மானியத்தை, 'கட்' செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்த அதிரடி அறிவிப்பு, இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ள, மத்திய பட்ஜெட்டில் வெளியாகிறது.

மத்திய அரசானது, சமையல் எரிவாயு வினியோகம் உட்பட, பல திட்டங்களுக்கு மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியத்தை படிப்படியாகக் குறைத்து, அதற்காக ஒதுக்கப்படும் நிதியை, வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிட வேண்டும் என, விரும்புகிறது; அதற்கான நடவடிக்கைகளை படிப்படியாக துவக்கி உள்ளது.

மானியம் ஒழிப்பு: முதற்கட்டமாக, பெட்ரோல், டீசலுக்கு வழங்கப்பட்ட மானியம், முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த இரு எரிபொருட்களின் மீதான விலை கட்டுப்பாட்டை, மத்திய அரசு கைவிட்டு விட்டதால், அவற்றின் விலைகள், சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, சமையல் எரிவாயு வினியோகத்தில் நடக்கும் முறைகேடுகளால், மத்திய அரசுக்கு ஏற்படும் இழப்பை சரி செய்ய, எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கே செலுத்தும் திட்டத்தை துவக்கி உள்ளது. இதன் தொடர்ச்சியாக, வசதி படைத்தவர்களுக்கு, குறிப்பாக, ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு, அதாவது, 30 சதவீத வருமான வரி வரம்பில் வருவோருக்கு, மானிய விலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவதை, முழுவதுமாக வாபஸ் பெற, மத்திய அரசு தீர்மானித்து உள்ளது.


குறையலாம்: அதேநேரத்தில், ஆண்டு வருமானம், ஐந்து லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை (20 சதவீத வருமான வரி வரம்பில் உள்ளவர்கள்) உள்ளவர்களுக்கும், மானிய விலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவதை, ரத்து செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன அல்லது மானியத்தின் அளவு குறைக்கப்படலாம். இது தொடர்பான அறிவிப்பை, இந்த மாத இறுதியில் தாக்கல் செய்ய உள்ள, மத்திய பட்ஜெட்டில் வெளியிட, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, தீவிரமாக பரிசீலித்து வருவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அரசு வழங்கும் மானியமானது, தகுதியானவர்களை மட்டுமே சென்றடைய வேண்டும் என்பதில், தற்போதைய மத்திய அரசு அக்கறை காட்டி வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.மேலும், குழாய் மூலமான எரிவாயு வினியோகிக்கும் திட்டத்திற்கு, ஊக்கத்தொகை வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. குழாய் எரிவாயு வினியோக திட்டத்தில், தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே, இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
ரூ.63 ஆயிரம் கோடி :
*நடப்பு நிதியாண்டில், சமையல் எரிவாயு உட்பட, பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியம், 63 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
*நாடு முழுவதும், சமையல் எரிவாயு இணைப்பு வைத்திருப்போர் எண்ணிக்கை, 15 கோடி.
*இவர்களில், ஐந்து லட்சத்திற்கும் மேலான வருமானம் உள்ளவர்களுக்கு, சமையல் எரிவாயு மானியம் நிறுத்தப்பட்டால், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும்.

NEWS TODAY 11.06.2026