Friday, April 22, 2016

குறள் இனிது: பின் சீட்டிலிருந்து கார் ஓட்டலாமா?


என் உறவினரின் திருமண ஏற்பாடுகளுக்காக குடும்பத்துடன் காரைக்குடி சென்று இருந்தோம். நல்ல செட்டிநாட்டுச் சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு, பலரும் சிபாரிசு செய்த கருப்பாயி அக்காவை சமையலுக்கு அமர்த்தியிருந்தார்கள். அவர்களது கருணைக் கிழங்கு கெட்டிக்குழம்பு, வாழைத்தண்டு கூட்டு , வெள்ளைப் பணியாரம்,ரெங்கோன் புட்டு எல்லாம் மிகப்பிரசித்தம். ஆனால் கல்யாண வேலைக்கு உதவிக்கு வந்த அவர்களது உறவினர் ஆச்சி ஒருவரும் அருமையாக சமைக்கக் கூடியவர் என்பதால் சமையல் மேற்பார்வை அவரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆச்சியோ இன்னது சமைக்க வேண்டும் என்று சொல்வதுடன் நிற்காமல், கருப்பாயி அக்காள் பின்னாடியே நின்று கொண்டு இப்படி நறுக்கனும் அப்படித் தாளிக்கனும் என்றெல்லாம் நச்சரித்ததால் என்ன நடந்தது என்பது நான் சொல்லாமலேயே உங்களுக்குத் தெரியும்!

விளம்பர உலகின் தந்தையான டேவிட் ஒகில்வியும் கூட 'உங்களைவிடக் கெட்டிக்காரர்களை வேலைக்கு எடுங்கள்; பின்னர் அவர்களை வேலை செய்ய விட்டுவிடுங்கள் ' என்று சொல்லி இருக்கிறாரே!

எனது மற்றொரு நண்பர் மிகவும் அலசிப் பார்த்து, திறமையும் 20 ஆண்டுகள் விபத்தேயின்றி கார் ஓட்டிய அனுபவமும் கொண்ட ஓட்டுநர் ஒருவரை பணியமர்த்தினார்.ஆனால் நம் நண்பர் காரில் பயணிக்கும் பொழுது, பின் சீட்டில் அமர்ந்து கொள்வார். `மெதுவாய் ஓட்டு,இது அபாயகரமான வளைவு முந்தாதே, சைக்கிள்காரன் எதிரில் வருகிறான்' என்று விடாமல் ஏதாவது சொல்லிக்கொண்டே வருவார். பாவம் அந்த ஓட்டுநர்.ஒரு நாள் நண்பர் செய்த ஆர்ப்பாட்டத்தில் குழம்பி,பதறி வண்டியைப் பள்ளத்தில் இறக்கி விட்டார்!

வண்டி வேகமாய்ச் செல்லும் சமயம் மனிதன் சாலையைப் பார்ப்பாரா, வாகனங்களைக் கவனிப்பாரா அல்லது முதலாளி சொல்வதைக் கேட்பாரா?

அமெரிக்க ராணுவ தளபதி ஜார்ஜ் பாட்டன் கூறியது சிந்திக்கத்தக்கது.

' பணியாளர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதைச் சொல்லுங்கள்; எப்படிச் செய்ய வேண்டுமென்பதை அல்ல.அவர்களின் வெற்றிகள் உங்களை வியப்பிலாழ்த்தும்!'

அலுவலகங்களில் பார்த்திருப்பீர்கள்.சில மேலதிகாரிகள் ஒருவரிடம் பொறுப்பைக் கொடுத்த பின்னரும் அவரை வேலை செய்யவிடாமல் சும்மா நைநை என்று ஏதாவது யோசனைகள், விமர்சனங்கள், சொல்லிக்கொண்டே இருப்பார்கள். வேறு சில மகானுபாவன்களோ தினமும் மாலையில் என்னிடம் வந்து என்னென்ன செய்தாய் என்பதைச் சொல்லிவிடு' என்பார்கள். ஐயா, ஒருவரிடம் ஒரு வேலையைக் கொடுத்தால் முதலில் அவரை அந்த வேலையைச் செய்யவிட வேண்டுமில்லையா? பாதி வேலை நடந்துகொண்டிருக்கும் பொழுதே தலையிட்டால் எப்படி? இதற்குக் காரணம் அவரது திறமையிலோ நாணயத்திலோ சந்தேகம் வருவது தானே? நம்பிக் கொடுத்தபின் நம்பிக்கை இழக்கலாமா? இதனால் வேலை செய்பவருக்கு மனத்தாங்கல். வேலையைக் கொடுத்தவருக்கும் நிம்மதியில்லை. வேலையும் ஒழுங்காய் முடியாது.

கொடுத்த பணி சரியாய் நடந்ததா என ஆய்வு செய்ய (monitoring) வேண்டியது அவசியமே.ஆனால் எப்பொழுது? வேலைக்கு இடைஞ்சலாகவா?

ஒருவரை ஆராயாமல் பணியமர்த்துவதும், தேர்ந்தெடுத்து பணியமர்த்தியவர் மேல் சந்தேகம் கொள்வதும் தீராத தொல்லையைத் தரும் என்கிறார் வள்ளுவர்.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும் (குறள் 510)

சோம.வீரப்பன் somaiah.veerappan@gmail.com

பதின் பருவம் புதிர் பருவமா? - உங்களுக்கு சிரிக்கத் தெரியுமா?


சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி “பேஸ்புக் என் உணர்ச்சிகளை மரத்துப்போகச் செய்வதுபோல உணர்ந்தேன், அதனால் என் கணக்கை டெலிட் செய்து, அதிலிருந்து விலகிவிட்டேன்” எனப் பகிரங்கமாகப் பேசியதை மிகுந்த ஆச்சரியம் ஏற்படுத்திய சம்பவமாகச் சொல்லலாம். அவர் சொல்வதைத்தான், இது தொடர்பாக நடந்த ஆராய்ச்சி முடிவுகளும் சொல்கின்றன. நடிகர் விஜய் சேதுபதி, சமூக வலைதளங்களின் பாதிப்புகளைக் குறித்து விளம்பரத் தூதராக நடித்தால், மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

யார் உங்கள் ஆசிரியர்?

இணையதளம், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதள பயன்பாடுகள் அதிகரித்த பின்னர் ‘ஆசிரியர் - மாணவர் உற'வில் மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டுவருவதாக, சமீபத்தில் ஒரு கூட்டத்தில் நான் சந்தித்த பல கல்லூரிப் பேராசிரியர்கள் தெரிவித்தனர். கேள்வி கேட்டவுடன் இணையத்தில் தேடிப் பதிலைச் சொல்வது, வலைதளங்களில் உள்ள கருத்துகளைக் கூறி ஆசிரியர்களை மட்டம் தட்டுவது, வகுப்பு நேரத்தில் எந்தக் கவலையும் இன்றி சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது உட்பட பல எடுத்துக்காட்டுகளை இதற்குக் கூறலாம்.

சமீபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர், பேராசிரியை ஒருவர் வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும்போதே மொபைலில் போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் உலாவ விட்டிருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் கல்லூரி நிர்வாகம், இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என அந்த ஆசிரியையிடம் நிர்ப்பந்தித்ததுதான்.

அறிவா? தகவலா?

‘எல்லாம்தான் இணையதளத்தில் கிடைக்கிறதே, எதற்கு வகுப்பில் ஆசிரியர் சொல்வதைக் கவனிக்க வேண்டும்?’ என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் பரவலாகி இருக்கிறது. சமூக வலைதளங்களின் மூலமாகத் தற்போது எல்லாரும் எல்லா விஷயங்களையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்திருப்பது ஒரு வரப்பிரசாதம்தான். ஆனால், எல்லா நேரத்திலும் அது அறிவுசார்ந்த (Knowledge) விஷயமாக இருக்க முடியாது. மாறாகத் தகவல் சார்ந்த (Information) விஷயமாக மட்டும் இருந்தால், பல சமூகச் சிக்கல்கள் ஏற்படும்.

உதாரணமாக ‘மெட்பார்மின்’ என்ற நீரிழிவு நோய்க்கான மாத்திரையை எடுத்துக்கொள்வோம். அது நீரிழிவு நோய்க்கான மாத்திரை என்பதை வலைதளங்களின் மூலமாக அறிந்துகொண்டால், அது ஒரு தகவல் சார்ந்த விஷயம். அதே மாத்திரை மருத்துவத் துறையில் உடல் பருமனைக் குறைக்கவும், கருத்தரிப்பின்மை பிரச்சினை (PCOD) உட்பட இன்னும் பல நோய்களுக்கும் பயன்படுத்தப்படும் என்பது பற்றி பலருக்கும் தெரியாது. இது அறிவுசார்ந்த விஷயம்.

இதைப் புரிந்துகொள்ள இயலாத ஒரு நோயாளி, குழந்தையின்மைக்கு டாக்டர் சுகர் மாத்திரையைத் தவறாகக் கொடுத்துவிட்டார் என்ற செய்தியைப் பரப்பினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தத் தவறான அணுகுமுறை மருத்துவத் துறையை மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் ஏதோ ஒருவிதத்தில் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பது உண்மை. இப்படி வலைதளத்தைத் தேடிப் பார்த்து, தங்கள் நோய் அறிகுறிகளை ஒப்பிட்டுப் பார்ப்பதே மனநலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றுதான்.

புதைக்கப்படும் உணர்ச்சிகள்

விதம்விதமாக ஸ்மைலி பயன்படுத்தும் பலருடைய முகங்களில் உண்மையான புன்முறுவலைப் பார்ப்பதே அரிதாகிவருகிறது. சமூகம் உருவாவதே ஒவ்வொரு தனிமனிதரிடமும் இருந்துதான். ஒருவருக்கொருவர் முகம் பார்த்துப் பேசிக்கொள்வது, முகபாவங்கள், உடல் பாவனைகள் மூலம் நாம் சொல்லவருவதைப் பிறருக்கு உணர்த்துவது, பதிலுக்குப் பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்வதுதான் சமூகப் பழக்கவழக்கத்தின் அடிப்படை.

ஆனால் நமது சந்தோஷங்கள், துக்கங்களின் வெளிப்பாட்டை ‘OMG', ‘LOL', ‘RIP' என்று சுருக்கிவிட்ட இந்தக் குறுஞ்செய்தி உலகத்துக்குச் சமூக வலைதளம் என்று பெயர் வைத்தது மிகப் பெரிய நகைமுரண்! அதிலேயே புழங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் சமூகப் பழக்கவழக்கங்கள் மாறிவருவதாகவும், பிறருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மை மழுங்கி வருவதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

படிப்பிலும் பாதிப்பு

இணையதளத்தில் இருக்கும் நேரத்தைக் கட்டுப்பாட்டோடு வைக்க முடியாததால்தான், வளர்இளம் பருவத்தினரின் படிப்பு பாதிக்கப்பட ஆரம்பிக்கிறது. படிக்க வேண்டிய நேரத்தை இணையதளம் மற்றும் மொபைல்போன் தின்றுவிடுவதால் சில முறை முதல் மதிப்பெண் வாங்கிய மாணவர்கூடத் தேர்வில் தோல்வியைத் தழுவ நேரிடலாம். எப்போதும் கடந்தகால வாட்ஸ்அப், பேஸ்புக் பதிவுகளைக் குறித்த எண்ணங்கள் அடிக்கடி தோன்றிக் கவனச்சிதறலை ஏற்படுத்துவது, படிப்பை மேலும் பாதிக்கும். தொடர்ந்து இணையதளத்தைப் பயன்படுத்தும் மாணவர்களின் ஞாபகத்திறன் குறைய வாய்ப்புள்ளதாக (Digital Dementia), சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.



இணைய அடிமைத்தனம் என்ன காரணம்?

வளர்இளம் பருவத்தில் “நீ படிப்பதற்கு மட்டும் நேர்ந்துவிடப்பட்டிருக்கிறாய்” என்கிற அளவுக்குப் பெற்றோரின் கனவுகள் குழந்தைகளின்மீது திணிக்கப்படும்போது, அதை ஆரோக்கியமாகக் கையாளத் தெரிந்தவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். ஆனால் மன அழுத்தம் மற்றும் தோல்வியால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு வலைதள உலகம் சிவப்புக் கம்பளம் விரித்த கனவு உலகம் போலக் காட்சியளிப்பதற்குப் பின்வரும் காரணங்கள் உண்டு:

# வளர்இளம் பருவத்தினருக்குத் தங்களுடைய மன அழுத்தம் மற்றும் கவலைகளை மறக்க உதவும் மருந்தாக இணையதளம் மற்றும் ஸ்மார்ட்போன் மாறிவிடுகிறது.

# அதிக எதிர்பார்ப்பைத் திணிக்கும் நிஜ உலகத்திலிருந்தும் தோல்விகளிலிருந்தும் தப்பித்துக்கொள்ள ஒரு வழியாக இணையதளம் பயன்படுகிறது.

# முகம் பார்த்துப் பேசத் தேவையில்லாத இணையதள உலகத்தில், அவர்களுடைய கூச்ச உணர்வை மீறி எல்லோரிடமும் சகஜமாகக் குறுந்தகவல்கள் மூலம் எல்லாக் கருத்துகளையும் பரிமாறும் மேடையாகிறது.

# நிஜ உலகத்தில் கவனிக்கப்படாத ஒரு நபர், இணையதள உலகத்தில் முக்கிய நபராக மாறிவிட வாய்ப்புள்ளது. பலரின் லைக்குகளையும் பாராட்டையும் அள்ளலாம்.

(அடுத்த வாரம்: ஆன்லைன் ஆபத்து)

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின்
உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

அரசு மருத்துவமனைகளை காட்டிலும் 50% குறைந்த கட்டணத்தில் ஸ்கேன்: மதுரை தனியார் மருத்துவரின் மருத்துவ சேவை


தனியார் மருத்துவமனை மருத்து வர்கள் என்றாலே லாபநோக்கில் செயல்படுகிறவர்கள் என்ற தவறான அடையாளத்தை உடைத்துள்ளார் மதுரை அரசரடியை சேர்ந்த தேவகி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை மருத்துவர் டாக்டர் நாகேந் திரன். மதுரை அரசு ராஜாஜி மருத் துவமனைக்கு அருகில் செயல்படும் இவரது சேவா ஸ்கேன் சென்டரில், அரசு மருத்துவமனைகளை காட்டி லும் குறைந்த கட்டணத்தில் ஏழை நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுத்து கொடுக்கப்படுகிறது.

அருகில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்க நோயாளிகளிடம் ரூ.750, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ரூ.2,500 முதல் ரூ.3,500 கட்டணம் பெறப் படுகிறது. ஆனால், இவரது ஸ்கேன் சென்டரில் சிடி ஸ்கேன் எடுக்க ரூ.550, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ரூ.1,500 மட்டுமே பெறுகிறார். அரசு மருத்துவமனை யில் ஸ்கேன் எடுக்க வரிசை அடிப் படையில் நோயாளிகள் காத்தி ருக்க வேண்டும். அதனால், ஸ்கேன் எடுக்க, ரிப்போர்ட் வர குறைந்த பட்சம் 5 முதல் 10 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். அதனால், ஏழை நோயாளிகள் தனியார் மருத் துவமனையில் ஸ்கேன் எடுக்க பணமில்லாமலும், அரசு மருத்துவ மனையில் உடனுக்குடன் ஸ்கேன் எடுக்க முடியாமலும் தனக்கு என்ன நோய் என்றே தெரியாமலேயே தொடர்ந்து தற்காலிக சிகிச்சை பெறும் அவலம் ஏற்படுகிறது. ஆனால், டாக்டர் நாகேந்திரனின் சேவா ஸ்கேன் சென்டரில் உடனுக் குடன் ஸ்கேன் எடுத்து அதற் கான ரிப்போர்ட்டும் வழங்கப்படு கிறது. இந்த குறைந்த கட்டணத் தில் எந்த இடத்திலும் ஸ்கேன் எடுக்கப்படுவதில்லை என்பதால், இவரது சேவையைப் பாராட்டி மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.

இதுகுறித்து மருத்துவர் நாகேந் திரன் கூறியதாவது: எம்பிபிஎஸ் முடித்ததும், கை நிறைய சம்பா திக்க வேண்டும் என்ற எண்ணத்தில், லண்டன் சென்று படித்து அங்கு 4 ஆண்டுகள் பணிபுரிந்தேன். என் னுடைய தந்தை ஆசிரியர் என்ப தால், அவருக்கு நான் வெளிநாட்டில் தங்கி பணிபுரிவது பிடிக்கவில்லை. அவர் என்னை அழைத்து நமது ஊரிலேயே வந்து மருத்துவர் தொழில் பாருப்பா என்றார்.

அவரது விருப்பப்படி மதுரை அரசரடியில் சிறிய அளவில் மருத் துவமனையைத் தொடங்கினேன். நோயாளிகளுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்தேன். இதனால் என்னிடம் ஏழை நோயாளி கள்தான் அதிகளவில் சிகிச்சைக்கு வந்தனர். ஸ்கேன் எடுக்க எழுதிக் கொடுத்தால் அவர்களில் பலர் ஸ்கேன் எடுக்க பணமில்லாமல் என்ன நோய் என்றே தெரியாமல் இறந்ததை பார்த்து மிகவும் வருந் தினேன்.

அதனால், 1998-ம் ஆண்டு பிளாக் அன்ட் ஒயிட் ஸ்கேன் மையம் தொடங் கினேன். ஏழை நோயாளிகளுக்கு சலுகை விலையில் ஸ்கேன் எடுத் துக் கொடுத்தேன். கடந்த 2005-ம் ஆண்டு ஏழை நோயாளிகள் சலுகை விலையில் அல்ட்ரா, சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்காகவே அரசு மருத்துவமனை அருகே தனி யாக சேவா ஸ்கேன் மையத்தை சேவை அடிப்படையில் தொடங்கி னேன். தற்போது இங்கே வந்தால் எந்த நோயையும் கண்டறியக்கூடிய வசதிகள் உள்ளன.

எனது மருத்துவமனை வரு வாயில் வரும் ரூ. 10 லட்சத்தை, இந்த சேவா ஸ்கேன் சேவைக்கு பயன்படுத்துகிறேன். இந்த ஸ்கேன் மையத்தில் 4 மருத் துவர்கள், மருத்துவப் பணியாளர் கள் உள்பட தினமும் 24 மணி நேரமும் இந்த சேவா ஸ்கேன் சென்டர் செயல்படுகிறது என்றார்.

அப்துல் கலாமின் விருப்பம் நிறைவேற்றம்

மருத்துவர் நாகேந்திரன் மேலும் கூறியதாவது: புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கியபோது, குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமை வைத்து திறக்க திட்டமிட்டோம். ஆனால், அவரை அணுகியபோது தனியார் மருத்துவமனை என்பதால் எங்களை பார்க்கவே மறுத்துவிட்டார். எனது சேவையை அவரது கவனத்துக்கு கொண்டு சென்றேன். அதன்பிறகு அவர் ஒரு குழுவை அனுப்பி மதுரையில் விசாரித்துள்ளார். உண்மைதான் என்பது தெரிந்தபிறகு அப்துல் கலாம் எங்களது புற்றுநோய் மருத்துவமனையைத் திறக்க வந்தார். அப்போது, இது மட்டும் நீங்கள் செய்தால் போதாது என்றவரிடம், இரு கிராமங்களை தத்தெடுக்கிறோம் என்றோம். கலாம் விரும்பியபடி, மதுரை அருகே அச்சம்பத்து, பண்ணைக்குடி கிராமங்களை தத்தெடுத்து இலவச மருத்துவ சிகிச்சை, கழிப்பறை கட்ட, சுகாதார வசதிகளை ஏற்படுத்த உதவிகளை செய்கிறோம். தற்போது அந்த கிராமங்கள் சுகாதாரத்தில் இந்தியாவுக்கே முன் உதாரணமான கிராமங்களாக இருக்கின்றன என்றார்.

எம்ஜிஆர் 100 | 49 - ஓடற பாம்பை மிதிக்கிற வயசு!


M.G.R. படங்களை ரசிகர்கள் அவருக்காக மட்டுமே பார்க்கக் கூடியவர்கள். என்றாலும், அவரது ரசிகர்களிடமும் சரி; பொதுமக்களிடமும் சரி. எம்.ஜி.ஆருக்கேற்ற பொருத்தமான ஜோடியாக கருதப்பட்டவர்களில் நடிகை சரோஜா தேவிக்கு தனி இடம் உண்டு.

‘கன்னடத்துப் பைங்கிளி’ என்று புகழப்பட்ட சரோஜா தேவி, சில கன்னடப் படங்களில் நடித்திருந்தா லும் தமிழிலும் நடிக்க ஆசைப்பட்டார். ‘நாடோடி மன்னன்’ படத்தை எம்.ஜி.ஆர். தயாரித்துக் கொண்டிருந்போது, கருத்து வேறுபாடு காரணமாக கதாநாயகியாக நடித்த பானுமதி பாதியில் விலகிக் கொண்டார். ஏற்கெனவே இதுபற்றி குறிப் பிட்டுள்ளோம். பின்னர், கதை மாற்றப் பட்டு சரோஜா தேவி நாயகியானார்.

‘நாடோடி மன்னன்’ படத்தை தானே தயாரித்து, இயக்கி, இரட்டை வேடங் களில் நடித்ததோடு, படத்தில் இன்னொரு புதுமையையும் எம்.ஜி.ஆர். செய்தார். இடைவேளைக்குப் பின், கதைப்படி சரோஜா தேவி இருக்கும் தீவில் நடப்ப தாக காட்டப்படும் காட்சிகளில் இருந்து படம் வண்ணத்தில் இருக்கும். பகுதி கலரில் தயாரிக்கப்பட்ட படம் என்ற சிறப் பும் ‘நாடோடி மன்னன்’ படத்துக்கு உண்டு. எம்.ஜி.ஆருடன் நடிக்க ‘திருடாதே’ படத்துக்காகத்தான் முதலில் சரோஜா தேவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், ‘நாடோடி மன்னன்’ படம்தான் முன்னதாக வெளியானது.

‘திருடாதே’ படத்தில் நடித்துக் கொண் டிருந்த சமயத்தில் சீர்காழியில் நாடகத் தில் நடித்தபோது எம்.ஜி.ஆருக்கு கால் முறிவு ஏற்பட்டது. ‘திருடாதே’ படத்தை முதலில் பழம்பெரும் காங்கிரஸ்காரர் சின்ன அண்ணாமலை தயாரித்தார். தன் னால் யாருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற எம்.ஜி.ஆரின் நல்லெண்ணத்துக்கு இங்கே ஒரு உதாரணம்.

கால் முறிவு காரணமாக எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்று வந்த சமயம். சின்ன அண்ணாமலையை அழைத்தார். ‘‘எனக்கு எப்போது கால் குணமாகி மீண்டும் நடிக்க வருவேன் என்று தெரி யாது. அதுவரை காத்திருந்தால் படத்துக் காக நீங்கள் வாங்கியிருக்கும் கடனுக்கு வட்டியும் ஏறிவிடும். எனவே, படத்தை ஏ.எல். சீனிவாசனுக்கு விற்றுவிடுங்கள். உங்களுக்கு லாபமாக நல்ல தொகை யைத் தரச் சொல்கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

கவியரசு கண்ணதாசனின் சகோ தரர் ஏ.எல்.சீனிவாசன். பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். எம்.ஜி.ஆர். கூறியபடி ஏ.எல்.சீனிவாசனிடம் ‘திருடாதே’ படத்தை நல்ல விலைக்கு சின்ன அண்ணாமலை விற்றுவிட்டார். ஏ.எல்.எஸ். பேனரில் படம் வெளி யாகி வெற்றி பெற்றது. சின்ன அண்ணா மலையும் கடன் சுமையில் சிக்காமல் தப்பினார். இப்படி எல்லா விஷயங் களிலும் மற்றவர்கள் நலனை முன்னிறுத் தியே எம்.ஜி.ஆர். சிந்திப்பார்.

‘திருடாதே’ படத்தில் நடிக்கும்போது எம்.ஜி.ஆரின் மனிதாபிமானத்தை நேரடி யாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு சரோஜா தேவிக்கு கிடைத்தது. படப் பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராமல் கண்ணாடித் துண்டுகள் சரோஜா தேவியின் பாதத்தை குத்திக் கிழித்துவிட்டன. வலி தாங்காமல் சரோஜா தேவி துடித்தார்.

அவரது பாதத்தில் குத்தியிருந்த கண்ணாடித் துண்டுகளை அகற்றி தன் கைக்குட்டையை தண்ணீரில் நனைத்து கட்டுப்போட்டு முதல் உதவி செய்தார் எம்.ஜி.ஆர்.! அப்போது முதலே எம்.ஜி.ஆர். மீது சரோஜா தேவிக்கு மதிப்பு, மரியாதை மட்டுமல்ல; பக்தியே உண்டு. எப்போது பேட்டியளித்தாலும், நிகழ்ச்சிகளில் பேசினாலும் எம்.ஜி.ஆரைப் பற்றி குறிப்பிடும்போது தனது கொஞ்சு தமிழில் ‘‘என் த(தெ)ய்வம்’’ என்று கூறுவார்.

கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் எம்.ஜி.ஆர். வசித்த ராமாவரம் தோட் டத்திலும் வெள்ள நீர் புகுந்தது. அவர் பயன்படுத்திய சில பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன. அது குறித்து வேதனைப்பட்டு பேட்டியளித்த சரோஜா தேவி, ‘‘எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் போட்டு அவர் வாழ்ந்த வீட்டை பாதுகாக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். பின்னர், முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி எம்.ஜி.ஆர். வீடு இப்போது புதுப்பிக்கப் பட்டுள்ளது.

முன்பெல்லாம் ‘கெமிஸ்ட்ரி’ என்றால் அறிவியல் பாடத்தின் ஒருபகுதியான வேதியியல் என்றுதான் தெரியும். இப்போது, ‘கெமிஸ்ட்ரி’ என்பதற்கு புதிய அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. அதன்படி பார்த்தால், படங்களில் எம்.ஜி.ஆருக்கும் சரோஜா தேவிக்கும் ‘கெமிஸ்ட்ரி’ அற்புதமாக பொருந்தியிருக் கும். ‘படகோட்டி’ படத்தில் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட, ‘தொட்டால் பூ மலரும்...’ பாடல் அதற்கு ஒரு உதாரணம்.

ஏவி.எம். நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படமான ‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜா தேவி. சிம்லாவில் படப்பிடிப்பு. அப்போது நடந்த பயங்கர சம்ப வத்தை சரோஜா தேவியே பின்னர் கூறியிருந்தார்.

சிம்லாவில் புல்வெளியில் ஒரு காட்சி யில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆரும் சரோஜா தேவியும் தயாராகிக் கொண்டி ருந்தனர். எம்.ஜி.ஆர். திடீரென வேகமாக வந்து சரோஜா தேவியை பலமாகத் தள்ளிவிட்டார். சரோஜா தேவி 4 அடி தள்ளிப் போய் விழுந்தார். படப்பிடிப்புக் குழுவினர் திகைத்துப் போய்விட்டனர். ‘என்ன ஆச்சு எம்.ஜி.ஆருக்கு? இப்படி ஒரு காட்சி கிடையாதே?’ என்றெல்லாம் திகிலுடன் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே, அவர் களுக்கு அதற்கான விடை கிடைத்து விட்டது.

இமாச்சலப் பிரதேசத்தில் காணப் படும் அரியவகை இரண்டு தலை நாகம் சரோஜா தேவிக்கு அருகில் சீறியபடி படமெடுத்து நிற்பதை எம்.ஜி.ஆர். பார்த்திருக்கிறார். ‘பாம்பு… பாம்பு…' என்று கத்தி, பதற்றத்தை ஏற்படுத்தி நிலைமையை விபரீதமாக்காமல் வழக் கம்போல, தனக்கே உரிய சமயோசிதத் தோடு சரோஜா தேவியை தள்ளி விட்டிருக்கிறார்.

அதோடு, ‘ஷூ' அணிந்த தனது கால்களால் நாகப் பாம்பை எம்.ஜி.ஆர். மிதித்தே கொன்று விட்டார். அதைப் பார்த்தபோதுதான் சுற்றி நின்றவர்களுக்கு விஷயம் புரிந்தது. தன் உயிரைக் காப்பாற்றியதற்காக எம்.ஜி.ஆருக்கு நன்றி சொன்ன சரோஜா தேவி, ‘‘பதற்றமான சூழ்நிலையில் என்னை தள்ளிவிட வேண்டும் என்று எப்படி உங்களுக்கு உடனே தோன் றியது?’’ என்று கேட்டதற்கு, எம்.ஜி.ஆர். அளித்த பதில்…

‘‘இக்கட்டான நேரத்தில் புத்தியை பயன்படுத்துவதில்தான் நம்ம வெற்றியே இருக்கு.’’

எம்.ஜி.ஆருக்கு எப்பவுமே ஓடற பாம்பை மிதிக்கிற வயசு!

- தொடரும்...

ஆங்கிலம் அறிவோமே - 106: ஊறுகாய் நல்லா இருக்கா?

ஜி.எஸ்.எஸ்

the hindu tamil
“ஒரு மனிதர் அண்ணனாகவும், தம்பியாகவும் இருக்க முடியாதா என்ன? பரதன் ராமனுக்குத் தம்பி. என்றாலும் சத்ருக்னனுக்கு அண்ணன்தானே!’’.

எதற்காக இந்த விளக்கம் என்று குழம்ப வேண்டாம். வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு உடனடியாகத் தோன்றிய counterதான் அது.

“ஒரே வார்த்தை adjective ஆகவும், adverb ஆகவும் இருக்க முடியுமா?!!!!’’. இதுதான் அந்தக் கேள்வி. ‘முடியாதே’ என்று அவர் கருதுவதைத்தான் அந்த ஆச்சரியக் குறிகள் உணர்த்துகின்றன. ஆனால் இதற்கான பதில் அவருக்கு வியப்பை வாரி வழங்கும்.

Fast என்ற வார்த்தையை எடுத்துக் கொள்வோம். Fast speech என்பதில் fast என்பது adjective ஆக (அதாவது speech என்ற noun-ஐ விவரிக்கும் வார்த்தையாக) பயன்படுத்தப்படுகிறது. ஆனால் Run fast எனும்போது fast என்ற வார்த்தை adverb ஆக (அதாவது run என்ற verb-ஐ விவரிக்கும் வார்த்தையாக) பயன்படுத்தப்படுகிறது.

Hard என்ற வார்த்தையும் இப்படித்தான். Hard work என்பதில் adjective ஆகவும், Think hard என்பதில் adverb ஆகவும் உள்ளது.

  

“கேம்ப்ரிட்ஜில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் இருக்கலாம். அதற்காக கேம்ப்ரிட்ஜில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இருக்காதா என்ன?’’

(அமெரிக்காவிலுள்ள கேம்ப்ரிட்ஜ் என்ற பகுதியில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் இருக்கிறது. இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிட்ஜ் என்ற இடத்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்தானே?).

மேலே உள்ளபடி என்னைக் கேட்கத் தூண்டியது வேறொரு வாசகரின் கேள்வி. “ஊறுகாய் கெடாமலிருக்க conservatives சேர்க்கப்படுகிறது என்கிறார்களே! Conservatives என்றால் கருமித்தனமானவர்கள்தானே! பின் எப்படி?’’

இப்படி ஒரு கேள்வி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்துதான் எனக்கு பல்கலைக்கழக உவமானம் தோன்றியது.

கொஞ்சம் எச்சரிக்கையுடன் கூடிய என்கிற அர்த்தம் கொண்ட சொல் conservative. ஒரு பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்துவிட்டால் “பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்” என்று போகிற போக்கில் விறுவிறுப்புக்காகக் குறிப்பிட்டால் அது conservative estimate அல்ல. (அந்தப் பல்கலைக்கழகம் இருக்கும் நகரின் மக்கள் தொகையே அவ்வளவு இருக்காது!).

என்றாலும் நடைமுறையில் conservative என்பது ‘குறைவான’ என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

“கலவரத்தில் எட்டு பேர் செத்துட்டாங்களா?’’.

“நிச்சயம். சொல்லப்போனால் நான் சொன்னது conservative எண்ணிக்கை. அதிகமாகவே செத்திருப்பாங்க”.

Preservative என்ற அர்த்தத்திலும் conservative பயன்படுத்தப்படுகிறது (ஊறுகாய் பாட்டில்).

  

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதுதான் சரி. ஆனால் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று தவறாகக் கூறினாலும் அதிலும் ஓர் அர்த்தம் இருக்கிறதே!

வேறொரு வாசகர் எழுப்பிய கேள்வி தொடர்பாகத்தான் எனது மேற்படி வியாக்கியானம் என்பதை நீங்கள் இந்நேரம் யூகித்திருப்பீர்கள்.

“பல இளஞ்சிறார் பள்ளிகளுக்கான பெயர்ப் பலகைகளில் Kindergarten என்று தப்பாகக் குறிப்பிட்டிருக்கிறார்களே” என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

ஒரு குறிப்பிட்ட வயதில் கட்டாயக் கல்வி தொடங்கும். அதற்கு முந்தைய காலகட்டத்தில் குழந்தைகளைச் சேர்க்கக்கூடிய playschool-களைத்தான் அப்படிக் குறிப்பிடுகிறார்கள். Kindergarten என்பது சரியான வார்த்தைதான். இந்த வார்த்தை ஜெர்மன் மொழியிலிருந்து வந்தது. அந்த மொழியில் kinder என்றால் குழந்தைகளுடைய என்று அர்த்தம். அப்படிப் பார்த்தால் Kindergarden என்ற வார்த்தையும் குழந்தைகளின் நந்தவனம் என்கிற அர்த்தத்தில் சுகமாகத்தான் இருக்கிறது.

  



Biography என்றால் வாழ்க்கை வரலாறு. Autobiography என்றால் சுயசரிதை. Hagiography என்றால் என்ன தெரியுமா?

முனிவர்கள், தீவிர பக்தர்கள், இறையருள் பெற்றவர்கள் போன்றோரின் வரலாற்றைக் கூறுவது hagiography. இதில் அவர்கள் நடத்திய அற்புதங்களும் விவரிக்கப்படும்.

  

Bridge on the river? Bridge over the river? எது சரி என்றார் ஒரு நண்பர்.

Bridge on the river Kwai என்ற ஒரு பிரபல படம் உண்டு. இரண்டாம் உலகப் போரை அடிப்படையாகக் கொண்ட கதை. Bridge over the river Kwai என்ற புதினம்தான் அந்தப் பெயரில் படமானது!

பெரும்பாலும் ‘on’ என்ற prepositionதான் இது போன்ற இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. Bridge across the river என்பதும் வழக்கில் இருக்கிறது.

இந்தப் பதிலை அளிக்கும்போதே வேறொரு கேள்வியைக் கேட்கத் தோன்றுகிறது.

Rebus என்றால் என்ன தெரியுமா? வார்த்தைகளைப் படங்கள் மூலமாகவோ, குறியீடுகள் மூலமாகவோ வித்தியாசமான விதத்தில் அளிப்பதைத்தான் rebus என்கிறார்கள். கீழே சில எடுத்துக்காட்டுகள்.

BRIDGE

RIVER

மேலே உள்ளபடி காணப்படுவதை Bridge on river என்று படிக்க வேண்டும். ஏனென்றால் நதி என்ற வார்த்தைக்கு மேலே பாலம் என்ற வார்த்தை இருக்கிறது. (துன்பம் என்ற வார்த்தையை அதிலுள்ள எழுத்துகளுக்கு நடுவே கொஞ்சம்கூட இடைவெளி கொடுக்காமல் நெருக்கமாக எழுதினால் அந்த rebus-ன் விடை “இடைவிடாத துன்பம்” என்பதாகும்.).

SAM HE HARI

மேலே உள்ள rebus-ஐ விடுவியுங்கள் பார்க்கலாம்.

இதன் விடை HE IS BETWEEN SAM AND HARI.

இந்த வகைப் (rebus) புதிர்கள் இரண்டைக் கொடுத்திருக்கிறேன். உங்கள் விடைகளை உடனே எழுதி மின்னஞ்சலில் அனுப்புங்கள். (மறக்காமல் நீங்கள் வசிக்கும் ஊரையும் குறிப்பிடுங்கள்).

(1) t = T

(2) NOONGOOD

சிப்ஸ்

# Film என்பதற்கும், movie என்பதற்கும் என்ன வித்தியாசம்?

பிரிட்டிஷ்காரர்களுக்கு film. அமெரிக்கர்களுக்கு movie.

# t20 என்பதில் ‘t’ என்பது எதைக் குறிக்கிறது?

Twenty twenty என்பதைத்தான் t20 என்கிறோம். ஒவ்வொரு அணிக்கும் 20 ஓவர்கள்.

# ஒரு விஷயம் குறித்துப் பேசும்போது Your guess is as good as mine என்று ஒருவர் கூறினால் அதற்கு என்ன பொருள்?

அந்த விஷயம் தொடர்பாக அவருக்கு எந்தத் தெளிவான அல்லது அதிகப்படியான கருத்தும் இல்லை என்பதைத்தான் உணர்த்துகிறார். ‘உங்களுக்குத் தெரிந்ததுதான் எனக்கும்’

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

பொழுதுபோக்கும் கல்விதான் .ம.சுசித்ரா



பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குள் அடியெடுத்துவைக்கக் காத்திருக்கும் பல இளைஞர்களின் மனதில் ‘‘எப்போதும் கஷ்டப்பட்டுத்தான் படிக்க வேண்டுமா, நமது விருப்பத்திற்கேற்றதைப் படிக்க முடியாதா?’’ என்ற கேள்வி ஓடிக்கொண்டிருக்கும். மருத்துவம், பொறியியல், வணிகவியல், வழக்கமான அறிவியல் படிப்புகள் தவிர எத்தனையோ புதிய படிப்புகள் வந்திருப்பது நமக்கெல்லாம் தெரியும். இப்போது நாம் பேசவிருப்பது அவற்றைப் பற்றி அல்ல. நாம் இதுவரை கற்பனை செய்தேபார்க்காத வித்தியாசமான படிப்புகளும், அதற்கான சிறப்பான வேலை வாய்ப்புகளும் ஏராளமாக இன்று நம் முன் உள்ளன.

“இது வெறும் பொழுதுபோக்கு, வேலைக்கு ஆகாது” எனக் காலங்காலமாக சொல்லப்பட்ட பல துறைகளைப் பற்றி முறையாகக் கற்பிக்கப் பல கல்வி நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன. கல்வித் திட்டம் என்று ஒன்று இருந்தால் அதற்கான வேலைவாய்ப்புகளும் நிச்சயமாக இருக்கும் அல்லவா? ஆக, இதுவரை எல்லாரும் சென்ற பாதையில்தான் நாமும் பயணிக்க வேண்டும் என்ற கட்டாயம் இனி இல்லை. நம் படைப்பாற்றல், தனித்திறன், விருப்பம், பொழுதுபோக்குக்கு ஏற்ற படிப்புகளும் வேலை வாய்ப்புகளும் நவீன உலகில் அணி வகுத்து நிற்கின்றன. கற்றல் என்பதற்கே புதிய விளக்கம் கொடுக்கும் அளவுக்கு நம்மை வியக்க வைக்கும் படிப்புகள் உள்ளன. அதில் சிலவற்றைப் பார்க்கலாம்!

நல்லா ஊர் சுத்தலாம், நல்லா சம்பாதிக்கலாம்

“எப்ப பார்த்தாலும் ஊர் சுத்திக்கிட்டே இருக்கியே…எப்படித்தான் உருப்படப் போறியோ?” எனப் பெற்றோரைக் கவலைப்படச் செய்யும் பயணங்களில் விருப்பமுள்ள பிள்ளையாக இருந்தால், நீங்கள் படிக்க வேண்டியது ‘மவுண்டனேரிங்’ (Mountaineering) கோர்ஸ். மலையேற்றம், பாறை ஏற்றம், நெடுந்தூரப் பயணங்கள் ஆகியவை இதில் பாடமாகவே கற்பிக்கப்படுகிறது. ஆசியாவிலேயே மலையேற்றப் படிப்புக்காகப் புகழ் பெற்ற கல்வி நிறுவனம் உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில் உள்ள நேரு இன்ஸ்டிடியூட் ஆஃப் மவுண்டனேரிங் ஆகும். இது போல இன்னும் பல நிறுவனங்கள் இளைஞர்களிடமுள்ள ஊர் சுற்றும் திறனை மெருகேற்றி அவர்களை உலகம் சுற்றும் வாலிபராக மாற்றக் காத்திருக்கின்றன.

சைபர் படைத் தளபதி

இணையத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுக் கணினியில் புகுந்து விளையாடும் உங்களுக்கு வழக்கமான கணிப்பொறி படிப்புகள் அல்லாமல் சாகசம் செய்வதற்கு ஆசையா?

இன்று தொழில்நுட்ப உலகை மிரட்டும் ஒரு சொல் ‘ஹேக்கிங்’. நமது கணினிக்குள்ளும், இணையத்தளங்களுக்குள்ளும், அன்னியர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் புகுந்து தகவல்களைப் பறித்து, பெரும் ராணுவங்களின், வல்லரசு நாடுகளின் இணையத்தளங்களையே ஸ்தம்பிக்கச் செய்வதுதான் ஹாக்கிங். இது தமிழில் ‘கொந்துதல்' என்றழைக்கப்படுகிறது. இந்த ஹாக்கிங்கை திறம்பட எதிர்கொள்ளக் கற்றுத்தருவதுதான் ‘எத்திக்கல் ஹேக்கிங்’(ethical hacking).

கொல்கத்தாவில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் எத்திக்கல் ஹேக்கிங் நிறுவனமானது தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அத்தனை பாதுகாப்புச் சிக்கல்களையும் கையாள்வதன் உத்திகளைச் சொல்லித்தருகிறது. புனேவில் இருக்கும் அரிஸோனா இன்ஃபோடெக்கில் 15 நாட்கள் பயிற்சிப்படிப்பாகவும் இது கற்றுத் தரப்படுகிறது. இதைப் படிப்பவர்கள், சைபர் உலகப் பாதுகாப்பு படை தளபதிபோல வலம் வரலாம். உலகம் முழுவதும் ‘எத்திகல் ஹாக்கர்களுக்கு' வேலைவாய்ப்புகளும் மரியாதையும் உண்டு.

சாப்பாட்டு ராமனின் ராஜ்ஜியம்

குழம்பின் வாசத்தை நுகர்ந்தே உப்பு அதிகமா இல்லை குறைவா எனச் சொல்லும் அளவுக்கு நீங்கள் சாப்பாட்டுப் பிரியரா? கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் தவிரவும் வித்தியாசமான படிப்புகள் உங்கள் கைமணத்தை நிரூபிக்கக் காத்திருக்கின்றன.

உணவுப் பண்டங்களில் புதிய வாசனைகளை ஆராய்ந்து அறிமுகப்படுத்தும் ‘ஃபுட் ஃபிளேவரிஸ்ட்’(food flavourist) பட்டப்படிப்பை மும்பையில் உள்ள தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹாஸ்பிடாலிட்டி அண்ட் மேனேஜ்மெண்ட் அளிக்கிறது. இதில் ரசாயன மணங்கள், தாவர எண்ணை வகைகள், மூலிகைத் திரவியம் என வாசனைத் தொடர்பான அத்தனை அம்சங்களும் கற்றுத் தரப்படுகின்றது.

சாப்பாட்டு ராமன் என்று பெயர் பெற்றவராக இருந்தால், ‘ஃபுட் டெக்னாலஜி’ படிப்பை பஞ்சாப்பில் உள்ள லவ்லி ப்ரொபஷனல் பல்கலைக்கழகம், மைசூரில் இருக்கும் சென்ட்ரல் ஃபுட் டெக்னலாஜிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டில் படிக்கலாம். இங்கு உணவை வேதியியல், இயற்பியல், நுண் உயிரியல் அடிப்படையில் தயாரித்து, பதப்படுத்தி, சேமித்து, விற்பனைப் பண்டமாக மாற்றுவதுவரை அனைத்துத் தொழில்நுட்பங்களும் சொல்லித்தரப்படுகின்றன. உணவுத் தொழில்நுட்பத்தில் (food technology) முதுகலை பட்டம் பெற்றால் உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில், உணவு ஆய்வுக்கூடங்களில், உணவகங்களில், குளிர்பானத் தொழிற்சாலைகளில், உணவு தரநிர்ணயம் செய்யும் நிறுவனங்களில், நீர் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

மனம் எதை விரும்புகிறதோ அதையே நமது பணியாகவும் வருவாயாகவும் மாற்றலாம். அதற்குக் கொஞ்சம் தேடலும், படைப்பாற்றலும் தான் தேவை. நம்மைச் சுற்றி வித்தியாசமான படிப்புகளும் அதற்கேற்ற வேலை வாய்ப்புகளும் இருக்கவே செய்கின்றன. அவற்றைக் கண்டறிய நாமும் கொஞ்சம் சுற்றத் தயாராக இருக்க வேண்டும் அவ்வளவுதான். தொடர்ந்து தேடலாம்!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் நகரில் கடும் வறட்சியால் இறுதிச் சடங்குகள் பாதிப்பு ... ஷரத் வியாஸ்

வறண்டு போன கோதாவரி ஆற்றங்கரையில் மரண இறுதிச் சடங்கு நிறைவேற்ற வருவோர் தண்ணீரின்றி அவதியுறுகின்றனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பாக தனது உறவினரை இழந்த பீமாராவ் அகார்கர், கோதாவரி அருகே நின்று கொண்டு தனது உறவினர் இறுதிச் சடங்குக்கு ஆன செலவை கணக்கிட்டுக் கொண்டிருந்த போது 3,000 லிட்டர் தண்ணீருக்கு ரூ.1,600 கொடுத்ததை நினைத்துக் கொண்டிருந்தார்.

மரண இறுதிச் சடங்கு நிறைவேற்றுவோருக்கான புனித இடம்தான் பீட். இங்கு 42 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தி வருகிறது, கோதாவரி நதி சுத்தமாக வறண்டு காணப்படுவதால் இறுதிச் சடங்குக்கு வருவோருக்கு தண்ணீர் ஏற்பாடு செய்ய கடும் அவதி ஏற்பட்டுள்ளது.

சுமார் 300 உறவினர்களுடன் இறுதிச் சடங்கு நிறைவேற்ற வருவோருக்கு சாப்பாடு, குடிநீர் ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. குடிநீருக்கு மினரல் வாட்டர் வாங்க முடிகிறது, ஆனால் சடங்குக்கு தேவைப்படும் தண்ணீர், அனைவரும் குளிக்க தேவைப்படும் தண்ணீர் ஆகியவற்றை வெளியிலிருந்து லாரியில்தான் வரவழைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதியில் பருவ மழை பொய்த்துப் போனது. இதனால் புனிதத் தல நதி வறண்டு போயுள்ளது. இதனால் இறுதிச் சடங்கு தொடர்பாக நடைபெறும் சிறுசிறு வியாபாரங்கள் பாதிப்படைந்து அவர்களும் வாழ்வாதாரத்திற்கு திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குகளின் போது தலைக்கு மொட்டை அடிக்கும் நாவிதரின் வாழ்வாதாரமும் பாதிப்படைந்துள்ளது. நாளொன்றுக்கு 25 பேருக்கு மொட்டை அடிக்கும் நாவிதர் அசோக் வாக்மரே தற்போது 5 பேர் கிடைத்தால் பெரிய விஷயம் என்கிறார்.

டேங்கர் லாரியில் தண்ணீர் வரவழைப்பதில் உள்ள சிக்கல் என்னவெனில் அதனைப் பணம் கொடுத்து வாங்கும் அளவுக்கு அனைவரும் வசதி படைத்தவர்கள் என்று கூற முடியாது.

இங்கு மட்டுமல்ல பீட் நகரின் பல தாலுக்காக்களும் டேங்கர் லாரியையே தண்ணீருக்காக நம்பியிருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

நிர்வாகமும் இயற்கையும் தங்களை வாட்டி வதைப்பதாக பீட் வாசிகள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

NEWS TODAY 25.12.2025