Monday, April 25, 2016

பாஸ்போர்ட் முடக்கம்: இங்கிலாந்திலேயே விஜய் மல்லையா தங்கி இருக்க முடியுமா? புதிய தகவல்


புதுடெல்லி,

வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பிச் செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள அவரை அமலாக்கத்துறையின் விசாரணைக்காக இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.

இந்த நிலையில், பாஸ்போர்ட்டை முடக்கிய நிலையிலும் விஜய்மல்லையாவால் தொடர்ந்து இங்கிலாந்தில் தங்கி இருக்க முடியும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, டெல்லி வட்டாரங்கள் கூறுகையில், ‘‘தான் தொடர்ந்து இங்கிலாந்திலேயே தங்கியிருக்கும் வகையிலான அனுமதியை விஜய் மல்லையாவால் கோர முடியும். இதேபோல் அங்கிருந்தவாறே தனது பாஸ்போர்ட் முடக்கத்தை எதிர்த்து இந்திய கோர்ட்டுகளில் அவரால் வழக்கு தொடரவும் இயலும்’’ என்று தெரிவித்தன.

மே 5ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்?


DINAMALAR

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, மே, 5ம் தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இரு தினங்களில் வெளியாகும் என தெரிகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 4ல் துவங்கி, ஏப்., 1ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 23ல் முடிந்தது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பிளஸ் 2 மதிப்பெண்கள் தொகுக்கப்பட்டு, சென்னையிலுள்ள அரசு தேர்வுத்துறை அலுவலகத்துக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. இன்னும், இரு தினங்களில் மதிப்பெண் தொகுப்பு பணி முடிந்து, மாவட்ட வாரியாக முதலிடம்; மாநில வாரியான, 'ரேங்க்' எடுத்த மாணவ, மாணவியரின் பட்டியல் தயாரிக்கப்படும். 'சென்டம்' எடுத்த மாணவர்களின் எண்ணிக்கையும் கணக்கிடப்படும். இந்த பணிகள், ஏப்., 29ம் தேதிக்குள் முடிந்து விட்டால், மே, 2ம் தேதியே தேர்வு முடிவு வெளியிடப்படும். இதில் தாமதமானால், மே, 5ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என, அரசு தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

- நமது நிருபர் -

வரவிருக்கும் விசேஷங்கள்..2016


DINAMALAR

மே 01 (ஞா) மே தினம்
மே 04 (பு) அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
மே 09 (தி) அட்சய திரிதியை
மே 11 (பு) ஆதிசங்கரர் ஜெயந்தி
மே 20 (வெ) நரசிம்ம ஜெயந்தி
மே 21 (ச) வைகாசி விசாகம்

மதிய உணவுக்கு பதில் ரூ.150 :தேர்தல் கமிஷன் உத்தரவு


DINAMALAR

தேர்தல் பணி தொடர்பான பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, மதிய உணவுக்கு பதிலாக, உணவுப்படி வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், மே, 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இப்பணியில், 1.97 லட்சம் பெண்கள் உட்பட, 3.29 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி முகாம், நேற்று தமிழகம் முழுவதும் துவங்கியது.

இவர்களுக்கு, மூன்று கட்டமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, மதிய உணவு வழங்க, ஒருவருக்கு, 150 ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனால், பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யும் அதிகாரிகள், அந்தத் தொகையை, முறையாக செலவழிப்பதில்லை; தரமான உணவு வழங்குவதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, அவர்கள் கையில், 150 ரூபாயை வழங்கி விடுங்கள். பயிற்சி முகாம் நடைபெறும் இடத்தில், ஏதேனும் ஓட்டல் நிறுவனத்தை ஸ்டால் அமைக்க சொல்லுங்கள். பயிற்சிக்கு வருவோர் விரும்பிய உணவை வாங்கி சாப்பிடட்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.- நமது நிருபர் -

வேலூர் வாலிபர்கள் நடு ரோட்டில் 'ஆம்லெட்'


வேலுார்:கொளுத்தும் கோடை வெயிலில், நடு ரோட்டில் முட்டையை உடைத்து, வாலிபர்கள், 'ஆம்லெட்' போட்டனர்.தமிழகத்தில், கோடை வெயில் சுட்டெரிக்கத் துவங்கியிருக்கிறது. கொளுத்தும் வெயில் ஒரு புறமும், அனல் காற்று மறுபுறமும், பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது.வேலுார் மாவட்டத்தில் தான், வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. நேற்று முன்தினம், 109.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

இந்த வெயிலுக்கு, சத்துவாச்சாரி பகுதியில் வண்டியை இழுத்துச் சென்ற மாடு, நடு ரோட்டிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தது.அதைத் தொடர்ந்து, வேலுாரில் நேற்று, 110.66 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. கொளுத்தும் வெயிலின் தாக்கத்தை அறிய, சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர், சாலையில் முட்டைகளை உடைத்து, ஆம்லெட் போட்டனர்.சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், இளைஞர்கள் சிலர் ஆம்லெட் போட்டதை, அப்பகுதியில் நின்றவர்கள் வேடிக்கை பார்த்து, வெயிலின் கொடூரத்தை பரஸ்பரம் பேசிக் கொண்டனர்.

தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி முகாம்


சென்னை,
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட தேர்தல் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதில் 3¼ லட்சம் தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர்.

சட்டசபை தேர்தல்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே மாதம்) 16–ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

தலைநகர் சென்னையில் 3 ஆயிரத்து 699 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 7 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குப் பதிவு எந்திரங்களும், 4 ஆயிரத்து 850 கட்டுப்பாட்டு கருவிகளும் தயார்நிலையில் உள்ளன. மேலும், 6 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்கள் கூடுதலாகவே பயன்படுத்தப்பட உள்ளன.

3,29,532 பேர் பங்கேற்பு

இந்தநிலையில் வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் 234 தொகுதிகளிலும் நேற்று நடந்தது. வாக்குச்சாவடியில் உள்ள பணிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது எப்படி? உள்ளிட்ட எல்லாவிதமான பணிகளும் அந்தந்த தலைமை வாக்குச்சாவடி அலுவலர் மூலம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், பணிகளின் போது ஏற்படும் பிரச்சினைகள், வாக்குப்பதிவு எந்திர கோளாறு உள்ளிட்டவைகளின் போது, எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் பணிகள் குறித்த கையேடுகளும் வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் நடந்த இந்த முதற்கட்ட பயிற்சி முகாமில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 532 தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.

தேர்தல் அதிகாரி ஆய்வு
சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட ஐ.சி.எப். மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்தல் பயிற்சி முகாமை, மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான டாக்டர் பி.சந்திரமோகன் நேற்று பார்வையிட்டார். அவருடன் கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆர்.கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் பார்வையிட்டனர். பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரி குமரவேல் பாண்டியன், உதவி ஆணையர் (தேர்தல்) பரந்தாமன், துணை அதிகாரி எஸ்.ஜெகன்நாதன் உள்ளிட்டோரிடம் பயிற்சி முகாம் தொடர்பாக ஆலோசனை வழங்கினார்.

பயிற்சி முகாமில் பங்கேற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து சந்திரமோகன் விளக்கி கூறினார். பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்தும், அதன் மூலம் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும் அவர் ஆலோசனை வழங்கினார். பயிற்சி முகாமில் அமைக்கப்பட்டிருந்த பதிவு கூடம், உதவி மையம், மருத்துவ உதவி மையம், உணவு வழங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சந்திரமோகன் பார்வையிட்டார்.

உறுதிமொழி
இதன்பின்னர் டாக்டர் சந்திரமோகன் நிருபர்களிடம் கூறியதாவது:–

சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளிலும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. பயிற்சியின் போது இவர்களுக்கு நேர்மையாக பணிபுரிவோம் என்ற உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. வாக்குச்சாவடி பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்தடுத்த பயிற்சி முகாம்களில் முழுமையாக பயிற்சி அளித்து முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த கட்ட முகாம்கள்
மே 16–ந்தேதி அன்று வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் இருக்க வேண்டும் என்பதால், அவர்கள் தபால் ஓட்டு போட தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருக்கிறது. அதன்படி அவர்களுக்கு நேற்றைய பயிற்சி முகாமின்போது, ‘படிவம்–12’ வழங்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், தபால் ஓட்டு அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான அடுத்த கட்ட தேர்தல் பயிற்சி முகாம் மே 7, 12 மற்றும் 15–ந் தேதிகளில் தமிழகம் முழுவதும் அந்தந்த சட்டசபை தொகுதிகளில் நடக்கிறது. 15–ந்தேதி மாலை பயிற்சி முடிந்ததுமே, தேர்தல் அலுவலர்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்கள் இரவு முழுவதும் அங்கு தங்கி, மறுநாள் மே 16–ந்தேதி அதிகாலையே தேர்தலுக்கு தயாராகி விடுவார்கள்.

அடுத்த அரசாங்கத்தின் முதல் வேலை

DAILY THANTHI...THALAYANGAM

தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் 16–ந் தேதி நடக்கவிருக்கிறது. இந்த தேர்தல் கடுமையான கோடைகாலத்தில் நடக்க இருப்பதால் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்ததோடு மட்டுமல்ல, பிரசாரத்தில் ஈடுபடும் கட்சியினரும் கொதிக்கும் வெயிலில் வீதி, வீதியாக சென்று ஓட்டு கேட்கவேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிட்டது. ‘நாங்கள் ஆட்சிக்குவந்தால், இதைச்செய்வோம், அதைச்செய்வோம்’ என்று எல்லாகட்சிகளும் தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றன. ஆனால், தேர்தல் அறிக்கையில் சொன்னதையெல்லாம் நிறைவேற்றுவது ஒரு பக்கம் இருந்தாலும், ஆட்சி அமைத்தவுடன் அவர்கள் செய்வதற்காக காத்து கொண்டிருக்கும் முதல் வேலை, வரலாறு காணாத கோடையை சமாளிப்பதும், குடிநீர்பற்றாக்குறையை போக்குவதும் ஆகும்.

1991–ம் ஆண்டு முதல் இன்று வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்த ஆண்டுதான் கடும் வெப்பத்தை எதிர்நோக்கும் 3–வது ஆண்டாகும். கடந்த 2 ஆண்டுகளாகவே கோடையின் வெப்பம் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இருந்தாலும், இந்த ஆண்டு வெப்பம் அதையெல்லாம் தாண்டிவிடும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2014–ம் ஆண்டு இருந்த வெப்பத்தைவிட, 2015–ம் ஆண்டு இருந்த வெப்பம் அதிகமாகும். இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே 8 ஆண்டுகள் கடுமையான வெப்பத்தை தந்திருக்கின்றன. சென்னை மாநகரை பொருத்தமட்டில், 1908–ம் ஆண்டு ஏப்ரல் 27–ந் தேதியில்தான் 109.04 டிகிரி வெயிலை சந்தித்திருக்கிறது. இப்போது சென்னையில் 107 டிகிரியையும், வேலூரில் 109 டிகிரியையும், தமிழ்நாடு முழுவதும் இதேபோல் அதிக வெயிலையும் பார்த்தபிறகு, வரப்போகும் நாட்களில் இன்னும் அதிகமான கோரவெயிலை அனுபவிக்கவேண்டிய நிலை ஏற்படும். வேகாத இந்தவெயிலில் மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்றாலும், கால்நடைகள், பறவைகள், ஏன் மீன்பண்ணைகளிலுள்ள மீன்களும் வெப்பத்தை தாங்கமுடியாமல் துடிதுடித்துப்போகின்றன. நீர்த்தேக்கங்களில் எல்லாம் தண்ணீரின் மட்டம் மிகவேகமாக குறைந்து வருகிறது. வருகிற ஆண்டு தென்மேற்கு பருவமழை சராசரியைவிட அதிகமாக, அதாவது 106 சதவீத மழை இருக்கும் என்பது ஆறுதலாக இருந்தாலும், அந்த மழை வருவதற்கும் சில நாட்கள் தாமதமாகும் என்று வரும் தகவல்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது.

தென்மேற்கு பருவமழை வழக்கமான காலங்களில் பெய்யும் என்றால் முதலில் ஜூன் 1–ந் தேதி கேரளாவில் பெய்யத்தொடங்கும். அங்கிருந்து படிப்படியாக நகர்ந்து தமிழ்நாட்டில் ஆகஸ்டு மாதத்திற்கு மேல்தான் தீவிரமழை பெய்யத்தொடங்கும். ஐப்பசி மாதத்தில்தான் அடைமழை என்பார்கள். ஆனால், பருவகாலத்திற்கு முந்தைய மழையாக ஏப்ரல் 21–ந் தேதி மழைபெய்தால்தான் ஜூன் 1–ந் தேதி பருவமழை பெய்யத்தொடங்கும். இல்லையென்றால், சிலநாட்கள் தாமதமாகும் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் மரபாகும். ஆனால், கடந்த 21–ந் தேதி மழை பெய்யவில்லை. பொதுவாக எல்–நினோ தாக்குதல் இருந்த ஆண்டுகளுக்கு அடுத்த ஆண்டு தாமதமாகவே தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். 2002–ம் ஆண்டு எல்–நினோ தாக்கம் இருந்தது. அந்த ஆண்டு ஜூன் 9–ந் தேதியும், அதற்கடுத்த ஆண்டு ஜூன் 13–ந் தேதியும்தான் பருவமழை தொடங்கியது. இதேபோல, பல ஆண்டுகளில் தாமதமாக மழைபெய்திருக்கிறது. 2015–ம் எல்–நினோ ஆண்டாகும். கடந்த ஆண்டு ஜூன் 5–ந் தேதிதான் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கிறது. எனவே, இந்த ஆண்டும் பருவமழை ஜூன் 1–ந் தேதிக்கு பதிலாக, 10 நாட்களுக்கு மேல் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படியானால், இன்னும் சில மாதங்கள் கோடையை தாங்கித்தான் ஆகவேண்டும். வழக்கமாக கோடைகாலங்களில் அரசியல் கட்சிகள் மக்களுக்கு பயனளிக்கும் தண்ணீர் பந்தல்களை அமைப்பது வழக்கம். இப்போது தேர்தல் நேரம் என்பதால், அரசியல்கட்சிகள் தண்ணீர்பந்தல் அமைக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தப்பணியை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மற்றும் பல்வேறு சமூகநல அமைப்புகளும், ஏன் பொதுமக்களுமே செய்யலாம். நீர்நிலைகளையெல்லாம் ஆழப்படுத்தும் பணிகளையும், மழைபெய்யும் காலங்களில் தண்ணீர் வீணாகாமல் சேமித்து வைக்கும் பணிகளையும் முதல் வேலையாக புதிய அரசாங்கம் செய்யவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

NEWS TODAY 04.06.2026