Wednesday, December 14, 2016

'வார்தா' புயல்: காற்றில் பறந்த கூரைகள்; தங்க இடமின்றி தவித்த மக்கள்

சென்னை ராயப்பேட்டை முத்தையா தோட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிசைகளின் மேற்கூரை மீது மரங்கள் விழுந்தன. மழைநீரும் புகுந்ததால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து முத்தையா தோட்டம் குடிசைப் பகுதியில் வசித்து வரும் சித்ரா கூறியதாவது: புயல் காற்றால் எங்கள் பகுதியில் உள்ள குடிசைகள் அனைத்தும் நேற்று சேதமடைந்துவிட்டன. கூரைகள் காற்றில் பறந்துவிட்டன. பல குடிசைகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. குழந்தைகளின் பள்ளி புத்தகங்கள், உடமைகள் அனைத்தும் மழையில் நனைந்துவிட்டன. இதனால், அருகில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் நேற்று தஞ்சமடைந்தோம்.

அங்கும் மரம் விழுந்ததால் அருகில் உள்ள கருமகாரிய கூடத்தில் பலர் தஞ்சமடைந்தனர். நேற்று இரவு முழுவதும் படுக்க சரியான இடமின்றி, உணவில்லாமல் குழந்தைகளும், முதியவர்களும் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகினர். ஆனால், இதுவரை அதிகாரிகள் யாரும் எங்களை கண்டுகொள்ளவில்லை.

தேர்தல் நேரத்தில் ஓட்டுகேட்டு வரும் கட்சிக்காரர்கள், உதவி தேவைப்படும் காலத்தில் உதவவில்லை. இந்தப் பகுதிக்கு அருகிலேயே உள்ள குழந்தைகள் மையத்தையும் பூட்டிவைத்துவிட்டனர். இதனால், அங்கு சென்றும் தங்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

'வார்தா' தாண்டவம்: களைப்பில்லாமல் உழைக்கும் காவல்துறை

க.சே. ரமணி பிரபா தேவி

சென்னை மற்றும் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை முற்றிலுமாகக் கலைத்துப் போட்டிருக்கிறது ’வார்தா ’ புயல். சென்னையின் ஒட்டுமொத்த மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

சூறாவளிக்காற்றும், மழையும் நின்றுவிட்ட நிலையில் அதன் விளைவாக விழுந்த பெரு மரங்கள் சாலைகளில் கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர்.

மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் விரைந்து சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். போலீஸ் ரோந்து வாகனங்கள் தங்கள் வேலையைத் தொடங்கியிருந்தன. காலை அலுவலகம் வரும்போது கண்ணில் தென்பட்ட காட்சிகள் இவை.

வழியில், சிந்தாதிரிப்பேட்டையில் மரங்களை அப்புறப்படுத்தும் வேலைகளில் ஏராளமான காவல்துறையினரைக் காண முடிந்தது.

அருகில் சென்று விசாரித்தபோதுதான் தெரிந்தது சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் பூபாலன் அவரென்று. அவரோடு காவல்நிலையத்தின் மற்ற காவலர்களும், சில இளைஞர்களும் வீழ்ந்துகிடந்த மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தனர். ''பணியாளர்கள் யாரும் வரவில்லையா?'' என்று கேட்டேன். ''அதனால் என்னங்க, நம்ம வீட்டுல யாரு செய்யறோம்? நம்மதானே, அதுபோலத்தான் இங்கயும்!'' என்று கூறியவாறு தன் பணியைத் தொடர்ந்தார்.



பல்நோக்கு மருத்துவமனையின் எதிர்ப்புறத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்கு அருகே இருந்த கட்டிடத்திலும் மரங்கள் பெயர்ந்து கிடந்தன. அவற்றையும் சில காவலர்கள் எடுத்துக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

வாலஜா சாலை, கலைவாணர் அரங்கம் எதிரே உள்ள சாலை மரங்களை திருவல்லிக்கேணி D1 காவல்நிலைய உதவி ஆணையர் உட்பட நிறைய அதிகாரிகள் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர் என்று சக நண்பர் கூறினார்.

இதுபோல வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகள், டி.டி.கே. சாலை, வெஸ்ட் காட் சாலை உள்ளிட்ட சென்னை நகரத்தின் ஏராளமான இடங்களில் விழுந்துகிடக்கும் மரங்களையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருவதாக அந்த வழியாக வந்த அலுவலக நண்பர் கூறியதைக் கேட்க முடிந்தது.



தன்னலம் கருதாது மழை, வெயில், புயல் என எல்லா இயற்கை சீற்றங்களிலும், செயற்கை மாற்றங்களிலும் களைத்துப் போகாது உழைக்கும் காவல்துறைக்கு ஒரு ராயல் சல்யூட்!

22 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையை தாக்கிய புயல்


சென்னையை அதிதீவிர புயல் ஒன்று 22 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கியிருப்பது தெரியவந்துள் ளது.

ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலங்களில் வங்கக் கடலில் புயல் உருவாவது வழக்க மானது. இது பெரும்பாலும் தமிழ கம் மற்றும் ஆந்திரா, ஒடிசா அல் லது மேற்கு வங்க கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும். தமி ழகத்தை பொருத்தவரை பெரும் பாலான புயல்கள் கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட் டங்களில் தான் கரையைக் கடக்கும்.

இரு வாரங்களுக்கு முன்பு தமிழக கரையைக் கடந்த ‘நடா’ புயல், நாகப்பட்டினம் அருகே தான் கரையைக் கடந்தது. சென்னையை கரையைக் கடப் பதும், சென்னையை தாக்குவதும் அரிதாகவே நிகழ்கிறது. ஒருசில புயல்கள் மட்டுமே சென்னை அருகே கரையைக் கடக்கின்றன. அவற்றிலும் அரிதானவையே சென்னைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளன.

தற்போது சென்னை அருகே கரையைக் கடந்துள்ள அதி தீவிர புயலான வார்தா, சென்னைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 192 கி.மீ வேகத்தில் தாக்கியதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற புயல், 22 ஆண்டுகளுக்கு முன்பு 1994-ல் சென்னையை தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2010-ல் உருவான ‘ஜல்’ புயல் சென்னை அருகே கரையைக் கடந்தது. 2012-ல் உருவான ‘நிலம்’ புயல், மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. இந்த 2 புயல்களும் சென்னை அருகே கரையைக் கடந்தாலும், சென்னைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

அதே வேளையில், கடந்த 1994-ல் அக்டோபர் 31-ம் தேதி சென்னையை தாக்கிய புயல், சென்னைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது சென்னையில் 24 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. அதனைத் தொடர்ந்து அதற்கு இணையான பாதிப்பை ஏற்படுத்தும் புயலாக இந்த வார்தா புயல் விளங்குகிறது. ஒரு அதிதீவிர புயல் ஒன்று சென்னையை தாக்கும் நிகழ்வு, 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் நிகழ்ந்துள்ளது என்று அந்த முகநூல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

கொந்தளித்தது கடல்.. கொட்டித் தீர்த்தது மழை.. கோரத் தாண்டவம் ஆடியது ‘வார்தா’ புயல்..: தலைவிரி கோலத்தில் தலைநகர்!

ச.கார்த்திகேயன்

பகலிலேயே இருளில் மூழ்கியது சென்னை: மின்சாரம் துண்டிப்பு; அதிக உயிரிழப்பு தவிர்ப்பு
சூறைக் காற்றின் பேயாட்டத்தில் பெயர்ந்தன மரங்கள், மின் கம்பங்கள்; போக்குவரத்து பாதிப்பு
முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் காரணமாக வீடுகளிலேயே மக்கள் முடங்கியதால் நிம்மதி

சென்னையை மணிக்கு 110 கிமீ வேகத்தில் தாக்கிய ‘வார்தா’ புயலின் கோரத்தாண்டவத்தால் தலைநகரம் தலைவிரிகோல மானது. சூறைக் காற்றாலும், கொட்டித் தீர்த்த மழையாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, படிப்படியாக வலுப்பெற்று, 4 நாட்களுக்கு முன்பு ‘வார்தா’ புயலாக உருமாறியது. தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கிய இந்த புயல், பின்னர் அதிதீவிர புயலாக மாறியது.

இந்த புயல் கரையை நெருங்க நெருங்க ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் லேசான காற்றும், மழையும் தொடங்கியது. நேற்று காலையில் காற்றின் வேகமும், மழையும் மேலும் அதிகமானது. சுமார் 12 மணி அளவில் உச்சநிலையை அடைந்து நகரின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று தீவிர மாக வீசியது. கடல் கொந்தளிப் புடன் காணப்பட்டது. கூடவே கனமழையும் கொட்டித் தீர்த்து.

இந்த புயலால் சாலையோரங் களில் இருந்த 3,300-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தன. இதேபோல் சென்னை, காஞ்சி, திவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் 3 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அடியோடு பெயர்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து கடுமை யாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் வெவ்வேறு பாதைகளில் திருப்பி விடப்பட்டன.




நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் மரம் விழுந்து சிக்கியுள்ள 2 அரசுப் பேருந்துகள். | படம்: க.ஸ்ரீபரத்


விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியா ளர்கள், தீயணைப்புப் படை வீரர்கள், போலீஸார் ஈடுபட்டனர். இயந்திரங்கள் மூலமாக மரங்களை அறுத்து, ஜேசிபி இயந்திரங்கள் மூலமாக அகற்றி, உடனடியாக சீரான போக்குவரத்துக்கு வழி வகை செய்தனர்.அவர்களுடன் உள்ளூர் இளைஞர்களும் களமி றங்கி மரங்களை அகற்றினர். போக்குவரத்தையும் ஒழுங்குப் படுத்தினர்.

இந்தப் புயல் உருவான உடனேயே அரசின் வருவாய்த் துறை முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக பல்வேறு துறை அதிகாரி களை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது. இதன்மூலம் போதிய மீட்புக் குழுக்களை ஏற்படுத்தவும், தேசிய பேரிடர் மீட்பு படைகளைத் அழைத்து தயார் நிலையில் நிறுத்தவும், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்கவும், அவர் களுக்கு தேவையான உணவை வழங்கவும் உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தியது.

இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியிலும் அந்தந்த மண்டலங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும் முடுக்கி விடப்பட்டனர். அரசும், பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று முன்கூட்டியே எச்சரிக்கை அறிவிப்பும் வெளி யிட்டது. நீண்ட நேரம் கெடாமலிருக்கும் உணவுகளை சமைத்து வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தாழ்வான பகுதிகளில் இருந்த மக்களும் நிவாரண முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டனர். இதன் காரணமாக, புயல் சென்னையை புரட்டிப் போட்ட நிலையில், மக்கள் வீடுகளிலே முடங்கினர். முன்கூட் டியே பொதுமக்கள் காய்கறிகள், பால், கேன் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி இருப்பில் வைத்துக் கொண்டனர். இதனால் இந்த பேரிடரால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட வில்லை.

சென்னையில் 30 முகாம்களில் 600 பேர் தங்க வைக்கப் பட்டிருந்தனர். அவர்களுக்கு அம்மா உணவகங்கள் மூலமாக உணவு வழங்கப்பட்டது. இப்பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அத்துறை செயலர் க.பணீந்திரரெட்டி, மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக் குமார், மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், மேற்பார்வை அலுவலர் காக்கர்லா உஷா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இருளில் மூழ்கியது

முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சூறைக் காற் றுடன் மழை பெய்த நிலையில், 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மின் கம்பங்கள் விழுந்த நிலையிலும், பல இடங்களில் மின் பெட்டி அருகில் நீர் தேங்கிய நிலையிலும், மின்சாரம் தாக்கி ஏற்படும் உயிர்ப் பலிகள் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் புயல் காரணமாக 4 பேர் பலியாகியுள்ளனர். 24 குடிசைகள் சேதமடைந் துள்ளன.




ஆழ்வார்பேட்டை நாகேஸ்வர ராவ் பூங்கா அருகே மாடியிலிருந்து தெருவுக்கு வந்த குடிநீர் தொட்டி. | படம்: க.ஸ்ரீபரத்


மேலும் கருமேகங்கள் சூழ்ந்து, சூறைக் காற்றுடன் கனமழை பெய்து வந்ததாலும், நகர் முழுவதும் வெளிச்சம் குறைந்ததாலும், சென்னை பகலிலேயே இருளில் மூழ்கியது.

முதல்வர் வேண்டுகோள்

இதனிடையே முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘வார்தா புயல் தொடர்பாக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்’ என கேட்டுக் கொண்டுள்ளார்.

235 புகார்கள் பதிவு

சென்னையில் மரம் மற்றும் மின் கம்பங்கள் விழுந்தது, நீர் தேங்கியது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 235 புகார்களை மாநகராட்சி பெற்றுள்ளது. இதில் 203 புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

புயல் கரையைக் கடந்தது தொடர் பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:

இந்த புயல் மேற்கு பகுதி பழவேற்காடு அருகே கரையைக் கடந்தது. அதன் மையப் பகுதி மாலை 3.30 மணி அளவில் சென்னை துறை முகம் அருகே கரையைக் கடந்தது. கிழக்கு பகுதி 6.30 மணி அளவில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. காற்றின் தாக்கம் ஸ்ரீஹரிகோட்டா மற்றும் மரக் காணம் ஆகியவற்றுக்கு இடைப் பட்ட பகுதி வரை இருந்தது. புயல் கரைகடந்தாலும் நாளை (இன்று) மாலை வரை மழை நீடிக்கும்.

\


சூறைக் காற்றில் சிக்கி சேதமுற்ற ராயபுரம் அருகே உள்ள பெட்ரோல் நிலையம். | படம்: ம.பிரபு


காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின்படி, சென்னை மீனம்பாக்கத்தில் 18 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. காலை 8.30 முதல் மாலை 4.30 மணி வரை செம்பரம்பாக்கத்தில் 170 மிமீ, பூந்தமல்லியில் 130 மிமீ, அம்பத்தூரில் 121 மிமீ, திருவள்ளூரில் 116 மிமீ, சோழ வரத்தில் 106 மிமீ, திருவாலங் காட்டில் 97 மிமீ, செங்குன்றத்தில் 93 மிமீ, திருத்தணியில் 93 மிமீ, ஊத்துக்கோட்டையில் 88 மிமீ, பொன்னேரியில் 74 மிமீ, பூண்டியில் 64 மிமீ, தாமரைப்பாக்கத்தில் 52 மிமீ, பெரும்புதூரில் 153 மிமீ, செங்கல்பட்டில் 65 மிமீ, திருக்கழுகுன்றத்தில் 50 மிமீ, காஞ்சிபுரத்தில் 45 மிமீ, மதுராந்த கத்தில் 45 மிமீ, அரக்கோணத்தில் 92 மிமீ, காவேரிபாக்கத்தில் 19 மிமீ, திண்டிவனத்தில் 16 மிமீ, மரக்காணத்தில் 13 மிமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு, இது போன்ற மோசமான புயலை சென்னை சந்தித்துள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.

Saturday, December 10, 2016

சசிகலா | கோப்பு படம்

அதிமுகவில் மிகவும் அதிகாரம் வாய்ந்த பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தீவிர முயற்சி: ஜெயலலிதா சமாதியில் சோகத்துடன் அஞ்சலி

அதிமுக பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்ற சசிகலா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, நேற்று ஜெயலலிதா சமாதிக்கு சென்ற அவர் சோகத்தோடு அஞ்சலி செலுத்தினார்.

தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். அன்று இரவே, தமி ழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன் னீர்செல்வம் பதவியேற்றார். ஆனால், கட்சியின் பொதுச் செய லாளர் பதவி இன்னும் காலியாகவே உள்ளது. அதிமுகவில் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் என்றாலும், கட்சி விதிகளின்படி, போட்டியின்றி ஒருமனதாகவே பொதுச் செயலாளர் தேர்ந் தெடுக்கப்படுகிறார். அதன்படி, 1988-ம் ஆண்டு தொடங்கி, கடந்த 7 முறையாக கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவே தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொதுச் செயலாளர் பதவி மிகவும் அதிகாரம் வாய்ந்தது என்பதால், அப்பதவியைக் கைப் பற்ற சசிகலா தீவிர முயற்சியி்ல் இறங்கியுள்ளார். இதற்காக, முதல்வர் ஓபிஎஸ், தம்பிதுரை எம்.பி. மற்றும் அமைச்சர்களுடன் கடந்த 3 நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், மாவட்ட செய லாளர்களில் பலர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரால் தேர்வான வர்கள். எனவே, அவர்களில் பலரும் சசிகலாவுக்கு ஆதரவாகவே இருப் பதாக தெரிகிறது. ஆனால், ஒன் றிய, கிளைச் செயலாளர்கள் என அடிமட்ட நிர்வாகிகளிடமும், தொண் டர்களிடமும் சசிகலாவுக்கு அவ்வள வாக ஆதரவு இல்லை. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங் களிலும் சசிகலா எதிர்ப்பு கருத்து களையே அதிகம் காண முடிகிறது.

இதையெல்லாம் மீறி, பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முடிவில் இருக்கும் சசிகலா, கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியில் தன் மீதான ஆதரவு அலையை உருவாக்கு மாறு அமைச்சர்கள், எம்எல்ஏக் கள், நிர்வாகிகளிடம் அவர் கூறியிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர, மத்திய பாஜக அரசின் காய் நகர்த்தல்களை சமாளிப்பது, அதிமுகவை திமுக உடைக்காமல் கவனமாக இருப் பது, உள்கட்சியில் இருக்கும் உடைப்பு முயற்சிகளைத் தடுப்பது, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை முன்னிறுத்தி செய் யப்படும் முயற்சிகளை முறியடிப் பது உள்ளிட்டவை குறித்தும் சசிகலா விரிவாக ஆலோசனை நடத்தியுள்ள சசிகலா, இப்பணிகளை தனக்கு நெருக்கமானவர்களிடம் ஒப்படைத் திருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கிடையில், முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோருடன் சசி கலா நேற்றும் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்த பிறகு, ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் மற்றும் தனது குடும்பத்தினருடன் சசிகலா வந்து அஞ்சலி செலுத்தினார். சசிகலா நேற்று மிகுந்த சோகத்துடன் காணப்பட்டதும், ஜெயலலிதாவை வணங்கியதுபோல மிகவும் பவ்யமாக அவருக்கு அமைச்சர்கள் வணக்கம் தெரிவித்ததும் குறிப் பிடத்தக்கது.

மனமே நலமா?- இழப்புத் துயரத்திலிருந்து மீள வழியில்லையா?



டாக்டர். எம்.எஸ்.தம்பிராஜா

நான் இறந்த பிறகு

எனக்காகக் கொஞ்சம் அழு, கண்ணீர் விடு

நம் இனிமையான தருணங்களை

அவ்வப்போது நினைத்துக்கொள்

ஆனால், கொஞ்ச நேரம் நினைத்தால் போதும்.

பின் அந்த நினைவுகளைத் தாண்டிச் செல்

நீ உயிரோடு இருக்கும்வரை

உன் எண்ணங்கள் உயிருள்ளவர்களுடனேயே இருக்கட்டும்” - யாரோ

மனித வாழ்வில் இழப்புகள், குறிப்பாகக் குடும்பத்தினர் ஒருவரின் மரணத்தால் ஏற்படும் இழப்புகள், தவிர்க்க முடியாதவை. அன்பார்ந்த ஒருவரின் மரணத்தால் ஏற்படும் இழப்பை எதிர்கொள்ளும்போது உண்டாகும் துன்பமும் துயரமும் சொல்லில் வடிக்க முடியாதவை. ஒரு தாய் தன் மகனை இழப்பதாலும், ஒரு கணவன் தன் மனைவியைப் பறிகொடுப்பதனாலும் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்கப் பல ஆண்டுகள் ஆகலாம். ஒரு குடும்பத்தில் ஏற்படும் ஓர் அகால மரணம் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடலாம். அந்த மரணத்தின் கருநிழல் அவர்கள் மனதை விட்டு நீங்குவதே இல்லை.

“ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் அவளைத் தேடுவேன். அவள் இல்லை என்று உணரக் கொஞ்ச நேரம் ஆகும். பின் மனதை ஒரு பாரம் அழுத்தும். முக்கியமான ஏதோ ஒரு பொருளைத் தொலைத்துவிட்டபோது ஏற்படும் படபடப்பு இருக்கிறதே, அது போன்ற ஒரு பதற்றம் என் நெஞ்சில் வியாபிக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படித்தான் ஒவ்வொரு நாளும் எனக்கு ஆரம்பமாகிறது” - மனைவியை இழந்த ஒருவரின் மனக்குமுறல் இது.

நெருங்கிய ஒருவரின் மரணத்துக்குப் பின் ஏற்படும் உணர்ச்சிப் பெருக்குகளைப் பட்டியலிடுவது கடினம். ஆனாலும் இழப்புத் துயரத்தை (Grief) அறிவியல்பூர்வமாக ஆராய்ந்தவர்கள், அன்பார்ந்த ஒருவரை இழந்த பின் ஏற்படும் உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் விரிவாக விவரித்துள்ளார்கள்.

உணர்ச்சிக் கோலங்கள்

மரணத்தை அறிந்த பின் முதன்முதலில் ஏற்படுவது மனஅதிர்ச்சி. கூடவே மனம் மரத்துப் போகிறது (Shock and Numbness). மரணம் நிகழ்ந்துவிட்டது என்பதை உள்ளம் நம்ப மறுக்கிறது. ‘இது உண்மை இல்லை’ என்று தோன்றுகிறது. நடப்பது எல்லாம் வேறொரு உலகத்தில் நடப்பதுபோலத் தோன்றுகிறது. அடுத்ததாக, மெல்ல மெல்ல உண்மை விளங்க ஆரம்பிக்கும்போது, கடும் மனவேதனை ஒருவரை ஆட்கொள்கிறது. நெஞ்சில் வேல் பாய்ந்ததுபோன்று உள்ளம் வலிக்கிறது.

அழுகையை நிறுத்த முடிவதில்லை. கடும் துயரம் மனதை ஆக்கிரமிக்கிறது. ஊன் உறக்கம் கொள்ள முடிவதில்லை. இழந்தவரின் நினைவு மனதை விட்டு நீங்குவதே இல்லை. இதிலிருந்து மீளச் சில வாரங்கள், மாதங்கள் ஆகலாம்.

அதோடு, அவரின் மரணத்தைத் தடுத்திருக்கலாம் என்ற உணர்வும் மனதை உறுத்துகிறது. “நான் அவனைப் பள்ளிக்கூடச் சுற்றுலாவுக்கு அனுப்பியிருக்கக் கூடாது” என்று தன்னையே மீண்டும் மீண்டும் கடிந்துகொள்கிறாள், பள்ளிச் சுற்றுலாவின்போது தன் மகனைக் கடலில் பறிகொடுத்த ஒரு தாய். இந்தக் கட்டத்தில் தன்னையே குறைகூறுவதும் (“நான் மட்டும் அன்று அவர் கூடவே இருந்திருந்தால், அவரை உடனே மருத்துவமனைக்குக் கொண்டுபோயிருக்கலாம்”), மற்றவர்களைக் குற்றம்சாட்டுவதும் (“அந்த டாக்டர் சரியாகக் கவனிக்கவில்லை”) சகஜம்.

சில வேளைகளில் இறந்தவர் மீதே கடும் கோபம் கொள்வதும் உண்டு (“இந்த மனுஷன் என்னைத் தனியே விட்டுவிட்டுத் தான் போய்ச் சேர்ந்துவிட்டான்”). ஆனால் இம்மாதிரியான எண்ணங்களால் குற்ற உணர்வு பெரிதாகி, அதை வெளியே சொல்வதற்குத் தயங்கவும் செய்யலாம்.

குரலும் இருப்பும்

இறந்தவரின் பிரிவைத் தாங்க முடியாமல், நடந்ததையே நினைத்து நினைத்து மனம் வருந்துவது தவிர்க்க முடியாத ஒன்று. சில வேளைகளில் இறந்தவர் தன்னுடன் பேசுவதுபோல அவருடைய குரல் கேட்கலாம்; அவர் அருகில் இருப்பது போன்ற உணர்வும் ஏற்படலாம். ஆனால், இவை நெடுங்காலம் நீடிப்பதில்லை.

இவ்வாறாக ஒரு மரணத்துக்குப் பின் மனஅதிர்ச்சி, மனவலி, கோபம், குற்ற உணர்வு, மன சஞ்சலம் ஆகிய பல தரப்பட்ட மனவெழுச்சிகளுக்கு மனிதர்கள் ஆளாகிறார்கள். இவை குறிப்பிட்ட எந்த ஒழுங்குமின்றி மனதை வியாபிப்பதுதான் இழப்புத் துயரத்தின் தன்மை.

எப்படிக் குறைப்பது?

பொதுவாக, இழப்புத் துயரம் ஓரிரு ஆண்டுகள்வரை நீடிக்கும். பின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும். இறந்தவர் இல்லாமல் வாழ்க்கையைச் சீரமைக்க வேண்டி இருக்கும். ஆனாலும் இறந்தவரின் நினைவு, நிழல்போல நெடுங்காலம் தொடரும். ஒருவரது மரணத்துக்குப் பின் நடத்தப்படும் இறப்புச் சடங்குகள் சமுதாயத்துக்குச் சமுதாயம் வேறுபட்டாலும், இவை இழப்புத் துயரத்தைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

இழப்புத் துயரம் உடலையும் வெகுவாகப் பாதிக்கிறது. மனைவியை இழந்த ஆண்களில் பலர் இதய நோய்களால் பாதிக்கப்பட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மரணமடைகிறார்கள் என்பதை ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. அதேபோல நோய்த் தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாத்துக்கொள்ளும் திறனும் இழப்புத் துயரத்தின்போது குறைகிறது.

சாதாரண இழப்புத் துயரத்தின்போது ஏற்படும் மனவேதனைக்கு மருந்துகள் தேவை இல்லை. காலம்தான் இவர்களுக்கு மருந்து. சிலர் தூக்க மாத்திரையைப் போட்டுக்கொள்வது உண்டு; சிலர் மது அருந்தி மனதை மரத்துப்போகச் செய்வதுண்டு. இவை பயன் தருவதில்லை. சிகிச்சை ஏதும் இல்லாமலேயே ஓரிரு ஆண்டுகளில் சாதாரண இழப்புத் துயரம் தானாகக் குறையும். நெருக்கமானவர்களுடன் தன் மனவேதனையைப் பகிர்ந்து கொள்வது இழப்புத் துயரத்தில் இருந்து மீள்வதற்கு உதவும்.

தீராத இழப்புத் துயரம்

சில மரணங்கள் தீவிரமான இழப்புத் துயரத்தை உண்டாக்கலாம். தற்கொலைகள், அகால மரணங்கள் போன்றவை ஏற்படுத்தும் துயரம் கடுமையாகவும் நெடுங்காலம் நீடிப்பவையாகவும் அமையலாம். இது தீராத இழப்புத் துயரம் (Unresolved grief) என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் பல ஆண்டுகள் கழிந்த பின்னும் தான் இழந்தவரைப் பற்றி பேசும்போது மிகுதியாக உணர்ச்சிவசப்படுகிறார் என்றால், அவர் இன்னும் அந்தத் துயரத்தில் இருந்து விடுபடவில்லை என்று கூறலாம்.

இறந்தவரின் சடலத்தைக் காணக் கிடைக்காதபோது ஏற்படும் துயரம் இவ்வகையைச் சேர்ந்தது. இறந்தவர் ஒரு நாள் திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பில், இவர்கள் நாட்களைக் கடத்துகிறார்கள். அவர் திரும்பி வருவது சாத்தியமில்லை என்பது அடிமனதில் தெரிந்தால்கூட, அதை ஏற்றுக்கொள்ள இவர்கள் மறுக்கிறார்கள்.

உதாரணமாக, படிப்புக்காக வெளிநாடு சென்று விபத்தில் இறந்துவிட்ட ஒரு மாணவனின் தாய் (அவருக்கு மகனின் உடல் காணக் கிடைக்கவில்லை) பத்து ஆண்டுகளுக்கு மேலாக எவரையும் தன் மகனின் அறைக்குள் போக அனுமதிக்காமல், அந்த அறையைப் பழசு போலவே வைத்திருந்தார்! இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஏறக்குறைய 20,000 பேர் ‘காணாமல் போனார்கள்’. இவர்களின் பெற்றோர், உறவினர் படும் இழப்புத் துயரமும் இவ்வகையைச் சேர்ந்ததுதான்.

தீராத இழப்புத் துயரத்துக்கு உளவியல் ஆலோசனை அவசியம். கடுமையான இழப்புத் துயரம் மனச்சோர்வுக்கும் வழி வகுத்துவிடலாம். எனவே, அதற்கு ஆலோசனை பெறுவதே சிறந்தது.

கட்டுரையாளர், மனநல மருத்துவர் மற்றும் முன்னாள் பேராசிரியர்
தொடர்புக்கு: ibmaht@hotmail.com

Friday, December 9, 2016

ஜெ. இறுதிச்சடங்கு.. சம்பிரதாயத்தை மீறினாரா சசிகலா?



vikatan.com

ஜெயலலிதாவின் மறைவால் மீளமுடியாத துயரத்தில் ஆழ்ந்திருக்கும் தமிழக மக்களை, அவர் மறைவு குறித்து எழும் பல்வேறு சர்ச்சைகளும், பதில்கள் இல்லாத கேள்விகளும் மேலும் அதிக வேதனையில் ஆழ்த்தியிருக்கின்றன என்றே சொல்லவேண்டும்.
அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு நிகழ்ந்த இறுதிச் சடங்கு குறித்தும் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. ‘சமயச் சம்பிரதாயப் படி பரிபூரணமாக அவரது இறுதிச்சடங்கு நிகழவில்லை’ என்று குறிப்பிட்டு, பெரும் மனக்குமுறல்களுடன் ஆன்மீக பெரியவர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா, புகழ்பெற்ற திராவிடக் கட்சி ஒன்றின் தலைவராக இருந்தபோதும் தனிப்பட்ட முறையில் அவர் தன்னை ஆன்மிக பிடிப்புள்ளவராகவே வெளிப்படுத்திக்கொண்டார். ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை கொண்ட ஜெயலலிதா, தன்னுடைய ஆட்சிக் காலத்தில் எண்ணற்ற கோயில்களுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தியவர். வைஷ்ணவ தர்ம சாஸ்திரங்களையும் ஆசாரஅனுஷ்டானங்களையும் தவறாமல் கடைப்பிடிக்கக்கூடியவர். விஷ்ணு சஹஸ்ரநாமத்தை சில நிமிடங்களில் பாராயணம் செய்து விடக் கூடியவர். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சென்னை பார்த்தசாரதி பெருமாள், திருவரங்கம் ரங்கநாதர் மீது அதீத பக்தி கொண்டவர் என்பது நாடறிந்த விஷயம். அவ்வளவு ஏன், ஒருநாள்கூட தமது நெற்றியில் சூர்ணம் தரிக்காமல் (கோபிநாமமாக திலகம் அணிந்திருப்பார்) இருந்ததில்லை. அந்தளவுக்கு அவர் பெருமாள் பக்தை. ஆனால், அவரது இறுதிச் சடங்கு வைணவ சம்பிராதயப்படி நடைபெறவில்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டு.

‘முதல்வர் என்பவர் சமயச் சம்பிரதாயங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற அடிப்படையில் பார்த்தாலும், தனிமனிதருக்கு உரிய உரிமையையும் கவனத்தில் கொள்ளவேண்டும். மகாத்மா காந்தி, மூதறிஞர் ராஜாஜி, மறைந்த பிரதமர் இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி ஆகியோர் மறைந்தபோது, அவர்களின் இறுதிச்சடங்குகள் அனைத்தும் அவரவர் சம்பிரதாய முறைப்படி முழுமையாக நடந்தேறின. தகனக்கிரியை நிகழ்ந்தபிறகு, அஸ்தியை வைத்தே நினைவிடம் எழுப்பினார்கள். ஆனால், அம்மா அவர்களின் விஷயத்தில் அந்தமாதிரியான சடங்கு சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படவில்லை. நடந்தவை அனைத்தும் வெறும் கண் துடைப்பாகவே நடந்தன.
முறைப்படி ரத்தசொந்தமான ஜெயலலிதாவின் சகோதரர் மகன் தீபக் மூலமாகவே அனைத்தையும் செய்திருக்கவேண்டும். ஆனால், அவரை அருகில் வைத்துக்கொண்டு சசிகலாவே அனைத்தையும் செய்தார். இதையெல்லாம் விட, தீபக் பேண்ட்-சர்ட் போட்டுக்கொண்டும், காலணிகளைகூட கழற்றாமலும் இறுதிச் சடங்கு நடந்த இடத்தில் காரியங்கள் செய்ததும், சசிகலா பால் தெளித்த தனது கைகளை தேவாதிபட்டரின் வஸ்திரத்தில் துடைத்துக்கொண்டதும் மறைந்த ஆத்மாவை அவமதிக்கும் செயல். மரியாதை செலுத்த வந்த ராகுல்காந்திகூட காலணிகளைக் கழற்றிவைத்துவிட்டே அருகில் வந்தார். அவருக்கு இருந்த அன்பும் மரியாதையும்கூட இவர்களுக்கு இல்லையே...’ என்று நீள்கிறது அவர்களது மனக்குமுறல்கள்.

இதுகுறித்தும் இறுதிச்சடங்கு-சம்பிரதாயங்கள் குறித்த நியமங்களை விவரிக்கச் சொல்லியும் வைணவ வேதபண்டிதர்கள் சிலரிடம் விளக்கம் கேட்டோம். அவர்கள், தங்களின் பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்ற வேண்டுகோளோடு தங்களின் விளக்கத்தை முன்வைத்தார்கள்.

‘‘முதல் விஷயமாக, திருக்கோயிலில் கைங்கர்யம் செய்யும் ஒருவர் இறுதிச்சடங்கில் ஈடுபடுவது வழக்கம் இல்லை. ஆனால், அம்மா அவர்களுக்கு இறுதிச்சடங்கு காரியங்களை நடத்திவைத்த தேவாதிபட்டர் சென்னை தி.நகரில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிவதாக அறிகிறோம். அது உண்மையெனும்பட்சத்தில், அவர் எப்படி இறுதிச் சடங்கு நிகழ்த்த ஒப்புக்கொண்டார் எனத் தெரியவில்லை. ஒருவேளை இப்போது அவர் எந்தக் கோயிலிலும் கைங்கர்யம் செய்யவில்லை என்றாலும்கூட, அவரும் வைணவ சம்பிராதயங்களை அறிந்தவராகவே இருப்பார். அப்படிப்பட்டவர் இப்படி அரைகுறையாகச் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன? எந்தக் குறையும் இல்லாமல், முழுமையாக நடத்தியிருக்கலாமே என்பதுதான் எங்களுடைய ஆதங்கம்’’ என்று குறைபட்டுக்கொண்டவர்களிடம் சம்பிரதாய விதிகள் குறித்துக் கேட்டோம்.

‘‘ஸ்ரீரங்கத்தை பூர்விகமாகக் கொண்ட ஜெயலலிதா ஆசாரமான ஐயங்கார் குலத்தில் பிறந்தவர். அவருடைய இறுதிச் சடங்கு அவர்களுடைய குல மரபுப்படி நடைபெறவில்லை. பிராமணர் குலத்தில் இறந்தவர்களை தகனம் செய்வதுதான் வழக்கம்.
அதாவது ஒற்றை மூங்கில் கழியில் பாடை செய்து அதில் தென்னை கீற்று மட்டை பரப்பி, அதில் இறந்தவரின் உடலை வைத்து காடு வரைக்கும் சுமந்துசென்று தகனம் செய்வதுதான் காலம் காலமாய் கடைப்பிடிக்கும் வழக்கம். இந்தக் காரியத்தை, எவர் வந்தாலும் வராவிட்டாலும் இறந்த 24 மணி நேரத்துக்குள் நடத்தவேண்டும்.

தகனம் செய்வதற்கு முன் சுடுகாட்டிலும் வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள், பாசுரங்கள் சொல்வார்கள். மறுநாள்தான் சஞ்சயனம் எனப்படும் பால் தெளியல் நடைபெறும். தொடர்ந்து 3-ம் நாள் முதல், 10-ம் நாள் வரையிலும் நித்ய கர்மாக்கள் உண்டு. 11-ம் நாள் ஒத்தன், 12-ம் நாளன்று சபிண்டிகரணம், 13-ம் நாளன்று கிரேக்கியம் ஆகியன நடக்கவேண்டும். இந்த நாளில் மணவாளமுனி பாராயணம், ராமானுஜர் பாசுரம், பல்லாண்டு பாசுரம் ஆகியவற்றை நிகழ்த்தி, பல்வகை தானம் செய்வார்கள். இவற்றையெல்லாம் செய்து இறந்தவரை அவருடைய மூதாதையருடன் சேர்த்துவைக்கும் சடங்கு இது.

பிறகு ஓராண்டு வரையிலும் மாதாந்திர திதியன்று கடைப்பிடிக்க வேண்டிய சடங்குகளும் உண்டு. அதேபோல், ஐயங்கார் குடும்பத்தில் இறந்தவர்களை அவர்களின் வாரிசுகளோ அல்லது உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளோ தர்ப்பையை எரித்து அதைக் கொண்டு தகனம் செய்வார்கள்.

நேரடி ஆண் வாரிசு இல்லை பெண் வாரிசுதான் உண்டு எனில், அந்தப் பெண்ணின் வயிற்றில் பிறந்த பேரன் காரியங்கள் செய்ய வேண்டும். திருமண பந்தத்தில் இணையாதவர்களுக்கு ரத்தவழிச் சொந்தங்கள்... சகோதரர் வழிப் பிள்ளைகள் செய்யலாம். எந்த உறவுகளும் இல்லாதவர் எனில், அவருக்கு ‘கோவிந்த கொள்ளி’ என்று வேற்று நபர்கள் காரியம் செய்யலாம். கோவிந்தகொள்ளி வைப்பதற்கும் உரிய சடங்குகள் உண்டு’’ என்று விளக்கியவர்கள், தங்கள் பங்குக்கு தங்களது மனக்குறைகளையும் கொட்டித் தீர்த்தார்கள்.
‘‘இறந்து போனவருக்கு நேரடியான வாரிசுகள் இல்லாவிட்டால், ரத்த சம்பந்த உறவு உள்ள ஒருவர் இறுதிச் சடங்குகளைச் செய்யலாம். அப்படிப் பார்த்தால் முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த சம்பந்த உறவாக அவருடைய அண்ணன் மகன் தீபக் இருக்கிறார். அவரைக் கொண்டு முறைப்படி இறுதிச் சடங்குகளைச் செய்திருக்கலாம். ஆனால், அவரை கடைசியில் பேருக்குத்தான் இறுதிச் சடங்குகளைச் செய்யவைத்திருக்கிறார்கள். சாஸ்திரப்படி ஒருவருடைய உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டுவிட்டால் உடனே தகனம் செய்துவிடவேண்டும். ஆனால், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அதிகாலையில் போயஸ் கார்டனிலேயே இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டுவிட்டதாகச் சொல்லும் நிலையில், அவருடைய உடலை உடனே தகனம் செய்யாமல் மாலைவரை காத்திருக்கவைத்தது சாஸ்திர விரோதம் என்றுதான் சொல்லவேண்டும். இது ஒருபுறமிருக்க...

காலையில் நேராக ராஜாஜி மண்டபத்துக்கு கொண்டு சென்று வைத்துவிட்டு, மாலையில் உரிய இறுதிச் சடங்குகளை முறைப்படி செய்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அடுத்ததாக, இறுதிச்சடங்கு நடந்த இடத்தில் சாஸ்திரிகளைக் கொண்டு வேதம், பிரபந்த பாராயணம் செய்திருக்கவேண்டும். அதையும் செய்யவில்லை.

பல கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்திருக்கும் ஜெயலலிதாவின் உடலுக்கு பெருமாள் மாலையும், வஸ்திரமும் அணிவித்து மரியாதை செய்திருக்கலாம். அதுகூட செய்யவில்லை. பிராமண குடும்பங்களில் இறந்தவர்களை தகனம் செய்துவிட்டு, மறுநாள் அஸ்திக்குத்தான் பால் தெளித்தல் நடைபெறும். ஆனால், இங்கே தகனம் செய்யாததுடன், சவப்பெட்டியை குழியில் இறக்கியதுமே பாக்கெட் பாலை பீய்ச்சித் தெளித்தது பெரும் தவறு. சந்தனக் கட்டைகளையும் குழிக்குள் வீசி எறிந்திருக்கக்கூடாது.

மொத்தத்தில் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகளில் சாஸ்திர சம்பிரதாயங்கள் எதையும் கடைப்பிடிக்கவில்லை என்பதில் எங்களைப் போன்றவர்களுக்கு நிறையவே வருத்தம் இருக்கிறது’’ என்றவர்களிடம், ‘ஒருவர் கல்யாணம் ஆகாமல் கன்னியாகவே இறந்துவிட்டால், அவருக்கு மாதம்தோறும் செய்யும் சடங்குகளையும் வருடாந்திர திதி கொடுக்கவும் ஏதேனும் சட்டதிட்டங்கள் இருக்கிறதா?’’ என்று கேட்டோம்.

‘‘வைத்தியநாத தீக்ஷிதியம் போன்ற பழம்பெரும் நூல்கள் சம்ஸ்கார விஷயங்கள் குறித்து விளக்குகின்றன. ஒரு பிராமணப் பெண் திருமணம் ஆகாமல் இறந்துவிட்டால், அவருக்கு மாதாந்திர சடங்குகளோ வருடாந்திர திதியோ கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வருடாந்திர திதி நாளில் கல்யாணம் ஆகாத பெண்ணுக்கு வஸ்திர தானம் செய்தாலே போதும்’’ என்று பதில் தந்தவர்கள், ‘‘அதிலும் இங்கே ஒரு சிக்கல் இருக்கிறது. இறந்த நேரம் மிகச்சரியாக தெரிந்தால்தான் இறப்பு திதியை (திதி நாளை) தெளிவாகக் கணிக்க முடியும். 5-ம் தேதியன்று இரவு 11:30 மணிக்குதான் அம்மா அவர்களின் உயிர் பிரிந்ததாக சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதிலும் சர்ச்சைகள் எழாமல் இல்லையே. அப்படியிருக்க திதியை எப்படிக் கணிப்பது?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மீது பேரன்பு கொண்ட தமிழக மக்களின் மனதில், அவர் குறித்து தொக்கி நிற்கும், பதில் அறிய முடியாத பல கேள்விகளில் இதுவும் ஒன்றாகிவிட்டது.

NEWS TODAY 07.06.2026