'வார்தா' தாண்டவம்: களைப்பில்லாமல் உழைக்கும் காவல்துறை
சென்னை மற்றும் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை முற்றிலுமாகக் கலைத்துப் போட்டிருக்கிறது ’வார்தா ’ புயல். சென்னையின் ஒட்டுமொத்த மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
சூறாவளிக்காற்றும், மழையும் நின்றுவிட்ட நிலையில் அதன் விளைவாக விழுந்த பெரு மரங்கள் சாலைகளில் கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர்.
மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் விரைந்து சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். போலீஸ் ரோந்து வாகனங்கள் தங்கள் வேலையைத் தொடங்கியிருந்தன. காலை அலுவலகம் வரும்போது கண்ணில் தென்பட்ட காட்சிகள் இவை.
வழியில், சிந்தாதிரிப்பேட்டையில் மரங்களை அப்புறப்படுத்தும் வேலைகளில் ஏராளமான காவல்துறையினரைக் காண முடிந்தது.
அருகில் சென்று விசாரித்தபோதுதான் தெரிந்தது சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் பூபாலன் அவரென்று. அவரோடு காவல்நிலையத்தின் மற்ற காவலர்களும், சில இளைஞர்களும் வீழ்ந்துகிடந்த மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தனர். ''பணியாளர்கள் யாரும் வரவில்லையா?'' என்று கேட்டேன். ''அதனால் என்னங்க, நம்ம வீட்டுல யாரு செய்யறோம்? நம்மதானே, அதுபோலத்தான் இங்கயும்!'' என்று கூறியவாறு தன் பணியைத் தொடர்ந்தார்.
பல்நோக்கு மருத்துவமனையின் எதிர்ப்புறத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்கு அருகே இருந்த கட்டிடத்திலும் மரங்கள் பெயர்ந்து கிடந்தன. அவற்றையும் சில காவலர்கள் எடுத்துக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது.
வாலஜா சாலை, கலைவாணர் அரங்கம் எதிரே உள்ள சாலை மரங்களை திருவல்லிக்கேணி D1 காவல்நிலைய உதவி ஆணையர் உட்பட நிறைய அதிகாரிகள் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர் என்று சக நண்பர் கூறினார்.
இதுபோல வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகள், டி.டி.கே. சாலை, வெஸ்ட் காட் சாலை உள்ளிட்ட சென்னை நகரத்தின் ஏராளமான இடங்களில் விழுந்துகிடக்கும் மரங்களையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருவதாக அந்த வழியாக வந்த அலுவலக நண்பர் கூறியதைக் கேட்க முடிந்தது.
தன்னலம் கருதாது மழை, வெயில், புயல் என எல்லா இயற்கை சீற்றங்களிலும், செயற்கை மாற்றங்களிலும் களைத்துப் போகாது உழைக்கும் காவல்துறைக்கு ஒரு ராயல் சல்யூட்!
No comments:
Post a Comment