Friday, December 9, 2016

ஜெ. இறுதிச்சடங்கு.. சம்பிரதாயத்தை மீறினாரா சசிகலா?



vikatan.com

ஜெயலலிதாவின் மறைவால் மீளமுடியாத துயரத்தில் ஆழ்ந்திருக்கும் தமிழக மக்களை, அவர் மறைவு குறித்து எழும் பல்வேறு சர்ச்சைகளும், பதில்கள் இல்லாத கேள்விகளும் மேலும் அதிக வேதனையில் ஆழ்த்தியிருக்கின்றன என்றே சொல்லவேண்டும்.
அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு நிகழ்ந்த இறுதிச் சடங்கு குறித்தும் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. ‘சமயச் சம்பிரதாயப் படி பரிபூரணமாக அவரது இறுதிச்சடங்கு நிகழவில்லை’ என்று குறிப்பிட்டு, பெரும் மனக்குமுறல்களுடன் ஆன்மீக பெரியவர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா, புகழ்பெற்ற திராவிடக் கட்சி ஒன்றின் தலைவராக இருந்தபோதும் தனிப்பட்ட முறையில் அவர் தன்னை ஆன்மிக பிடிப்புள்ளவராகவே வெளிப்படுத்திக்கொண்டார். ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை கொண்ட ஜெயலலிதா, தன்னுடைய ஆட்சிக் காலத்தில் எண்ணற்ற கோயில்களுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தியவர். வைஷ்ணவ தர்ம சாஸ்திரங்களையும் ஆசாரஅனுஷ்டானங்களையும் தவறாமல் கடைப்பிடிக்கக்கூடியவர். விஷ்ணு சஹஸ்ரநாமத்தை சில நிமிடங்களில் பாராயணம் செய்து விடக் கூடியவர். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சென்னை பார்த்தசாரதி பெருமாள், திருவரங்கம் ரங்கநாதர் மீது அதீத பக்தி கொண்டவர் என்பது நாடறிந்த விஷயம். அவ்வளவு ஏன், ஒருநாள்கூட தமது நெற்றியில் சூர்ணம் தரிக்காமல் (கோபிநாமமாக திலகம் அணிந்திருப்பார்) இருந்ததில்லை. அந்தளவுக்கு அவர் பெருமாள் பக்தை. ஆனால், அவரது இறுதிச் சடங்கு வைணவ சம்பிராதயப்படி நடைபெறவில்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டு.

‘முதல்வர் என்பவர் சமயச் சம்பிரதாயங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற அடிப்படையில் பார்த்தாலும், தனிமனிதருக்கு உரிய உரிமையையும் கவனத்தில் கொள்ளவேண்டும். மகாத்மா காந்தி, மூதறிஞர் ராஜாஜி, மறைந்த பிரதமர் இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி ஆகியோர் மறைந்தபோது, அவர்களின் இறுதிச்சடங்குகள் அனைத்தும் அவரவர் சம்பிரதாய முறைப்படி முழுமையாக நடந்தேறின. தகனக்கிரியை நிகழ்ந்தபிறகு, அஸ்தியை வைத்தே நினைவிடம் எழுப்பினார்கள். ஆனால், அம்மா அவர்களின் விஷயத்தில் அந்தமாதிரியான சடங்கு சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படவில்லை. நடந்தவை அனைத்தும் வெறும் கண் துடைப்பாகவே நடந்தன.
முறைப்படி ரத்தசொந்தமான ஜெயலலிதாவின் சகோதரர் மகன் தீபக் மூலமாகவே அனைத்தையும் செய்திருக்கவேண்டும். ஆனால், அவரை அருகில் வைத்துக்கொண்டு சசிகலாவே அனைத்தையும் செய்தார். இதையெல்லாம் விட, தீபக் பேண்ட்-சர்ட் போட்டுக்கொண்டும், காலணிகளைகூட கழற்றாமலும் இறுதிச் சடங்கு நடந்த இடத்தில் காரியங்கள் செய்ததும், சசிகலா பால் தெளித்த தனது கைகளை தேவாதிபட்டரின் வஸ்திரத்தில் துடைத்துக்கொண்டதும் மறைந்த ஆத்மாவை அவமதிக்கும் செயல். மரியாதை செலுத்த வந்த ராகுல்காந்திகூட காலணிகளைக் கழற்றிவைத்துவிட்டே அருகில் வந்தார். அவருக்கு இருந்த அன்பும் மரியாதையும்கூட இவர்களுக்கு இல்லையே...’ என்று நீள்கிறது அவர்களது மனக்குமுறல்கள்.

இதுகுறித்தும் இறுதிச்சடங்கு-சம்பிரதாயங்கள் குறித்த நியமங்களை விவரிக்கச் சொல்லியும் வைணவ வேதபண்டிதர்கள் சிலரிடம் விளக்கம் கேட்டோம். அவர்கள், தங்களின் பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்ற வேண்டுகோளோடு தங்களின் விளக்கத்தை முன்வைத்தார்கள்.

‘‘முதல் விஷயமாக, திருக்கோயிலில் கைங்கர்யம் செய்யும் ஒருவர் இறுதிச்சடங்கில் ஈடுபடுவது வழக்கம் இல்லை. ஆனால், அம்மா அவர்களுக்கு இறுதிச்சடங்கு காரியங்களை நடத்திவைத்த தேவாதிபட்டர் சென்னை தி.நகரில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிவதாக அறிகிறோம். அது உண்மையெனும்பட்சத்தில், அவர் எப்படி இறுதிச் சடங்கு நிகழ்த்த ஒப்புக்கொண்டார் எனத் தெரியவில்லை. ஒருவேளை இப்போது அவர் எந்தக் கோயிலிலும் கைங்கர்யம் செய்யவில்லை என்றாலும்கூட, அவரும் வைணவ சம்பிராதயங்களை அறிந்தவராகவே இருப்பார். அப்படிப்பட்டவர் இப்படி அரைகுறையாகச் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன? எந்தக் குறையும் இல்லாமல், முழுமையாக நடத்தியிருக்கலாமே என்பதுதான் எங்களுடைய ஆதங்கம்’’ என்று குறைபட்டுக்கொண்டவர்களிடம் சம்பிரதாய விதிகள் குறித்துக் கேட்டோம்.

‘‘ஸ்ரீரங்கத்தை பூர்விகமாகக் கொண்ட ஜெயலலிதா ஆசாரமான ஐயங்கார் குலத்தில் பிறந்தவர். அவருடைய இறுதிச் சடங்கு அவர்களுடைய குல மரபுப்படி நடைபெறவில்லை. பிராமணர் குலத்தில் இறந்தவர்களை தகனம் செய்வதுதான் வழக்கம்.
அதாவது ஒற்றை மூங்கில் கழியில் பாடை செய்து அதில் தென்னை கீற்று மட்டை பரப்பி, அதில் இறந்தவரின் உடலை வைத்து காடு வரைக்கும் சுமந்துசென்று தகனம் செய்வதுதான் காலம் காலமாய் கடைப்பிடிக்கும் வழக்கம். இந்தக் காரியத்தை, எவர் வந்தாலும் வராவிட்டாலும் இறந்த 24 மணி நேரத்துக்குள் நடத்தவேண்டும்.

தகனம் செய்வதற்கு முன் சுடுகாட்டிலும் வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள், பாசுரங்கள் சொல்வார்கள். மறுநாள்தான் சஞ்சயனம் எனப்படும் பால் தெளியல் நடைபெறும். தொடர்ந்து 3-ம் நாள் முதல், 10-ம் நாள் வரையிலும் நித்ய கர்மாக்கள் உண்டு. 11-ம் நாள் ஒத்தன், 12-ம் நாளன்று சபிண்டிகரணம், 13-ம் நாளன்று கிரேக்கியம் ஆகியன நடக்கவேண்டும். இந்த நாளில் மணவாளமுனி பாராயணம், ராமானுஜர் பாசுரம், பல்லாண்டு பாசுரம் ஆகியவற்றை நிகழ்த்தி, பல்வகை தானம் செய்வார்கள். இவற்றையெல்லாம் செய்து இறந்தவரை அவருடைய மூதாதையருடன் சேர்த்துவைக்கும் சடங்கு இது.

பிறகு ஓராண்டு வரையிலும் மாதாந்திர திதியன்று கடைப்பிடிக்க வேண்டிய சடங்குகளும் உண்டு. அதேபோல், ஐயங்கார் குடும்பத்தில் இறந்தவர்களை அவர்களின் வாரிசுகளோ அல்லது உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளோ தர்ப்பையை எரித்து அதைக் கொண்டு தகனம் செய்வார்கள்.

நேரடி ஆண் வாரிசு இல்லை பெண் வாரிசுதான் உண்டு எனில், அந்தப் பெண்ணின் வயிற்றில் பிறந்த பேரன் காரியங்கள் செய்ய வேண்டும். திருமண பந்தத்தில் இணையாதவர்களுக்கு ரத்தவழிச் சொந்தங்கள்... சகோதரர் வழிப் பிள்ளைகள் செய்யலாம். எந்த உறவுகளும் இல்லாதவர் எனில், அவருக்கு ‘கோவிந்த கொள்ளி’ என்று வேற்று நபர்கள் காரியம் செய்யலாம். கோவிந்தகொள்ளி வைப்பதற்கும் உரிய சடங்குகள் உண்டு’’ என்று விளக்கியவர்கள், தங்கள் பங்குக்கு தங்களது மனக்குறைகளையும் கொட்டித் தீர்த்தார்கள்.
‘‘இறந்து போனவருக்கு நேரடியான வாரிசுகள் இல்லாவிட்டால், ரத்த சம்பந்த உறவு உள்ள ஒருவர் இறுதிச் சடங்குகளைச் செய்யலாம். அப்படிப் பார்த்தால் முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த சம்பந்த உறவாக அவருடைய அண்ணன் மகன் தீபக் இருக்கிறார். அவரைக் கொண்டு முறைப்படி இறுதிச் சடங்குகளைச் செய்திருக்கலாம். ஆனால், அவரை கடைசியில் பேருக்குத்தான் இறுதிச் சடங்குகளைச் செய்யவைத்திருக்கிறார்கள். சாஸ்திரப்படி ஒருவருடைய உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டுவிட்டால் உடனே தகனம் செய்துவிடவேண்டும். ஆனால், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அதிகாலையில் போயஸ் கார்டனிலேயே இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டுவிட்டதாகச் சொல்லும் நிலையில், அவருடைய உடலை உடனே தகனம் செய்யாமல் மாலைவரை காத்திருக்கவைத்தது சாஸ்திர விரோதம் என்றுதான் சொல்லவேண்டும். இது ஒருபுறமிருக்க...

காலையில் நேராக ராஜாஜி மண்டபத்துக்கு கொண்டு சென்று வைத்துவிட்டு, மாலையில் உரிய இறுதிச் சடங்குகளை முறைப்படி செய்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அடுத்ததாக, இறுதிச்சடங்கு நடந்த இடத்தில் சாஸ்திரிகளைக் கொண்டு வேதம், பிரபந்த பாராயணம் செய்திருக்கவேண்டும். அதையும் செய்யவில்லை.

பல கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்திருக்கும் ஜெயலலிதாவின் உடலுக்கு பெருமாள் மாலையும், வஸ்திரமும் அணிவித்து மரியாதை செய்திருக்கலாம். அதுகூட செய்யவில்லை. பிராமண குடும்பங்களில் இறந்தவர்களை தகனம் செய்துவிட்டு, மறுநாள் அஸ்திக்குத்தான் பால் தெளித்தல் நடைபெறும். ஆனால், இங்கே தகனம் செய்யாததுடன், சவப்பெட்டியை குழியில் இறக்கியதுமே பாக்கெட் பாலை பீய்ச்சித் தெளித்தது பெரும் தவறு. சந்தனக் கட்டைகளையும் குழிக்குள் வீசி எறிந்திருக்கக்கூடாது.

மொத்தத்தில் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகளில் சாஸ்திர சம்பிரதாயங்கள் எதையும் கடைப்பிடிக்கவில்லை என்பதில் எங்களைப் போன்றவர்களுக்கு நிறையவே வருத்தம் இருக்கிறது’’ என்றவர்களிடம், ‘ஒருவர் கல்யாணம் ஆகாமல் கன்னியாகவே இறந்துவிட்டால், அவருக்கு மாதம்தோறும் செய்யும் சடங்குகளையும் வருடாந்திர திதி கொடுக்கவும் ஏதேனும் சட்டதிட்டங்கள் இருக்கிறதா?’’ என்று கேட்டோம்.

‘‘வைத்தியநாத தீக்ஷிதியம் போன்ற பழம்பெரும் நூல்கள் சம்ஸ்கார விஷயங்கள் குறித்து விளக்குகின்றன. ஒரு பிராமணப் பெண் திருமணம் ஆகாமல் இறந்துவிட்டால், அவருக்கு மாதாந்திர சடங்குகளோ வருடாந்திர திதியோ கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வருடாந்திர திதி நாளில் கல்யாணம் ஆகாத பெண்ணுக்கு வஸ்திர தானம் செய்தாலே போதும்’’ என்று பதில் தந்தவர்கள், ‘‘அதிலும் இங்கே ஒரு சிக்கல் இருக்கிறது. இறந்த நேரம் மிகச்சரியாக தெரிந்தால்தான் இறப்பு திதியை (திதி நாளை) தெளிவாகக் கணிக்க முடியும். 5-ம் தேதியன்று இரவு 11:30 மணிக்குதான் அம்மா அவர்களின் உயிர் பிரிந்ததாக சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதிலும் சர்ச்சைகள் எழாமல் இல்லையே. அப்படியிருக்க திதியை எப்படிக் கணிப்பது?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மீது பேரன்பு கொண்ட தமிழக மக்களின் மனதில், அவர் குறித்து தொக்கி நிற்கும், பதில் அறிய முடியாத பல கேள்விகளில் இதுவும் ஒன்றாகிவிட்டது.

No comments:

Post a Comment

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...