Friday, December 9, 2016

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி


'எனக்கு சின்ன வயசுல இருந்து அவங்களைப் பிடிக்கும். சின்ன வயசா இருக்கும்போது, அவங்களும் நானும் அடிக்கடி பேசிக்கிற மாதிரி சொப்பணம் கண்டிருக்கேன். காலைல எழுந்து யோசிச்சா, இது எல்லாம் புதுசா இருக்கு என விட்டுட்டேன். அதுக்கப்புறம் தான், நான் வீணை வாசிப்பதை வைத்து என்னைப் பற்றி தெரிஞ்சுக்கிட்டாங்க. அதற்கு பிறகு, சென்னை இசைக் கல்லூரிக்கு என்னை துணை வேந்தராக ஆக்கினாங்க. அம்மா வேந்தரா இருந்தாங்க. இதுக்கெல்லாம் முன்னாடி, 'நான் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தில் உறுப்பினராக இருந்தேன். இந்தத் துறையில் தொடர்ந்து இருக்கப் பிடிக்காமல் என் கணவர் வேலை பார்க்கும் இடமான மும்பைக்கே திரும்பிவிட முடிவு செய்தேன். வீட்டுப் பொருட்களை எல்லாம் காலி செய்துவிட்டு வெறும் விட்டை பூட்ட கிளம்பும்போது ஒரு போன் வந்தது. அந்த போன் அம்மாவிடமிருந்து. 'தமிழ்நாடு இசை பல்கலைக்கழக துணை வேந்தராக விருப்பமா?'னு கேட்டாங்க. எனக்கு என்ன சொல்றதுனே தெரியல.. கண்கள் கலங்கிடுச்சு. சரின்னு சொன்னேன். இயல்பாகவே நான் ரொம்ப தைரியமானப் பெண்மணி. எதற்கும் கலங்கவே மாட்டேன். ஆனா, அன்றைக்கு அம்மாவிடமிருந்து போன் வரவில்லைனா என்றால் தமிழ்நாட்டிலேயே இருந்திருக்க மாட்டேன். நான் இப்போ வாழ்ந்து கொண்டிருப்பது அவங்கக் கொடுத்த வாழ்க்கை' என நெகிழ்ந்து பேச ஆரம்பிக்கிறார், சென்னையில் அமைந்துள்ள இசைப் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் வீணை காயத்ரி''.

''உங்களுக்கு வந்த கொலை மிரட்டல் அப்போ 'அம்மா'வை சந்தித்தீர்களே? என்ன சொன்னார்?''

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும் இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார். 'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது. அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''



''ஜெயலலிதாவுக்கும் உங்களுக்கும் இடையேயான பழக்கம் எப்படி?''

''முதல் முறையாக அவரை நேர்ல பார்த்து தனியாப் பேசினது 2006-ம் ஆண்டு போயஸ் கார்டன்ல தான். இயல், இசை, நாடக மன்ற உறுப்பினராக இருந்தப்போ, என் பெரிய பொண்ணோட திருமணத்துக்கு பத்திரிகை வைக்க நானும், என் கணவரும் போயிருந்தோம். பொதுவாகவே, அவங்களைப் பார்க்கப் போறவங்க, பொக்கே கொடுப்பது தான் வழக்கம். நான் வித்தியாசமா ஜாதி மல்லி 100 முழம், மல்லி 100 முழம் என 200 முழம் பூவையும் ஒரு லைட் கிரீன் பட்டுப் புடவையும், பத்திரிகையையும் அதனுடன் சேர்த்துக் கொடுத்தேன். மல்லிகையை வாசம் செய்து விட்டு பேச ஆரம்பித்தார்கள் அம்மா. என்கிட்ட கேட்ட முதல் வார்த்தையே, 'ஆட்சியில இருக்கும் போதுதானே பார்க்க வருவாங்க. நீங்க, நான் ஆட்சியில இல்லாதபோது பார்க்க வந்திருக்கீங்கனு கேட்டாங்க'. உடனே நான், 'உங்களை எனக்குப் பிடிக்கும். ஆட்சிக்காக யோசித்து எல்லாம் வரவில்லை. உங்களைப் பார்க்கணும்னு தோணிச்சு' என மெதுவாகச் சொன்னேன். என் மகள் திருமணத்துக்கு வாழ்த்துச் சொல்லி அனுப்பினார். அதற்குப் பிறகு நான் அவரை தலைமைச் செயலகத்தில் அடிக்கடி சந்திச்சிருக்கேன். எனக்கு தெலுங்கு தெரியும் என ஒரு முறை தெரிஞ்சுக்கிட்டாங்க. அதற்குப் பிறகு என்கிட்ட தெலுங்கில் தான் பேசுவாங்க. நானும் அவங்களைத் தனியாக அழைக்கும்போது, 'அம்மாகாரு'னு தான் கூப்பிடுவேன். அவங்களும் என்னை மிஸ்ஸர்ஸ் காயத்ரி எனதான் கூப்பிடுவங்க. இதுவே மத்தவங்க இருந்தாங்கனா நான் மேடம்னுதான் கூப்பிடுவேன்.''

''உங்கள் இசையை அவர் கேட்டது உண்டா?''

''திருமண ரிஷப்ஷனுக்காக அடிக்கடி நிகழ்ச்சிகளில் வாசிப்பது உண்டு. அப்படி வாசிக்கும் போது மூன்று விழாக்களில் அவங்களைப் பார்த்திருக்கேன். அவங்களும் என்னைக் கவனிச்சிருக்காங்க. நான் கர்நாடகம் வாசிச்சுட்டு இருப்பேன். அவங்க நிகழ்ச்சிக்கு வந்தா உடனே, அவங்க நடிச்ச படத்தில் உள்ள, ' ஒரு நாள் யாரோ', 'ஆயிரம் நிலவே வா',' ஆயிரம் ஆசை' பாடல்களை வாசிக்க ஆரம்பிச்சுடுவேன். 20 வருஷத்துக்கு முன்பு, ஒரு பேட்டியின் போது அம்மாகிட்ட, யார் வீணை வாசிப்புப் பிடிக்கும் என கேட்டப்போ, என் பேரை சொல்லியிருக்காங்க. இதைவிட என்ன பெரிய பாக்கியம் என்னங்க இருக்கப் போவுது?.''

''உங்களால் அவருடனான மறக்க முடியாத நினைவுகள்?''

''ஜெயலலிதா அம்மாவுக்காக, பிப்ரவரி அன்னிக்கு திருப்பதியில வாசிச்சேன். கச்சேரி முடிந்து கிளம்பும் போது, அங்கே லட்டும், வடையும் கொடுத்தாங்க. அதை எடுத்துட்டு வந்து அம்மாவுக்கு கொடுக்கலாம் என அவர் அலுவலகத்தில் இருந்தவங்ககிட்ட கேட்டேன். அம்மா பொள்ளாச்சியில் தேர்தல் பிரசாரத்தில் இருக்காங்க என பதில் வந்தது. நானும் அதை அப்படியே வீட்டில் வச்சுட்டேன். அடுத்த நாள், கோவைக்காய் பொறியல் செய்து கொண்டு இருந்தேன். அப்போ, அம்மா ஆபீஸ்ல இருந்து போன், அம்மாவேப் பேசினாங்க. என்னைத் தெரியுதானு கேட்டாங்க. அம்மா நீங்க என்னோட சொப்பணத்துலக்கூட வந்துட்டு இருக்கீங்க.. உங்களை எப்படி மறக்க முடியும்னு சொன்னேன். அதுக்கு அவங்க எனக்கு பிரசாதம் கொடுத்து அனுப்புங்கனு சொன்னாங்க. அதற்குப் பிறகு 'WE WILL MEET VERY VERY SOON' அப்படினு சொன்னாங்க. அதாவது, இந்த தேர்தல்ல ஜெயிச்சு வந்திடுவேன். நாம கட்டாயம் சந்திப்போம் என அர்த்தப்படுத்திய வார்த்தையை சொன்னாங்க''.

''அம்மாவுடைய இழப்புச் செய்தி உங்களை எந்த அளவு பாதிச்சது?''

''வார்த்தைகளே இல்லைங்க. நான் அவங்களை சந்திக்கும்போது ஒரு அன்பு இருக்கும் பாருங்க. அதை எப்படி சொல்றதுனு தெரியல. அவங்களுக்கு மனசுல ஒளிவு மறைவே இல்லை. நியாயமா இருப்பாங்க. நீ, வானு அவங்க யாரையும் கூப்பிட்டதே இல்லை. அவங்க கொண்டு வந்த திட்டத்தில் என்னை ரொம்ப கவர்ந்தது, 'அம்மா உணவகம்'. அம்மா ஸ்தானத்துல இருந்திருக்காங்க. அதுதான் பலருக்கும் 'டச்'சிங்கா இருந்திருக்கு. அம்மா என்றாலே ஆசையா, அன்பா அழைத்து பரிவோடு சாப்பாடு போடுறதுதானே. ஐந்தாம் தேதி மாலை டி.வில திடீர்னு அம்மா மரணம்னு போட்டாங்க. அப்போலோ மருத்துவமனைக்கு போன் பண்ணி விசாரிச்சேன். இல்லைனு சொன்னாங்க. ஆறுதலா இருந்தது. இரவு 12 மணிக்கு தூக்கம் திடீரென கலைந்தது. டி.வி போட்டா இறந்ததா ஒளிபரப்பினாங்க. ரொம்ப ஷாக் ஆகிடுச்சு. அதை வார்த்தைகளால சொல்ல முடியாது ஜூலை 27-ம் தேதி நல்லா இருந்தாங்க. அதுக்குள்ள இப்படியானு கஷ்டமா இருந்தது.''

''அவங்க கொடுத்து பொக்கிஷமா வைத்திருக்கும் பொருள்?''

''என் பொண்ணு கல்யாணத்துக்கு, என்னோட உயரத்துக்கு இருக்கிற இரண்டு வெள்ளி குத்துவிளக்கு கொடுத்து அனுப்பினாங்க. மூன்று, நான்கு பேர் அதை தூக்கிட்டு வந்தாங்க. அதே போல ஒவ்வொரு தீபாவளிக்கும் ஸ்வீட் அனுப்புவாங்க. ஒவ்வொரு வருடமும் அவங்க பிறந்த நாளை என்னோட பல்கலைக்கழத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடுவேன். கிட்டத்தட்ட சினிமா பங்ஷன் மாதிரி. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 24-ம் தேதி நிகழ்ச்சியை நடத்துவோம். 2013-ம் ஆண்டு 66 மணி நேரம் தொடர்ந்து எல்லா மியூசிக்கும் வாசிச்சோம். நாட்டுப் புறக் கலைகள், பாட்டு, கிராமிய இசை என வாசிச்சோம். அவங்க 67-வது பிறந்த நாள் அப்போ 67 பேரின் நடனம். 68-வது பிறந்தநாளுக்கு 68 பேர் நாகஸ்வரம், 68 பெயின்டிங் என வெகு விமர்சையாகக் கொண்டாடினோம். அவங்களைப் பற்றிய அரிய புகைப்படங்கள், பெயின்டிங்ஸ் எல்லாவற்றையும் ஒரு மாதம் கண்காட்சிக்காக வச்சிருந்தேன். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவங்க கைப்பட வாழ்த்துக் கடிதம் அனுப்புவாங்க. அதையும் பாதுகாத்து வச்சிருக்கேன். நான் எப்பவுமே வெளிப்படையாகத்தான் பேசுவேன். இதைப்பற்றி என்கிட்ட ஒருமுறை 'யு ஆர் போல்ட். ஐ லைக் இட்' என பாராட்டினார். அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் நிதானமாக சத்தமாக வரும். போலீஸ் துறை பக்கம் போகணும் எனதான் விரும்பினேன். புலனாய்வு மீது மிகவும் விருப்பம் எனக்கு. இந்த வீணை இசைதான் என்னை இன்னும் கட்டிப் போட்டிருக்கு''.

No comments:

Post a Comment

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...