'இனிமே எல்லாம் இப்படித்தான்!' இளைஞர்கள் துவக்கிய வெற்றிக் கணக்கு
தமிழகத்தில் 4 நாட்களுக்கு முன்புவரை ஒரே ஒரு
அலங்காநல்லூர். இன்று, தமிழ்நாடே அடங்காதநல்லூர் ஆகிவிட்டது. காஷ்மீரைத்
தொட்டால் குமரி கொந்தளிப்பது போய், மதுரையைத் தொட்டால் மெரினா தெறிக்குது.
இந்த அறவழிப்போராட்டத்தால் நாம் ஏற்கெனவே ஜெயித்துவிட்டோம் என்பதுதான்
உண்மை. '100 இளைஞர்களைக் கொடுங்கள். உலகை மாற்றுகிறேன்' என்றார்
விவேகானந்தர்.
அவர் இல்லம் (விவேகானந்தர் இல்லம்) முன்பு எப்போது
லட்சக்கணக்கில் கூடினோமோ, அந்த நொடியிலேயே வெற்றிபெறத் தொடங்கிவிட்டோம்
நாம். இதன் நீட்சியாக நாம் ஜெயித்த சில பொது இடங்கள் எவையெல்லாம் தெரியுமா?
1. வீட்டில்
அம்மாக்கள், 'உன் இடத்தை நீ சுத்தமா வெச்சுக்க மாட்டியாடா' எனக்
கேட்கும்போதெல்லாம், 'ம்மா, கலைஞ்சு இருந்தாதான் வீடு...
இல்லாட்டி மியூசியம்னு' சொன்ன ஒவ்வொரு பையனும் பொண்ணும்
சாப்பிட்டு போட்ட குப்பைகளை அப்புறப்படுத்துறாங்க; டிராஃபிக் போலீஸ் மாதிரி
டிராஃபிக் கிளியர் பண்ணிவிடறாங்க; தங்கச்சிக்கிட்ட ரிமோட் சண்டை போட்ட
எல்லா அண்ணன்களும் போராட்டக்களத்தில் 'தண்ணி இந்தாங்க சிஸ்டர்... சாப்பாடு
இந்தாங்க சிஸ்டர்'னு சகோதரத்துவத்தை வளர்க்குறாங்க. பார்க்கும் பொதுஜனங்கள்
கண்களிலெல்லாம் 'ப்பா, எங்கடா இருந்தீங்க இவ்ளோ நாளும்'ங்கற கேள்விதான்
தெரியுது. அவர்களுக்கு ஒரே பதில், 'பக்கத்துலேயேதான் அண்ணாச்சி இருந்தோம்'.
2. பல பீட்சா கார்னர்களில் எல்லாம்
செல்ஃபிகள் எடுத்த இந்த மாடர்ன் இளைய தலைமுறை, இன்று அந்த செல்ஃபிகளை
நினைத்து வெட்கப்படுகிறது. 'இனி உங்கள் வாசலை மிதிக்க மாட்டோம்' என்ற
சூளுரை வேறு.
3. ஜல்லிக்கட்டுக்கு
மட்டும் ஏன் இவ்ளோ போராட்டம் என்ற நெறியாளர்களின் கேள்விக்கு, ''மாடு,
எங்க சாமி. சாமிய முன்னாடி வெச்சு இந்த விஷயத்தைத் தொடங்கி இருக்கோம். இது
வெறும் மாட்டை பத்தின பிரச்னை மட்டுமில்லே. எங்க நாட்டைப் பத்தின பிரச்னைனு
எங்களுக்கு ரொம்ப நல்லாவே தெரியும். 'ஏறுதழுவதல் வேண்டும்'னு
போராட்டத்துக்குப் பெயர்வெச்சாலும் விவசாயிக்கான நீதிதான் இதன் முக்கிய
நோக்கம். இதை நீங்க எங்களோட கோரிக்கைகளில் பார்த்திருக்க முடியும்''
என்கின்றனர். (இது ஒருத்தருடைய பதிவல்ல. ஒட்டுமொத்த போராட்டக் குழு மக்களோட
கருத்தும் இதுதான்பா.) இந்தத் தெளிவு உங்கள (நம்மள) எங்கேயோ கொண்டு
போகிடும் மக்களே!
4. இன்னைக்கு சென்னை
மெரினாவிலேயும், மதுரை அலங்காநல்லூர்லேயும், திருச்சியிலேயும்,
சேலத்திலேயும் இரவு பகல் பார்க்காமல்... பனி வெயில் பார்க்காமல்
கொசுக்கடியில் தூங்கி எழும் ஒவ்வொருத்தரும் யாரு? வீட்ல அம்மா மறந்துபோய்
ஆல்-அவுட் ஆன் பண்ணலைன்னாக்கூட கொசுக்கடிக்காக அவர்களைக் கடிந்துகொள்ளும்
கடும்கோபக்காரர்கள்தான். ''எங்க இனத்துக்காக, எங்க அடையாளத்துக்காகப்
போராடும்போது எப்படிப்பட்ட கொசுத் தொல்லை இருந்தாலும் நாங்க
பொறுத்துக்குவோம்'' என்கின்றனர் அசால்ட்டாக. (நோ டபுள் - மீனிங் ப்ளீஸ்)
அதனால்தானோ என்னவோ, இருட்டொளியில் மொபைலில் இவர்கள் டார்ச் அடிக்கும்போது
ஒவ்வொன்றும் ஸ்டார் வடிவத்தில் தெரிகிறது. நின்னுட்டீங்கப்பா... வரலாறு
பேசும் நம்மள.
5. முக்கியமான விஷயத்தை
விட்டுட்டோமே. பெண்களைப் பாதுகாத்த விதம், ஆயிரம். இல்லை... இல்லை.
எண்ணிக்கைக்கு அடங்காத லைக்ஸ் உங்களுக்கு. ஒரு ராயல் சல்யூட்டும் கூட.
போராட்டக்களத்தில் 20 ஆண்கள் சூழ்ந்து இருக்க, நடுவே அழகாய் அமர்ந்தபடி
புன்சிரிப்போடு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார் அந்தப் இளம்பெண். 'அந்தப்
புகைப்படத்துக்குக் கீழே, அரசு விளக்கை அணைத்தால்... எங்கள் கை ஓங்கும்.
எங்கள் பெண்களைப் பாதுகாக்க வேண்டித்தானே அன்றி கைகலப்புக்கோ, கைநீண்டு
அவர்கள் மீது பாய்வதற்கோ இடமளிக்கவல்ல' என்று. இதுமட்டுமா?
போராட்டக்களத்தில் இருந்த ஒரு பெண் கூறுகிறார், "இங்க இருந்த பசங்க எங்க
அப்பா மாதிரி எங்களைப் பார்த்துக்கிட்டாங்க" என்று. உடனே வந்து மீசைய
முறுக்கி, ''இதான் நாங்க. நீங்க பொறுக்கின்னு சொல்றதால நாங்க
பொறுக்கியாகிடல. இதுதான் அதுக்கு எடுத்துக்காட்டு''ன்னு கெத்தா சொன்னாங்க.
(இந்த இரண்டும்கூட எடுத்துக்காட்டுகள்தான். இதுமாதிரி போராட்டத்துல இருந்த
அத்தனை பெண்களும் சொன்னாங்க என்பது குறிப்பிடத்தக்கது.) மீசைய முறுக்கு...
காலரை ஏத்து... கெத்தா, வெயிட்டா!
6. உணவுப்பொட்டலங்கள்
வந்தவுடன் ''பசி காதை அடைக்குது... மொதல்ல நான் சாப்பிடறேன்''னு சொல்லாம,
பக்கத்தில் இருக்கும் முன்பின் அறிமுகமில்லாத சில இளைஞர்களைத் துணைக்கு
அழைத்து... ''உள்ள இருப்பவர்களுக்குக் கொடுத்துட்டு வந்திடலாம் வாங்க
ப்ரோ'' என்றனரே... வளரும் குழந்தைகளிடையே பகுத்துண்ணும் பழக்கத்துக்கு
காக்கையை எடுத்துக்காட்டா சொல்லாதீங்க. இந்தப் பசங்களைச் சொல்லுங்க. இதுல
இன்னொரு பாடமும் இருக்கு. என்ன தெரியுமா? நீ நல்லவனா இருக்கும்போது,
உன்னைச் சுற்றி இருப்பவனும் தன்னாலயே நல்லவனாகிடறான்!
7. பசின்னு
சொன்ன பிறகுதான் ஞாபகம் வருது! அந்நிய குளிர்பானங்களை புறக்கணிப்புச்
செய்யணும்னு வாய்வார்த்தையா சொல்லாம, களத்துக்குள்ள செய்தும் காட்டியது
இந்தப் படை. தாகம் தணிங்கன்னு சொல்லி 'கோக், பெப்சி, லிம்கா' போன்றவற்றை
எதார்த்தமாய் கொடுத்த கடைக்காரர்களிடம்கூட ''தண்ணி தவிச்சு உயிர்போனாலும்
பரவாயில்லே... இதைக் குடிக்கமாட்டோம்''னு சொன்னாங்களே... இதுபோதாதா, ஒரு
போராட்டத்தின் வீரியத்தை நமக்கு உணர்த்த? (குறிப்பு: 'தாமிரபரணியின்
நிலவளத்தைச் சுரண்டும் குளிர்பானங்களைத் தொட மாட்டோம்' என்ற வாசகம் பல
விவசாயிகளின் மனதையும் இதமாய் வருடிக்கொடுத்தது.)
8. செய்தி
வாசிப்பாளர்கள் யாவருக்கும் பெர்சனலாய் ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கும்.
எவ்வளவு பெரிய சோகச் செய்தியாய் இருந்தாலும் எளிதில் கண்ணீர்விட
மாட்டார்கள். எவ்வளவு சந்தோஷமான விஷயம் என்றாலும் சிறு புன்னகையுடன்
நிறுத்திக்கொள்வர். ஆனால், இந்தப் போராட்டத்தின்போது நடந்த பெரும்பாலான
செய்தி வாசிப்புகளில் இந்தக் கட்டுப்பாடுகள் எதுவும் எடுபடவில்லை.
ஒவ்வொருவரும் 'இளைஞர் எழுச்சி', 'களத்தில் இளைய சமூகம்'ன்னு சொல்லும்போது
அகமும் முகமும் அவ்வளவு பெருமையை எக்ஸ்ப்ரஷனா காட்டியது. அவர்களும்
இளைஞர்கள்தானே... அவர்களுக்குள்ளேயும் ஓர் இளைஞன் 'எழுந்திருச்சுட்டா
மக்கா, இனிமே ஊழல்லாம் துச்சம்'ன்னு சொல்லத்தானே செய்வான். இந்த
மகிழ்ச்சியும் பெருமையும் இவர்களைத் தாண்டி அன்றாடம் வேலைக்குவரும் காவல்
துறையினர், கள நெறியாளர்கள், புகைப்படக்காரர்கள், அவ்ளோ ஏன், சோளம்
விற்கும் பாட்டிகள்ன்னு எல்லோரிடமும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 'வா
தலைவா, அதான வேணும் எங்களுக்கும். மகிழ்ச்சியே எங்களுக்கு' என்பதுபோல்
உள்ளது களத்தில் போராடுபவர்களின் பார்வை.
9. களத்துக்கு
ஆதரவு தெரிவிக்கவந்த திடீர் நடிகர்கள், அரசியல்வாதிகள் என எல்லோரிடமும்
"உங்களுக்கு எங்க ஆதரவும் இல்லை, மெரினாவில் போராட்டம் பண்ண இடமும் இல்லை,
வெளிய போங்கன்னு" சொல்லிட்டாங்க. முதல் நாள், முதல் ஆதரவுக் கரம் நீட்டிய
சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ''ஏம்பா''ன்னு
கேட்டா, ''முதல் விஷயம், காவிரிக்குப் பேசமுடியாதுன்னு சொன்னவங்க இதுக்கும்
பேசவேண்டாம். இதையும் அதுமாதிரியே நீங்க கண்டுக்காம விட்டுடுடலாம். நாங்க
பார்த்து பண்ணிக்கிறோம். ரெண்டாவது, நடிகர்களும், அரசியல்வாதிகளும்
களத்துக்குள்ள வந்தால்... போராட்டக்குழுவை விடவும் அந்தப் பிரபலங்களின்
பேட்டிகளுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுது. அதனாலயோ, என்னவோ பலர்
பப்ளிசிட்டிக்காகவே வர்றாங்க. நாங்க செய்யும் போராட்டத்தை யாரும் தப்பா
உபயோகப்படுத்த விடமாட்டோம்'' என்கின்றனர் கோரஸாக. சொல்ல வார்த்தையில்லை
எங்களிடம்... வாழ்த்துகள்.
10. பசி தீர நாங்கள்
உணவளிக்கிறோம் என தலப்பாக்கட்டி மாதிரி, கடைகளில் இருந்து வந்திருந்த
பசங்களும், பீச்சில் கூடையில் பிஸ்கெட், சுண்டல், சோளம் எல்லாம் இலவசமாவே
தந்த பாட்டி தாத்தாக்களும் (தங்கள் அன்றைய வருமானம் போனாலும் பரவாயில்லை
என்று), வரும்போதே 4 பிஸ்கெட் பாக்கெட் வாங்கிட்டு வந்து பக்கத்துல
இருக்கிறவங்களுக்கும் கொடுத்த தாய்க்குலங்களும், பெண்களுக்குத்
தேவைப்படுமேன்னு எங்கிருந்தோ கொண்டுவந்து மொபைல் டாய்லெட் வைத்தவர்களும்,
பச்சிளங்குழந்தையோடு வந்தவர்களுக்கு குடையும், போர்வையுமாய் ஆதரவு
தெரிவித்து ரெஸ்ட் எடுக்க வைத்த தம்பிகளும்... அட... அட... அட... நம்ம ஊரா
இதுன்னு புல்லரிக்க வெச்சுட்டாங்க. இது எழுச்சிப் போராட்டம் என்பதைத்
தாண்டி, இது ஒரு நெகிழ்ச்சிப் போராட்டம் என்று உண்மையிலேயே
உணரவெச்சுட்டாங்க இவுங்க எல்லோரும்!
இந்த
இடங்களிலெல்லாம் இந்தப் போராட்டம் தனது வெற்றியை உறுதிசெய்தது. உண்மையில்,
தீர்ப்பு இந்த 'ஒரு' போராட்டத்தின் க்ளைமாக்ஸ் காட்சிதானே அன்றி, அது அல்ல
வெற்றி என்பதுதான் நிதர்சனம். அதனாலதான் சொல்றோம், 'இந்த அறப்போராட்டம்
வெற்றி பெற்று 4 நாள் ஆச்சு மக்கா'. பக்கத்துல இருக்கும் நண்பர்களுக்கும்,
வெற்றிபெற்றதற்காக வாழ்த்துகள் கூறி... சந்தோஷத்தை பகிர்ந்துக்கோங்க.
'சீக்கிரம் க்ளைமாக்ஸ் வந்துவிடும்' என்று நம்புவோம்.!
பகல், பனி எல்லாம் பார்க்காமல் கூட்டம் எகிறிக்
கொண்டே இருக்கிறது மெரினாவில். கறுப்புச் சட்டையும் கலகக் குரலுமாய்
உற்சாகம் வற்றாமல் அமர்ந்திருக்கிறார்கள் ஆயிரக்கணக்கான மக்கள். சின்னப்
புள்ளியில் தொடங்கிய இந்தப் போராட்டம் அரசியல் வரலாற்றின் பல பக்கங்களை
நிரப்பப் போகிறது என்பதுதான் நிதர்சனம். ஆனால் ஓங்கி ஒலிக்கும் அந்த
குரல்களுக்கிடையே சில எதிர்க்கருத்துகளையும் கேட்க முடிகிறது. அவற்றில்
முக்கியமானது 'நாட்டுல எவ்வளவோ பிரச்னைகள் இருக்கிறப்போ, அதுக்கெல்லாம்
போராடாத மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு போராடுறது தேவைதானா? என்பது. இந்தக்
கேள்விக்கு பதில் இல்லாமல் போனால் ஒட்டுமொத்த போராட்டத்துக்கான நோக்கமும்
கேள்விக்குறியாகும் வாய்ப்பு இருப்பதாலேயே இந்தப் பதிவு.
ஏன் தேவை இந்தப் போராட்டம்?
சினிமாவில்
ஒரு கணக்கு உண்டு. குழந்தைகளுக்குப் பிடித்த நடிகரே கலெக்ஷனில் கில்லியாக
இருப்பார். காரணம், அந்தக் குழந்தைகளின் மூலம் மொத்தக் குடும்பமும் அந்த
நடிகரின் படத்துக்குச் செல்லும் என்பதுதான். அதே லாஜிக்தான் இங்கேயும்.
மாணவர்கள் களத்தில் இறங்கினால் அவர்களின் குடும்பமும் களத்தில் இறங்கும்.
போராடும். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி சில ஆண்டுகள் முன் நடந்த
இலங்கை போர்க்குற்ற விவகாரம் வரை இதுதான் நடந்தது. இப்போதும் அதுதான்
நடக்கிறது. அந்த வகையில் மொத்தத் தமிழகத்தையும் இணைக்கும் புள்ளி
மாணவர்கள்தான்.
ஜல்லிக்கட்டுக்குப் போராட்டம் தேவைதானா?
ஜல்லிக்கட்டு
குறித்து பலவித கருத்துகள் நிலவுவது உண்மைதான். ஜாதீய அடையாளமாக
ஜல்லிக்கட்டு பயன்படுத்தப்படுவதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஆநிரைகளை
கவர்வது மீட்பதுமான அந்த விளையாட்டில் இரு பிரிவினர் பெரும்பான்மையாக
பங்கெடுத்ததும் உண்மைதான். (400 ஆண்டுகளுக்கு முன்புவரை ஏறுதழுவுதல்
எல்லாருக்கும் பொதுவாகத்தான் இருந்தது என்பது ஒரு தரப்பின் நியாயம்). ஆனால்
இந்த ஏற்றத்தாழ்வுகளைத் தாண்டி அணிதிரள ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.
அது 'Why always us?' என்ற ஆதங்கம். 'அணு உலையா? அனுப்பு தமிழ்நாட்டுக்கு',
தண்ணியா? அனுப்பாத தமிழ்நாட்டுக்கு' என்ற புறக்கணிப்பு.
முல்லைப்
பெரியாறு அணை விவகாரத்தில் அடிவாங்குவது, காவிரி பிரச்னையில் வயிறு காய்வது
என சகலவற்றிலும் நம்மை வைத்து செய்கிறார்களே என்ற கோபத்தின்
வெளிப்பாடுதான் ஒரு கட்டத்தில் இங்கே வந்து நின்றிருக்கிறது. போக,
ஜல்லிக்கட்டுத் தடைக்கு பின்னால் இருக்கும் வணிக நோக்கத்தையும் பால்
அரசியலையும் முற்றிலும் புறந்தள்ளிவிட முடியாது. நாட்டு மாடுகள் தரும் A2
ரகப் பால் கிடைப்பதே குதிரைக்கொம்பாகி வருவது இதன் முக்கிய சாட்சி.
தேவை அரசியல் பார்வை:
முன்
எப்பொழுதையும்விட இப்போது அரசியல் பேசியாகவேண்டிய அவசியம் இருக்கிறது
என்பதை மறுப்பதற்கில்லை. காரணம், தொடர்ந்து புறக்கணிக்கப்படும் உரிமைகள்
பற்றி உரக்கப் பேசிய (குறைந்தபட்சம் தேர்தல் நேரங்களிலாவது) இரு திராவிடத்
தலைமைகளும் இப்போது அரசியலில் இல்லை. அந்த வெற்றிடங்களை நிரப்ப ஆளாளுக்கு
துண்டு போட்டுக் காத்திருக்கிறார்கள். பெரியாரின் குரல் காற்றில் இன்னும்
கேட்டபடிதான் இருக்கிறது. அதைத் தாண்டியும் வன்கொடுமைகள் நடந்து வரும்
நேரத்தில், புதிதாய் நுழைய முற்படுபவர்களை தடுப்பதுதான் நாளைய தலைமுறைக்கு
நாம் செய்யும் குறைந்தபட்ச நியாயமாக இருக்கமுடியும். அதற்கு தெளிவான
அரசியல் பார்வை அவசியம். இந்தப் போராட்டம் ஏன் அந்தப் பார்வைக்கான தொடக்கப்
புள்ளியாய் இருக்கக் கூடாது?
'போராட்டத்துல
இருக்குற பாதிப் பேருக்கு ஜல்லிக்கட்டு பற்றிய பொது அறிவு இல்லை' என்பதும்
சிலரின் குரலாக இருக்கிறது. இங்கே முற்றும் அறிந்த ஞானி என யாரும்
இல்லையய்யா. (எல்லாம் எனக்குத் தெரியும்' என பேசுவார் என்பதால் வைகோ
விதிவிலக்கு) 'மகா வம்சம்' முதல் மலிங்கா சிகை வரை அனைத்தும்
தெரிந்தால்தான் பேச வேண்டும் எனச் சொன்னால் இங்கு நூற்றில் இரண்டு பேர் கூட
இலங்கைப் பிரச்னை பற்றிப் பேச முடியாது. மெரினாவில் ஒரு நடை போனால்
'பெரியார் சொன்ன பகுத்தறிவு என்ன தெரியுமா? என்பதில் தொடங்கி 'இதுக்குப்
பின்னால இருக்குற இந்துத்துவ நோக்கம் இதுதான்' வரை இளைஞர்கள் தங்களுக்குள்
விவாதிப்பதை கண்டிப்பாய் நாம் கேட்கமுடியும். சில காலம் முன்புவரை
வாட்ஸ்அப்பில் வரும் அனைத்தும் உண்மை என நம்பிய அப்பாவிகள் இவர்கள். ஆக,
அரசியல் பேசும், தெரிந்துகொள்ளும் வாய்ப்பை இந்தப் போராட்டம் வழங்கியதை
மறுக்க முடியாதே! (கல்லூரித் தேர்தல்களுக்குப் பின்னால் சில தனிநபர்களின்
ஆதாயம் இருப்பதால் அவற்றை அரசியல் என ஏற்றுக்கொள்ள முடியாது)
மாணவர்களுக்கு:
தலைவன்
வருவான், கைகொடுப்பான் என்ற பேன்டஸி கனவுகளில் மூழ்கியிருக்காமல் 'நானே
ராஜா நானே மந்திரி' என களமிறங்கியதற்கு ஸ்பெஷல் பாராட்டுகள். முதல்நாள்
'கொஞ்ச நேரம் கத்திட்டு கலைஞ்சுடுவாங்க' என அசட்டையாக இருந்தவர்களை
அடுத்தடுத்த நாட்களில் 'நான் உங்க கூடத்தான். நான் மம்மி பிராமிஸா உங்க
பக்கம்தான்' என பதறடித்து குரல் கொடுக்க வைத்ததில் இருக்கிறது உங்களின்
வெற்றி. ஆனால் இந்த வெற்றியை அறுவடை செய்ய சம்பந்தமில்லாத சிலர்
முயற்சிக்கக் கூடும். (2013-ல் அதுதான் நடந்தது) தேவை - அதீத கவனம்.
அரசியல், சினிமா பிரபலங்களை முற்றிலுமாக தவிர்த்ததற்கு கைகுலுக்கல்கள்.
பொங்கல் சாப்பிட்ட மந்தத்தில் இருக்கும் மாநில அரசும், சதா ஐ.எஸ்.டி
'மோடி'லேயே இருக்கும் மத்திய அரசும் உங்களை கவனிக்கத் தொடங்கியிருக்கின்றன.
இன்ஸ்டன்ட் தீர்வுகளை நம்பாமல் நிரந்தரத் தீர்வுகள் கிடைக்கும் வரை
உறுதியாக இருங்கள். இப்போதும் எப்போதும்.
சின்ன வேண்டுகோள் - தனிநபர் தாக்குதல்களும் ஆபாச வார்த்தைகளும் வேண்டாமே! மற்றவர்களுக்கு:
குறைகளே
இல்லாத போராட்டம் என்பது ஹைப்போதெட்டிக்கல் தியரி. இத்தனை நாளாய் மொபைல்
நோண்டிக்கொண்டிருந்த விரல்கள் இப்போது அதிகார வர்க்கத்தை குற்றம் சொல்ல
நீண்டிருக்கின்றன. இதை வரவேற்கலாம். உடன் நிற்கலாம். குறைகளையும் தாராளமாய்
சுட்டிக்காட்டலாம். ஆனால் தட்டிக் கழிக்கவோ தவிர்க்கவோ முடியாது. இந்தக்
குரல் இனி அடுத்தடுத்த பிரச்னைகளிலும் ஓங்கி ஒலிக்கும் என நம்புவோம்.
நடக்கப் பழகுகிறோம். திசையை இனி நடக்கும் நிகழ்வுகள்தான் தீர்மானிக்க
வேண்டும்.
- நித்திஷ்
Dailyhunt
related stories
'எங்களுக்காக போராடுற புள்ளங்க எல்லாம் நல்லா இருக்கணும்யா!'' - நெகிழும் அலங்காநல்லூர் பெண்கள்
ஒரு ஊரில் ஆரம்பித்த சிறு தீ இன்று மாணவ,
மாணவிகள் இயக்கமாக மாறி, அரசாங்கத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆணிவேர் அலங்காநல்லூர்தான். தொடர்ந்து ஐந்தாவது
நாளாக ஜல்லிக்கட்டுக்காக அலங்காநல்லூர் போராட்டத்தில் பங்கு பெற்று வரும்
பெண்களிடம் பேசினோம்.
நாகலட்சுமி:
''எனக்கு நினைவு தெரிஞ்சது முதலா பாலமேட்டுல ஜல்லிக்கட்டு பார்த்துட்டு இருக்கேன்.
கல்யாணமாகி வந்தது அலங்காநல்லூர்க்கு. அதனால ஜல்லிக்கட்ட
பத்தி அக்குவேறா, ஆணிவேறா தெரியும். கடந்த ரெண்டு வருஷமா ஜல்லிக்கட்டு
நடக்கவே இல்ல. முதல் நாள் போராட்டத்துல கலந்துகிட்டப்ப ஒரு பொண்ணோட கையை
போலீஸ் உடைச்சிருச்சு. எத்தனை வலி, எத்தனை வேதனை. ஆனா எங்களைப்
பார்த்துட்டு எங்க இருந்தோ இருந்த பசங்க, பொம்பளப் புள்ளைங்க எல்லாம் இங்க
வந்து போராடினப்ப கண்ணீர் வந்திடுச்சு. கட்டுப்படுத்தவே முடியல. அவங்க
எல்லாம் நல்லா இருக்கணும்யா. இதோ இத்தன வீட்டு புள்ளைங்க எங்களுக்காக
நிக்கிறப்ப யார் தடுக்க முடியும்? நல்லது நடந்தே தீரும். அதுக்கான
ஒருபடிதான் இப்ப முதலமைச்சர் வெளியிட்டிருக்கிறது".
சாலம்மாள்:
''
எனக்கு சொந்த ஊர் தேனி பக்கம்ய்யா. நான் வாக்கப்பட்டதுதான் அலங்காநல்லூர்.
வாடிவாசல் பின்னாடிதான் என் வூட்டுக்காரர் வீடு இருந்துச்சு. பண வசதி
இல்லாம நாங்க அந்த வீட வித்துட்டோம். என் வூட்டுக்காரர் இறந்ததுக்கு
அப்புறமா நான் இந்த ஊர்லேயே இருந்துட்டேன். வேற எங்கேயும் வரமாட்டேனு
புள்ளைங்ககிட்ட சொல்லிட்டேன். பல ஊர்ல இருந்து வர்ற புள்ளைங்க எல்லாம்
இதுக்காக பாடுபடுறப்ப 69 வயசுல நான் சும்மா இருக்கலாமா. அதான் ஒருகை
பாத்துரலாம்னு வந்துட்டேன். எத்தன நாளானாலும் சரி, அலங்காநல்லூர்ல
ஜல்லிக்கட்ட பார்த்துட்டுதான் வீட்டுக்கு போவேன்".
காவியா, +1 மாணவி;
''நான்
படிப்புல மட்டும் கவனம் செலுத்துற பொண்ணு. ஆனா நம்மோட அடையாளத்த ஒண்ணுமே
தெரியாதவங்க வந்து பிடுங்குறப்ப எப்படி பார்த்துட்டு சும்மா இருக்க
முடியும் சொல்லுங்க. அதான் அப்பா அம்மாகிட்ட நான் போறேனு சொன்னேன்.
நம்மளுக்கு ஜல்லிக்கட்டு பொழுதுபோக்கில சார். அது நம்மோட அடையாளம். இங்க
இருக்கிற எல்லா அம்மா, அக்கா, சித்தப்பா, பெரியப்பானு ஒவ்வொருத்தர் வீட்டுல
இருக்கிற காள பேரையும் ரேஷன் கார்டுல மட்டும்தான் சேக்கல. கொழந்த மாதிரி
பார்த்துப்பாங்க. கண்ணால பாக்குற ஒண்ண, இல்ல இல்ல... நீங்க
கொடுமப்படுத்துறீங்கனு சொன்னா கோவம் வரும்ல. அந்த கோவம்தான் எங்க
போராட்டம். இப்ப நம்ம போராட்டம். இப்ப அதுக்கான முதல் வெற்றிப்படி
கிடைச்சிருக்கு. மொத்தத்துல எங்களை எல்லாம் ஒத்துமையா சேர்த்ததுக்கு
பீட்டாக்குதான் நன்றி சொல்லணும்".
கவிநீலா, கல்லூரி மாணவி :
''நான்
பி.எஸ்.சி மேத்ஸ் ரெண்டாவது வருஷம் படிக்கிறேன். எனக்கே ஆரம்பத்தில்
சந்தேகம்தான்... நம் போராட்டம் ஜெயிக்குமா, இல்ல அப்படியே காள மாடு காணாம
போயிடுமானு. ஏன்னா போராட்டம் ஆரம்பிச்ச அன்னைக்கு எங்கூட சேர்ந்து மொத்தம்
பத்து பேருதான் இருந்தாங்க. அப்புறம் பத்து 100 ஆச்சு இன்னிக்கு எண்ண
முடியாத அளவுக்கு தமிழ்நாடு, இந்தியா, வெளிநாடுனு பரவி கெடக்கு. எங்கள
பாத்து மெரண்ட போலீஸ் இப்ப எங்க கூட ஐக்கியமாகிட்டாங்க. இந்த போராட்டத்தால
பல அண்ணண், அக்கா கெடைச்சிருக்காங்க. ஜல்லிக்கட்டு வாசல் தொறக்கிற
அன்னைக்கு இருக்கு எங்களோட முழு சந்தோஷமும்".
- சே.சின்னதுரை
படம் : ஈ.ஜெ.நந்தகுமார், ராம்
Dailyhunt
Thursday, January 19, 2017
ஜல்லிக்கட்டு நடத்த கிராம சபையே போதும்: போராட்டத்துக்கு இடையே எழும் நம்பிக்கை துளிர்
By DIN | Published on : 19th January 2017 12:40 PM |
சென்னை: ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதி கோரி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் போராடி வரும் நிலையில், அதற்கான அதிகாரம் நம்மிடமே உள்ளது என்ற நம்பிக்கைக் குரல் எழுந்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி கூறியிருப்பதாவது, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி கிராம சபைகள் மிகுந்த சக்திவாய்ந்தவை. ஊராட்சி மன்றத் தலைவரை விட அதிக அதிகாரம் மிகுந்தவை. அமராவதி ஆற்றில் மணல் கொள்ளை மற்றும் சுற்றுச்சூழலுக்கு கெடுதல் விளைவிக்கும் கோழிப் பண்ணைக்கு எதிரான எங்கள் போராட்டங்களில் கிராமசபையை பயன்படுத்தியே நீதிமன்றத்தில் வழக்குகளை வென்றோம். நிரந்தரத் தடை வாங்கினோம்.
கேரளாவில் ப்ளாச்சிமாடா பஞ்சாயத்து கிராமசபையின் அதிகாரத்தைப் பயன்படுத்தியே கேரள உயர்நீதிமன்ற உத்திரவு மூலம் கோகோ கோலா ஆலையை மூடியது (பிறகு உச்சநீதிமன்றம் ஆலைக்கு மீண்டும் அனுமதி கொடுத்துவிட்டது)
அலங்காநல்லூர் ஊராட்சி கிராமசபை தீர்மானம் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி செய்யலாம். சட்டமன்றம், நாடாளுமன்றத்தை விட உள்ளூர் விவகாரங்களில் கிராமசபைக்கு அதிகாரம் அதிகம்.
உள்ளூர் விவகாரங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைவிட உள்ளூர் மக்களே திறம்படக் கையாளமுடியும், அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு என்ற அடிப்படையிலேயே கிராமசபைக்கு பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் அதிக அதிகாரம் அளிக்கப்பட்டது.
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போல 18வயது நிரம்பிய அனைவரும் கிராமசபையின் உறுப்பினர்கள்.
ராஜீவ்காந்தியின் கனவு திட்டம் இது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மக்கள் தங்கள் அருகிலேயே இருக்கும் அதிகாரத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்று பதிவு செய்துள்ளார்.
அதே போல, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் தனியார் தொலைக்காட்சியில் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற அதிகாரத்துக்கு உட்பட்டவர். அவரிடம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரினால் எப்படி கிடைக்கும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நடத்த கிராம சபைக்கு முழு அதிகாரம் உள்ளது.
ஜல்லிக்கட்டை நடத்துவதால் கிராம சபைக்கு உச்ச நீதிமன்றத்தால் எந்த சிறைத் தண்டனையும் கொடுக்க முடியாது. அபராதம் மட்டுமே விதிக்க முடியும். எனவே, நம்மிடம் இருக்கும் கிராம சபை எனும் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள்: ஜல்லிக்கட்டு குறித்து பன்னீர்செல்வம் சூசகம்
By DIN | Published on : 19th January 2017 12:58 PM
புது தில்லி: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள் என்று புது தில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தப் பிறகு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதி அளிக்க வலியுறுத்தி தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்களைத் தொடர்ந்து, அவசரச் சட்டம் இயற்றுமாறு பிரதமர் மோடியை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்றுமாறு பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினேன். தமிழக கோரிக்கையை கவனமுடன் கேட்டுக் கொண்ட பிரதமர், தமிழர்களின் உணர்வுகளை முழுமையாக மதிப்பதாகவும், நன்கு அறிந்திருப்பதாகவும் மோடி கூறினார்.
அதே சமயம், ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இது குறித்து மத்திய அரசு எதுவும் செய்ய இயலாது. ஆனால், ஜல்லிக்கட்டு குறித்து மாநில அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.
எனவே, மாநில அரசு இது தொடர்பாக மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள். நன்மையே யாவும் நன்மையிலேயே முடியும் என்று தெரிவித்தார்.
Wednesday, January 18, 2017
நாளை டெல்லியில் அவசர கூட்டம் தொடர் போராட்டம் - எதிரொலி
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தமிழகம் முழுவதும் கடந்த நான்கு
நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.அலங்காநல்லூரில் 3வது நாளாகவும்,
சென்னை மெரீனா, நெல்லை,விழுப்புரம், மதுரை, திருச்சி, சேலம், கோவையில் 2வது
நாளாகவும் இளைஞர்கள் போராடி வருகின்றனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு
அனுமதியும், பீட்டாவுக்கு தடையும் கொண்டு வந்தால் மட்டுமே போராட்டத்தை
கைவிடுவதாகவும், அதுவரை, தங்களின் போராட்டம் தொடரும் எனவும் தமிழ முதல்வர்
பன்னீர் செல்வம் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினர்.இது
தொடர்பாக முதல்வர் பன்னீர் செல்வம் தமிழக இளைஞர்களின் உணர்வுகளை
மதிக்கிறேன் ஆகையால் மாணவர்கள் போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமென
கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக போலீசார் முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக
உறுதி அளித்துள்ளதால் போராட்டத்தை கைவிட போலீசார் பல முறை பேச்சுவார்த்தை
நடத்தினார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் வரை எங்கள் போராட்டம்
தொடரும் என மாணவர்கள் உறுதியாக கூறிவிட்டனர். நாளை டெல்லியில்
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தலைமையில் அவசர
கூட்டம் நடக்க உள்ளது. மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் அந்த
கூட்டத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என
தெரிகிறது.
Dailyhunt
ஜல்லிக்கட்டு விவகாரம்...!! கடந்து வந்த பாதை... - ஒர் அலசல்
தமிழகத்தின் ஜல்லிக்கட்டு விளையாட்டை 2014ம் ஆண்டில் நீதிமன்றம் தடை
செய்தது. இந்த முறை தமிழர்களும் எப்படியாவது நமது பாரம்பரிய விளையாட்டை
நடத்தியே தீர வேண்டும் என மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும், நீதிமன்ற
ஆணைக்கு எதிராகவும் பல கட்ட போராட்டங்களை உலகம் முழுவதும் போராட்டம்
நடத்தியும் இன்று வரை தீர்வு கிடைக்காமால் உள்ளது.
இந்த வருடமாவது
பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கிடைக்குமா? என நீதிமன்ற
உத்தரவுக்கு காத்து இருந்த போது 3வது முறையாக நீதிமன்றம் தடை செய்தது.
ஜல்லிக்கட்டு தடை எப்படி வந்தது
ஜல்லிக்கட்டை
நிரந்தரமாக தடை செய்வதற்கு விலங்குகள் நல ஆர்வலர் மற்றும் மத்திய அமைச்சர்
விலங்குகளிடம் பெரிதும் அன்பு பாராட்டுபவருமான மேனகாகாந்தி முதலில்
ஜல்லிக்கட்டு எதிராக குரல் கொடுத்தார்.
2008 ம் ஆண்டு விலங்குகள் நல வாரியம் சார்பில்
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை
உத்தரவு பெற்றார். தமிழர்கள் வாங்கிய அடிகள்
முதல் அடி
விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு மேல் மறுமுறையீடு
செய்து ஒரு சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் போட்டி நடத்த அனுமதி
பெற்றது. தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டம் 2009' சட்டத்தை
இயற்றியது. இச்சட்டம் ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் பின்பற்ற வேண்டிய சில
விதிமுறைகளை நீதிமன்றம் அட்டவணைப்படுத்தியது.
இரண்டாவது அடி 2010
நவம்பர் 27ல் நீதிபதி ஆர். ரவீந்திரன், ஏ. கே. பட்நாயக் அடங்கிய அமர்வு ஒரு
நெறிமுறைகளை கூறியது அதன்படி, ஜல்லிக்கட்டு நடக்கும் மாவட்டத்தில் அந்த
மாவட்ட ஆட்சியர், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் விலங்குகள் அனைத்தும்
விலங்குகள் நலவாரியத்தில் பதிவு செய்வதையும், போட்டியை விலங்குகள் நலவாரிய
பிரதிநிதி ஒருவர் கண்காணிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். போட்டிக்கு ஒரு
மாதம் முன்பு அனுதி பெறவேண்டும்.
காளைகளும் மாடுபிடி வீரர்களும்
முறையாக பதிவு செய்தல், காளைகளின் பிறப்புறுப்பில் மிளகாய்ப்பொடி தூவுதல்,
சேறு சகதிபூசி வெறியூட்டுதல் கூடாது. ஒரு காளையை ஒரே நேரத்தில் நான்கு
பேருக்கு மேல் அடக்கக்கூடாது. காளையை வாலைப்பிடித்து திருகுவதோ வேறுவிதமான
கருவிகளைக் கொண்டு துன்புறுத்துவதோ கூடாது. காளைகள் ஓடவும் வீரர்கள்
அடக்கவும் களத்தில் போதிய இடவசதி இருக்கவேண்டும் என நெறிமுறையுடன்
அறிவுறுத்தப்பட்டது.
மூன்றாம் அடி நீதிமன்ற நெருக்கடி போதாதென்று
மத்திய அரசின் அப்போதைய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரிடமிருந்து
புதிய இடையூறு வந்தது. சிங்கம், புலி, கரடி, குரங்கு போன்ற விலங்குகளை
கூண்டிலடைத்தோ, பொது இடங்களில் வைத்தோ வித்தை காட்டக்கூடாதென்பது சட்டம்.
இதில் ஒரு திருத்தம் செய்து காளைகளையும் அந்தப் பட்டியலில் சேர்த்தார்
முன்னாள் மத்தியஅமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.
நான்காம் அடி சில
நிபந்தனைகள் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என நீதிமன்றம் கூறியது அதன்படி சிறிய
ஜல்லிக்கட்டுக்கு 2 லட்ச ரூபாயும், பெரிய ஜல்லிக்கட்டுகளுக்கு 5 லட்ச
ரூபாயும் முன்வைப்புத்தொகை, முறையான அனுமதி ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள்
போட்டியில் காயமடைபவர்கள், பலியாகிறவர்களின் மருத்துவச் செலவுக்காகவும்
இரண்டு லட்ச ரூபாய் வைப்புத்தொகை செலுத்த வேண்டும் என கூறியது.போட்டி நடத்த
முடியமால் தங்கள் செயலில் பின் வாங்கியது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை இந்த
சட்டத்திருத்தம் மேலும் சோர்வடைய வைத்தது.
ஜந்தாம்அடி ஒரு வழியாக
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி 2012, 2013ம் ஆண்டில் தமிழக அரசு
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்தது. கடந்த 2013ம் ஆண்டு விலங்குகள் நல
வாரிய உறுப்பினர்களான டாக்டர் மணிலால் வால்யதே, அபிஷேக் ராஜே இருவரும்
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளைப் பார்த்து
உச்சநீதிமன்றத்தில் மூன்று அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.
இந்த
அறிக்கைகள் காளையடக்கும் போட்டிகளின்போது காளைகளை வாடிவாசலிலிருந்து
தள்ளிவிடுதல், கட்டாயப்படுத்தி மதுபானத்தை வாயில் ஊற்றுதல், அடித்தல் போன்ற
துன்புறுத்துதல். தப்பியோட முயன்ற காளையொன்றின் கால் முறிந்ததையும்,
மிரண்டோடிய காளையொன்று பேருந்தில் மோதி இறந்தததையும் அந்த அறிக்கையில்
பதிவுசெய்தனர்.விலங்குகள் நல வாரிய உறுப்பினர்களின் பிரதிநிதி ஒருவர்
அவசியம் ஜல்லிக்கட்டில் பார்வையாளராக இடம்பெறவேண்டு மென்ற நெறிமுறையை
அவர்கள் சரிவரப் பயன்படுத்திக்கொண்டனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில்
நடந்த வழக்கில் தமிழக அரசு, விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படுவதாகவும்,
போட்டிகளை மேலும் முறைப்படுத்தலாம்,முழுமையாக தடைவிதிக்கக்கூடாதென
வாதிட்டது
ஆனால் விலங்குகள் நல வாரியம் "போட்டிகளில் மாடுகள்
வதைக்கப்படுகின்றன தேவையின்றி துன்றுத்தப்படுகின்றன. மிருகவதை தடைச்
சட்டத்தின்படி ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் நடத்துவது குற்றம்" என வாதங்களை
முன்வைத்தது.
விலங்குகள் நல ஆர்வலர்களோ, கடந்த 20 ஆண்டுகளில்
ஜல்லிக்கட்டு போட்டியில் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 200க்கும் மேல்,
காயமடைந்தவர்கள் ஆயிரக்கணக்கில் வருவர். காளைகளின் காயமும் மரணமும்
பெரும்பாலும் கணக்கிலேயே வருவதில்லை. மனிதர்களுக்கும், காளைகளுக்கும்
ஒருசேர தீங்கு விளைவிக்கும் இப்போட்டியை பாரம்பரியத்தின் பேரால் தொடரத்தான்
வேண்டுமா என கேள்விகளை எழுப்பினர்.
6 வது அடி இன்றைக்கு
இனப்பெருக்கத்துக்குக் கூட காளைகளின் நேரடி தயவு தேவையில்லை.
காளைகளிடமிருந்து விந்து சேகரிக்கப்பட்டு உறைநிலையில் ஊசி
மருந்தாக்கப்பட்டு விற்பனையாகும் நிலையில் ஜல்லிக்கட்டு தொடருமா என்ற
அச்சத்தில் பலர் தாங்கள் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளைகளை பராமரிக்க
முடியமால் விற்கத் தொடங்கி இறுதியில் அடிமாடுகளைப் போன்று இறைச்சிக்காக
விற்பனைக்கு போக ஆரம்பித்தன.
இறுதி அடி ஜல்லிக்கட்டு மீதான தடையை
நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும் மனுத்தாக்கல் செய்திருந்தது.
இவ்வழக்கில் வரும் தீர்ப்பைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என
மத்திய அரசு கூறியது. ஜல்லிக்கட்டு வழக்கில் இடைக்கால தீர்ப்பு வழங்க
உச்சநீதிமன்றத்திடம் வழக்கறிஞர்கள் கோரிக்கையை முன் வைத்தனர். ஆனால்
தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் இடைக்கால தீர்ப்பு எதுவும் வழங்க முடியாது
என உச்சநீதிமன்றம் தெரிவித்து ஆகையால் தமிழகத்தில் உச்சநீதிமன்றம் தடை மீறி
நடத்த முடியாது என்பதால் இளைஞர் நேரடியாக தற்போது போராட்டத்தில்
குதித்துள்ளார்.இந்தி எதிர்ப்பு மாநாடு போல் கட்சி, இனம், ஜாதி, மதம்
வேறுபாடு இல்லாமால் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்திற்கு சினிமா,
கிரிக்கெட், இதர துறை பிரபலங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.