Monday, February 13, 2017

சந்தேகம் சரியா 21: உடலுக்கு வலு சேர்ப்பது நிலக்கடலையா? முந்திரிப் பருப்பா?

டாக்டர் கு.கணேசன்

தினமும் மூன்று முந்திரிப் பருப்பு சாப்பிட்டால் உடலுக்கு வலிமை கூடும் என்று ஒரு மருத்துவப் பத்திரிகையில் படித்தேன். முந்திரியைவிட நிலக்கடலைதான் மிகவும் நல்லது என்கிறார் என் அப்பா. இவற்றில் எது சரி?

முந்திரிப் பருப்பு, நிலக்கடலை, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு என அவரவர் வசதிக்கேற்ப பலதரப்பட்ட பருப்புகளைச் சாப்பிடுவது நடைமுறை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியில் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதுதான் நல்லது என்று எதையும் குறிப்பிட்டுக் கூற முடியாது. காரணம், பலருக்கு இவை தேவைப் படும்; ஒரு சிலருக்கு இவை வேண்டாதவையாகவும் இருக்கலாம். எந்தப் பருப்பில் என்ன சத்து உள்ளது என்பதைத் தெரிந்துகொண்டால், அது யாருக்கு உதவும், யாருக்கு உதவாது என்பது புரியும்.

முந்திரிப் பருப்பு

கொழுப்பு (43 சதவீதம்) அதிகமுள்ள உணவுப் பொருள் இது. 100 கிராம் முந்திரி 550 கலோரிகளைத் தரவல்லது. இது காலை உணவுக்குச் சமம். முந்திரி உடலுக்கு அதிக வலிமையைச் சேர்க்கிறது. தாமிரம், துத்தநாகம், மாங்கனீஸ், மெக்னீசியம் ஆகிய தாதுகள் இதில் மிகுந்துள்ளன. நார்ச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி தொகுதிகள் ஓரளவுக்கு உள்ளன. கால்சியம், குரோமியம் ஆகியவை மிகவும் குறைந்த அளவில் உள்ளன. வைட்டமின் ஏ, சி, டி, பி12 சத்துகள் இதில் இல்லவே இல்லை.

உடல் எடை குறைந்தவர்கள், வளரும் பருவத்தில் உள்ளவர்கள், உடலுக்குக் கொழுப்பு தேவைப்படுபவர்கள் தினமும் ஐந்து முந்திரிப் பருப்புகள்வரை சாப்பிடலாம். இந்த அளவை மீறினால் கொழுப்பு கூடிவிடும். அதிலும் நிறைய பேர் முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துச் சாப்பிடுகிறார்கள். உப்பு அல்லது காரம் சேர்த்துச் சாப்பிடுகிறார்கள். பெரும்பாலான பேக்கரி உணவுகளிலும் ஐஸ்கிரீம், சாக்லேட், புட்டிங் போன்றவற்றிலும் முந்திரிப் பருப்பு சேர்க்கப்படுகிறது.

இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டால் ரத்தக் கொழுப்பு அதிகரித்து, உடல் பருமன், உயர் ரத்தஅழுத்தம், இதயநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே, `அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதைக் கவனத்தில் கொண்டு, இவற்றை அளவோடு சாப்பிடுவது நல்லது.

இதய நோயாளிகள், ரத்தக் கொழுப்பு மிகுந்தவர்கள், உயர் ரத்தஅழுத்தம், உடல் பருமன் கொண்டவர்கள் கண்டிப்பாக முந்திரிப் பருப்பைச் சாப்பிடக் கூடாது.

நிலக்கடலை

புரதம், கொழுப்புச் சத்துகளைக் குறைந்த செலவில் தரும் தாவரச் சத்துப் பொருட்களில் முக்கியமானது நிலக்கடலை. கடலையை வறுத்து அதனுடன் வெல்லம், சர்க்கரை போன்ற இனிப்புகளைக் கலந்து கடலை மிட்டாய், கடலை பர்பி போன்ற பல உணவுகளைத் தயாரிக்கிறார்கள். இது ஏழைகளின் சத்துப்பொருள் என்றால் மிகையில்லை.

இதில் புரதம் (26 சதவீதம்), கொழுப்பு (75 சதவீதம்), கொலின், பாஸ்பரஸ், வைட்டமின் பி தொகுதிகள் அதிகமுள்ளன. குறிப்பாகத் தயமின், நியாசின் ஆகிய வைட்டமின்களும் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளன. தாமிரம், துத்தநாகம் முதலியவை ஓரளவு உள்ளன. வைட்டமின் ஏ, சி, டி, பி12 சத்துகள் இதிலும்கூட இல்லை.

100 கிராம் நிலக்கடலை 570 கலோரி ஆற்றலைத் தரக்கூடியது. உடலுக்கு உடனடியாக ஆற்றல் தேவைப்படுபவர்களும் புரதம் தேவைப்படுபவர்களும் இதைச் சாப்பிடலாம். வளர்ச்சிப் பருவத்தில் உள்ள குழந்தைகள், ஊட்டச்சத்து குறைந்தவர்கள், குறைந்த உடல் எடை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைப் பேறு அடைந்த தாய்மார்கள், மாணவர்கள் ஆகியோர் தினமும் 100 கிராம் அளவுக்கு நிலக்கடலையைச் சாப்பிடலாம். உடல் பருமன் கொண்டவர்கள்கூடக் குறைந்த அளவில் இதைச் சாப்பிடலாம். ரத்தக் கொழுப்பு மிக்கவர்கள், வாயுப் பிரச்சினை உள்ளவர்களுக்கு இது ஆகாது.

எச்சரிக்கை

ஈரமான அல்லது கெட்டுப்போன நிலக்கடலையில் ஒருவித பூஞ்சைக் கிருமி வளரும். இது ஒவ்வாமையை ஏற்படுத்தும். நஞ்சாக மாறும். கல்லீரலைப் பாதிக்கும். உதாரணத்துக்கு, அஸ்பெர்ஜிலஸ் ஃபிளேவஸ் (Aspergillus flavus) எனும் பூஞ்சை வெளியிடுகிற அஃப்ளடாக்சின் (Aflatoxin) எனும் நச்சுப்பொருள் புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது. எனவே, பச்சை நிலக்கடலையைச் சாப்பிடாதீர்கள். அதை அவித்து அல்லது வறுத்துச் சாப்பிட்டால் இந்த ஆபத்து குறைந்துவிடும்.




தொடர்புக்கு: gganesan95@gmail.com

மீண்டும் நாய்க்கடி: ஊசி தேவையா?

“வீட்டு நாய் கடித்தாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா?” கட்டுரையைப் படித்துவிட்டு, “நாய் கடித்த பிறகு 5 தவணை ஊசி போட்டுக்கொண்ட பின்னர் அடுத்த ஆறு மாதங்களில் மறுபடியும் தெருநாய் கடித்தால் ஊசியைத் தவிர்க்கலாமா, இல்லை மறுபடியும் 5 ஊசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டுமா .... தெளிவு படுத்துங்கள்” என்று ஒரு வாசகர் கேட்டிருக்கிறார். இதுபோல் இன்னும் சிலர் கேட்டனர்.

இதற்கான பதில்:

ஏற்கெனவே ரேபீஸ் தடுப்பூசிகளை முறைப்படி 5 தவணைகள் போட்டுக் கொண்டவர்களை, அடுத்த 3 முதல் 5 வருடங்களுக்குள் மீண்டும் வெறிநாய் கடித்தால், நாய் கடித்த அன்று ஒரு தடுப்பூசியும், அடுத்த 3-லிருந்து 7 நாட்களுக்குள் மற்றொரு தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும். முதல்முறையாக ரேபீஸ் தடுப்பூசிகளை முறைப்படி போட்டு 5 வருடங்கள் ஆகிவிட்டவர்களை மறுபடியும் வெறிநாய் கடித்தால், அவர்கள் எப்போதும்போல் நாய் கடித்த அன்று முதல் ஊசி, 3-வது நாள் 2-வது ஊசி, 7-வது நாள் 3-வது ஊசி, 14-வது நாள் 4-வது ஊசி, 28-வது நாள் 5-வது ஊசி என 5 தவணைகள் போட்டுக்கொள்ள வேண்டும்.
சந்தேகம் சரியா 22: வீட்டில் பூனை வளர்த்தால் ஆஸ்துமா வருமா?

டாக்டர் கு. கணேசன்

எனக்குச் சிறுவயதிலிருந்தே ஆஸ்துமா உண்டு. நான் பூனை வளர்க்க ஆசைப்படுகிறேன். பூனை வளர்த்தால் ஆஸ்துமா அதிகமாகிவிடும் என்று எச்சரிக்கிறார் என் அம்மா. இது சரியா?

சரிதான்.

நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகள் ஆஸ்துமாவைத் தூண்டுவது உண்மைதான். உங்களுக்கு ஏற்கெனவே ஆஸ்துமா இருப்பதாகச் சொல்கிறீர்கள். ஆகவே, இதற்கான சாத்தியம் பல மடங்கு அதிகரிக்கும். என்றாலும், நீங்கள் பூனை வளர்க்க ஆசைப்படுகிறீர்கள் என்பதால், சில எச்சரிக்கைகளைக் கடைப்பிடித்தால், ஆஸ்துமா அதிகமாகும் சாத்தியத்தைக் குறைக்கலாம். அதற்கு முன்னால், வளர்ப்புப் பிராணிகள் எவ்வாறு ஆஸ்துமாவைத் தூண்டுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

ஆஸ்துமா வருவது எப்படி?

வளர்ப்புப் பிராணிகளின் உடலில் இருந்து உதிரும் செல்கள், ரோமம், உமிழ்நீர், சிறுநீர், மலக் கழிவு ஆகியவை காற்றில் கலந்து நாசி, சரும அலர்ஜியை ஏற்படுத்தும். இவை பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாத அளவிலேயே உள்ளன. எனவே, வீட்டில் அவை ஒட்டிக்கொள்ளும் உடைகள், சன்னல் திரைச்சீலைகள், சோபா செட்டுகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், மிதியடிகள், கழிவறை உபகரணங்கள், கைப்பிடிகள் போன்றவற்றில் பல வாரங்களுக்கு வசிக்கும். அவை நம் உடலுக்குள் சென்று அலர்ஜியை ஏற்படுத்தும்.

பூனை, நாய், முயல், கிளி, புறா, கோழி போன்ற வளர்ப்புப் பிராணிகளைத் தொட்டுத் தூக்கும்போதும், அவற்றோடு விளையாடும்போதும் மேற்சொன்ன அலர்ஜிப் பொருட்கள் நேரடியாகவே நம் உடலில் பட்டு அலர்ஜிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

இந்த அலர்ஜிப் பொருட்கள் உடலுக்குள் சென்றதும் ஆன்டிஜென்களாக செயல்படும். அப்போது ரத்தத்தில் ‘இம்யூனோகுளோபுலின் இ’ (IgE) எனும் எதிர்ப்புரதம் உருவாகும், இது ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, ‘லுயூக்கோட்ரின் (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை, ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து நரம்புமுனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் மூக்கு ஒழுகுவது, தும்மல், அரிப்பு, தடிப்பு, சருமம் சிவந்து வீங்குவது, ஆஸ்துமா போன்றவை ஏற்படுகின்றன.

எச்சரிக்கைகள் என்னென்ன?

# வளர்ப்புப் பிராணி அலர்ஜி உள்ளவர்கள் வீட்டில் எதையும் வளர்க்காமல் இருப்பதே நல்லது.

# மீறி வளர்க்க ஆசைப்பட்டால், வீட்டுக்கு வெளியில் தனியாக ஒரு அறையில் வளர்த்தால், அலர்ஜி பாதிப்பு குறையும்.

# வீட்டில் வளர்ப்பவர்கள் குறைந்தது படுக்கை அறைக்கு அவை வராமல் பார்த்துக்கொள்வது நல்லது.

# பூனை, நாய், முயல், கிளி போன்றவற்றைத் தொட்டுத் தூக்குவது, முத்தம் கொடுப்பது போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்,

# வீட்டைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது முக்கியம்.

# வீட்டுச் சுவர்கள், ஜன்னல் கிரில்களை அடிக்கடி தூய்மைப்படுத்த வேண்டும்.

# படுக்கை விரிப்புகள், தலையணை உறைகளை வாரம் ஒருமுறை சூடான தண்ணீரில் ஊறவைத்து, அலசி சுத்தம் செய்ய வேண்டும்.

# சன்னல் திரைச்சீலைகளை அடிக்கடி மாற்ற வேண்டும்.

# ஹெப்பா ஃபில்டர் (HEPA filter) பொருத்தப்பட்ட வாக்குவம் கிளீனர்கள் மூலம் சோபா, மிதியடி, படுக்கை விரிப்புகளைச் சுத்தப்படுத்த வேண்டும்.

மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமானால் ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வராக வேண்டும்: மனக்கசப்புகள் குறித்து மனம் திறக்கும் வீணை காயத்ரி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் வீணை காயத்ரி. (கோப்புப் படம்)

குள.சண்முகசுந்தரம்

அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், மூத்த நிர்வாகிகள் உட்பட பல தரப் பினரும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத் துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வீணை காயத்ரியும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்து விட்டு வந்திருக்கிறார். அரசியல் அரங்கம் எதிலும் தலைகாட்டாத அவர் இப்போது ஓபிஎஸ் இல்லத்துக்கே வந்து ஆதரவு தெரிவித்தது ஏன்? அவரே மனம் திறக்கிறார்.

அதிமுக ஆட்சியில் இல்லாத போது, மறைந்த முதல்வர் ஜெய லலிதாவை போயஸ் தோட்டத்தில் 2 முறை சந்தித்துள்ளேன். 2011-ல் முதல்வரான பிறகு, அவரே என்னை அழைத்து அரசு இசைக் கல்லூரிகளின் இயக்குநர் பதவியை அளித்தார். என் கோரிக்கையை ஏற்று 2013-ல் இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகம் அமைக்க உத்தரவிட்ட ஜெயலலிதா, அதன் துணைவேந்தராகவும் என்னை நியமித்தார்.

முதல்வர்தான் வேந்தர் என்பதால், பல்கலைக்கழகம் சிறப்பாக வளரும் என நம்பினேன். என் நினைப்புக்கு மாறாகவே எல்லாம் நடந்தது.

துணைவேந்தரான பிறகு, பல் கலைக்கழக வளர்ச்சிக்காக முதல் வரின் தனிச் செயலராக இருந்த ராமமோகன ராவை சந்திக்க நேரிட்டது. பல்கலைக்கழகம் வந் ததையே விரும்பாத அவர், என்னைச் சந்திப்பதையும் தவிர்த்தார்.

பல்கலையின் சிண்டிகேட் உறுப் பினர்கள் பதவிக்கு நான் பரிந்துரைத்த 6 பேரை தேர்வு செய்யாமல், வேறு 6 பேரை பட்டியலில் சேர்த்தனர். ‘இப்பதவியில் பொம்மையாக இருக்க விரும்பவில்லை. நான் சிறுமைப்படுத்தப்படுவதை அம்மா விடம் சொல்லிவிட்டு ஒதுங்கி விடுகிறேன்’ என்று துறை அமைச்சர் கே.சி.வீரமணியிடம் கூறினேன். அவர் என்னை சமாதானம் செய்து, நான் சிபாரிசு செய்தவர்களை பட்டியலில் சேர்த்தார். அப்படியும், துறைச் செயலரிடம் இருந்து அதற்கான ஒப்புதல் வரவில்லை.

திட்டமிட்ட சதிகள்

ஜெயலலிதாவே ஆரம்பித்து, அவரே வேந்தராக இருக்கும் பல் கலைக்கழகத்தின் வளர்ச்சியை அதிகாரிகள் திட்டமிட்டே தடுக் கிறார்கள் என்பது தாமதமாகத்தான் எனக்கு தெரியவந்தது. முக்கிய முடிவுகளை எடுப்பதற்குக்கூட வேந்த ரான ஜெயலலிதாவைச் சந்திக்க என்னை அனுமதிக்கவில்லை.

இந்த சதிகள் பற்றி ஜெயலலிதா விடம் சொல்லவும் முடியாமல் நான் தவித்தபோது, எனக்கு வந்த கொலைமிரட்டல் தொடர்பாக விசா ரிக்க 2016 ஜூலையில் என்னை அழைத்தார் ஜெயலலிதா. அன்று அதிகாலையில் என்னை தொடர்பு கொண்ட கலை பண்பாட்டுத் துறை உயரதிகாரி, ‘முதல்வரிடம் என்ன கூறப்போகிறீர்கள்? என்று தலைமைச் செயலாளர் கேட்கிறார்’ என்றார். அப்போது ராமமோகன ராவ்தான் தலைமைச் செயலாளர். ‘அதை அவருக்குச் சொல்ல அவசியம் இல்லை’ என்றேன். மீண்டும் மீண்டும் கேட்டு நச்சரித்தார். ‘பணிகளைச் செய்யவிடாமல், இந்த வேலையை விட்டே ஓடும் அள வுக்கு எப்படி எல்லாம் எனக்கு டார்ச்சர் தரப்படுகிறது என்பதை சொல்லப்போகிறேன்’ என்றேன்.

3 ஆண்டுகள் நீட்டிப்பு

தலைமைச் செயலகத்தில் முதல் வரை சந்திக்கச் சென்றபோது, ராம மோகன ராவ் உள்ளிட்டவர்களும் அங்கு இருந்ததால், முதல்வரிடம் நேரடியாகச் சொல்ல முடியவில்லை. ‘தனி ஆளாக போராடுகிறேன். அது பற்றி உங்களிடம் நிறைய பேசவேண் டும்’ என்று மட்டும் சொன்னேன். என் நிலையைப் புரிந்துகொண்ட முதல்வர், இனிமேல் நுண்கலைப் பல்கலைக் கழகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை சாந்தா ஷீலா நாயர், ஜெய முரளீ தரன் கவனிப்பார்கள் என்றார். என் பத விக் காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பதாகவும் சொன்னார்.

இது எனக்கு பெரிய சந்தோஷத் தைக் கொடுக்கவில்லை. முதல்வர் என்ன உத்தரவிட்டாலும், வெளியில் அதை செயல்படுத்தும் நிலையில் அதிகாரிகள் இல்லை என்பதே அதற்கு காரணம். இந்த சந்திப்புக்குப் பிறகு சில வாரங்கள் பல்கலைக்கழக கோப்பு கள் வேகமாக நகர்ந்தன. முதல் வர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டதும் மீண்டும் கிடப்பில் போட்டார்கள்.

ராமமோகன ராவின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பது, என் கண்ணுக்குதான் தெரியாதே தவிர, மனதுக்கு நன்றாக தெரியும். மொத்தத்தில், கடந்த 3 ஆண்டுகளில் நான் தெரிந்துகொண்டது இதுதான்.. ஜெயலலிதாவிடம் நல்லவர் போல நாடகம் போட்ட எல்லோருமே வெளியில் அவரது எண்ணங்களுக்கு எதிராக செயல்பட்டார்கள்.

உண்மை விசுவாசி

எனக்குத் தெரிந்தவரை, ஜெய லலிதாவின் உண்மையான விசுவாசி ஓபிஎஸ்தான். ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, எங்கள் பல்கலைக்கழக விழாவில் வேந்தர் என்ற முறை யில் கலந்துகொண்ட முதல்வர் ஓபிஎஸ்-க்கு கேடயம் வழங்கினோம். ‘அம்மா சொன்னதாலதான் முதல்வர் பதவியில் இருக்கிறேன். இதெல்லாம் அம்மாவுக்குத்தான் தரணும்’ என்று சொல்லி வாங்க மறுத்துவிட்டார். அதே விசுவாசத்துடன் கடைசி வரை இருந்தார். அவருக்கு அருகில் நிற்கும்போது ஜெயலலிதாவுடன் இருக்கிற உணர்வு ஏற்படுகிறது. ஜெயலலிதாவின் எண்ணங்கள் செயல்வடிவம் பெற வேண்டுமானால், மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமானால் ஓபிஎஸ்தான் முதல் வராக வேண்டும். இதன் அடிப் படையில்தான் அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு வந்தேன்.

இவ்வாறு வீணை காயத்ரி கூறினார்.
மருத்துவக் கல்விபோல பொறியியல் கல்விக்கும் ஒரே நுழைவுத் தேர்வு: 2018 முதல் மாநில மொழிகளிலும் நடத்த மத்திய அரசு திட்டம்

ஆர்.ஷபிமுன்னா

நாடு முழுவதிலும் உள்ள 3,500 பொறியியல் கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகி றது. இது அடுத்த ஆண்டு முதல் தமிழ் உட்பட பல்வேறு மாநில மொழிகளிலும் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

தற்போது நாடு முழுவதிலும் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாண வர் சேர்க்கைக்காக பல்வேறு நுழைவுத்தேர்வுகள் நடத்தப் படுகின்றன. இவற்றை ரத்து செய்துவிட்டு ஒரே நுழைவுத் தேர்வாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு மருத்துவ நுழைவுத்தேர்வு அறிமுகம் செய்யப்படுவதுபோல் பொறியியலிலும் அடுத்த கல்வி யாண்டில் இது அமலாக உள்ளது. இதையொட்டி விதிமுறைகளை வகுக்குமாறு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன் சிலுக்கு (ஏஐசிடிஇ) மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை கூடுதல் செயலாளர் ஆர்.சுப் பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து ‘தி இந்து’விடம் மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரம் கூறும்போது, “மத்திய அரசின் கல்வித் திட்டத்தின்படி நாட்டின் பொறியியல் மற்றும் கட்டிடக் கல்விப் பாடங்களை மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இதை வரும் 2018-19-ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த உரிய விதிமுறை களை ஏஐசிடிஇ வகுக்கும். ஐ.ஐ.டி.க்கான ’ஜி’ நுழைவுத் தேர்விலும் பொது நுழைவுத் தேர் வுக்கு ஏற்றபடி சிறிய மாற்றம் செய்யப்படும். இதுபோல் நுழை வுத்தேர்வுகள் நடத்துவதற்காக தேசிய அளவில் ஒரு கவுன்சிலும் அமைக்கப்படும்” என்றனர்.

இந்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மருத்துவக் கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வு, தமிழ் உட்பட 10 முக்கிய மொழிகளில் தொடங் கியது. இதற்கு தமிழகத்தில் நிலவிய கடும் எதிர்ப்பு காரண மாக தமிழக அரசு கடந்த மாதம் சட்டப்பேரவையில் ஒரு சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றி யுள்ளது. அதில், மருத்துவக் கல் விக்கான தேசிய நுழைவுத் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

முதல்வரின் தகுதியைக் கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு இருக்கிறது! - ப.சிதம்பரம் பேட்டி

நிஸ்டுலா ஹெப்பர்

மோடி அரசின் பணமதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பின் மீண்டும் பரபரப்பாகிவிட்டார் ப.சிதம்பரம். சமீபத்தில் புதிய புத்தகம் ஒன்றையும் - ‘ஃபியர்லெஸ் இன் ஆப்போசிஷன்’ (Fearless in Opposition) - கொண்டு வந்திருக்கிறார். தமிழக அரசியல் கொந்தளிப்பான சூழலில் இருக்கும் நிலையில் பலதும்பற்றி வெளிப்படையாகப் பேசினார் சிதம்பரம்.

அதிமுகவில் ‘ஜெயலலிதாவுக்குப் பிறகு யார் வாரிசு?’ என்ற பூசல் வலுத்துவருகிறது. இந்த நிகழ்வுகளை எப்படிப் பார்க்கிறீர்கள், உள்துறை அமைச்சராக இருந்த நீங்கள், இதில் ஆளுநர் எப்படிச் செயல்பட வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

அதிமுகவின் உள்கட்சி விவகாரங்கள் குறித்து கருத்துக் கூற முடியாது. அக்கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் உரிமை அது. ஒருவர் சட்டப் பேரவை அதிமுக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்தான் முதலமைச்சர் என்று அறிவிக்கப்பட்ட பிறகு - முதலமைச்சர் பதவிக்கு உரிய தகுதி அவருக்கு இருக்கிறதா என்று கேள்வி கேட்கும் உரிமை தமிழக மக்களுக்கு இருக்கிறது. அவர்கள் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் கூட, இவரைவிட நல்ல தலைவர் (முதல்வர் பதவிக்கு) உங்கள் கட்சியில் இல்லையா என்று கேள்வி கேட்பது நம்முடைய உரிமை. அதிமுக இன்று இருக்கும் விநோத நிலை காரணமாகத்தான் சமூக ஊடகங்களிலும் பிறவற்றிலும் அதைப் பற்றிய விமர்சனங்கள் எழுகின்றன. அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கும் அவர்களுடைய கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே இடைவெளி ஏற்பட்டுவிட்டதாக இவற்றிலிருந்து அறிய முடிகிறது. இந்த இடைவெளியை ஓ. பன்னீர்செல்வத்துக்குப் பதிலாக இன்னொருவரை அந்தப் பதவியில் அமர்த்துவதன் மூலமாக மட்டும் இட்டு நிரப்பிவிட முடியாது. அப்படிச் செய்தாலும் இந்த இடைவெளி மேலும் பெரிதாகத்தான் ஆகும். சட்டப்பேரவையில் பெரும்பான்மை வலு உள்ள கட்சியின் சார்பில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறவரைத்தான் முதலமைச்சராகப் பதவி ஏற்க அழைக்க வேண்டும் ஆளுநர் என்று அரசியல் சட்டம் வரையறுத்திருக்கிறது. இருந்தாலும், “பின்வரும் காரணங்களுக்காக மேலும் சில நாட்களுக்கு நான் காத்திருக்க விரும்புகிறேன்” என்று சொல்லி, பதவியேற்பை ஒத்திவைப்பதற்கான ‘விருப்ப அதிகாரம்’ என்ற சிறிய வாய்ப்பு ஆளுநருக்கு இப்போது இருப்பதாகவே கருதுகிறேன். இப்படியொரு விருப்ப வாய்ப்பு இதுவரை அரசியல் சட்டத்தால் உரசிப் பார்க்கப்பட்டதில்லை என்றாலும் ஆளுநருக்கு இது வாய்த்திருக்கிறது.

‘தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்க வேண்டும்’ என்று மக்கள் இயக்கம் தமிழகத்தைச் சில நாட்களுக்கு உலுக்கி எடுத்தது. அதன் கோரிக்கையைவிட அந்த இயக்கம் பெரிதாக இருந்தது, ஏன்?

வெவ்வேறு அச்சங்களும், கவலைகளும் கொண்ட மக்களை ஒருங்கிணைக்கும் புள்ளியாகத்தான் அந்தக் கிளர்ச்சியைப் பார்க்கிறேன். மெரினா கடற்கரையில் திரண்ட போராட்டக்காரர்களில் பெரும்பாலானவர்கள் நகர்ப்புற இளைஞர்கள், அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய வாழ்நாளில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நேரில் பார்த்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன். அந்த இளைஞர்களிடையே குறிப்பாக, வேலைவாய்ப்பு கிடைக்காத இளைஞர்களிடையே - எதிர்காலம் குறித்து ஆழ்ந்த கவலை, அச்சம், குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது வேலைவாய்ப்புகள் இல்லை. சிறிய, நடுத்தரத் தொழில் பிரிவுகள், சேவைத் துறைகள் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகளைத் தரும் தமிழ்நாடு போன்ற மாநிலத்திலேயே இப்போது புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதில்லை.

அதுமட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் சாதிரீதியிலான அணிதிரளல்கள் அதிகரித்துவருகின்றன. தமிழகத்தின் நெடிய வரலாற்றில் இப்படிப்பட்ட சாதிய உணர்வுகள் வெளிப்பட்டதில்லை. வன்னியர்-தலித், தேவர்-தலித் மற்றும் இதர சமூகங்களுக்கிடையில் பிளவுகள் காணப்படுகின்றன. இந்தப் பிளவு மிகவும் தீவிரமாகிவிட்டதால் எதிர்காலம் குறித்து இளைஞர்களிடையே கவலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, அனைவரும் ஜல்லிக்கட்டு என்ற ஒற்றைக் காரணத்தைப் பற்றிக்கொண்டு கிளர்ச்சியில் இறங்கினர். பல்வேறு காரணங்களுக்காக நடந்த கிளர்ச்சி அது. ஆனால், ஜல்லிக்கட்டு மையப்படுத்தப்பட்டது. மத்திய அரசுக்கு எதிராக ஆழ்ந்த கோபம் இருக்கிறது. மக்கள் இயக்கம் தொடங்கிய 48 மணி நேரத்துக்குப் பிறகு மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. பன்னீர்செல்வத்துக்கு எதிராகவோ அதிமுகவுக்கு எதிராகவோ கோஷங்கள் எழுப்பப்படவில்லை. ஏன்? தங்களுடைய பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆதிக்க உணர்வுமிக்க - ஜனநாயக விரோத - பிளவுபடுத்தும் எண்ணம் கொண்ட - மோதல்களைத் தூண்டிவிடுகிற மத்திய அரசுதான் காரணம் என்று அவர்கள் நினைத்தனர். பாஜகவின் தலைவர்கள் வட இந்தியர்கள் - இந்தி வெறியர்கள் - ஆதிக்க உணர்வு மிக்கவர்கள், பிற்போக்குவாதிகள் என்றே இளைஞர்கள் பார்க்கின்றனர்.

உங்களுடைய புத்தகத்துக்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் முன்னுரை எழுதியிருக்கிறார். கவர்னர் பதவியிலிருந்து விலக அவர் உண்மையிலேயே அப்போது விரும்பினாரா?

அவருடைய வெளியேற்றம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. அவரிடம் பேசியதிலிருந்து சந்தேகமற இது தெரிந்தது. 2018 செப்டம்பர் வரையில் பதவிக்காலத்தைப் புதுப்பித்துக் கொடுத்திருந்தால், அவர் மகிழ்ச்சியோடு ஏற்றிருப்பார். அதன் பிறகு வற்புறுத்தினால் 2019 மே வரையிலும்கூடப் பதவி வகித்திருப்பார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முழுப் பதவிக்காலம் வரையில் அவர் நீடித்திருக்க முடியும். ஆனால், அரசுக்கு வேறு எண்ணம் இருந்தது. எனவே, தனக்கு வேண்டியவர்கள் மூலம் ரகுராம் ராஜனைக் கடுமையாக விமர்சனம் செய்ய வைத்தது. சுயமரியாதைமிக்க எந்தப் பொருளாதார நிபுணராலும் அத்தகைய நிலையில் பதவியில் நீடிக்க முடியாது.

அப்படியென்றால், அவர் பதவி விலகிய பிறகு எடுக்கப்பட்ட முக்கிய முடிவான பணமதிப்பு நீக்கம் பற்றிப் பேச வேண்டியதாகிறது. நாட்டின் ஜி.டி.பி.யில் இது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசு ஒரு கணக்கைக் கூறுகிறது, உங்களுடைய அனுமானம் என்ன?

உண்மையான மதிப்பீட்டை வெளியிட அரசு அஞ்சுகிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் ஒட்டுமொத்த ஜிடிபி வருமானத்திலிருந்து கிட்டத்தட்ட 1% அளவைக் குறைத்துவிட்டார்கள். 1% ஜிடிபி என்பது ரூ.1.5 லட்சம் கோடி முதல் ரூ.2.25 லட்சம் கோடி வரையில் இருக்கும். முன் யோசனையின்றியும் பொறுப்பற்றும் எடுத்த நடவடிக்கையால் நாடு ரூ.2.25 லட்சம் கோடி வருவாயை இழந்து நிற்கிறது.

காங்கிரஸ் கட்சி தன்னுடைய லட்சியங்களையும் கொள்கைகளையும் மறுவரையறை செய்துகொள்ள வேண்டும் என்று ஒரு கட்டுரையில் எழுதியிருந்தீர்கள், அது இந்தப் புத்தகத்திலும் ஒரு அத்தியாயமாக இருக்கிறது. ஏன், எந்த விதத்தில்?

அமெரிக்காவில் உள்ள ஜனநாயக - குடியரசுக் கட்சிகளாக இருந்தாலும், பிரிட்டனில் உள்ள கன்சர்வேடிவ் - லேபர் கட்சிகளாக இருந்தாலும் ஒவ்வொரு 4 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகள் இடைவெளியில் தங்களுடைய கட்சியின் அடுத்த கொள்கைகள், இலக்குகள் எவையெவை என்று தீர்மானிக்கின்றன. காங்கிரஸ் கட்சியில் அப்படி முயற்சி மேற்கொண்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. மனித உரிமைகள், தனி மனித உரிமைகள், அந்தரங்க உரிமைகள் போன்றவை படித்த மாந்தர்களின் கவலைக்குரிய விஷயங்களாக இருக்கின்றன. இப்போது நாடு நகரமயமாகிறது. நாம் இன்னமும் நாட்டின் பெரும்பகுதி மக்கள் கிராமங்களிலேயே வாழ்வதாக நம்பிக்கொண்டிருக்கிறோம். கிராமப்புறங்களிலேயே பெரும்பாலான மக்களுடைய வாழ்க்கை முறை மாறிவருகிறது. அடுத்த பொதுத் தேர்தலின்போது நாட்டின் மக்கள்தொகையில் பாதி எண்ணிக்கை நகரங்களில்தான் வாழ நேரிடும் என்று நம்புகிறேன். நகர்ப்புற வறுமை என்பது கிராமப்புற வறுமையை விட வேறுபட்டது. ஒரு காலத்தில் வேலைவாய்ப்பு என்றாலே படிக்காத, தொழிற்பயிற்சி ஏதும் இல்லாத மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாகப் பார்க்கப்பட்டது. இப்போது படித்த, ஓரளவுக்குத் தொழில்திறன் படைத்தவர்களுக்காக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்தியப் பொருளாதாரத்தின் இயக்கவியல் 25 ஆண்டுகளில் மாறிவிட்டது. 1991-ல் நாம் கண்டுபிடித்த அதே கொள்கைகளைத்தான் சிற்சில மாற்றங்களோடு இப்போதும் அமல்படுத்திக்கொண்டிருக்கிறோம். இதைத் திருத்தி எழுத வேண்டிய நேரம் வந்திருக்கிறது. இது விமர்சனம் அல்ல, உண்மை. அடுத்த தலைமுறை வாக்காளர்கள் நமக்கு ஆதரவு தெரிவிக்க கொள்கைகளையும் இலக்குகளையும் புதிதாகத் திருத்திக்கொண்டேயிருக்க வேண்டும் என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொதுவானது.

சுருக்கமாகத் தமிழில்: சாரி ‘தி இந்து’ (ஆங்கிலம்)

தமிழக - இந்திய அரசியலில் வாரிசு அரசியலின் விநோத வெளிப்பாடுகள்

கா.சு.வேலாயுதன்

நாட்டின் சுதந்திர வேட்கை கொடிகட்டிப்பறந்த காலம் அது. தீரர் சத்தியமூர்த்தியின் அரசியல் வாரிசாக திகழ்ந்தார் காமராஜர். காந்தியடிகளின் அரசியல் வாரிசாக தன்னை காட்டிக் கொண்டார் ஜவஹர்லால் நேரு. சில தலைவர்கள் அரசியல் வாரிசு என்றால் என்ன என்பதற்கு நேர்மை, உழைப்பு, திறமை, சத்தியம், பொதுநலம் ஆகியவற்றை முன்னிறுத்தும் தலைவர்களை தங்களுக்குமுன்னிருத்தி தங்களுக்கான அரசியல் முன்னுதாரணங்களாக ஆக்கிக் கொண்டனர்.

அவர்களையே தன் அரசியல் குருநாதராக அறிவித்தும் கொண்டனர். அந்த குருநாதர்களுக்கும், சீடர்களுக்கும், அரசியல் வாரிசுகளுக்கும் அந்த அளவு அரசியல் பக்குவமும், முதிர்ச்சியும் இருந்தது. அரசியல் வாரிசு என்பதற்கு அர்த்தமும் புரிந்தது. மக்களும் மரியாதைக்குரிய அரசியல் வாரிசு என்ற விஷயத்தை ஆகர்ஷித்து போற்றி பூஜித்தனர்.

அதுவே சுதந்திர இந்தியாவில் வேறுமாதிரியாக மாறியது. நேரு மறைவிற்குப்பிறகு முளைவிட்டது குடும்ப வாரிசு அரசியல். இந்திரா காந்தியை பிரதமராக்க ஒரு சாரார் துடிக்க, சுதந்திர போராட்ட வேள்வித்தீயால் கருகிப்பிழைத்தவர்களால் அந்த வரலாற்றுப்பிழை காப்பாற்றப்பட்டது. லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். அது சிறிது காலம் கூட நீடிக்கவில்லை. அரசியல் சூட்சுமங்கள் சில இந்திராவை பிரதமர் ஆக்கியது. அதற்கு உறுதுணையாய் நின்றவர் காமராஜர்.

இந்திரா பின்னாளில் தன் அரசியல் வாரிசாக தன் இளையமகன் சஞ்சய்காந்திக்கு போஷாக்கு ஊட்டினார். இடையில் சஞ்சய்யின் அகால மரணம் தாயை பெரும்பாதிப்புக்கு உள்ளாக்கியது. பிறகும் விடாமல் விமான ஓட்டியாக இருந்த ராஜீவ்காந்தியை முன்வைத்தார். ‘நாட்டில் நடப்பது முடியாட்சியா? குடியாட்சியா?’ அப்போது தமிழகத்திலிருந்து கர்ஜித்தார் திமுக தலைவர் கருணாநிதி. அவரே பின்னாளில், ‘நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக!’ என்று கனிந்துருகினார்.

இந்திராவின் உயிர்த்தியாகம் ராஜீவ் ஆட்சிக்கு வழிகோழியது. ராஜீவ் போன பிறகு அவர் வாரிசு உருவில் மனைவி சோனியா வந்தார். பின்னர் ராகுல், ப்ரியங்கா என மகனும் மகளுமே வந்து தயார் நிலையில் நிற்கின்றனர். அன்று குடும்ப அரசியலுக்கு எதிராக கர்ஜித்த சிங்கம் ஒரு கட்டத்தில், ‘எம்ஜிஆர் என்ன பெரிய எம்ஜிஆர்?’ என்று தன் மகன் மு.க.முத்துவுக்கே எம்ஜிஆர் வேஷம் கட்ட வைத்தது. அதன் உரசலில் துளிர்த்த சிறுநெருப்பு கட்சிக்குள் வேறு விஷயங்களில் தீக்கிரையாக்கி எம்ஜிஆரை கட்சியை விட்டே வெளியேற வைத்தது. திமுக ஆட்சியை தொடர்ந்து இழக்க அதுவே காரணியாக வைத்தது.

அப்படியாவது ஓய்ந்ததா திமுக தலைவரின் குடும்ப வாரிசு அரசியல். திரும்ப திமுக ஆட்சி துளிர்த்த வேளை. டெல்லிக்கு மருமான் மாறன் நிலை தாண்டி அவர் மகன் தயாநிதி மாறன் முடிசூடிக் கொண்டார். மதுரைக்கு அழகிரி, சென்னைக்கு ஸ்டாலின், பொறுப்புக்கு கனிமொழி என பிள்ளைகளாக, மருமக, பேரப்பிள்ளைகளாக என்று குடும்ப வாரிசு அரசியலே பரிவட்டம் கட்டியது. அதை அடி ஒற்றியே திமுக கழக குடும்பத்தில் மாநில வாரியாக, மாவட்ட வாரியாக உடன்பிறப்புகள் எல்லாமே குடும்ப வாரிசுகளையே நுழைத்து மகிழ்ந்து மிதந்தனர்.

தன் கட்சியில் வாரிசு அரசியலே இல்லை என்று எம்ஜிஆர் தெளிவுபடுத்திய அதிமுகவில் மட்டும் என்ன நடந்தது?

‘மதுரையில் செங்கோல் கொடுத்தார் மன்னவர். ஆதலினால் நானே அரசியல் வாரிசு!’ என்று சூளுரைத்து புறப்பட்டார் ஜெயலலிதா. அவரை ஓரங்கட்டினார் எம்ஜிஆர் இறக்கும் வரை அமைதியாக அவருடன் இல்லறம் நடத்தி வந்த வி.என். ஜானகி. இவருக்கா முதல்வர் ஆசை என்று தமிழகமே ஆச்சர்யப்பட்டு நின்ற வேளை. அவர் பின்னால் அருதிப் பெரும்பான்மை எம்எல்ஏக்களை நிறுத்தி அரசியல் சதுரங்கமே ஆடிக்காட்டினார் ஆர்.எம். வீரப்பன்.

ராமவரம் தோட்டத்திலிருந்து வந்த மனைவி என்ற அடையாள வாரிசின் மூலம் கட்சியில் ஜொலித்த ஜெயலலிதா நாயகியானார். சேவல் சின்னத்தில் நின்று எதிர்க்கட்சி தலைவர் ஆனார். ஜானகியின் இரட்டைப்புறாவுக்கு கிடைத்ததோ இரண்டே இரண்டு சீட். மனம் வெம்பிய எம்ஜிஆர் மனைவி இரட்டை இலையை ஜெயலலிதாவிற்கு சொந்தமாக்கி விட்டு மறைந்தார். பிறகு நடந்த தேர்தல்களில், தைரியமாக எதிர்கொண்ட அரசியல் வாழ்க்கையில் நானே எம்ஜிஆரின் வாரிசு என்று சொல்லும் நிலை மாற்றி, நான் எம்ஜிஆரையும் மிஞ்சியவள் என்று தன்னை நிந்தித்தவர்களையும் சொல்ல வைத்தார். தாய்த்திருநாட்டிலும், தமிழ்த்திருநாட்டிலும் மட்டுமா இந்த குடும்ப அரசியல்? ஆந்திராவில் நாயுடுகாரு, பீகாரில் லல்லுயாதவு எல்லாமே குடும்ப ஆட்சிதான்.

இதையெல்லாம் பார்த்தோ என்னவோ, தமிழகத்தில் புதிய சுனாமியாய் புறப்பட்ட விஜயகாந்த் கட்சியை தொடங்கும்போதே மனைவி, மைத்துனரை கூட்டிக் கொண்டே அலைந்தார். ‘எடுத்த எடுப்பில் குடும்ப அரசியல் நடத்துகிறீர்களே? மனைவியை உடன் அழைத்துக் கொண்டே செல்கிறீர்களே?’ என்று கேட்டபோது கூட, ‘நான் என் மனைவியைத்தானே அழைத்துக் கொண்டு செல்கிறேன். அதில் என்ன தப்பு?’ என்று எக்குத்தப்பாய் கேட்டு கேட்டவர்களையும் வாய்மூட வைத்தார். ஜாதி அரசியலுக்கு அடிகோலிய மருத்துவர் ஐயா போன்றவர்கள் இதை கவனித்தோ என்னவோ தன் பிள்ளையையே முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து மக்களிடையே பகடிக்கு ஆளாக்கினார்.

ஜெயலலிதா மறைந்த பின்பு இப்போது அரசியலில் புதிய வாரி முறை உட்புகுந்திருக்கிறது.

‘என் அத்தை ஜெயலலிதா. நான்தான் அவரின் அரசியல் வாரிசு!’ என்று புதிய புயல் எழுந்து நிற்கிறது. ஜெயலலிதா சாயலிலே உள்ள தீபா தன்னை ஜெயலலிதாவாகவே உருவகப்படுத்தி தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். முதல்வர் சமாதியில் மலர்வளையம் வைக்கிறார். ஜெயலலிதா பிறந்த நாளில் கட்சி தொடக்கம் என அறிவிக்கிறார்.

அதற்கு முன்னே, ‘உடன்பிறவா தோழியாக இருந்து வாழ்க்கை முழுவதும் ஜெயலலிதாவுக்கு பணிவிடை செய்தவள் நான். என்னை உண்மையான வாரிசாக தொண்டர்கள் ஏற்றுக் கொண்டார்கள். எம்எல்ஏக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டார்கள்!’ எனச் சொல்லி புறப்பட்டார் சசிகலா மங்கை.

கார்டன் அவருக்கு, கோடநாடும் அவருக்கு. முதல்வர் இறுதி அடக்க சடங்குகள் கூட அவருக்கேதான்.

ஜெயலலிதா போல் சேலை, ஜெயலலிதா போல் ரவிக்கை. ஜெயலலிதா போலவே நெற்றியில் பொட்டு; நீள் கோடு என ஒப்பனை செய்தார். கட்சி பொதுச்செயலாளர் பொறுப்பும் வாங்கி, சட்டப்பேரவை அதிமுக உறுப்பினர்களின் தலைவர் என முன்மொழிவும் பெற்று, முதல்வராக முடிசூட ஆளுநரிடம் கடிதம் கொடுக்கிறார்.

இடையில் வம்பு வழக்கு. உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு தேதி அறிவிப்பு. ஆளுநரோ, அதோ, இதோ என்று ஊட்டியிலிருந்து கோவைக்கு, கோவையிலிருந்து டெல்லிக்கு, டெல்லியிலிருந்து மும்பைக்கு பறக்கிறார். ஆஹா இந்த வாரிசின் நிலை என்னவோ என்று தங்கத்தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியத்திருநாடே பார்த்துக் கொண்டிருக்க, பன்னீரின் சமாதி தியானம் புதியதொரு சுனாமியை ஏற்படுத்துகிறது.

‘அம்மாவின் ஆன்மாவுடன் பேசிவிட்டேன்!’ என புறப்படுகிறார். அங்கே நான் மிரட்டப்பட்டேன்; நிறைய பேர் மிரட்டிக்கடத்தப்பட்டுள்ளனர். அதிரடியாய் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பேட்டிகள் ‘அம்மா இருந்த போதே 2 முறை அவரால் முதல்வர் ஆக்கப்பட்டவன்; நானே அம்மாவின் அரசியல் வாரிசு; அவர் (சசிகலா) ஒரு கவுன்சிலராகக்கூட இதுவரை ஆக்கப்படாதவர். எப்படி அம்மாவின் வாரிசாக முடியும்!’ என்று அவரின் வார்த்தைகள் புறப்படுகிறது.

மகானாக, மகனாக, மகளாக, மருமானாக, அக்கா மகனாக, அண்ணன் மகளாக, உடன்பிறவா சகோதரியாக...முதல்வர் பதவிகளின் அடையாளமாக...

அடேங்கப்பா! இந்திய அரசியலில் வாரிசுகளுக்கான அடையாளம் இன்னமும் என்னென்ன உருவில் கல்லா கட்டுமோ? அது என்னென்ன செய்யுமோ?

ஹெச்1பி விசா பிரச்சினை பாதிப்பு குறித்த தகவல்களை ஐடி நிறுவனங்கள் அளிக்க மத்திய அரசு உத்தரவு


வெளிநாட்டு பணியாளர்கள் ஹெச்1பி விசா மூலமாகவே அமெரிக்காவுக்கு செல்ல முடியும். ஹெச்1பி விசாவில் பல மாறுதல்களை கொண்டுவர அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலைமையில், விசா மாறுதல் காரணமாக இந்திய ஐடி துறையில் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டிருக்கிறது.

இது தொடர்பாக நாஸ்காம் தலைவர் ஆர்.சந்திரசேகர் கூறியதாவது: ஐடி துறையில் என்ன பாதிப்பு ஏற்படும், அமெரிக்க பொருளாதாரத்தில் இந்திய ஐடி துறையின் பங்கு என்ன, அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியாவால் கிடைக்கும் வாய்ப்புகள் என்ன, விசா பிரச்சினையால் இரு நாடுகளுக்கும் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது உள்ளிட்ட தகவல்களை மத்திய அரசு கேட்டிருக்கிறது. இந்த தகவல்கள் அடிப்படையிலே ட்ரம்ப் தலைமையிலான அரசிடம் பேச்சு வார்த்தை தொடங்க முடியும் என கேட்டிருப்பதாக சந்திரசேகர் கூறினார்.

முன்னதாக கடந்த 9-ம் தேதி மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழு விசா பிரச்சினை குறித்து விவாதித்தது. இதில் வெளியுறவுத்துறை செயலாளர், நிதிச் செயலாளர், தொலைத்தொடர்புத்துறை செயலாளர், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி துறை செயலாளர், வர்த்தகத்துறை செயலாளர் மற்றும் நாஸ்காம் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்க்க மத்திய அரசும், தகவல் தொழில் நுட்பத்துறையும் ஒன்றாக இணைய வேண்டும் என்றும் சந்திரசேகர் கூறினார்.

ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு செல்பவர்களின் குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் 60,000 டாலர் என்ற அளவில் இருந்தது. இதனை 1.30 லட்சம் டாலராக உயர்த்த அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. 1989-ம் ஆண்டு குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்படவில்லை. குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்படும் போது இந்திய ஐடி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

இந்திய ஜிடிபியில் ஐடி துறையின் பங்கு 9.3 சதவீத அளவில் இருக்கிறது. இந்த துறையில் 37 லட்சம் பணியாளகள் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு ஆண்டிலும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை ஹெச்1பி விசா மூலம் ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு அனுப்புகின்றன.

NEWS TODAY 17.08.2026