சந்தேகம் சரியா 21: உடலுக்கு வலு சேர்ப்பது நிலக்கடலையா? முந்திரிப் பருப்பா?
தினமும் மூன்று முந்திரிப் பருப்பு சாப்பிட்டால் உடலுக்கு வலிமை கூடும் என்று ஒரு மருத்துவப் பத்திரிகையில் படித்தேன். முந்திரியைவிட நிலக்கடலைதான் மிகவும் நல்லது என்கிறார் என் அப்பா. இவற்றில் எது சரி?
முந்திரிப் பருப்பு, நிலக்கடலை, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு என அவரவர் வசதிக்கேற்ப பலதரப்பட்ட பருப்புகளைச் சாப்பிடுவது நடைமுறை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியில் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதுதான் நல்லது என்று எதையும் குறிப்பிட்டுக் கூற முடியாது. காரணம், பலருக்கு இவை தேவைப் படும்; ஒரு சிலருக்கு இவை வேண்டாதவையாகவும் இருக்கலாம். எந்தப் பருப்பில் என்ன சத்து உள்ளது என்பதைத் தெரிந்துகொண்டால், அது யாருக்கு உதவும், யாருக்கு உதவாது என்பது புரியும்.
முந்திரிப் பருப்பு
கொழுப்பு (43 சதவீதம்) அதிகமுள்ள உணவுப் பொருள் இது. 100 கிராம் முந்திரி 550 கலோரிகளைத் தரவல்லது. இது காலை உணவுக்குச் சமம். முந்திரி உடலுக்கு அதிக வலிமையைச் சேர்க்கிறது. தாமிரம், துத்தநாகம், மாங்கனீஸ், மெக்னீசியம் ஆகிய தாதுகள் இதில் மிகுந்துள்ளன. நார்ச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி தொகுதிகள் ஓரளவுக்கு உள்ளன. கால்சியம், குரோமியம் ஆகியவை மிகவும் குறைந்த அளவில் உள்ளன. வைட்டமின் ஏ, சி, டி, பி12 சத்துகள் இதில் இல்லவே இல்லை.
உடல் எடை குறைந்தவர்கள், வளரும் பருவத்தில் உள்ளவர்கள், உடலுக்குக் கொழுப்பு தேவைப்படுபவர்கள் தினமும் ஐந்து முந்திரிப் பருப்புகள்வரை சாப்பிடலாம். இந்த அளவை மீறினால் கொழுப்பு கூடிவிடும். அதிலும் நிறைய பேர் முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துச் சாப்பிடுகிறார்கள். உப்பு அல்லது காரம் சேர்த்துச் சாப்பிடுகிறார்கள். பெரும்பாலான பேக்கரி உணவுகளிலும் ஐஸ்கிரீம், சாக்லேட், புட்டிங் போன்றவற்றிலும் முந்திரிப் பருப்பு சேர்க்கப்படுகிறது.
இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டால் ரத்தக் கொழுப்பு அதிகரித்து, உடல் பருமன், உயர் ரத்தஅழுத்தம், இதயநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே, `அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதைக் கவனத்தில் கொண்டு, இவற்றை அளவோடு சாப்பிடுவது நல்லது.
இதய நோயாளிகள், ரத்தக் கொழுப்பு மிகுந்தவர்கள், உயர் ரத்தஅழுத்தம், உடல் பருமன் கொண்டவர்கள் கண்டிப்பாக முந்திரிப் பருப்பைச் சாப்பிடக் கூடாது.
நிலக்கடலை
புரதம், கொழுப்புச் சத்துகளைக் குறைந்த செலவில் தரும் தாவரச் சத்துப் பொருட்களில் முக்கியமானது நிலக்கடலை. கடலையை வறுத்து அதனுடன் வெல்லம், சர்க்கரை போன்ற இனிப்புகளைக் கலந்து கடலை மிட்டாய், கடலை பர்பி போன்ற பல உணவுகளைத் தயாரிக்கிறார்கள். இது ஏழைகளின் சத்துப்பொருள் என்றால் மிகையில்லை.
இதில் புரதம் (26 சதவீதம்), கொழுப்பு (75 சதவீதம்), கொலின், பாஸ்பரஸ், வைட்டமின் பி தொகுதிகள் அதிகமுள்ளன. குறிப்பாகத் தயமின், நியாசின் ஆகிய வைட்டமின்களும் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளன. தாமிரம், துத்தநாகம் முதலியவை ஓரளவு உள்ளன. வைட்டமின் ஏ, சி, டி, பி12 சத்துகள் இதிலும்கூட இல்லை.
100 கிராம் நிலக்கடலை 570 கலோரி ஆற்றலைத் தரக்கூடியது. உடலுக்கு உடனடியாக ஆற்றல் தேவைப்படுபவர்களும் புரதம் தேவைப்படுபவர்களும் இதைச் சாப்பிடலாம். வளர்ச்சிப் பருவத்தில் உள்ள குழந்தைகள், ஊட்டச்சத்து குறைந்தவர்கள், குறைந்த உடல் எடை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைப் பேறு அடைந்த தாய்மார்கள், மாணவர்கள் ஆகியோர் தினமும் 100 கிராம் அளவுக்கு நிலக்கடலையைச் சாப்பிடலாம். உடல் பருமன் கொண்டவர்கள்கூடக் குறைந்த அளவில் இதைச் சாப்பிடலாம். ரத்தக் கொழுப்பு மிக்கவர்கள், வாயுப் பிரச்சினை உள்ளவர்களுக்கு இது ஆகாது.
எச்சரிக்கை
ஈரமான அல்லது கெட்டுப்போன நிலக்கடலையில் ஒருவித பூஞ்சைக் கிருமி வளரும். இது ஒவ்வாமையை ஏற்படுத்தும். நஞ்சாக மாறும். கல்லீரலைப் பாதிக்கும். உதாரணத்துக்கு, அஸ்பெர்ஜிலஸ் ஃபிளேவஸ் (Aspergillus flavus) எனும் பூஞ்சை வெளியிடுகிற அஃப்ளடாக்சின் (Aflatoxin) எனும் நச்சுப்பொருள் புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது. எனவே, பச்சை நிலக்கடலையைச் சாப்பிடாதீர்கள். அதை அவித்து அல்லது வறுத்துச் சாப்பிட்டால் இந்த ஆபத்து குறைந்துவிடும்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com
மீண்டும் நாய்க்கடி: ஊசி தேவையா?
“வீட்டு நாய் கடித்தாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா?” கட்டுரையைப் படித்துவிட்டு, “நாய் கடித்த பிறகு 5 தவணை ஊசி போட்டுக்கொண்ட பின்னர் அடுத்த ஆறு மாதங்களில் மறுபடியும் தெருநாய் கடித்தால் ஊசியைத் தவிர்க்கலாமா, இல்லை மறுபடியும் 5 ஊசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டுமா .... தெளிவு படுத்துங்கள்” என்று ஒரு வாசகர் கேட்டிருக்கிறார். இதுபோல் இன்னும் சிலர் கேட்டனர்.
இதற்கான பதில்:
ஏற்கெனவே ரேபீஸ் தடுப்பூசிகளை முறைப்படி 5 தவணைகள் போட்டுக் கொண்டவர்களை, அடுத்த 3 முதல் 5 வருடங்களுக்குள் மீண்டும் வெறிநாய் கடித்தால், நாய் கடித்த அன்று ஒரு தடுப்பூசியும், அடுத்த 3-லிருந்து 7 நாட்களுக்குள் மற்றொரு தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும். முதல்முறையாக ரேபீஸ் தடுப்பூசிகளை முறைப்படி போட்டு 5 வருடங்கள் ஆகிவிட்டவர்களை மறுபடியும் வெறிநாய் கடித்தால், அவர்கள் எப்போதும்போல் நாய் கடித்த அன்று முதல் ஊசி, 3-வது நாள் 2-வது ஊசி, 7-வது நாள் 3-வது ஊசி, 14-வது நாள் 4-வது ஊசி, 28-வது நாள் 5-வது ஊசி என 5 தவணைகள் போட்டுக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment