Monday, February 13, 2017

சந்தேகம் சரியா 22: வீட்டில் பூனை வளர்த்தால் ஆஸ்துமா வருமா?

டாக்டர் கு. கணேசன்

எனக்குச் சிறுவயதிலிருந்தே ஆஸ்துமா உண்டு. நான் பூனை வளர்க்க ஆசைப்படுகிறேன். பூனை வளர்த்தால் ஆஸ்துமா அதிகமாகிவிடும் என்று எச்சரிக்கிறார் என் அம்மா. இது சரியா?

சரிதான்.

நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகள் ஆஸ்துமாவைத் தூண்டுவது உண்மைதான். உங்களுக்கு ஏற்கெனவே ஆஸ்துமா இருப்பதாகச் சொல்கிறீர்கள். ஆகவே, இதற்கான சாத்தியம் பல மடங்கு அதிகரிக்கும். என்றாலும், நீங்கள் பூனை வளர்க்க ஆசைப்படுகிறீர்கள் என்பதால், சில எச்சரிக்கைகளைக் கடைப்பிடித்தால், ஆஸ்துமா அதிகமாகும் சாத்தியத்தைக் குறைக்கலாம். அதற்கு முன்னால், வளர்ப்புப் பிராணிகள் எவ்வாறு ஆஸ்துமாவைத் தூண்டுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

ஆஸ்துமா வருவது எப்படி?

வளர்ப்புப் பிராணிகளின் உடலில் இருந்து உதிரும் செல்கள், ரோமம், உமிழ்நீர், சிறுநீர், மலக் கழிவு ஆகியவை காற்றில் கலந்து நாசி, சரும அலர்ஜியை ஏற்படுத்தும். இவை பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாத அளவிலேயே உள்ளன. எனவே, வீட்டில் அவை ஒட்டிக்கொள்ளும் உடைகள், சன்னல் திரைச்சீலைகள், சோபா செட்டுகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், மிதியடிகள், கழிவறை உபகரணங்கள், கைப்பிடிகள் போன்றவற்றில் பல வாரங்களுக்கு வசிக்கும். அவை நம் உடலுக்குள் சென்று அலர்ஜியை ஏற்படுத்தும்.

பூனை, நாய், முயல், கிளி, புறா, கோழி போன்ற வளர்ப்புப் பிராணிகளைத் தொட்டுத் தூக்கும்போதும், அவற்றோடு விளையாடும்போதும் மேற்சொன்ன அலர்ஜிப் பொருட்கள் நேரடியாகவே நம் உடலில் பட்டு அலர்ஜிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

இந்த அலர்ஜிப் பொருட்கள் உடலுக்குள் சென்றதும் ஆன்டிஜென்களாக செயல்படும். அப்போது ரத்தத்தில் ‘இம்யூனோகுளோபுலின் இ’ (IgE) எனும் எதிர்ப்புரதம் உருவாகும், இது ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, ‘லுயூக்கோட்ரின் (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை, ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து நரம்புமுனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் மூக்கு ஒழுகுவது, தும்மல், அரிப்பு, தடிப்பு, சருமம் சிவந்து வீங்குவது, ஆஸ்துமா போன்றவை ஏற்படுகின்றன.

எச்சரிக்கைகள் என்னென்ன?

# வளர்ப்புப் பிராணி அலர்ஜி உள்ளவர்கள் வீட்டில் எதையும் வளர்க்காமல் இருப்பதே நல்லது.

# மீறி வளர்க்க ஆசைப்பட்டால், வீட்டுக்கு வெளியில் தனியாக ஒரு அறையில் வளர்த்தால், அலர்ஜி பாதிப்பு குறையும்.

# வீட்டில் வளர்ப்பவர்கள் குறைந்தது படுக்கை அறைக்கு அவை வராமல் பார்த்துக்கொள்வது நல்லது.

# பூனை, நாய், முயல், கிளி போன்றவற்றைத் தொட்டுத் தூக்குவது, முத்தம் கொடுப்பது போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்,

# வீட்டைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது முக்கியம்.

# வீட்டுச் சுவர்கள், ஜன்னல் கிரில்களை அடிக்கடி தூய்மைப்படுத்த வேண்டும்.

# படுக்கை விரிப்புகள், தலையணை உறைகளை வாரம் ஒருமுறை சூடான தண்ணீரில் ஊறவைத்து, அலசி சுத்தம் செய்ய வேண்டும்.

# சன்னல் திரைச்சீலைகளை அடிக்கடி மாற்ற வேண்டும்.

# ஹெப்பா ஃபில்டர் (HEPA filter) பொருத்தப்பட்ட வாக்குவம் கிளீனர்கள் மூலம் சோபா, மிதியடி, படுக்கை விரிப்புகளைச் சுத்தப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...