Monday, February 13, 2017

‘காரட்’ சாப்பிட்டால் கண்ணாடியைக் கழற்றிவிட முடியுமா?

மு. வீராசாமி

காரட் சாப்பிட்டால் கண்ணாடியைக் கழற்றி விடலாம் என்ற நம்பிக்கை நீண்டகாலமாக நிலவிவருகிறது. இன்றும் அது வலுவாக நம்பப்படுவதற்கு என்ன காரணம்?

ராயல் விமானப் படையும் காரட்டும்

ஆப்கானிஸ்தானிலிருந்து உலகின் மற்றப் பகுதிகளுக்குக் காரட் பரவியதாகக் கூறப்படுகிறது. ஆரம்பக் காலத்தில் ஐரோப்பாவில் பாம்புக் கடிக்கும், பால்வினை நோய்க்கும் மருந்தாகக் காரட்டைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப் போரின்போது ‘பிரிட்டிஷ் ராயல் விமானப் படையினர்’ இரவு நேரத்திலும் சிறப்பாகப் பணியாற்றியதாகவும், இதற்கு அவர்கள் காரட்டை அதிகமாகச் சாப்பிட்டு வந்ததுதான் காரணம் என்றும் ஒரு விமானி தெரிவித்தார். தங்கள் நாட்டு விமானப்படையினரின் ஆற்றலுக்கும் - குறிப்பாக இருட்டில்கூடத் தெளிவாகப் பார்த்து எதிரி விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதற்கும் தினமும் அவர்கள் காரட்டை அதிகமாகச் சாப்பிட்டதே காரணம் என்றும் பிரிட்டிஷ் ராணுவம் அறிக்கை வெளியிட்டது. அதற்குப் பிறகு காரட் சாப்பிட்டால் பார்வை நன்றாக இருக்கும் என்ற கருத்து வலுவடைய ஆரம்பித்தது.

உண்மையிலேயே காரட் கண் ணுக்கு நல்லதா? கண்ணுக்குத் தேவையான எல்லாச் சத்தும் காரட்டில் இருக்கிறதா என்ற சந்தேகங்கள் எழலாம்.

வைட்டமின் ‘ஏ’

பார்வைத் திறனோடு நெருங்கிய தொடர்புகொண்டது வைட்டமின் ‘ஏ’. கீரை, காரட், பால், முட்டை, ஈரல், கறிவேப்பிலை, கொத்துமல்லி, பப்பாளி, மாம்பழம் போன்றவற்றில் வைட்டமின் ‘ஏ’ இருக்கிறது. சாப்பிடும்போது சக்கையென நினைத்துத் தூர எறிகிறோமே அந்தக் கறிவேப்பிலையிலும் கொத்துமல்லியிலும்தான் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம். வைட்டமின் ‘ஏ’ சத்துப் பற்றாக்குறையால் பார்வையிழப்பு ஏற்படுவதைத் தடுக்க, அது நிறைந்துள்ள உணவுகள் உதவும்.

40 ஆண்டுகளுக்கு முன் வைட்டமின் ‘ஏ’ சத்துப் பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. சரியான ஊட்டச்சத்து இல்லாததாலும், போதிய அளவு வைட்டமின் ‘ஏ’ சத்து கிடைக்காததாலும் குழந்தைகளுக்கு நிரந்தரப் பார்வையிழப்பு ஏற்பட்டது. குழந்தைக்கு வயிற்றில் புழுத்தொற்று (Worm Infestation) இருந்தால், வைட்டமின் ‘ஏ’ சத்தை உடல் கிரகிக்க முடியாத நிலைமை இருந்தாலும் இப்பிரச்சினை ஏற்படும்.

அரசுத் திட்டம்

வைட்டமின் ‘ஏ’ சத்துப் பற்றாக் குறைக்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் வைட்ட மின் ‘ஏ’ அதிகமுள்ள உணவை அதிகம் உட்கொண்டாலே நிரந்தரப் பார்வையிழப்பைத் தடுத்துவிடலாம்.

இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, ‘யுனிசெஃப்’ அமைப்புடன் இணைந்து வைட்டமின் ‘ஏ’ சத்துப் பற்றாக்குறையைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. குழந்தை பிறந்த முதல் ஆறு மாதத்தில் இருந்து, ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும் ஐந்து வயதுவரை வைட்டமின் ‘ஏ’ சத்துத் திரவம் ஆரம்பச் சுகாதார நிலையங்கள் / துணைச் சுகாதார நிலையங்கள் மூலம் கொடுக்கப்பட்டது. இன்றும் இத்திட்டம் தொடர்கிறது. இதனால் வைட்டமின் ‘ஏ’ பற்றாக்குறையால் குழந்தைகளுக்குப் பார்வையிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

எனவே, வைட்டமின் ‘ஏ’ சத்து திரவத்தைத் தாண்டி காரட், கீரையைத் தொடர்ந்து உண்டுவந்தால், வைட்டமின் ‘ஏ’ பற்றாக்குறையால் பார்வையிழப்பு ஏற்படாது. அப்படி யானால் கண்ணாடிக்கும் வைட்டமின் ‘ஏ’ சத்துக்கும் தொடர்பில்லையா?

இரண்டும் வேறு வேறு

பார்வைக் குறைபாடு என்பது கண்ணின் உருவ அமைப்பில் ஏற்படக்கூடிய பிரச்சினையால் வருவது. வைட்டமின் ‘ஏ’ உள்ள காரட்டையோ, கீரையையோ சாப்பிடுவதன் மூலம் கண்ணின் உருவ அமைப்பைச் சரி செய்ய முடியாது. எனவே காரட், கீரை சாப்பிட்டாலும் உருவ அமைப்புப் பிரச்சினையால் ஏற்படும் பார்வைக் குறைபாட்டைத் தவிர்க்க முடியாது.அதுபோலவே, கண்ணாடி போட்டிருக்கும் ஒரு குழந்தை தொடர்ந்து காரட் சாப்பிடுவதன் மூலம் பார்வைக் குறைபாடு சரியாகிக் கண்ணாடியைக் கழற்றிவிடவும் முடியாது.

கட்டுரையாளர், மதுரை தேசிய கண் மருத்துவ சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...