முதல்வரின் தகுதியைக் கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு இருக்கிறது! - ப.சிதம்பரம் பேட்டி
மோடி அரசின் பணமதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பின் மீண்டும் பரபரப்பாகிவிட்டார் ப.சிதம்பரம். சமீபத்தில் புதிய புத்தகம் ஒன்றையும் - ‘ஃபியர்லெஸ் இன் ஆப்போசிஷன்’ (Fearless in Opposition) - கொண்டு வந்திருக்கிறார். தமிழக அரசியல் கொந்தளிப்பான சூழலில் இருக்கும் நிலையில் பலதும்பற்றி வெளிப்படையாகப் பேசினார் சிதம்பரம்.
அதிமுகவில் ‘ஜெயலலிதாவுக்குப் பிறகு யார் வாரிசு?’ என்ற பூசல் வலுத்துவருகிறது. இந்த நிகழ்வுகளை எப்படிப் பார்க்கிறீர்கள், உள்துறை அமைச்சராக இருந்த நீங்கள், இதில் ஆளுநர் எப்படிச் செயல்பட வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
அதிமுகவின் உள்கட்சி விவகாரங்கள் குறித்து கருத்துக் கூற முடியாது. அக்கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் உரிமை அது. ஒருவர் சட்டப் பேரவை அதிமுக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்தான் முதலமைச்சர் என்று அறிவிக்கப்பட்ட பிறகு - முதலமைச்சர் பதவிக்கு உரிய தகுதி அவருக்கு இருக்கிறதா என்று கேள்வி கேட்கும் உரிமை தமிழக மக்களுக்கு இருக்கிறது. அவர்கள் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் கூட, இவரைவிட நல்ல தலைவர் (முதல்வர் பதவிக்கு) உங்கள் கட்சியில் இல்லையா என்று கேள்வி கேட்பது நம்முடைய உரிமை. அதிமுக இன்று இருக்கும் விநோத நிலை காரணமாகத்தான் சமூக ஊடகங்களிலும் பிறவற்றிலும் அதைப் பற்றிய விமர்சனங்கள் எழுகின்றன. அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கும் அவர்களுடைய கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே இடைவெளி ஏற்பட்டுவிட்டதாக இவற்றிலிருந்து அறிய முடிகிறது. இந்த இடைவெளியை ஓ. பன்னீர்செல்வத்துக்குப் பதிலாக இன்னொருவரை அந்தப் பதவியில் அமர்த்துவதன் மூலமாக மட்டும் இட்டு நிரப்பிவிட முடியாது. அப்படிச் செய்தாலும் இந்த இடைவெளி மேலும் பெரிதாகத்தான் ஆகும். சட்டப்பேரவையில் பெரும்பான்மை வலு உள்ள கட்சியின் சார்பில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறவரைத்தான் முதலமைச்சராகப் பதவி ஏற்க அழைக்க வேண்டும் ஆளுநர் என்று அரசியல் சட்டம் வரையறுத்திருக்கிறது. இருந்தாலும், “பின்வரும் காரணங்களுக்காக மேலும் சில நாட்களுக்கு நான் காத்திருக்க விரும்புகிறேன்” என்று சொல்லி, பதவியேற்பை ஒத்திவைப்பதற்கான ‘விருப்ப அதிகாரம்’ என்ற சிறிய வாய்ப்பு ஆளுநருக்கு இப்போது இருப்பதாகவே கருதுகிறேன். இப்படியொரு விருப்ப வாய்ப்பு இதுவரை அரசியல் சட்டத்தால் உரசிப் பார்க்கப்பட்டதில்லை என்றாலும் ஆளுநருக்கு இது வாய்த்திருக்கிறது.
‘தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்க வேண்டும்’ என்று மக்கள் இயக்கம் தமிழகத்தைச் சில நாட்களுக்கு உலுக்கி எடுத்தது. அதன் கோரிக்கையைவிட அந்த இயக்கம் பெரிதாக இருந்தது, ஏன்?
வெவ்வேறு அச்சங்களும், கவலைகளும் கொண்ட மக்களை ஒருங்கிணைக்கும் புள்ளியாகத்தான் அந்தக் கிளர்ச்சியைப் பார்க்கிறேன். மெரினா கடற்கரையில் திரண்ட போராட்டக்காரர்களில் பெரும்பாலானவர்கள் நகர்ப்புற இளைஞர்கள், அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய வாழ்நாளில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நேரில் பார்த்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன். அந்த இளைஞர்களிடையே குறிப்பாக, வேலைவாய்ப்பு கிடைக்காத இளைஞர்களிடையே - எதிர்காலம் குறித்து ஆழ்ந்த கவலை, அச்சம், குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது வேலைவாய்ப்புகள் இல்லை. சிறிய, நடுத்தரத் தொழில் பிரிவுகள், சேவைத் துறைகள் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகளைத் தரும் தமிழ்நாடு போன்ற மாநிலத்திலேயே இப்போது புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதில்லை.
அதுமட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் சாதிரீதியிலான அணிதிரளல்கள் அதிகரித்துவருகின்றன. தமிழகத்தின் நெடிய வரலாற்றில் இப்படிப்பட்ட சாதிய உணர்வுகள் வெளிப்பட்டதில்லை. வன்னியர்-தலித், தேவர்-தலித் மற்றும் இதர சமூகங்களுக்கிடையில் பிளவுகள் காணப்படுகின்றன. இந்தப் பிளவு மிகவும் தீவிரமாகிவிட்டதால் எதிர்காலம் குறித்து இளைஞர்களிடையே கவலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, அனைவரும் ஜல்லிக்கட்டு என்ற ஒற்றைக் காரணத்தைப் பற்றிக்கொண்டு கிளர்ச்சியில் இறங்கினர். பல்வேறு காரணங்களுக்காக நடந்த கிளர்ச்சி அது. ஆனால், ஜல்லிக்கட்டு மையப்படுத்தப்பட்டது. மத்திய அரசுக்கு எதிராக ஆழ்ந்த கோபம் இருக்கிறது. மக்கள் இயக்கம் தொடங்கிய 48 மணி நேரத்துக்குப் பிறகு மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. பன்னீர்செல்வத்துக்கு எதிராகவோ அதிமுகவுக்கு எதிராகவோ கோஷங்கள் எழுப்பப்படவில்லை. ஏன்? தங்களுடைய பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆதிக்க உணர்வுமிக்க - ஜனநாயக விரோத - பிளவுபடுத்தும் எண்ணம் கொண்ட - மோதல்களைத் தூண்டிவிடுகிற மத்திய அரசுதான் காரணம் என்று அவர்கள் நினைத்தனர். பாஜகவின் தலைவர்கள் வட இந்தியர்கள் - இந்தி வெறியர்கள் - ஆதிக்க உணர்வு மிக்கவர்கள், பிற்போக்குவாதிகள் என்றே இளைஞர்கள் பார்க்கின்றனர்.
உங்களுடைய புத்தகத்துக்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் முன்னுரை எழுதியிருக்கிறார். கவர்னர் பதவியிலிருந்து விலக அவர் உண்மையிலேயே அப்போது விரும்பினாரா?
அவருடைய வெளியேற்றம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. அவரிடம் பேசியதிலிருந்து சந்தேகமற இது தெரிந்தது. 2018 செப்டம்பர் வரையில் பதவிக்காலத்தைப் புதுப்பித்துக் கொடுத்திருந்தால், அவர் மகிழ்ச்சியோடு ஏற்றிருப்பார். அதன் பிறகு வற்புறுத்தினால் 2019 மே வரையிலும்கூடப் பதவி வகித்திருப்பார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முழுப் பதவிக்காலம் வரையில் அவர் நீடித்திருக்க முடியும். ஆனால், அரசுக்கு வேறு எண்ணம் இருந்தது. எனவே, தனக்கு வேண்டியவர்கள் மூலம் ரகுராம் ராஜனைக் கடுமையாக விமர்சனம் செய்ய வைத்தது. சுயமரியாதைமிக்க எந்தப் பொருளாதார நிபுணராலும் அத்தகைய நிலையில் பதவியில் நீடிக்க முடியாது.
அப்படியென்றால், அவர் பதவி விலகிய பிறகு எடுக்கப்பட்ட முக்கிய முடிவான பணமதிப்பு நீக்கம் பற்றிப் பேச வேண்டியதாகிறது. நாட்டின் ஜி.டி.பி.யில் இது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசு ஒரு கணக்கைக் கூறுகிறது, உங்களுடைய அனுமானம் என்ன?
உண்மையான மதிப்பீட்டை வெளியிட அரசு அஞ்சுகிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் ஒட்டுமொத்த ஜிடிபி வருமானத்திலிருந்து கிட்டத்தட்ட 1% அளவைக் குறைத்துவிட்டார்கள். 1% ஜிடிபி என்பது ரூ.1.5 லட்சம் கோடி முதல் ரூ.2.25 லட்சம் கோடி வரையில் இருக்கும். முன் யோசனையின்றியும் பொறுப்பற்றும் எடுத்த நடவடிக்கையால் நாடு ரூ.2.25 லட்சம் கோடி வருவாயை இழந்து நிற்கிறது.
காங்கிரஸ் கட்சி தன்னுடைய லட்சியங்களையும் கொள்கைகளையும் மறுவரையறை செய்துகொள்ள வேண்டும் என்று ஒரு கட்டுரையில் எழுதியிருந்தீர்கள், அது இந்தப் புத்தகத்திலும் ஒரு அத்தியாயமாக இருக்கிறது. ஏன், எந்த விதத்தில்?
அமெரிக்காவில் உள்ள ஜனநாயக - குடியரசுக் கட்சிகளாக இருந்தாலும், பிரிட்டனில் உள்ள கன்சர்வேடிவ் - லேபர் கட்சிகளாக இருந்தாலும் ஒவ்வொரு 4 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகள் இடைவெளியில் தங்களுடைய கட்சியின் அடுத்த கொள்கைகள், இலக்குகள் எவையெவை என்று தீர்மானிக்கின்றன. காங்கிரஸ் கட்சியில் அப்படி முயற்சி மேற்கொண்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. மனித உரிமைகள், தனி மனித உரிமைகள், அந்தரங்க உரிமைகள் போன்றவை படித்த மாந்தர்களின் கவலைக்குரிய விஷயங்களாக இருக்கின்றன. இப்போது நாடு நகரமயமாகிறது. நாம் இன்னமும் நாட்டின் பெரும்பகுதி மக்கள் கிராமங்களிலேயே வாழ்வதாக நம்பிக்கொண்டிருக்கிறோம். கிராமப்புறங்களிலேயே பெரும்பாலான மக்களுடைய வாழ்க்கை முறை மாறிவருகிறது. அடுத்த பொதுத் தேர்தலின்போது நாட்டின் மக்கள்தொகையில் பாதி எண்ணிக்கை நகரங்களில்தான் வாழ நேரிடும் என்று நம்புகிறேன். நகர்ப்புற வறுமை என்பது கிராமப்புற வறுமையை விட வேறுபட்டது. ஒரு காலத்தில் வேலைவாய்ப்பு என்றாலே படிக்காத, தொழிற்பயிற்சி ஏதும் இல்லாத மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாகப் பார்க்கப்பட்டது. இப்போது படித்த, ஓரளவுக்குத் தொழில்திறன் படைத்தவர்களுக்காக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்தியப் பொருளாதாரத்தின் இயக்கவியல் 25 ஆண்டுகளில் மாறிவிட்டது. 1991-ல் நாம் கண்டுபிடித்த அதே கொள்கைகளைத்தான் சிற்சில மாற்றங்களோடு இப்போதும் அமல்படுத்திக்கொண்டிருக்கிறோம். இதைத் திருத்தி எழுத வேண்டிய நேரம் வந்திருக்கிறது. இது விமர்சனம் அல்ல, உண்மை. அடுத்த தலைமுறை வாக்காளர்கள் நமக்கு ஆதரவு தெரிவிக்க கொள்கைகளையும் இலக்குகளையும் புதிதாகத் திருத்திக்கொண்டேயிருக்க வேண்டும் என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொதுவானது.
சுருக்கமாகத் தமிழில்: சாரி ‘தி இந்து’ (ஆங்கிலம்)
No comments:
Post a Comment