தமிழக - இந்திய அரசியலில் வாரிசு அரசியலின் விநோத வெளிப்பாடுகள்
நாட்டின் சுதந்திர வேட்கை கொடிகட்டிப்பறந்த காலம் அது. தீரர் சத்தியமூர்த்தியின் அரசியல் வாரிசாக திகழ்ந்தார் காமராஜர். காந்தியடிகளின் அரசியல் வாரிசாக தன்னை காட்டிக் கொண்டார் ஜவஹர்லால் நேரு. சில தலைவர்கள் அரசியல் வாரிசு என்றால் என்ன என்பதற்கு நேர்மை, உழைப்பு, திறமை, சத்தியம், பொதுநலம் ஆகியவற்றை முன்னிறுத்தும் தலைவர்களை தங்களுக்குமுன்னிருத்தி தங்களுக்கான அரசியல் முன்னுதாரணங்களாக ஆக்கிக் கொண்டனர்.
அவர்களையே தன் அரசியல் குருநாதராக அறிவித்தும் கொண்டனர். அந்த குருநாதர்களுக்கும், சீடர்களுக்கும், அரசியல் வாரிசுகளுக்கும் அந்த அளவு அரசியல் பக்குவமும், முதிர்ச்சியும் இருந்தது. அரசியல் வாரிசு என்பதற்கு அர்த்தமும் புரிந்தது. மக்களும் மரியாதைக்குரிய அரசியல் வாரிசு என்ற விஷயத்தை ஆகர்ஷித்து போற்றி பூஜித்தனர்.
அதுவே சுதந்திர இந்தியாவில் வேறுமாதிரியாக மாறியது. நேரு மறைவிற்குப்பிறகு முளைவிட்டது குடும்ப வாரிசு அரசியல். இந்திரா காந்தியை பிரதமராக்க ஒரு சாரார் துடிக்க, சுதந்திர போராட்ட வேள்வித்தீயால் கருகிப்பிழைத்தவர்களால் அந்த வரலாற்றுப்பிழை காப்பாற்றப்பட்டது. லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். அது சிறிது காலம் கூட நீடிக்கவில்லை. அரசியல் சூட்சுமங்கள் சில இந்திராவை பிரதமர் ஆக்கியது. அதற்கு உறுதுணையாய் நின்றவர் காமராஜர்.
இந்திரா பின்னாளில் தன் அரசியல் வாரிசாக தன் இளையமகன் சஞ்சய்காந்திக்கு போஷாக்கு ஊட்டினார். இடையில் சஞ்சய்யின் அகால மரணம் தாயை பெரும்பாதிப்புக்கு உள்ளாக்கியது. பிறகும் விடாமல் விமான ஓட்டியாக இருந்த ராஜீவ்காந்தியை முன்வைத்தார். ‘நாட்டில் நடப்பது முடியாட்சியா? குடியாட்சியா?’ அப்போது தமிழகத்திலிருந்து கர்ஜித்தார் திமுக தலைவர் கருணாநிதி. அவரே பின்னாளில், ‘நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக!’ என்று கனிந்துருகினார்.
இந்திராவின் உயிர்த்தியாகம் ராஜீவ் ஆட்சிக்கு வழிகோழியது. ராஜீவ் போன பிறகு அவர் வாரிசு உருவில் மனைவி சோனியா வந்தார். பின்னர் ராகுல், ப்ரியங்கா என மகனும் மகளுமே வந்து தயார் நிலையில் நிற்கின்றனர். அன்று குடும்ப அரசியலுக்கு எதிராக கர்ஜித்த சிங்கம் ஒரு கட்டத்தில், ‘எம்ஜிஆர் என்ன பெரிய எம்ஜிஆர்?’ என்று தன் மகன் மு.க.முத்துவுக்கே எம்ஜிஆர் வேஷம் கட்ட வைத்தது. அதன் உரசலில் துளிர்த்த சிறுநெருப்பு கட்சிக்குள் வேறு விஷயங்களில் தீக்கிரையாக்கி எம்ஜிஆரை கட்சியை விட்டே வெளியேற வைத்தது. திமுக ஆட்சியை தொடர்ந்து இழக்க அதுவே காரணியாக வைத்தது.
அப்படியாவது ஓய்ந்ததா திமுக தலைவரின் குடும்ப வாரிசு அரசியல். திரும்ப திமுக ஆட்சி துளிர்த்த வேளை. டெல்லிக்கு மருமான் மாறன் நிலை தாண்டி அவர் மகன் தயாநிதி மாறன் முடிசூடிக் கொண்டார். மதுரைக்கு அழகிரி, சென்னைக்கு ஸ்டாலின், பொறுப்புக்கு கனிமொழி என பிள்ளைகளாக, மருமக, பேரப்பிள்ளைகளாக என்று குடும்ப வாரிசு அரசியலே பரிவட்டம் கட்டியது. அதை அடி ஒற்றியே திமுக கழக குடும்பத்தில் மாநில வாரியாக, மாவட்ட வாரியாக உடன்பிறப்புகள் எல்லாமே குடும்ப வாரிசுகளையே நுழைத்து மகிழ்ந்து மிதந்தனர்.
தன் கட்சியில் வாரிசு அரசியலே இல்லை என்று எம்ஜிஆர் தெளிவுபடுத்திய அதிமுகவில் மட்டும் என்ன நடந்தது?
‘மதுரையில் செங்கோல் கொடுத்தார் மன்னவர். ஆதலினால் நானே அரசியல் வாரிசு!’ என்று சூளுரைத்து புறப்பட்டார் ஜெயலலிதா. அவரை ஓரங்கட்டினார் எம்ஜிஆர் இறக்கும் வரை அமைதியாக அவருடன் இல்லறம் நடத்தி வந்த வி.என். ஜானகி. இவருக்கா முதல்வர் ஆசை என்று தமிழகமே ஆச்சர்யப்பட்டு நின்ற வேளை. அவர் பின்னால் அருதிப் பெரும்பான்மை எம்எல்ஏக்களை நிறுத்தி அரசியல் சதுரங்கமே ஆடிக்காட்டினார் ஆர்.எம். வீரப்பன்.
ராமவரம் தோட்டத்திலிருந்து வந்த மனைவி என்ற அடையாள வாரிசின் மூலம் கட்சியில் ஜொலித்த ஜெயலலிதா நாயகியானார். சேவல் சின்னத்தில் நின்று எதிர்க்கட்சி தலைவர் ஆனார். ஜானகியின் இரட்டைப்புறாவுக்கு கிடைத்ததோ இரண்டே இரண்டு சீட். மனம் வெம்பிய எம்ஜிஆர் மனைவி இரட்டை இலையை ஜெயலலிதாவிற்கு சொந்தமாக்கி விட்டு மறைந்தார். பிறகு நடந்த தேர்தல்களில், தைரியமாக எதிர்கொண்ட அரசியல் வாழ்க்கையில் நானே எம்ஜிஆரின் வாரிசு என்று சொல்லும் நிலை மாற்றி, நான் எம்ஜிஆரையும் மிஞ்சியவள் என்று தன்னை நிந்தித்தவர்களையும் சொல்ல வைத்தார். தாய்த்திருநாட்டிலும், தமிழ்த்திருநாட்டிலும் மட்டுமா இந்த குடும்ப அரசியல்? ஆந்திராவில் நாயுடுகாரு, பீகாரில் லல்லுயாதவு எல்லாமே குடும்ப ஆட்சிதான்.
இதையெல்லாம் பார்த்தோ என்னவோ, தமிழகத்தில் புதிய சுனாமியாய் புறப்பட்ட விஜயகாந்த் கட்சியை தொடங்கும்போதே மனைவி, மைத்துனரை கூட்டிக் கொண்டே அலைந்தார். ‘எடுத்த எடுப்பில் குடும்ப அரசியல் நடத்துகிறீர்களே? மனைவியை உடன் அழைத்துக் கொண்டே செல்கிறீர்களே?’ என்று கேட்டபோது கூட, ‘நான் என் மனைவியைத்தானே அழைத்துக் கொண்டு செல்கிறேன். அதில் என்ன தப்பு?’ என்று எக்குத்தப்பாய் கேட்டு கேட்டவர்களையும் வாய்மூட வைத்தார். ஜாதி அரசியலுக்கு அடிகோலிய மருத்துவர் ஐயா போன்றவர்கள் இதை கவனித்தோ என்னவோ தன் பிள்ளையையே முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து மக்களிடையே பகடிக்கு ஆளாக்கினார்.
ஜெயலலிதா மறைந்த பின்பு இப்போது அரசியலில் புதிய வாரி முறை உட்புகுந்திருக்கிறது.
‘என் அத்தை ஜெயலலிதா. நான்தான் அவரின் அரசியல் வாரிசு!’ என்று புதிய புயல் எழுந்து நிற்கிறது. ஜெயலலிதா சாயலிலே உள்ள தீபா தன்னை ஜெயலலிதாவாகவே உருவகப்படுத்தி தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். முதல்வர் சமாதியில் மலர்வளையம் வைக்கிறார். ஜெயலலிதா பிறந்த நாளில் கட்சி தொடக்கம் என அறிவிக்கிறார்.
அதற்கு முன்னே, ‘உடன்பிறவா தோழியாக இருந்து வாழ்க்கை முழுவதும் ஜெயலலிதாவுக்கு பணிவிடை செய்தவள் நான். என்னை உண்மையான வாரிசாக தொண்டர்கள் ஏற்றுக் கொண்டார்கள். எம்எல்ஏக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டார்கள்!’ எனச் சொல்லி புறப்பட்டார் சசிகலா மங்கை.
கார்டன் அவருக்கு, கோடநாடும் அவருக்கு. முதல்வர் இறுதி அடக்க சடங்குகள் கூட அவருக்கேதான்.
ஜெயலலிதா போல் சேலை, ஜெயலலிதா போல் ரவிக்கை. ஜெயலலிதா போலவே நெற்றியில் பொட்டு; நீள் கோடு என ஒப்பனை செய்தார். கட்சி பொதுச்செயலாளர் பொறுப்பும் வாங்கி, சட்டப்பேரவை அதிமுக உறுப்பினர்களின் தலைவர் என முன்மொழிவும் பெற்று, முதல்வராக முடிசூட ஆளுநரிடம் கடிதம் கொடுக்கிறார்.
இடையில் வம்பு வழக்கு. உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு தேதி அறிவிப்பு. ஆளுநரோ, அதோ, இதோ என்று ஊட்டியிலிருந்து கோவைக்கு, கோவையிலிருந்து டெல்லிக்கு, டெல்லியிலிருந்து மும்பைக்கு பறக்கிறார். ஆஹா இந்த வாரிசின் நிலை என்னவோ என்று தங்கத்தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியத்திருநாடே பார்த்துக் கொண்டிருக்க, பன்னீரின் சமாதி தியானம் புதியதொரு சுனாமியை ஏற்படுத்துகிறது.
‘அம்மாவின் ஆன்மாவுடன் பேசிவிட்டேன்!’ என புறப்படுகிறார். அங்கே நான் மிரட்டப்பட்டேன்; நிறைய பேர் மிரட்டிக்கடத்தப்பட்டுள்ளனர். அதிரடியாய் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பேட்டிகள் ‘அம்மா இருந்த போதே 2 முறை அவரால் முதல்வர் ஆக்கப்பட்டவன்; நானே அம்மாவின் அரசியல் வாரிசு; அவர் (சசிகலா) ஒரு கவுன்சிலராகக்கூட இதுவரை ஆக்கப்படாதவர். எப்படி அம்மாவின் வாரிசாக முடியும்!’ என்று அவரின் வார்த்தைகள் புறப்படுகிறது.
மகானாக, மகனாக, மகளாக, மருமானாக, அக்கா மகனாக, அண்ணன் மகளாக, உடன்பிறவா சகோதரியாக...முதல்வர் பதவிகளின் அடையாளமாக...
அடேங்கப்பா! இந்திய அரசியலில் வாரிசுகளுக்கான அடையாளம் இன்னமும் என்னென்ன உருவில் கல்லா கட்டுமோ? அது என்னென்ன செய்யுமோ?
No comments:
Post a Comment