ஹெச்1பி விசா பிரச்சினை பாதிப்பு குறித்த தகவல்களை ஐடி நிறுவனங்கள் அளிக்க மத்திய அரசு உத்தரவு
இது தொடர்பாக நாஸ்காம் தலைவர் ஆர்.சந்திரசேகர் கூறியதாவது: ஐடி துறையில் என்ன பாதிப்பு ஏற்படும், அமெரிக்க பொருளாதாரத்தில் இந்திய ஐடி துறையின் பங்கு என்ன, அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியாவால் கிடைக்கும் வாய்ப்புகள் என்ன, விசா பிரச்சினையால் இரு நாடுகளுக்கும் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது உள்ளிட்ட தகவல்களை மத்திய அரசு கேட்டிருக்கிறது. இந்த தகவல்கள் அடிப்படையிலே ட்ரம்ப் தலைமையிலான அரசிடம் பேச்சு வார்த்தை தொடங்க முடியும் என கேட்டிருப்பதாக சந்திரசேகர் கூறினார்.
முன்னதாக கடந்த 9-ம் தேதி மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழு விசா பிரச்சினை குறித்து விவாதித்தது. இதில் வெளியுறவுத்துறை செயலாளர், நிதிச் செயலாளர், தொலைத்தொடர்புத்துறை செயலாளர், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி துறை செயலாளர், வர்த்தகத்துறை செயலாளர் மற்றும் நாஸ்காம் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்க்க மத்திய அரசும், தகவல் தொழில் நுட்பத்துறையும் ஒன்றாக இணைய வேண்டும் என்றும் சந்திரசேகர் கூறினார்.
ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு செல்பவர்களின் குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் 60,000 டாலர் என்ற அளவில் இருந்தது. இதனை 1.30 லட்சம் டாலராக உயர்த்த அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. 1989-ம் ஆண்டு குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்படவில்லை. குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்படும் போது இந்திய ஐடி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.
இந்திய ஜிடிபியில் ஐடி துறையின் பங்கு 9.3 சதவீத அளவில் இருக்கிறது. இந்த துறையில் 37 லட்சம் பணியாளகள் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு ஆண்டிலும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை ஹெச்1பி விசா மூலம் ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு அனுப்புகின்றன.
No comments:
Post a Comment