Tuesday, February 14, 2017

கொண்டாட்டம் வேண்டாமே...

By மோனிகா மாறன்  |   Published on : 14th February 2017 01:18 AM  |
நம் சமூகத்தில் இருபதாண்டுகளுக்கு முன் காதலர் தினம் என்றால் எவருக்கும் தெரியாது. உலகமயமாக்கலின் விளைவாக இன்று இந்தியா உலக அளவில் மாபெரும் வேலண்டைன் ஸ்டே சந்தையாக மாறியுள்ளது.
எல்லா காலகட்டங்களிலும் காதலர்களும், காதலும் நம் மண்ணில் உண்டு. அது மனிதகுல இயல்பு, இயற்கை. ஆனால் இன்றைய காலகட்டத்தைப் போன்று அர்த்தமற்ற கேளிக்கையாக பெண்களைப் பின்தொடர்ந்து தொல்லைதரும், கொடூரத்தன்மை கொண்டதாக காதல் என்றும் இருந்ததில்லை.
நம் சமூகத்தில் திரைப்படங்கள்தான் எல்லாமே. திரைக் கதாநாயகன் இது தமிழ்நாடு தமிழில் பேசு என்று ஐ.நா. சபையில் உட்கார்ந்து பேசினால்கூட கைத்தட்டி பெருமிதம் கொள்ளும் நாம், அன்றாட வாழ்வில் தமிழில் பேசுவதை இளக்காரமாகவும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவதையும் தமிழ் வழிக்கல்வியையும் மட்டமாகவும் எண்ணுகிறோம்.
இந்த இரட்டை வேட மனநிலைதான் காதல் பற்றியும் நம் சமூகத்தில் நிலவுகிறது. நூற்றாண்டு விழா கொண்டாடிய தமிழ் சினிமாவில் காதல் அற்ற திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால் கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள் என்று லட்சக்கணக்கான பக்கங்கள் காதலைப்பற்றி எழுதப்பட்டாகிவிட்டது. ஆனால் நம் அன்றாட வாழ்வில் சமூகத்தில் காதலும், காதலர்களும் வைக்கப்பட்டுள்ள இடம் என்பது கீழானதே என்பதுதானே யதார்த்தம்.
முப்பதாண்டுகளுக்கு முன் பெண்களைப் பொதுவெளியில் காண்பதும், தனியாக பேசுவதும் இயலாத காரியம். இன்றைய காலமாற்றத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் அனைத்து துறைகளிலும், அனைத்து இடங்களிலும் இருப்பது சாதாரணமாகிவிட்டது.
எனவே ஆண் - பெண் நட்பும், ஈர்ப்பும் தவிர்க்க இயலாதவை. ஆனால் அவையெல்லாம் சரியான புரிதல்களுடன், ஆரோக்கியமான மனநிலையில் உண்டாகின்றனவா என்றால் இல்லை என்பதே நிதர்சனம். எந்த சமூக மாற்றத்தையும் எதிர்கொண்டு அதனை ஆராய்ந்து எதிர்கொள்வது என்பதே சரியான அணுகுமுறை.
அதைவிடுத்து எல்லாவற்றையும் மூடிமறைத்து பண்பாடு, கலாசாரம் என்று பேசி கண்மூடித்தனமாக முடிவுகளை எடுப்பதும், காதலர்களை எதிர்ப்பதும் எவ்விதத்திலும் தீர்வாகாது.
உலகமயமாக்கலின் மூலம் பல நல்ல மாற்றங்களும், விழிப்புணர்வுகளும் உண்டாகியுள்ளன என்பது உண்மை. பல்வேறு நோய்களுக்கெதிரான தடுப்பு முறைகள், மகளிர் தினம், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு, எய்ட்ஸ் விழிப்புணர்வு, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, கனிணிமயமான வாழ்வு என்றெல்லாம் பல்வேறு நன்மைகள் நம்மிடையே உருவாகியுள்ளன.
இவற்றில் காதலர்தினக் கொண்டாட்டங்கள் போன்றவை நிச்சயம் தேவையற்ற வியாபாரங்கள் என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ளுதல் அவசியம்.
அதேவேளையில் கலாசாரப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் நம் பண்பாட்டினைப் பற்றிய அடிப்படைப் புரிதல்கள் அற்ற கூட்டம் தனிமனித சுதந்திரத்தில் அத்துமீறி நுழைவது ஏற்க இயலாதது. காதலிக்கவே கூடாது என்று இவர்கள் தடுப்பதெல்லாம் மனித இயல்புகளுக்கு எதிரானது.
நம் குழந்தைகளுக்கு சரியான புரிதல்களை நாம் உண்டாக்க வேண்டும். அவர்களை நாள் முழுக்க தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் அமரவிட்டுவிட்டு, கரங்களில் செல்லிடப்பேசியைத் தந்துவிட்டு நீ அந்நிய கலாசாரத்தை பின்பற்றக் கூடாது, நம் முறைப்படிதான் வாழ வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்துவது எத்தனை அபத்தமானது.
மேலைநாடுகளில் காதலுக்கும், திருமணத்திற்கும் எந்தத் தொடர்பையும் வைப்பதில்லை. பதின் பருவத்தில் காதல், பிடித்திருந்தால் திருமணம், ஒத்துப்போகும் வரை சேர்ந்து வாழ்தல், பிடிக்கவில்லை எனில் பிரிவு, பின் மற்றொரு காதல், திருமணம் என்பதெல்லாம் அவர்கள் சகஜமாக ஏற்றுக்கொண்ட ஒன்று. ஆகவே அங்கு காதலர் தினம் என்பதும் ஒரு கொண்டாட்டமாக உள்ளது.
ஆனால் நம் நாட்டிலோ காதல் என்பது திருமணத்தை மையமாகக் கொண்டது. நம் சமூகத்தில் காதல் என்பது திருமணம், உறவுகள், குடும்பம், குழந்தைகள், சார்ந்துள்ள சுற்றத்தினர், பொருளாதாரம் என்று பல்வேறு பரிமாணங்கள் கொண்டது.
காதலிப்பது என்பது வெறும் கேளிக்கையல்ல, அது நம் வாழ்வின் இறுதிவரை தொடரும் உறவு என்பதை நம் பிள்ளைகளுக்கு தெளிவாக உணர்த்துதல் அவசியம். அவற்றையெல்லாம் நம் பிள்ளைகள் உணர வேண்டும்.
அதைவிட்டு வெறும் கொண்டாட்டங்களும் கேளிக்கைகளும்தான் காதல் என்று விட்டுவிடக் கூடாது.
தமிழ் சமுதாயத்தின் அடையாளமாகக் காதலையும், வீரத்தையுமே நம் இலக்கியங்கள் கூறுகின்றன. "கல்பொரு சிறுநுரை' என்ற ஒருவரி குறுந்தொகையில் வரும். நான் என் காதலனைக் காணாவிடில் கல்லின்மீது மோதும் சிறுநுரையைப் போன்று கொஞ்சங்கொஞ்சமாய் காணாமல் போய்விடுவேன் என்று தலைவி கூறுவதாக அமைந்த பாடல் இது.
காதல் எப்பொழுதும் இத்தகைய நுட்ப உணர்வுதான். அடர்கானகத்தில் எவரும் அறியாமல் மலரும் சிறு மலரைப்போல் எளிமையானதும், உன்னதமானதுதான் காதல். அதற்கு எவ்வித அலங்காரங்களோ, பூச்சுகளோ, ஆடம்பரங்களோ அறைகூவல்களோ தேவையில்லை.
தன் சந்ததியை உருவாக்க எண்ணுவது எந்த உயிருக்கும் அடிப்படை உணர்வு. வலிமையான தன்னைக்காக்கும் ஆளுமைகொண்ட ஆணைத் தேர்ந்தெடுப்பதும், தன் சந்ததியை அரவணைக்கும் பெண்ணைத் தேர்ந்தெடுப்பதும் இயற்கையாகவே உண்டான உள்ளுணர்வுகள்.
அவற்றை அர்த்தமற்ற கேளிக்கைகளாக்கும் இத்தகைய கொண்டாட்டங்கள் நெறிப்படுத்தப்படுவதே நம் சமூகத்திற்கு தேவை. காதலும், ஈர்ப்பும் வாழ்வின் சிறுபங்கு மட்டுமே. அதையும் தாண்டி உலகில் எத்தனையோ மகத்துவங்கள் இருக்கின்றன. அவற்றை அடைய காதல் அடித்தளமாக இருக்க வேண்டும்.

மரித்துவிட்டதா மனிதநேயம்?

By ஜெ. ஹாஜாகனி  |   Published on : 14th February 2017 01:19 AM  |
Hajakani
அறிவுயுகம் இதுவென்று பெருமிதம் கொள்கிறோம். ஆனால் மனிதநேயம் ஏனோ மங்கிக் கொண்டே வருகிறது. வீரிய வெளிச்சத்தோடு வீசுகின்ற விஞ்ஞானக் கதிர்வீச்சில், இரக்கத்தின் பார்வைகள் இல்லாமல் ஒழிந்ததோ என்ற ஏக்கங்கள் மேலிடுகின்றன.
"வாடியப் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்றார் வள்ளலார். வாழவைக்கும் விவசாயிகள் வாழ வழியின்றி நூற்றுக்கணக்கில், தான் விதைத்த வயல்களிலே, சதைப் பிண்டங்களாய் சாய்ந்தபோதும், நகர வாழ்வு வழக்கம்போல சாவின் நெடிகளை முகர்ந்தபடியே, நகர்ந்து கொண்டிருந்தது.
அண்மையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் பணிக்குச் செல்லும் வழியில் அரசுப்பேருந்து மோதி, விபத்தில் சிக்கிய இளைஞனை சுற்றியிருந்த கூட்டம், வேடிக்கை பார்த்ததோடு மட்டும் நிறுத்திவிடாமல், தங்களது செல்லிடப்பேசியில் படப்பிடிப்பு செய்வதில் மட்டுமே படிப்பு, முனைப்பு காட்டிய செய்தி இதயங்களை அதிரவைத்தது.
பிப்ரவரி இரண்டாம் நாள் (2.2.2017) காலை 8.30 மணிக்கு வீட்டிலிருந்து மிதிவண்டியில் வேலைக்குப் புறப்பட்ட அந்த இளைஞன் 8.35 மணிக்கு விபத்தில் சிக்குகிறான். அரசுப்பேருந்து மோதியதில் நிலைகுலைந்து விழுந்த அவ்விளைஞன் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறான்; துடிதுடிக்கிறான். வாழ்க்கையைத் துரத்துவோரும், வாழ்க்கையால் துரத்தப்படுவோரும் இயந்திரகதியில் சென்று கொண்டிருக்க, அவனைச் சூழ்ந்து நின்ற கூட்டமோ, அந்த வேதனையை வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளது.
ஓர் உயிரின் பரிதவிப்பை அங்கு பலரும் தனது செல்லிடப்பேசியில் ஒளிப்பதிவு செய்து, முகநூல் மற்றும் கட்செவி உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதில் பெரும் ஆர்வம் காட்டியுள்ளனர்.
20 நிமிடம் நடுச்சாலையில் துடிதுடித்துக் கிடந்த அவனை காவல்துறையினர் மீட்டெடுத்து அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கின்றனர். 9.15 மணியளவில் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
அதிர்ச்சியில் பரிதவித்து ஓடிவந்தனர் குடும்பத்தினர். "எங்களின் மொத்த குடும்பமும் இவன் ஒருவனின் உழைப்பில் தானே நடந்தது. இனிமேல் நாங்கள் என்ன செய்யப்போகிறோம்' என்று பெற்றோர் கதறி நிற்கின்றனர்.
மதியம் வரை அந்த இளைஞனின் உயிர்காக்கப் போராடிய மருத்துவர்கள் 1.15 மணிக்கு அவன் உயிர் பிரிந்துவிட்டதாக அறிவிக்கின்றனர்.
இப்படி ஆயிரமாயிரம் இளைஞர்களின் சோகக்கதைகள் நமது அறிவுயுகத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. கடந்த ஜனவரி 28 அன்று மைசூரூ அருகே விபத்தில் சிக்கிய காவலர் ஒருவரையும், சுற்றியிருந்த கூட்டம் வேடிக்கை பார்த்தே சாகடித்துள்ளது.
ஹூப்ளி இளைஞனின் உயிர்காக்கப் போராடிய கொலம்பியா ஆசியா மருத்துவமனையின் தலைவரும், மருத்துவ இயக்குநருமான டாக்டர் நந்தகுமார் ஜெய்ராம், மிகவும் மனம்வருந்தி, ஊடகங்களில் பதிவு செய்துள்ள கருத்து "தங்க நேரம் (Golden hour)  எனப்படும் விபத்து நடந்த ஒருமணி நேரத்தில், சிகிச்சைக்குக் கொண்டு வந்திருந்தால் உயிர்காத்திருக்க முடியும். சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்கள், ஒளிப்பதிவு செய்வதில் காட்டிய ஆர்வத்தை உயிர்காப்பதில் காட்டவில்லை' என்பதாகும்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்து இளவரசி டயானா சாலை விபத்தில் சிக்கியபோது, ஊடகங்கள் அவரை விதவிதமாகப் படமெடுப்பதில் காட்டிய ஆர்வத்தை அவர் உயிரைக் காப்பதில் காட்டவில்லை. மனித உயிரைவிட, மலிவான விளம்பரத்தை மதிப்புமிக்கதாய் எண்ணுகிற மனப்பிறழ்வு, மனிதநேயத்தை மயானம் சேர்ப்பதல்லவா?
அறிவியல் வளர்ச்சியும், அதிநவீன வாழ்க்கை முறையும், அடிப்படை அறங்களையும், விடக்கூடாத விழுமியங்களையும் வீழச்செய்யும், காலச்சூழல் விபரீதமானதல்லவா?
அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை
- என்கிறார் வள்ளுவர்.
பிறருக்கு வந்த துன்பத்தைத் தனக்கு வந்த துன்பமாக பாவிக்கத் தெரியவில்லையெனில், பெற்றிருக்கும் அறிவினால் பயன்தான் என்ன? என்பது குறளின் குரல்.
சாக்குரலையும், கூக்குரலையும் சாதாரணமாகக் கடந்து போகவைக்கிறது. நெஞ்சீரம் வறண்ட மனிதர்களின் நிகழ்ச்சி நிரல்.
அருளும், அன்பும், வாழ்வின் அடிப்படை அறங்கள். பொருளும், அது உண்டாக்கிய மருளும்தான் இன்றைய மனித வாழ்வின் நிறங்கள்.
அறியாத மனிதர்களுக்காக அகம் துடிப்பது அருள். அறிந்த மனிதர்களின் துன்பம் கண்டு இரங்குவது அன்பு.இறைவன் அளவற்ற அருளாளனாக, நிகரற்ற அன்புடையோனாகத் திகழ்கிறான். பூமியில் இறை
வனின் பிரதிநிதியாக அனுப்பப்பட்டுள்ள மனிதன், இப்பண்புகளை பிரதிபலிக்கக் கடமைப்பட்டவன்.
"இறை வணக்கத்தில் மூழ்கித் திளைத்துள்ள ஒரு பெண்மணி நரகம் செல்வாள். காரணம் ஒரு பூனையைக் கட்டிபோட்டுவிட்டு, அதற்கு உணவும், நீரும் தராமல் இருந்துவிட்டாள். இயற்கையாக உணவு தேட முடியாமல் பூனையைக் கட்டிவைத்து அது பசியால் இறந்துபோவதற்குக் காரணமானதால் அவள் நரகம் போவாள்'.
ஒரு விலைமாது சொர்க்கம் போவாள், அவள் தாகத்தில் தவித்துக்கொண்டிருந்த ஒரு நாய்க்கு, தனது மேலாடைத் துணியைப் பயன்படுத்தி, கிணற்றிலிருந்து நீரெடுத்து, அதன் தாகம் தணிவித்தாள்.
இந்த அருட்குணத்தால் அவ்விலைமாது சொர்க்கம் செல்வாள் என்று நபிகள் நாயகம் நவின்றார்கள். சொர்க்கமும் நரகமும் ஆன்மிகத்தின் பாற்பட்டவை மட்டுமன்று, ஏக இறைவனை ஏற்பதோடு மட்டும், இம்மையில் மனிதரின் கடமைகள் நிறைவு பெற்று விடுவதில்லை. எவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டொழுகும், அருளன்புப் பண்புகளும் ஈருலக வெற்றிக்கு அவசியமானவை என்பது நபிகள் நாயகம் காட்டிய வாழ்வியல் நெறி ஆகும்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது மூத்த தமிழ்க்குடியின் வாழ்வில், பிறர்க்கென வாழும் பெருந்தன்மை, நிறைந்திருந்ததை புறநானூற்றுப் பாடல்கள், புலப்படுத்துகின்றன. அவற்றுள் பாண்டியன் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற மன்னன் எழுதிய "உண்டாலம்ம இவ்வுலகம்' என்ற பாடலும் ஒன்று.
"வாழ்வை நீட்டிக்கும் அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது என்று தனிமையாக உண்ணமாட்டார்கள். யாரையும் வெறுக்கமாட்டார்கள். சோம்பலின்றி பணியாற்றுவார்கள். பிறர் அஞ்சும் பழிக்குத் தாமும் அஞ்சுவார்கள். புகழ் தரும் அறஞ்செயல்களுக்காகத் தம் உயிரையும் தருவார்கள்.
பழி வரும் செயல்களை இவ்வுலகமே பரிசாகக் கிடைத்தாலும் செய்யமாட்டார்கள். மனம் தளரமாட்டார்கள். இத்தகைய சிறப்புகளோடு, தமக்காக மட்டுமே வாழாமல் பிறர்க்காகவும் வலிய முயற்சிகளை முன்னெடுத்து உழைப்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது' என்பது பாடலின் கருத்து.
ஆழிப்பேரலையின்போதும் இன்ன பிற பேரிடர்களின்போதும், தம்மையே அர்ப்பணித்து, தன்னலத்தை மறந்து பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்பாடலின் தசைவடிவங்களாகித் தமிழகத்தில் நம்முன் நிற்கிறார்கள்.
ஓர் உயிர் மரணத்தறுவாயில் துடிப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்த வேதனை அரங்கேறிய இதே ஆண்டில் (2017), காரைக்காலில் காணும் பொங்கல் அன்று கடலில் சிக்கிய நான்கு பேரைக் காப்பாற்றிவிட்டு தனது உயிரைத் தத்தம் செய்துவிட்ட 44 வயதான புகழேந்தி என்ற தீயணைப்புப் படை வீரரின் தியாகம் நம் நெஞ்சைத் தொடுகிறது.
இவ்வளவிற்கும் அவர் பொங்கல் விடுமுறையின்போது சொந்த ஊர் வந்தவர். பணியின்போது உயிரைப் பணயம் வைப்பதோடு விடுமுறையிலும் கடமை உணர்விற்கு விடுமுறை தராமல், உயிரையே விட்டிருக்கிறார் புகழேந்தி.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே வேதாரண்யம் அருகே கத்தரிப்புலம் என்ற ஊரில், காமாட்சியம்மன் கோயில் குளத்தில் பள்ளி வாகனம் பாய்ந்துவிட, அதற்குள்ளிருந்த ஒன்பது குழந்தைகளை மீட்டு, கடைசிக் குழந்தையை மீட்கும்போது பள்ளத்தில் புதையுண்டு உயிர்த்தியாகம் செய்த 21 வயதே ஆன ஆசிரியை சுகந்தியின் உணர்வு நினைக்கும் போதெல்லாம் நம் நெஞ்சை நெகிழ வைப்பது.
2015-ஆம் ஆண்டு டிசம்பர் பெருமழையில் சிக்கி உயிருக்குப் போராடிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த சென்னை, தாங்கல் பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்ற 17 வயது இளைஞன், தன்னை நச்சுப் பாம்பு தீண்டியதையும் பொருட்படுத்தாமல் பணியைத் தொடர்ந்தான். தனது இன்னுயிரை இழந்தான்.
இப்படி ஏராளமானோரைக் குறிப்பிட முடியும் என்றாலும், மக்கள்தொகை வளர்ச்சி வீதத்திற்கு ஏற்ப மனிதநேயத்தின் வளர்ச்சி அமைந்திடவில்லை என்பதை நாம் தலைகுனிந்து ஒப்புக்கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.
ஒரு சமூகத்தில் வீர உணர்வு மங்குவது அவமானம். ஈர உணர்வு இல்லாமல் போவதோ அவலம். ஈரமும், வீரமும் ஏற்றமிகு தமிழனத்தின் இரு கண்கள்.
அந்த கண்களை இழந்த அந்தகன்களாய் இந்தத் தலைமுறை ஆகிவிடக்கூடாது.
கட்டுரையாளர்:
பேராசிரியர்.

ஏ.டி.எம்., ரகசிய எண் கொடுக்காதீங்க! : 'மாஜி' ஏமாந்தார்: ரூ.1.70 லட்சம் போச்சு
கடலாடி: 'ஏ.டி.எம்., கார்டு ரகசிய எண்ணை யாராவது போனில் கேட்டால் சொல்ல வேண்டாம்' என, வங்கி அதிகாரிகள் வாய் வலிக்க கத்தினாலும் ஏமாறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் சாமானியர் ஏமாந்தால் பரவாயில்லை. முன்னாள் அமைச்சர் ஒருவரும், 1.70 லட்சம் ரூபாயை பறிகொடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மேலச்செல்வனுாரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, 1991 - 96ல் அ.தி.மு.க., அமைச்சராக இருந்தார். தற்போது, தி.மு.க.,வில் தீர்மானக் குழு துணைச் செயலராக உள்ளார். நேற்று முன்தினம் இவரது அலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், 'வங்கி ஊழியர்' என அறிமுகப்படுத்திக் கொண்டார். 'உங்களுடைய வங்கிக் கணக்கு மற்றும் ஏ.டி.எம்., கார்டு காலாவதியாக உள்ளதால், அதை புதுப்பிக்க ரகசிய எண்ணை கூறுங்கள்' எனக் கேட்டார்; சத்தியமூர்த்தி, ரகசிய எண்ணை கூறினார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து, 1.70 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக அலைபேசியில் தகவல் வந்தது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார்.

கடலாடியில் கடந்த வாரம் ஆசிரியர் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து, 'போலி' ஏ.டி.எம்., கார்டு மூலம், 47 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.
இடமாறும் இதயங்கள்! ஆஹா இது தான் காதல் என்பதா?

இதயங்கள் இடமாறும்... வார்த்தைகள் தடுமாறும்... பார்ப்பதெல்லாம் புதிதாய் தெரியும்... சிந்தனைகளுக்கு சிறகு முளைக்கும், இது காதலா... இல்லை சாதலா என, குளிரும் நினைவுகளில் கொதிக்கும் உணர்வுகள்...
இங்கே மனம் திறக்கும் மதுரையை சேர்ந்த காதலர்களுக்கு இன்று மட்டுமல்ல தினம், தினம் காதலர் தினம் தானோ...

காதலுக்கு மரியாதை கொடுங்கள்

காதலர்களாக இருந்து கணவன், மனைவியாக மாறும் போது 'ஈகோ' இல்லாமல் இருந்தால் தான் அந்த காதலுக்கு மரியாதை. அந்த வகையில் எங்களுக்குள் இதுவரை 'ஈகோ' பிரச்னை வந்ததில்லை. காதலித்த 5 ஆண்டுகளில் ஒருவரை, ஒருவர் நன்றாக புரிந்து கொண்டோம். அதற்கு பின் தான் வீட்டில் அனுமதி கேட்டு, அவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்தோம். காதல் என்பது இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்டது இல்லை, அது இந்த சமூகம் சார்ந்தது. அதனால், காதல் திருமணத்திற்கு கண்டிப்பாக பெற்றோர் சம்மதம் தேவை. இதை உணர்ந்தால் ஒவ்வொரு காதலர்களும் வாழ்வில் சந்தோஷமாக ஒன்றுசேரலாம்.

ஆர்.பிரதீப் குமார், எஸ்.விசாலாட்சி

காதலில் பொறுமை அவசியம்

'கண்ணும் கண்ணும் மோதும்மா... நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்...' என்ற, பாடல் வரிகளை போல நாங்கள் வார்த்தைகளால் பேசியதை விட, கண்களால் பேசிய நாட்களே அதிகம். ஏதோ ஒரு சூழ்நிலையில் நாங்கள் அடிக்கடி சந்தித்தோம், காலப்போக்கில் ஒருவரை, ஒருவர் காதலாய் சிந்தித்தோம். இப்படி 7 ஆண்டுகளாக காதலாகி கசிந்து உருகி, திருமணத்திற்காக வீட்டில் சம்மதம் கேட்டோம். எதிர்பார்த்தது போல, கவுரவம் காட்டி எதிர்ப்பு வந்தது, பொறுமையுடன் எங்கள் உண்மை காதலை நிரூபித்தோம், சம்மதம் கிடைத்தது. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து போவதால், காதல் வாழ்க்கை இனிப்பாகவே இருக்கிறது. உண்மையான காதல் எப்போதும் வெற்றி பெறும் என்பதற்கு நாங்கள் ஒரு உதாரணம்.

எஸ்.ஜெயகுமார், ஜெ.கீதா

கோவை டூ மதுரை காதல்

''பள்ளி நாட்களில் கோவையில் இருந்து மதுரையில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு வந்த போது அவரை சந்தித்திருக்கிறேன். ஆனால், அது அவர் மனதில் தான் முதலில் காதலாகி இருக்கிறது. 10ம் வகுப்பு படிக்கும் போது திடீரென ஒரு நாள் உன்னை கல்யாணம் செய்யட்டுமா என சொல்லவும் எனக்கு 'திக்... திக்...' என ஆகிவிட்டது. அப்புறம் என்ன 7 வருஷம் பெற்றோருக்கு தெரிந்தும், தெரியாமலும் எங்கள் காதல், கடிதத்திலும் போனிலும் தொடர்ந்து திருமணத்தில் முடிந்தது. இப்போது 2 பிள்ளைகளுடன் சந்தோஷமான வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது,'' என்கிறார் மினி. '' சின்ன வயசிலே எதையும் 'பாசிட்டிவ்வாக' பேசுவதை கவனித்தேன். அது எனக்கு பிடித்தது. நான் கல்லுாரியில் முதலாண்டு படிக்கும் போது என் காதலை சொன்னேன். 'கிரீன் சிக்னல்' கிடைத்தாலும் திருமணத்திற்கு சிக்கல்கள் இருந்தது. அதை கடந்து விட்டோம். வேலை கிடைத்த பின் திருமணம், அந்த நாள் ஆத்மார்த்தமான காதலை நினைத்தால் இப்போதும் பிரமிப்பாக இருக்கிறது,'' என்கிறார் பிரவின்குமார்.


பிரவின்குமார், மினி

அவளும் நானும்...அமுதும் தமிழும்..இன்று காதலர் தினம்


காதல் என்று சொல்லும் போதே நெஞ்சமெல்லாம் பரவசம் ஏற்படுகிறது. ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, நிறத்தை கடந்து இரு இதயங்கள் இணைவதுதான் உண்மையான காதல்.

உலகம் முழுவதும் காதலர்களால் ஆண்டுதோறும் பிப்., 14ல் 'காதலர் தினம்' கொண்டாடப்படுகிறது. காதலர்கள் மட்டுமின்றி, திருமணம் செய்த தம்பதியர்களும் பரிசுகள், வாழ்த்து அட்டைகள் வழங்கி தங்களது அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.

சிலர் காதலிப்பவர்களிடம், தங்களது காதலை தெரிவிப்பதற்காகவும் இந்நாளை பயன்படுத்துகின்றனர்.காதல் பற்றி தமிழ் இலக்கியங்களான திருக்குறள், குறுந்தொகை, ஐங்குறுநூறு, புலவர்கள், கவிஞர்கள், தத்துவ அறிஞர்கள், எழுத்தாளர்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு
விதமாக விவரிக்கின்றனர்.

எப்படி வந்தது

'காதலர் தினம்' உருவான கதை சுவராஸ்யமானது. காதலர் தினத்துக்கு முன்னோடியாக கருதப்படும் வேலன்டைன் துறவி, ரோம் சாம்ராஜ்யத்தை சேர்ந்தவர். 14ம் நூற்றாண்டில் ரோம் அரசர் இரண்டாம் கிளாடியஸ், இளைஞர்களை போர்களத்திற்கு அழைத்தார்.

இதற்கு வரவேற்பு இல்லாததால் திருமணத்திற்கு தடை விதித்தார் எனவும், வேலன்டைன் எனும் பாதிரியார் இளைஞர்களுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அரசன் அவருக்கு மரண தண்டனை விதித்தார். அவரது நினைவுநாளையே 'வேலன்டைன் தினமாக' இளைஞர்கள் கொண்டாட தொடங்கினர். 20ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில்தான் வேலன்டைன் தினம் 'காதலர்

தினமாக' மாறியது.

'அவசர' காதல்

இன்றைய காதலர்கள் வாழ்க்கை பற்றி எவ்வித தெளிவான கருத்தும் இல்லாமல் அழகு, பணம், வேலை போன்ற காரணங்களை பார்த்து அவசரப்பட்டு காதலில் விழுகின்றனர். இந்த காதல் விரைவில் வீழ்ந்து விடுகிறது.

விபரீத காதலையும் பார்க்க முடிகிறது. தன்னை காதலிக்காத குற்றத்திற்காக பெண்ணிற்கு பல்வேறு இடையூறுகள் கொடுக்கும் அவலமும் அரங்கேறுகிறது. இந்நிலை மாற வேண்டும். விரும்புவதை அடைவதற்கு காதல் ஒன்றும் கடைப் பொருள் அல்ல. பள்ளிப்பருவத்தில் கூட காதல் வருகிறது. இது ஒருவிதமான ஈர்ப்பே தவிர; காதலாக இருக்க முடியாது.

எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்துகொள்ள காதலி அல்லது காதலன் கிடைத்துவிட்டால், அந்த வாழ்க்கை தமிழ் போல் அமுதமாய் இனிக்கும். இதுபோன்ற துாய்மையான காதலுக்கு 'ஜே' சொல்வோம்.

'காதல் சாம்ராஜ்யம்'

வேற்றுமை கடந்து ஒற்றுமை ஏற்படுத்தும் சக்தி காதலுக்கு உண்டு. காதலிக்கு கோட்டை கட்டியதும்; காதலர்கள் கல்லாய் மாறிய கதைகளும் நம் நாட்டில் தான் உலா வருகின்றன. காதலுக்கு இந்தியா தரும்

முக்கியத்துவம், இமயம் போன்றது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சர் ஆக்கியது ஏன்? என்று சசிகலா தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சர் ஆக்கியது ஏன்? சசிகலா பேச்சு

பிப்ரவரி 14, 03:15 AM

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா போயஸ் கார்டனில் நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் வீட்டு முன்பு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

விசுவாசம் இல்லை

அ.தி.மு.க.வுக்கு இன்றைக்கு பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது. இது நமக்கு பழக்கப்பட்ட ஒன்று தான்.

இன்றைக்கு நம்மை விட்டு பிரிந்து சென்றவர்களுக்கு பதவியும், பரிசும் யாரால் வந்தது. பெரியகுளத்தில் இருந்த ஒரு சாதாரண மனிதரை அம்மா தான் இன்று பெரிய மனிதராக உருவாக்கினார். அவர் இந்த இயக்கத்தை நன்றி இல்லாமல், பிரித்து ஆள நினைக்கிறார். இதில் இருந்தே அவர் உண்மையாக அ.தி.மு.க.வுக்கு விசுவாசமாக இருந்தவர் அல்ல என்பதை காட்டி விட்டார்.

பதவி ஆசை இல்லை

அம்மா இறந்த தகவல் தெரிந்த இரவு 12 மணிக்கு, நான் அழுது கொண்டே பன்னீர்செல்வம் உள்பட 5 அமைச்சர்களை அழைத்து, அவர்களிடம், நேரம் இல்லை, உடனடியாக இன்றிரவே பதவியேற்க வேண்டும், உடனே கவர்னரிடம் அனுமதி கேளுங்கள். இந்த நிமிடமே பதவியேற்க வேண்டும். பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக பதவியேற்று கொள்ளுங்கள் என்றேன்.

அப்போது 5 அமைச்சர்களும், சின்னம்மா தான் பதவியேற்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் சொன்னேன். எல்லாவற்றையும் விட என் அக்கா (ஜெயலலிதா) தான் முக்கியம். அவருடைய உடல் அருகே நான் இருக்க வேண்டும். எனக்கு பதவி ஆசை இல்லை. பின்னால் பார்த்துக் கொள்ளலாம். பதவியேற்று கொள்ளுங்கள் என்றேன்.

அம்மாவுக்கு யாரும் குரல் கொடுக்கவில்லை

எம்.ஜி.ஆர். இறந்தபோது ஜெயலலிதா மலர் வளையம் வைக்க கூட அமைச்சர்கள் விடவில்லை. அம்மாவுக்காக மந்திரிகள் யாரும் குரல் கொடுக்கவில்லை. தலைவரின் தலைமாட்டில் அம்மா இருக்கிறார். அம்மாவுக்கு பின்னால் நான் நிற்கிறேன். தலைவர் உடலை ராணுவ வண்டிக்கு தூக்கிக் கொண்டு போனார்கள். நாங்கள் ஓரமாக நிற்கிறோம். இதை ஒரு ராணுவ வீரர் பார்த்து விட்டு, அம்மாவை வண்டி மேல ஏறுங்கள் என்றார். அப்போது தினகரன் என்னுடன் வந்தார். ஜேப்பியார் அம்மாவை பிடித்து தள்ளுகிறார். சிறுவனாக இருந்த தினகரன் அவரது கையை பிடித்து கடிக்கிறார்.

அப்போது போலீஸ் கமிஷனர் ஸ்ரீபால் எங்களிடம் வந்து, அம்மாவை தாக்குவதற்கு மந்திரிகள் திட்டம் வைத்து இருக்கிறார்கள். நீங்கள் அவரை அழைத்து செல்லுங்கள் என்றார். அதனால் அம்மாவை நாங்கள் அழைத்து சென்று விட்டோம்.

இந்த கட்சியே வேண்டாம் என்று அம்மா என்னிடம் கூறினார். உங்களை எல்லோரும் பிடித்து தள்ளி விட்டார்கள் அதற்காகவே நீங்கள் வர வேண்டும் அக்கா என்று அவருக்கு ஊக்கம் அளித்தேன். இன்றைக்கு இந்த அளவுக்கு கட்சியை அம்மா நடத்தியதற்கு என்னுடைய ஊக்கமும் காரணம்.

சிரித்து பேசுகிறார்

என்னை பொறுத்தவரையில் அம்மா கொண்டு வந்த இந்த அரசு நீடிக்க வேண்டும். அதை தான் விரும்பினோம். அதற்காக தான் ஓ.பன்னீர்செல்வத்தை கொண்டு வந்தேன். ஆனால், சட்டசபை நிகழ்ச்சியை பார்த்ததும் எனக்கு மனசு சரியில்லை. தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் சிரித்து, சிரித்து பேசுகிறார். இது எப்படி சரியாக வரும். தி.மு.க. உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, பதில் சொல்லவே பன்னீர்செல்வம் மறுக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக இடி விழுவது போல, சட்டசபையில் துரைமுருகன் எழுந்து, நாங்கள் இருக்கிறோம், எங்கள் 89 எம்.எல்.ஏ.க்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நீங்கள்(பன்னீர்செல்வம்) 5 ஆண்டு காலம் முதல்-அமைச்சராக இருக்கலாம் என்று கூறுகிறார்.

அவர் இப்படி கேட்டதும், பன்னீர்செல்வம் என்ன செய்து இருக்க வேண்டும்? உடனே எழுந்து, நீங்கள் எதற்கு எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும், எங்களுக்கு தான் இவ்வளவு பேர் இருக்கிறார்களே? என்று பதில் கொடுத்து இருக்க வேண்டாமா?.

அவ்வாறு அவர் சொல்லியிருந்தால் நான் இடைஞ்சல் செய்து இருப்பேனா?. முதல்-அமைச்சர் பதவியிலேயே இருங்கள் என்று சொல்லி இருப்பேனே. நான் தான் முதல்-அமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லையே?

இந்த அரசாங்கம் இருக்க வேண்டும். இந்த இயக்கத்திற்காக என் உயிரையும் விட தயார். 33 ஆண்டுகளாக நிறைய போராட்டங்களை சந்தித்து தான், இப்படி வந்து இருக்கிறோம்.

போராட்டம் எனக்கு கையில் உள்ள தூசி போல தான். ஆயிரம் பன்னீர்செல்வத்தை பார்த்து தான் வந்திருக்கிறோம். அதனால் இது பற்றி எனக்கு கவலையில்லை. இது மாதிரி நடக்கிறதே, நீங்கள் ஒரு பெண் தானே பய உணர்ச்சி இல்லையா? என்று சிலர் கேட்டார்கள். பய உணர்ச்சியை பார்த்தால் இப்படி வந்திருக்கவே முடியாது. 33 ஆண்டுகளாக 2 பெண்கள் சேர்ந்து சோதனைகளை சாதனைகளாக மாற்றி காட்டியிருக்கிறோம்.

எத்தனை ஆண்கள் வந்தாலும்...

எனவே தொண்டர்களாகிய நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். எதை எப்படி செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். சீப்பை ஒழித்து வைத்தால் திருமணம் நின்று விடாது. அ.தி.மு.க. ஆட்சியை அமைப்போம், சட்டசபையில் அம்மா படத்தை திறப்போம் என்ற உறுதி மொழியை 129 எம்.எல்.ஏ.க்கள் எடுத்து இருக்கிறார்கள். நானும் எடுத்து இருக்கிறேன்.

அம்மா 2-வது முறையாக ஆட்சியை கொடுத்தார்கள். நான் 3-வது முறையாக ஆட்சியை கொடுப்பேன். அதற்கு என்னால் என்ன முடியுமோ? அதை செய்வேன். எத்தனை ஆண்கள் எதிர்க்கட்சிகளில் இருந்து வந்தாலும், ஒரு பொம்பளை சாதித்து காட்டுவாள். இது நிச்சயம். நீங்கள் எல்லோரும் இருக்கிறீர்கள். அ.தி.மு.க.வை யாராலும் எதையும் செய்ய முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் போயஸ் கார்டன் வெளியே தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசியதாவது:-

அமைதி போராட்டம்

அம்மாவின் போராட்டங்களில் நானும் ஒருத்தியாக இருந்து கட்சியை வளர்த்தேன். காபந்து அரசு என்றாலும், அது அ.தி.மு.க. அரசு தான். எனவே போலீசாருக்கு எந்த சங்கடம் ஏற்படாமல், இந்த போராட்டம் அமைதி போராட்டமாக இருக்க வேண்டும். ஒரு நல்ல செய்திக்காக காத்திருக்கிறேன். தர்மம் வெல்லும். அம்மாவின் ஆட்சி வரும், அம்மாவின் அரசாக தான் அ.தி.மு.க. ஆட்சி செயல்படும் என்பதை மக்களிடம் நீங்கள் தெரிவிக்க வேண்டும். நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
பாலத்தை நெருங்கிவிட்டோம்: தாண்டித்தான் ஆகவேண்டும்!

பிப்ரவரி 14, 04:45 AM

THALAYANGAM  DAILYTHANTHI

பொதுவாக எந்த பிரச்சினையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாலும், ஆங்கிலத்தில் ஒரு வழக்கு மொழி உண்டு. ‘வீ வில் கிராஸ் தி பிரிட்ஜ், வென் இட் கம்ஸ்’ என்பார்கள். அதாவது, பாலம் வரும்போது அதை தாண்டலாம் என்பதுதான் அதன்பொருள். மருத்துவக்கல்லூரி நுழைவுத்தேர்வுக்கு மட்டும் அல்லாமல், பொறியியல் கல்லூரி நுழைவுத்தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ள இந்தநிலையில், தமிழ்நாட்டில் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தியா முழுவதிலும் 3,288 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இதில், அதிகமாக பொறியியல் கல்லூரிகள் இருப்பது தமிழ்நாட்டில்தான். தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 527 ஆக இருக்கிறது. இந்த பொறியியல் கல்லூரிகளுக்கு எல்லாம் தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கையின்போது, நுழைவுத்தேர்வு கிடையாது. பிளஸ்–2 தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பிளஸ்–2 தேர்வில் வெற்றிபெறும் பெரும்பான்மையான மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில்தான் சேருகிறார்கள்.

இந்தநிலையில், மருத்துவப்படிப்புகளுக்கு எப்படி அகில இந்திய அளவில் தேசிய தகுதிக்காண் நுழைவுத் தேர்வு, அதாவது ‘நீட்’ அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறதோ, அதே அடிப்படையில்தான் 2018–ம் ஆண்டு முதல் நாடுமுழுவதிலும் பொறியியல் படிப்புக்கும், கட்டிடக்கலை படிப்புக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்ற வகையிலான திட்டத்துக்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் கொடுத்துவிட்டது. மத்திய அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சிலிடம் 2018–2019–ம் கல்வி ஆண்டு முதல் இதை நடைமுறைப்படுத்துவதற்கான தகுந்த வரைமுறைகளை அறிவிக்கவேண்டும் என்று கூறியுள்ளது. நாடுமுழுவதும் ஒரே கல்வித்தரத்தில் பொறியியல் படிப்பு இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலும், நன்கொடைகள் வாங்கப்படுவதை தவிர்க்கும் வகையிலும் இந்த முடிவுகள் எடுக்கப்படுவதாக கூறியுள்ளது. இந்த நுழைவுத்தேர்வு பல மொழிகளைக்கொண்ட இந்தியாவில் அதையெல்லாம் கருத்தில்கொண்டு, ஒரு நல்லமுறையை தேர்ந்தெடுத்து வகுக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளது. அதாவது, எப்படி ‘நீட்’ தேர்வை 10 மொழிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதோ, அதுபோல பொறியியல் படிப்புக்கான தேர்வையும் பல மொழிகளில் நடத்தவேண்டும். அனைத்து மாநிலங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் பொறியியல் படிப்புக்கு நாடுமுழுவதும் ஒரே நுழைவுத்தேர்வை நடத்துவதற்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கவேண்டும் என்றும் கேட்டிருக்கிறது.

‘நீட்’ தேர்வு என்றாலும் சரி, பொறியியல் படிப்புக்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு என்றாலும் சரி, ஒன்று தமிழக மாணவர்களுக்கு விலக்குப்பெறுவதை தமிழக அரசு உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால், மாணவர்கள் அதற்காக தங்களை தயார்படுத்திக்கொள்ள வெளிப்படையாகவே தெளிவுப்படுத்திவிடவேண்டும். திடீரென பொதுநுழைவுத்தேர்வு என்றால் மாணவர்களால் அதை நிச்சயம் சந்திக்கமுடியாது. தமிழக கல்வித்திட்டத்தில் கேட்கப்படும் கேள்விகள் என்பது மாணவர்களின் மனப்பாடம் செய்யும் ஆற்றலை சோதிக்கும் வகையில்தான் இருக்கிறது. பாடங்களில் என்ன இருக்கிறதோ, அதை அப்படியே மனப்பாடம் செய்து, ‘சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை’ என்பதுபோல, அப்படியே எழுதும் மாணவர்களுக்குத்தான் அதிக மார்க்குகள் கிடைக்கிறது. ஆனால், நுழைவுத்தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் மனப்பாட அறிவே இல்லாமல், பயன்பாடு சார்ந்து, ஆராயும் ஆற்றலை சார்ந்துள்ள பாடத்திட்டங்களில் இருந்தும், மாணவர்களின் அறிவாற்றலை சோதிக்கும் வகையிலும்தான் இருக்கும். அத்தகைய தேர்வுகள் எழுதவேண்டும் என்றால், நிச்சயமாக இப்போதுள்ள பாடத்திட்டங்களை சி.பி.எஸ்.இ. திட்டத்திற்கு நிகராக மாற்றியே தீரவேண்டும். எனவே, தமிழக அரசு இந்த 2 நுழைவுத்தேர்வுகள் வி‌ஷயத்தில் உடனடியாக முடிவுகளை மேற்கொள்ளவேண்டும். பாலம் வந்துவிட்டது தாண்டித்தான் ஆகவேண்டும்.

NEWS TODAY 17.08.2026