Tuesday, February 14, 2017

கொண்டாட்டம் வேண்டாமே...

By மோனிகா மாறன்  |   Published on : 14th February 2017 01:18 AM  |
நம் சமூகத்தில் இருபதாண்டுகளுக்கு முன் காதலர் தினம் என்றால் எவருக்கும் தெரியாது. உலகமயமாக்கலின் விளைவாக இன்று இந்தியா உலக அளவில் மாபெரும் வேலண்டைன் ஸ்டே சந்தையாக மாறியுள்ளது.
எல்லா காலகட்டங்களிலும் காதலர்களும், காதலும் நம் மண்ணில் உண்டு. அது மனிதகுல இயல்பு, இயற்கை. ஆனால் இன்றைய காலகட்டத்தைப் போன்று அர்த்தமற்ற கேளிக்கையாக பெண்களைப் பின்தொடர்ந்து தொல்லைதரும், கொடூரத்தன்மை கொண்டதாக காதல் என்றும் இருந்ததில்லை.
நம் சமூகத்தில் திரைப்படங்கள்தான் எல்லாமே. திரைக் கதாநாயகன் இது தமிழ்நாடு தமிழில் பேசு என்று ஐ.நா. சபையில் உட்கார்ந்து பேசினால்கூட கைத்தட்டி பெருமிதம் கொள்ளும் நாம், அன்றாட வாழ்வில் தமிழில் பேசுவதை இளக்காரமாகவும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவதையும் தமிழ் வழிக்கல்வியையும் மட்டமாகவும் எண்ணுகிறோம்.
இந்த இரட்டை வேட மனநிலைதான் காதல் பற்றியும் நம் சமூகத்தில் நிலவுகிறது. நூற்றாண்டு விழா கொண்டாடிய தமிழ் சினிமாவில் காதல் அற்ற திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால் கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள் என்று லட்சக்கணக்கான பக்கங்கள் காதலைப்பற்றி எழுதப்பட்டாகிவிட்டது. ஆனால் நம் அன்றாட வாழ்வில் சமூகத்தில் காதலும், காதலர்களும் வைக்கப்பட்டுள்ள இடம் என்பது கீழானதே என்பதுதானே யதார்த்தம்.
முப்பதாண்டுகளுக்கு முன் பெண்களைப் பொதுவெளியில் காண்பதும், தனியாக பேசுவதும் இயலாத காரியம். இன்றைய காலமாற்றத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் அனைத்து துறைகளிலும், அனைத்து இடங்களிலும் இருப்பது சாதாரணமாகிவிட்டது.
எனவே ஆண் - பெண் நட்பும், ஈர்ப்பும் தவிர்க்க இயலாதவை. ஆனால் அவையெல்லாம் சரியான புரிதல்களுடன், ஆரோக்கியமான மனநிலையில் உண்டாகின்றனவா என்றால் இல்லை என்பதே நிதர்சனம். எந்த சமூக மாற்றத்தையும் எதிர்கொண்டு அதனை ஆராய்ந்து எதிர்கொள்வது என்பதே சரியான அணுகுமுறை.
அதைவிடுத்து எல்லாவற்றையும் மூடிமறைத்து பண்பாடு, கலாசாரம் என்று பேசி கண்மூடித்தனமாக முடிவுகளை எடுப்பதும், காதலர்களை எதிர்ப்பதும் எவ்விதத்திலும் தீர்வாகாது.
உலகமயமாக்கலின் மூலம் பல நல்ல மாற்றங்களும், விழிப்புணர்வுகளும் உண்டாகியுள்ளன என்பது உண்மை. பல்வேறு நோய்களுக்கெதிரான தடுப்பு முறைகள், மகளிர் தினம், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு, எய்ட்ஸ் விழிப்புணர்வு, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, கனிணிமயமான வாழ்வு என்றெல்லாம் பல்வேறு நன்மைகள் நம்மிடையே உருவாகியுள்ளன.
இவற்றில் காதலர்தினக் கொண்டாட்டங்கள் போன்றவை நிச்சயம் தேவையற்ற வியாபாரங்கள் என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ளுதல் அவசியம்.
அதேவேளையில் கலாசாரப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் நம் பண்பாட்டினைப் பற்றிய அடிப்படைப் புரிதல்கள் அற்ற கூட்டம் தனிமனித சுதந்திரத்தில் அத்துமீறி நுழைவது ஏற்க இயலாதது. காதலிக்கவே கூடாது என்று இவர்கள் தடுப்பதெல்லாம் மனித இயல்புகளுக்கு எதிரானது.
நம் குழந்தைகளுக்கு சரியான புரிதல்களை நாம் உண்டாக்க வேண்டும். அவர்களை நாள் முழுக்க தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் அமரவிட்டுவிட்டு, கரங்களில் செல்லிடப்பேசியைத் தந்துவிட்டு நீ அந்நிய கலாசாரத்தை பின்பற்றக் கூடாது, நம் முறைப்படிதான் வாழ வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்துவது எத்தனை அபத்தமானது.
மேலைநாடுகளில் காதலுக்கும், திருமணத்திற்கும் எந்தத் தொடர்பையும் வைப்பதில்லை. பதின் பருவத்தில் காதல், பிடித்திருந்தால் திருமணம், ஒத்துப்போகும் வரை சேர்ந்து வாழ்தல், பிடிக்கவில்லை எனில் பிரிவு, பின் மற்றொரு காதல், திருமணம் என்பதெல்லாம் அவர்கள் சகஜமாக ஏற்றுக்கொண்ட ஒன்று. ஆகவே அங்கு காதலர் தினம் என்பதும் ஒரு கொண்டாட்டமாக உள்ளது.
ஆனால் நம் நாட்டிலோ காதல் என்பது திருமணத்தை மையமாகக் கொண்டது. நம் சமூகத்தில் காதல் என்பது திருமணம், உறவுகள், குடும்பம், குழந்தைகள், சார்ந்துள்ள சுற்றத்தினர், பொருளாதாரம் என்று பல்வேறு பரிமாணங்கள் கொண்டது.
காதலிப்பது என்பது வெறும் கேளிக்கையல்ல, அது நம் வாழ்வின் இறுதிவரை தொடரும் உறவு என்பதை நம் பிள்ளைகளுக்கு தெளிவாக உணர்த்துதல் அவசியம். அவற்றையெல்லாம் நம் பிள்ளைகள் உணர வேண்டும்.
அதைவிட்டு வெறும் கொண்டாட்டங்களும் கேளிக்கைகளும்தான் காதல் என்று விட்டுவிடக் கூடாது.
தமிழ் சமுதாயத்தின் அடையாளமாகக் காதலையும், வீரத்தையுமே நம் இலக்கியங்கள் கூறுகின்றன. "கல்பொரு சிறுநுரை' என்ற ஒருவரி குறுந்தொகையில் வரும். நான் என் காதலனைக் காணாவிடில் கல்லின்மீது மோதும் சிறுநுரையைப் போன்று கொஞ்சங்கொஞ்சமாய் காணாமல் போய்விடுவேன் என்று தலைவி கூறுவதாக அமைந்த பாடல் இது.
காதல் எப்பொழுதும் இத்தகைய நுட்ப உணர்வுதான். அடர்கானகத்தில் எவரும் அறியாமல் மலரும் சிறு மலரைப்போல் எளிமையானதும், உன்னதமானதுதான் காதல். அதற்கு எவ்வித அலங்காரங்களோ, பூச்சுகளோ, ஆடம்பரங்களோ அறைகூவல்களோ தேவையில்லை.
தன் சந்ததியை உருவாக்க எண்ணுவது எந்த உயிருக்கும் அடிப்படை உணர்வு. வலிமையான தன்னைக்காக்கும் ஆளுமைகொண்ட ஆணைத் தேர்ந்தெடுப்பதும், தன் சந்ததியை அரவணைக்கும் பெண்ணைத் தேர்ந்தெடுப்பதும் இயற்கையாகவே உண்டான உள்ளுணர்வுகள்.
அவற்றை அர்த்தமற்ற கேளிக்கைகளாக்கும் இத்தகைய கொண்டாட்டங்கள் நெறிப்படுத்தப்படுவதே நம் சமூகத்திற்கு தேவை. காதலும், ஈர்ப்பும் வாழ்வின் சிறுபங்கு மட்டுமே. அதையும் தாண்டி உலகில் எத்தனையோ மகத்துவங்கள் இருக்கின்றன. அவற்றை அடைய காதல் அடித்தளமாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...