Tuesday, February 14, 2017

மரித்துவிட்டதா மனிதநேயம்?

By ஜெ. ஹாஜாகனி  |   Published on : 14th February 2017 01:19 AM  |
Hajakani
அறிவுயுகம் இதுவென்று பெருமிதம் கொள்கிறோம். ஆனால் மனிதநேயம் ஏனோ மங்கிக் கொண்டே வருகிறது. வீரிய வெளிச்சத்தோடு வீசுகின்ற விஞ்ஞானக் கதிர்வீச்சில், இரக்கத்தின் பார்வைகள் இல்லாமல் ஒழிந்ததோ என்ற ஏக்கங்கள் மேலிடுகின்றன.
"வாடியப் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்றார் வள்ளலார். வாழவைக்கும் விவசாயிகள் வாழ வழியின்றி நூற்றுக்கணக்கில், தான் விதைத்த வயல்களிலே, சதைப் பிண்டங்களாய் சாய்ந்தபோதும், நகர வாழ்வு வழக்கம்போல சாவின் நெடிகளை முகர்ந்தபடியே, நகர்ந்து கொண்டிருந்தது.
அண்மையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் பணிக்குச் செல்லும் வழியில் அரசுப்பேருந்து மோதி, விபத்தில் சிக்கிய இளைஞனை சுற்றியிருந்த கூட்டம், வேடிக்கை பார்த்ததோடு மட்டும் நிறுத்திவிடாமல், தங்களது செல்லிடப்பேசியில் படப்பிடிப்பு செய்வதில் மட்டுமே படிப்பு, முனைப்பு காட்டிய செய்தி இதயங்களை அதிரவைத்தது.
பிப்ரவரி இரண்டாம் நாள் (2.2.2017) காலை 8.30 மணிக்கு வீட்டிலிருந்து மிதிவண்டியில் வேலைக்குப் புறப்பட்ட அந்த இளைஞன் 8.35 மணிக்கு விபத்தில் சிக்குகிறான். அரசுப்பேருந்து மோதியதில் நிலைகுலைந்து விழுந்த அவ்விளைஞன் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறான்; துடிதுடிக்கிறான். வாழ்க்கையைத் துரத்துவோரும், வாழ்க்கையால் துரத்தப்படுவோரும் இயந்திரகதியில் சென்று கொண்டிருக்க, அவனைச் சூழ்ந்து நின்ற கூட்டமோ, அந்த வேதனையை வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளது.
ஓர் உயிரின் பரிதவிப்பை அங்கு பலரும் தனது செல்லிடப்பேசியில் ஒளிப்பதிவு செய்து, முகநூல் மற்றும் கட்செவி உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதில் பெரும் ஆர்வம் காட்டியுள்ளனர்.
20 நிமிடம் நடுச்சாலையில் துடிதுடித்துக் கிடந்த அவனை காவல்துறையினர் மீட்டெடுத்து அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கின்றனர். 9.15 மணியளவில் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
அதிர்ச்சியில் பரிதவித்து ஓடிவந்தனர் குடும்பத்தினர். "எங்களின் மொத்த குடும்பமும் இவன் ஒருவனின் உழைப்பில் தானே நடந்தது. இனிமேல் நாங்கள் என்ன செய்யப்போகிறோம்' என்று பெற்றோர் கதறி நிற்கின்றனர்.
மதியம் வரை அந்த இளைஞனின் உயிர்காக்கப் போராடிய மருத்துவர்கள் 1.15 மணிக்கு அவன் உயிர் பிரிந்துவிட்டதாக அறிவிக்கின்றனர்.
இப்படி ஆயிரமாயிரம் இளைஞர்களின் சோகக்கதைகள் நமது அறிவுயுகத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. கடந்த ஜனவரி 28 அன்று மைசூரூ அருகே விபத்தில் சிக்கிய காவலர் ஒருவரையும், சுற்றியிருந்த கூட்டம் வேடிக்கை பார்த்தே சாகடித்துள்ளது.
ஹூப்ளி இளைஞனின் உயிர்காக்கப் போராடிய கொலம்பியா ஆசியா மருத்துவமனையின் தலைவரும், மருத்துவ இயக்குநருமான டாக்டர் நந்தகுமார் ஜெய்ராம், மிகவும் மனம்வருந்தி, ஊடகங்களில் பதிவு செய்துள்ள கருத்து "தங்க நேரம் (Golden hour)  எனப்படும் விபத்து நடந்த ஒருமணி நேரத்தில், சிகிச்சைக்குக் கொண்டு வந்திருந்தால் உயிர்காத்திருக்க முடியும். சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்கள், ஒளிப்பதிவு செய்வதில் காட்டிய ஆர்வத்தை உயிர்காப்பதில் காட்டவில்லை' என்பதாகும்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்து இளவரசி டயானா சாலை விபத்தில் சிக்கியபோது, ஊடகங்கள் அவரை விதவிதமாகப் படமெடுப்பதில் காட்டிய ஆர்வத்தை அவர் உயிரைக் காப்பதில் காட்டவில்லை. மனித உயிரைவிட, மலிவான விளம்பரத்தை மதிப்புமிக்கதாய் எண்ணுகிற மனப்பிறழ்வு, மனிதநேயத்தை மயானம் சேர்ப்பதல்லவா?
அறிவியல் வளர்ச்சியும், அதிநவீன வாழ்க்கை முறையும், அடிப்படை அறங்களையும், விடக்கூடாத விழுமியங்களையும் வீழச்செய்யும், காலச்சூழல் விபரீதமானதல்லவா?
அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை
- என்கிறார் வள்ளுவர்.
பிறருக்கு வந்த துன்பத்தைத் தனக்கு வந்த துன்பமாக பாவிக்கத் தெரியவில்லையெனில், பெற்றிருக்கும் அறிவினால் பயன்தான் என்ன? என்பது குறளின் குரல்.
சாக்குரலையும், கூக்குரலையும் சாதாரணமாகக் கடந்து போகவைக்கிறது. நெஞ்சீரம் வறண்ட மனிதர்களின் நிகழ்ச்சி நிரல்.
அருளும், அன்பும், வாழ்வின் அடிப்படை அறங்கள். பொருளும், அது உண்டாக்கிய மருளும்தான் இன்றைய மனித வாழ்வின் நிறங்கள்.
அறியாத மனிதர்களுக்காக அகம் துடிப்பது அருள். அறிந்த மனிதர்களின் துன்பம் கண்டு இரங்குவது அன்பு.இறைவன் அளவற்ற அருளாளனாக, நிகரற்ற அன்புடையோனாகத் திகழ்கிறான். பூமியில் இறை
வனின் பிரதிநிதியாக அனுப்பப்பட்டுள்ள மனிதன், இப்பண்புகளை பிரதிபலிக்கக் கடமைப்பட்டவன்.
"இறை வணக்கத்தில் மூழ்கித் திளைத்துள்ள ஒரு பெண்மணி நரகம் செல்வாள். காரணம் ஒரு பூனையைக் கட்டிபோட்டுவிட்டு, அதற்கு உணவும், நீரும் தராமல் இருந்துவிட்டாள். இயற்கையாக உணவு தேட முடியாமல் பூனையைக் கட்டிவைத்து அது பசியால் இறந்துபோவதற்குக் காரணமானதால் அவள் நரகம் போவாள்'.
ஒரு விலைமாது சொர்க்கம் போவாள், அவள் தாகத்தில் தவித்துக்கொண்டிருந்த ஒரு நாய்க்கு, தனது மேலாடைத் துணியைப் பயன்படுத்தி, கிணற்றிலிருந்து நீரெடுத்து, அதன் தாகம் தணிவித்தாள்.
இந்த அருட்குணத்தால் அவ்விலைமாது சொர்க்கம் செல்வாள் என்று நபிகள் நாயகம் நவின்றார்கள். சொர்க்கமும் நரகமும் ஆன்மிகத்தின் பாற்பட்டவை மட்டுமன்று, ஏக இறைவனை ஏற்பதோடு மட்டும், இம்மையில் மனிதரின் கடமைகள் நிறைவு பெற்று விடுவதில்லை. எவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டொழுகும், அருளன்புப் பண்புகளும் ஈருலக வெற்றிக்கு அவசியமானவை என்பது நபிகள் நாயகம் காட்டிய வாழ்வியல் நெறி ஆகும்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது மூத்த தமிழ்க்குடியின் வாழ்வில், பிறர்க்கென வாழும் பெருந்தன்மை, நிறைந்திருந்ததை புறநானூற்றுப் பாடல்கள், புலப்படுத்துகின்றன. அவற்றுள் பாண்டியன் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற மன்னன் எழுதிய "உண்டாலம்ம இவ்வுலகம்' என்ற பாடலும் ஒன்று.
"வாழ்வை நீட்டிக்கும் அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது என்று தனிமையாக உண்ணமாட்டார்கள். யாரையும் வெறுக்கமாட்டார்கள். சோம்பலின்றி பணியாற்றுவார்கள். பிறர் அஞ்சும் பழிக்குத் தாமும் அஞ்சுவார்கள். புகழ் தரும் அறஞ்செயல்களுக்காகத் தம் உயிரையும் தருவார்கள்.
பழி வரும் செயல்களை இவ்வுலகமே பரிசாகக் கிடைத்தாலும் செய்யமாட்டார்கள். மனம் தளரமாட்டார்கள். இத்தகைய சிறப்புகளோடு, தமக்காக மட்டுமே வாழாமல் பிறர்க்காகவும் வலிய முயற்சிகளை முன்னெடுத்து உழைப்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது' என்பது பாடலின் கருத்து.
ஆழிப்பேரலையின்போதும் இன்ன பிற பேரிடர்களின்போதும், தம்மையே அர்ப்பணித்து, தன்னலத்தை மறந்து பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்பாடலின் தசைவடிவங்களாகித் தமிழகத்தில் நம்முன் நிற்கிறார்கள்.
ஓர் உயிர் மரணத்தறுவாயில் துடிப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்த வேதனை அரங்கேறிய இதே ஆண்டில் (2017), காரைக்காலில் காணும் பொங்கல் அன்று கடலில் சிக்கிய நான்கு பேரைக் காப்பாற்றிவிட்டு தனது உயிரைத் தத்தம் செய்துவிட்ட 44 வயதான புகழேந்தி என்ற தீயணைப்புப் படை வீரரின் தியாகம் நம் நெஞ்சைத் தொடுகிறது.
இவ்வளவிற்கும் அவர் பொங்கல் விடுமுறையின்போது சொந்த ஊர் வந்தவர். பணியின்போது உயிரைப் பணயம் வைப்பதோடு விடுமுறையிலும் கடமை உணர்விற்கு விடுமுறை தராமல், உயிரையே விட்டிருக்கிறார் புகழேந்தி.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே வேதாரண்யம் அருகே கத்தரிப்புலம் என்ற ஊரில், காமாட்சியம்மன் கோயில் குளத்தில் பள்ளி வாகனம் பாய்ந்துவிட, அதற்குள்ளிருந்த ஒன்பது குழந்தைகளை மீட்டு, கடைசிக் குழந்தையை மீட்கும்போது பள்ளத்தில் புதையுண்டு உயிர்த்தியாகம் செய்த 21 வயதே ஆன ஆசிரியை சுகந்தியின் உணர்வு நினைக்கும் போதெல்லாம் நம் நெஞ்சை நெகிழ வைப்பது.
2015-ஆம் ஆண்டு டிசம்பர் பெருமழையில் சிக்கி உயிருக்குப் போராடிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த சென்னை, தாங்கல் பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்ற 17 வயது இளைஞன், தன்னை நச்சுப் பாம்பு தீண்டியதையும் பொருட்படுத்தாமல் பணியைத் தொடர்ந்தான். தனது இன்னுயிரை இழந்தான்.
இப்படி ஏராளமானோரைக் குறிப்பிட முடியும் என்றாலும், மக்கள்தொகை வளர்ச்சி வீதத்திற்கு ஏற்ப மனிதநேயத்தின் வளர்ச்சி அமைந்திடவில்லை என்பதை நாம் தலைகுனிந்து ஒப்புக்கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.
ஒரு சமூகத்தில் வீர உணர்வு மங்குவது அவமானம். ஈர உணர்வு இல்லாமல் போவதோ அவலம். ஈரமும், வீரமும் ஏற்றமிகு தமிழனத்தின் இரு கண்கள்.
அந்த கண்களை இழந்த அந்தகன்களாய் இந்தத் தலைமுறை ஆகிவிடக்கூடாது.
கட்டுரையாளர்:
பேராசிரியர்.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...