Tuesday, February 14, 2017

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சர் ஆக்கியது ஏன்? என்று சசிகலா தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சர் ஆக்கியது ஏன்? சசிகலா பேச்சு

பிப்ரவரி 14, 03:15 AM

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா போயஸ் கார்டனில் நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் வீட்டு முன்பு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

விசுவாசம் இல்லை

அ.தி.மு.க.வுக்கு இன்றைக்கு பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது. இது நமக்கு பழக்கப்பட்ட ஒன்று தான்.

இன்றைக்கு நம்மை விட்டு பிரிந்து சென்றவர்களுக்கு பதவியும், பரிசும் யாரால் வந்தது. பெரியகுளத்தில் இருந்த ஒரு சாதாரண மனிதரை அம்மா தான் இன்று பெரிய மனிதராக உருவாக்கினார். அவர் இந்த இயக்கத்தை நன்றி இல்லாமல், பிரித்து ஆள நினைக்கிறார். இதில் இருந்தே அவர் உண்மையாக அ.தி.மு.க.வுக்கு விசுவாசமாக இருந்தவர் அல்ல என்பதை காட்டி விட்டார்.

பதவி ஆசை இல்லை

அம்மா இறந்த தகவல் தெரிந்த இரவு 12 மணிக்கு, நான் அழுது கொண்டே பன்னீர்செல்வம் உள்பட 5 அமைச்சர்களை அழைத்து, அவர்களிடம், நேரம் இல்லை, உடனடியாக இன்றிரவே பதவியேற்க வேண்டும், உடனே கவர்னரிடம் அனுமதி கேளுங்கள். இந்த நிமிடமே பதவியேற்க வேண்டும். பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக பதவியேற்று கொள்ளுங்கள் என்றேன்.

அப்போது 5 அமைச்சர்களும், சின்னம்மா தான் பதவியேற்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் சொன்னேன். எல்லாவற்றையும் விட என் அக்கா (ஜெயலலிதா) தான் முக்கியம். அவருடைய உடல் அருகே நான் இருக்க வேண்டும். எனக்கு பதவி ஆசை இல்லை. பின்னால் பார்த்துக் கொள்ளலாம். பதவியேற்று கொள்ளுங்கள் என்றேன்.

அம்மாவுக்கு யாரும் குரல் கொடுக்கவில்லை

எம்.ஜி.ஆர். இறந்தபோது ஜெயலலிதா மலர் வளையம் வைக்க கூட அமைச்சர்கள் விடவில்லை. அம்மாவுக்காக மந்திரிகள் யாரும் குரல் கொடுக்கவில்லை. தலைவரின் தலைமாட்டில் அம்மா இருக்கிறார். அம்மாவுக்கு பின்னால் நான் நிற்கிறேன். தலைவர் உடலை ராணுவ வண்டிக்கு தூக்கிக் கொண்டு போனார்கள். நாங்கள் ஓரமாக நிற்கிறோம். இதை ஒரு ராணுவ வீரர் பார்த்து விட்டு, அம்மாவை வண்டி மேல ஏறுங்கள் என்றார். அப்போது தினகரன் என்னுடன் வந்தார். ஜேப்பியார் அம்மாவை பிடித்து தள்ளுகிறார். சிறுவனாக இருந்த தினகரன் அவரது கையை பிடித்து கடிக்கிறார்.

அப்போது போலீஸ் கமிஷனர் ஸ்ரீபால் எங்களிடம் வந்து, அம்மாவை தாக்குவதற்கு மந்திரிகள் திட்டம் வைத்து இருக்கிறார்கள். நீங்கள் அவரை அழைத்து செல்லுங்கள் என்றார். அதனால் அம்மாவை நாங்கள் அழைத்து சென்று விட்டோம்.

இந்த கட்சியே வேண்டாம் என்று அம்மா என்னிடம் கூறினார். உங்களை எல்லோரும் பிடித்து தள்ளி விட்டார்கள் அதற்காகவே நீங்கள் வர வேண்டும் அக்கா என்று அவருக்கு ஊக்கம் அளித்தேன். இன்றைக்கு இந்த அளவுக்கு கட்சியை அம்மா நடத்தியதற்கு என்னுடைய ஊக்கமும் காரணம்.

சிரித்து பேசுகிறார்

என்னை பொறுத்தவரையில் அம்மா கொண்டு வந்த இந்த அரசு நீடிக்க வேண்டும். அதை தான் விரும்பினோம். அதற்காக தான் ஓ.பன்னீர்செல்வத்தை கொண்டு வந்தேன். ஆனால், சட்டசபை நிகழ்ச்சியை பார்த்ததும் எனக்கு மனசு சரியில்லை. தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் சிரித்து, சிரித்து பேசுகிறார். இது எப்படி சரியாக வரும். தி.மு.க. உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, பதில் சொல்லவே பன்னீர்செல்வம் மறுக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக இடி விழுவது போல, சட்டசபையில் துரைமுருகன் எழுந்து, நாங்கள் இருக்கிறோம், எங்கள் 89 எம்.எல்.ஏ.க்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நீங்கள்(பன்னீர்செல்வம்) 5 ஆண்டு காலம் முதல்-அமைச்சராக இருக்கலாம் என்று கூறுகிறார்.

அவர் இப்படி கேட்டதும், பன்னீர்செல்வம் என்ன செய்து இருக்க வேண்டும்? உடனே எழுந்து, நீங்கள் எதற்கு எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும், எங்களுக்கு தான் இவ்வளவு பேர் இருக்கிறார்களே? என்று பதில் கொடுத்து இருக்க வேண்டாமா?.

அவ்வாறு அவர் சொல்லியிருந்தால் நான் இடைஞ்சல் செய்து இருப்பேனா?. முதல்-அமைச்சர் பதவியிலேயே இருங்கள் என்று சொல்லி இருப்பேனே. நான் தான் முதல்-அமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லையே?

இந்த அரசாங்கம் இருக்க வேண்டும். இந்த இயக்கத்திற்காக என் உயிரையும் விட தயார். 33 ஆண்டுகளாக நிறைய போராட்டங்களை சந்தித்து தான், இப்படி வந்து இருக்கிறோம்.

போராட்டம் எனக்கு கையில் உள்ள தூசி போல தான். ஆயிரம் பன்னீர்செல்வத்தை பார்த்து தான் வந்திருக்கிறோம். அதனால் இது பற்றி எனக்கு கவலையில்லை. இது மாதிரி நடக்கிறதே, நீங்கள் ஒரு பெண் தானே பய உணர்ச்சி இல்லையா? என்று சிலர் கேட்டார்கள். பய உணர்ச்சியை பார்த்தால் இப்படி வந்திருக்கவே முடியாது. 33 ஆண்டுகளாக 2 பெண்கள் சேர்ந்து சோதனைகளை சாதனைகளாக மாற்றி காட்டியிருக்கிறோம்.

எத்தனை ஆண்கள் வந்தாலும்...

எனவே தொண்டர்களாகிய நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். எதை எப்படி செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். சீப்பை ஒழித்து வைத்தால் திருமணம் நின்று விடாது. அ.தி.மு.க. ஆட்சியை அமைப்போம், சட்டசபையில் அம்மா படத்தை திறப்போம் என்ற உறுதி மொழியை 129 எம்.எல்.ஏ.க்கள் எடுத்து இருக்கிறார்கள். நானும் எடுத்து இருக்கிறேன்.

அம்மா 2-வது முறையாக ஆட்சியை கொடுத்தார்கள். நான் 3-வது முறையாக ஆட்சியை கொடுப்பேன். அதற்கு என்னால் என்ன முடியுமோ? அதை செய்வேன். எத்தனை ஆண்கள் எதிர்க்கட்சிகளில் இருந்து வந்தாலும், ஒரு பொம்பளை சாதித்து காட்டுவாள். இது நிச்சயம். நீங்கள் எல்லோரும் இருக்கிறீர்கள். அ.தி.மு.க.வை யாராலும் எதையும் செய்ய முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் போயஸ் கார்டன் வெளியே தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசியதாவது:-

அமைதி போராட்டம்

அம்மாவின் போராட்டங்களில் நானும் ஒருத்தியாக இருந்து கட்சியை வளர்த்தேன். காபந்து அரசு என்றாலும், அது அ.தி.மு.க. அரசு தான். எனவே போலீசாருக்கு எந்த சங்கடம் ஏற்படாமல், இந்த போராட்டம் அமைதி போராட்டமாக இருக்க வேண்டும். ஒரு நல்ல செய்திக்காக காத்திருக்கிறேன். தர்மம் வெல்லும். அம்மாவின் ஆட்சி வரும், அம்மாவின் அரசாக தான் அ.தி.மு.க. ஆட்சி செயல்படும் என்பதை மக்களிடம் நீங்கள் தெரிவிக்க வேண்டும். நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...