Wednesday, March 15, 2017

மருத்துவ மேற்படிப்பு இடங்கள் தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: முதுகலை மருத்துவ படிப்புகளில், 50 சதவீத இடங்களை தனியார் மருத்துவ கல்லுாரிகள் நிரப்ப தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 இதற்கு பதிலளிக்கும்படி, தனியார் கல்லுாரிகளுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம், நெல்லுாரை சேர்ந்த டாக்டர் திவ்யா சரோனா தாக்கல் செய்த மனு: முதுகலை மருத்துவ படிப்பில் சேர, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு எழுதி, 50 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளேன். 'நீட்' மதிப்பெண் மற்றும் பணி அனுபவ மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால், அரசு மருத்துவ கல்லுாரி அல்லது தனியார் கல்லுாரிகளில், எனக்கு இடம் கிடைக்கும்.தனியார் மருத்துவ கல்லுாரிகளைப் பொறுத்தவரை, முதுகலை மருத்துவ படிப்புகளில், 50 சதவீத இடங்களை அரசும், மீதி இடங்களை கல்லுாரி நிர்வாகமும் நிரப்பி கொள்ள வேண்டும். ஆனால், 50 சதவீத இடங்களை, தனியார் கல்லுாரிகளிடம் இருந்து பெற, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.தனியார் கல்லுாரிகள், 50 சதவீத இடங்களை, அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால், நீட் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு, இடம் கிடைக்காமல் போகலாம்.எனவே, 50 சதவீத இடங்களை, தனியார் மருத்துவ கல்லுாரிகள் நிரப்ப தடை விதிக்க வேண்டும். 50 சதவீத இடங்களை அரசு பெற்று, நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி கிருபாகரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, தனியார் மருத்துவ கல்லுாரிகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.
ஆன்லைன் முன்பதிவு அதிகரிப்பால் ரயில் நிலைய கவுன்டர்கள் குறைப்பு

ரயில் பயணத்திற்கு, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மூலம், டிக்கெட் முன்பதிவு செய்வது அதிகரித்துள்ளதால், முக்கிய ரயில் நிலையங்களில், டிக்கெட் கவுன்டர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. ரயிலில் பயணம் செய்ய, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணையதளம் மூலமாக, ஆன்லைனில், டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மொபைல் போன், 'ஆப்' மூலமும், முன்பதிவு செய்ய முடியும். இதனால், ரயில் நிலையங்களில் உள்ள, முன்பதிவு கவுன்டர்களுக்கு வந்து, டிக்கெட் முன்பதிவு செய்வோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதையடுத்து, ரயில் நிலையங்களில் உள்ள, டிக்கெட் கவுன்டர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில், 2016 நவம்பர் முதல், தற்போது வரை, 21 கவுன்டர்கள்; எழும்பூரில், மூன்று கவுன்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதேபோன்று, தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களிலும், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட உள்ளது.

- நமது நிருபர் -
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற மீண்டும் முயற்சி



‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெறுவதற்கு மீண்டும் ஒரு முயற்சியாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் டெல்லியில் இன்று பிரதமரின் செயலாளரை சந்தித்து வலியுறுத்த உள்ளார்.
மார்ச் 15, 02:31 AM


சென்னை,
தமிழகத்தில் 2007–ம் ஆண்டு முதல் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு இல்லாமல் பிளஸ்–2 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே நடந்துவருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, இந்தியா முழுவதும் தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு (நீட்) மூலம் தான் மாணவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த ‘நீட்’ தேர்வு சி.பி.எஸ்.இ. என்ற மத்திய கல்வி திட்டத்தின்கீழ் நடத்தப்படும் பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகளை கொண்டது. ஆனால் தமிழக மாணவர்களுக்கு மாநில கல்வி திட்டத்தின் கீழ் பாடம் கற்பிக்கப்படுகிறது. எனவே இந்த தேர்வால் கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.சட்டசபையில் மசோதா

‘நீட்’ தேர்வில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்கவேண்டும் என்று தமிழக சட்டசபையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மத்திய அரசின் சில துறைகளின் பரிந்துரைகளுக்கு பிறகே ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பமுடியும்.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தினார். இதேபோல தமிழக அமைச்சர்களும், மத்திய மந்திரிகளை சந்தித்து வலியுறுத்தினர். ஆனாலும் இன்னும் ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கவில்லை.

‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது. இன்று (புதன்கிழமை) முதல் தேர்வுக்கான அனுமதி அட்டை மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மே மாதம் 7–ந்தேதி ‘நீட்’ தேர்வு நடக்கிறது. ஜூன் மாதம் 8–ந்தேதி முடிவு வெளியிடப்படுகிறது. ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.தமிழக அதிகாரிகள் குழு

மீண்டும் ஒரு முயற்சியாக தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அடங்கிய தமிழக அதிகாரிகள் குழு இன்று பிரதமரின் செயலாளரை டெல்லியில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளது. இதேபோல ‘நீட்’ தேர்வு தொடர்புடைய மற்ற துறைகளின் முக்கிய அதிகாரிகளையும் சந்திக்கிறார்கள்.

அப்போது, ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்காவிட்டாலும், 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு மட்டுமாவது விலக்கு அளிக்க வேண்டும். விலக்கு அளிக்கப்படும் காலகட்டத்தில் தமிழக அரசின் பாடத்திட்டங்களை மாற்றியமைத்து மாணவர்களை ‘நீட்’ தேர்வுக்கு தயார்படுத்திவிடுகிறோம் என்று கூற உள்ளதாக தெரிகிறது.
தினமும் காலிபெட்டிகளுடன் வந்து செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில்



திருச்சி–தஞ்சாவூர் இடையே இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
மார்ச் 14, 04:15 AM

திருச்சி

தினமும் காலி பெட்டிகளுடன் திருச்சி வந்து செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை, பயணிகள் பயன்பெறும் வகையில் திருச்சி–தஞ்சாவூர் இடையே இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில்

தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு தினமும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பராமரிப்பு பணி, தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் பராமரிப்பு பணி, திருச்சி ஜங்‌ஷன் ரெயில் நிலைய யார்டிற்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து தஞ்சாவூரில் இருந்து உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்து திருச்சிக்கு தினமும் காலை 8 மணி அளவில் காலி பெட்டிகளுடன் வந்தடைகிறது. யார்டில் ரெயில் பெட்டிகளை சுத்தம் செய்தல், இருக்கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்பின்னர் இரவு 7 மணி அளவில் தஞ்சாவூருக்கு காலி பெட்டிகளுடன் புறப்பட்டு செல்கிறது.டீசல் செலவு வீண்

பராமரிப்பு பணிக்காக திருச்சி வந்து செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயணிகள் பயன்பெறும் வகையில் இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் பராமரிப்பு பணி தொடர்ந்து திருச்சி ஜங்‌ஷன் யார்டில் தான் மேற்கொள்ளப்பட உள்ளதாக ரெயில்வே வட்டாரத்தில் தெரிவித்தனர். எனவே காலி பெட்டிகளாக செல்வதை தவிர்க்கும் வகையில் திருச்சி– தஞ்சாவூர் இடையே எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்கினால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இது குறித்து ரெயில்வே துறை மீது ஆர்வம் கொண்ட சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–

திருச்சி– தஞ்சாவூர் இடையே ரெயில்வே தண்டவாள பாதை மொத்தம் 56 கிலோ மீட்டர் தூரமாகும். ஒரு கிலோ மீட்டர் தூரம் ரெயிலை இயக்க 5 லிட்டர் டீசல் செலவாகும். அப்படி இருக்கையில் பராமரிப்பு பணிக்காக தினமும் திருச்சி– தஞ்சாவூர் இடையே காலி பெட்டிகளுடன் வந்து செல்வதால் டீசல் செலவு வீணாகி ரெயில்வே துறைக்கு பெரும் நஷ்டம் ஆகும்.திருச்சி–தஞ்சாவூர் இடையே...

பராமரிப்பு பணிக்காக வந்து செல்லும்போது ஆட்களை ஏற்றி செல்லக்கூடாது என ரெயில்வே விதிமுறை உள்ளது. இருந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் ரெயில் சேவை கூடுதலாக தேவைப்படும் போது காலி பெட்டிகளுடன் வந்து செல்வதை ரெயில்வே துறைக்கு வருமானமாக மாற்றும் வகையிலும், பயணிகள் பயன்பெறும் வகையிலும் ரெயிலை இயக்கலாம். இதற்கு ரெயில்வே உயர் அதிகாரிகள் தான் ரெயில்வே வாரியத்திடம் எடுத்துரைக்க வேண்டும்.

ரெயில்வே துறையில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிற நிலையில் வீணாகும் செலவுகளை குறைத்து வருமானத்தை உயர்த்த வேண்டியது அதிகாரிகளின் கடமை. மக்கள் பிரதிநிதிகளும் இதனை ரெயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்த வேண்டும். திருச்சி–தஞ்சாவூர் இடையே எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்கினால் இரு மாவட்டத்தை சேர்ந்த பயணிகளும், வழியில் நின்று செல்லும் ஊர்களை சேர்ந்தவர்களும் பயன்பெறுவார்கள். எனவே பராமரிப்பு பணிக்காக காலியாக வந்து செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை திருச்சி–தஞ்சாவூர் இடையே இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.ஜோத்பூர் எக்ஸ்பிரஸ்

ஏற்கனவே மன்னார்குடி– ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பராமரிப்பு பணிக்காக காலி பெட்டிகளுடன் திருச்சி வந்து செல்கிறது. இந்த நிலையில் மேலும் ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் பராமரிப்பு பணிக்காக காலியாக திருச்சி வந்து செல்வதால் ரெயில்வே துறைக்கு டீசல் செலவு கூடுதலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் குடிநீர் பஞ்சம் தலை தூக்கிவிட்டது



சென்னையில் குடிநீர் பஞ்சம் தலை தூக்கி விட்டது. ஏராளமான வீடுகளுக்கு குழாய்களில் தண்ணீர் வரவில்லை.

மார்ச் 15, 05:30 AM

சென்னை,

பருவமழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி ஆகிய ஏரிகள் போதிய தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இந்த ஏரிகளில் உள்ள தண்ணீரை வைத்துக்கொண்டு இன்னும் 30 முதல் 35 நாட்களுக்கு தான் குடிநீர் தேவையை சமாளிக்க முடியும்.

கோடை காலம் வருவதால் ஏரிகளை மட்டுமே நம்பி இருக்காமல் மாற்று வழியாக சென்னை புறநகர் பகுதிகளான மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் தேங்கி கிடக்கும் தண்ணீரை சுத்தப்படுத்தி குடி நீருக்கு பயன்படுத்த ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி விரைவில் இங்கிருந்து எடுக்கப்படும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. இது ஒருபுறம் இருக்க, சென்னையில் குடிநீர் பஞ்சம் இப்போதே தலை தூக்கி விட்டது.

தண்ணீர் வராத அடிபம்புகள்

சென்னையில் உள்ள வீடுகளுக்கு குழாய்களில் வந்த குடிநீர் பல இடங்களில் வரவில்லை. இதனால் பொதுமக்கள் தெருக்களில் உள்ள அடிபம்புகளை தேடிச் செல்லும் நிலை உள்ளது. சில இடங்களில் அடிபம்பு வேலை செய்வதில்லை. ஒரு சில அடிபம்புகள் தான் செயல்படுகின்றன. அங்கு மக்கள் கூட்டமாக இருக்கிறார்கள். எனவே மக்கள் வெகுநேரம் காத்திருந்து தண்ணீர் பிடிக்க வேண்டி உள்ளது.

குடிநீர் குறைவாக வருவதால், அடிபம்புகளில் ஒரு குடம் தண்ணீரை நிரப்ப வெகுநேரம் ஆகிறது. எனவே பலர் அடிபம்பு அருகில் நாற்காலியை போட்டு அமர்ந்து தண்ணீர் பிடிக்கிறார்கள். லாரிகள் மூலம் மக்கள் தேவைக்கு ஏற்ப தண்ணீர் வினியோகிப்பதில்லை. இதனால் ஒருவருக்கு 2 அல்லது 3 குடம் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. எனவே பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள்.

குடிநீர் பஞ்சம் குறித்து புரசைவாக்கத்தை சேர்ந்த ஒரு பெண் கூறியதாவது:-

மக்கள் கூட்டம்

வீடுகளுக்கு குழாய் மூலம் சென்னை குடிநீர் தினமும் வந்து கொண்டிருந்தது. திடீரென 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வந்தது. இப்போது அதுவும் வருவது இல்லை. லாரியில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் தண்ணீரை பிடிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக போகிறார்கள். போட்டி போடுகிறார்கள்.

குளிப்பதற்கு வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறு மூலம் கிடைக்கும் தண்ணீர் கை கொடுக்கிறது. இப்போதே குடிநீர் பஞ்சம் தலை தூக்கிவிட்டது. ஏப்ரல், மே மாதங்களில் ஆழ்துளை கிணற்றிலாவது தண்ணீர் வருமா? என்பது சந்தேகம் தான். காரணம் நிலத்தடி நீர் மட்டம் கீழே போய்க்கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஓட்டல்கள்

கடும் கோடை நெருங்கி விட்டது. இப்போதே சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. தூக்கம் இன்றி மக்கள் தண்ணீருக்காக அடி பம்பைத் தேடி நள்ளிரவிலும் அதிகாலையிலும் நிற்பதை காண முடிகிறது. சென்னை நகரில் பெரும்பாலான அலுவலகங்கள், ஓட்டல்கள் மற்றும் பல கம்பெனிகளில் லாரிகளில் தண்ணீர் விலை கொடுத்து வாங்கப்படுகிறது. அவை அனைத்தும் குடிநீர் லாரிகளை நம்பித்தான் உள்ளன.

முடியுமா?, முடியாதா? வெளிப்படையாக சொல்லிவிடுங்கள்

தமிழ்நாட்டில் 21 அரசு மருத்துவக்கல்லூரிகள் இருக்கின்றன. இந்த கல்லூரிகளில் ஆண்டுதோறும் 2,750 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்காக சேர்க்கப்படுகிறார்கள்.



மார்ச் 15, 03:00 AM

தமிழ்நாட்டில் 21 அரசு மருத்துவக்கல்லூரிகள் இருக்கின்றன. இந்த கல்லூரிகளில் ஆண்டுதோறும் 2,750 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்காக சேர்க்கப்படுகிறார்கள். இதுபோல, 15 தனியார் கல்லூரிகளில் 2,100 மாணவர்களும், சமீபத்தில் அரசு நிர்வாகத்தை ஏற்றுக்கொண்ட அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்பட 10 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில், ஒவ்வொரு ஆண்டும் 1,650 மாணவர்களும் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்கப்படுகிறார்கள். ஆக, ஒவ்வொரு ஆண்டும் 6,500 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்காக சேரும்நிலை தமிழ்நாட்டில் இருக்கிறது. கடந்த 2007–ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் மருத்துவப்படிப்பு என்றாலும் சரி, பொறியியல் படிப்பு என்றாலும் சரி, நுழைவுத்தேர்வு கிடையாது. மாணவர்கள் பிளஸ்–2 பொதுத்தேர்வில் எடுத்துள்ள மதிப்பெண் அடிப்படையிலேயே, இதுபோல தொழிற்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், ஏற்கனவே உச்சநீதிமன்றம் ‘நீட்’ தேர்வு மூலமாகத்தான் நாடு முழுவதும் தொழிற்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று கடந்த ஆண்டே உத்தரவு பிறப்பித்து, தமிழ்நாட்டுக்கு ஒரு ஆண்டுக்கு மட்டும் விலக்கு அளித்தநிலையில், நிச்சயமாக இந்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வு நடக்கும் என்ற நிலைதான் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிலுள்ள கல்வித்திட்டம் வேறு, ‘நீட்’ தேர்வு மத்திய கல்வித்திட்டம் அதாவது, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் 11–வது மற்றும் 12–வது வகுப்பு பாடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும் கேள்விகள் மூலமாகத்தான் நடக்கும் என்றநிலையில், நமது மாணவர்கள் நிச்சயமாக இந்தத்தேர்வை எழுதி வெற்றிபெற முடியாது என்பதால், தமிழ்நாடு முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி 31–ந்தேதி ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பதற்கான ஒரு மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, இப்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய அரசாங்கத்திடம் நிலுவையில் இருக்கிறது. பிரதமரை, முதல்–அமைச்சர் சந்தித்து கோரிக்கை விடுத்தார். மத்திய மந்திரிகளை, தமிழக அமைச்சர்கள் சந்தித்தனர். இன்று பிரதமரின் செயலாளரை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சந்திக்கிறார். ஆனால், இன்னும் இந்தக்கோரிக்கை நிறைவேற்றப்படுவதற்கான அறிகுறி தென்படவில்லை.

இந்த சூழ்நிலையில், கடந்த 10–ந்தேதி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் சார்பில், அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களையும் சேர்த்து, அனைத்து மாணவர்களுக்கும் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு, எம்.எஸ்., எம்.டி. போன்ற பட்டமேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கைக்கு பொதுகலந்தாய்வு நடத்தவேண்டும். இதில் யாருக்கும் விதிவிலக்கு கிடையாது என்று தெளிவாக குறிப்பிட்டுவிட்டது. கண்டிப்பாக ‘நீட்’ தேர்வு எழுதவேண்டும் என்பதுதான் இதன்பொருள். ஆக, தமிழக அரசு இன்னும் தாமதிக்காமல், ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெறமுடியுமா?, முடியாதா? என்பதை மாணவர்களுக்கு வெளிப்படையாக தெரிவித்துவிட்டால் நல்லது. ஏனெனில், கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு எழுதியதில் 41.9 சதவீதம் பேர்கள்தான் தேர்வாகியிருக்கிறார்கள். இப்போது 6,500 இடங்களுக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறவேண்டுமென்றால், ஒருவேளை ‘நீட்’ தேர்வு கட்டாயம் என்பது வந்துவிட்டால், கடைசிநேரம் அவசர அவசரமாக தங்களை தயார்படுத்திக்கொள்ளமுடியாது. எனவே, கடைசியாக ஒருபெரிய முயற்சியை மத்திய அரசாங்கத்திடம் தெரிவித்து நிறைவேற்றவில்லையென்றால், மே 7–ந்தேதி ‘நீட்’ தேர்வு எழுதுவதற்கான பயிற்சிகளை நமது மாணவர்களுக்கு கொடுக்கவேண்டும். அடுத்தஆண்டு முதல் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கும் ‘நீட்’ தேர்வு வரப்போகிறது என்று அறிவிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு முதலே பாடத்திட்டத்தை உயர்தரத்தில் மாற்றுவதே சாலச்சிறந்தது.

Tuesday, March 14, 2017

ரூ.40க்கு பதில் ரூ. 4 லட்சம் வசூலித்த டோல்கேட் ஊழியர்கள்

மங்களூரு: டோல்கேட்டில் டாக்டர் ஒருவரிடம் ரூ.40க்கு பதில் ரூ.4 லட்சம் வசூலித்து டோல்கேட் ஊழியர்கள் அதிர்ச்சியளித்தனர். டாக்டர் புகார் அளிக்கவே பாக்கி தொகையை அவர்கள் திருப்பி கொடுத்தனர்.

மைசூரை சேர்ந்த ராவ் என்ற டாக்டர், கொச்சி - மும்பை தேசிய நெடுஞ்சாலையில், மும்பை காரில் நோக்கி சென்றார். நேற்று இரவு 10.30 மணியளவில் உடுப்பி அருகே சென்ற போது, டோல்கேட்டில் சுங்க கட்டணத்தை செலுத்துவதற்காக தன் கிரெடிட் கார்டை கொடுத்தார். டோல்கேட் ஊழியர் கார்டை மிஷினில், 'ஸ்வைப்' செய்த பின்னர் கார்டையும், ரசீதையும் கொடுத்தார். தொடர்ந்து அவரது மொபைலுக்கு ரூ.4 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக செய்தி வந்தது. இது குறித்து ஊழியரிடம் ராவ் கேள்வி எழுப்பிய போது, அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை என உறுதியாக கூறினர். ராவ் எவ்வளவோ கூறியும், வாக்குவாதம் செய்தும் பலனளிக்கவில்லை. இதனையடுத்து அங்கிருந்து சென்ற டாக்டர், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷ னில் புகார் அளித்து அங்கிருந்து போலீஸ் அதிகாரி ஒருவரை அழைத்து கொண்டு வந்தார்.

 போலீஸ் விசாரணையில், ஊழியர்கள் தங்களது தவறை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து இந்த பணத்திற்கு செக் தருவதாக கூறினர். ஆனால், டாக்டர் ரொக்கமாக தான் வழங்க வேண்டும் என உறுதியாக கூறினார். இதனையடுத்து ஊழியர்கள் தங்களது உயரதிகாரிகளிடம் ஆலோசனை செய்து, ரூ.3,99,960 ஐ டாக்டரிடம் திரும்ப கொடுத்தனர்.இந்த டோல்கேட்டில் நாள் ஒன்றுக்கு ரூ.8 லட்சம் வசூலாவதாக போலீசார் கூறினர்.

NEWS TODAY 21.12.2025