Wednesday, March 15, 2017

சென்னையில் குடிநீர் பஞ்சம் தலை தூக்கிவிட்டது



சென்னையில் குடிநீர் பஞ்சம் தலை தூக்கி விட்டது. ஏராளமான வீடுகளுக்கு குழாய்களில் தண்ணீர் வரவில்லை.

மார்ச் 15, 05:30 AM

சென்னை,

பருவமழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி ஆகிய ஏரிகள் போதிய தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இந்த ஏரிகளில் உள்ள தண்ணீரை வைத்துக்கொண்டு இன்னும் 30 முதல் 35 நாட்களுக்கு தான் குடிநீர் தேவையை சமாளிக்க முடியும்.

கோடை காலம் வருவதால் ஏரிகளை மட்டுமே நம்பி இருக்காமல் மாற்று வழியாக சென்னை புறநகர் பகுதிகளான மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் தேங்கி கிடக்கும் தண்ணீரை சுத்தப்படுத்தி குடி நீருக்கு பயன்படுத்த ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி விரைவில் இங்கிருந்து எடுக்கப்படும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. இது ஒருபுறம் இருக்க, சென்னையில் குடிநீர் பஞ்சம் இப்போதே தலை தூக்கி விட்டது.

தண்ணீர் வராத அடிபம்புகள்

சென்னையில் உள்ள வீடுகளுக்கு குழாய்களில் வந்த குடிநீர் பல இடங்களில் வரவில்லை. இதனால் பொதுமக்கள் தெருக்களில் உள்ள அடிபம்புகளை தேடிச் செல்லும் நிலை உள்ளது. சில இடங்களில் அடிபம்பு வேலை செய்வதில்லை. ஒரு சில அடிபம்புகள் தான் செயல்படுகின்றன. அங்கு மக்கள் கூட்டமாக இருக்கிறார்கள். எனவே மக்கள் வெகுநேரம் காத்திருந்து தண்ணீர் பிடிக்க வேண்டி உள்ளது.

குடிநீர் குறைவாக வருவதால், அடிபம்புகளில் ஒரு குடம் தண்ணீரை நிரப்ப வெகுநேரம் ஆகிறது. எனவே பலர் அடிபம்பு அருகில் நாற்காலியை போட்டு அமர்ந்து தண்ணீர் பிடிக்கிறார்கள். லாரிகள் மூலம் மக்கள் தேவைக்கு ஏற்ப தண்ணீர் வினியோகிப்பதில்லை. இதனால் ஒருவருக்கு 2 அல்லது 3 குடம் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. எனவே பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள்.

குடிநீர் பஞ்சம் குறித்து புரசைவாக்கத்தை சேர்ந்த ஒரு பெண் கூறியதாவது:-

மக்கள் கூட்டம்

வீடுகளுக்கு குழாய் மூலம் சென்னை குடிநீர் தினமும் வந்து கொண்டிருந்தது. திடீரென 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வந்தது. இப்போது அதுவும் வருவது இல்லை. லாரியில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் தண்ணீரை பிடிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக போகிறார்கள். போட்டி போடுகிறார்கள்.

குளிப்பதற்கு வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறு மூலம் கிடைக்கும் தண்ணீர் கை கொடுக்கிறது. இப்போதே குடிநீர் பஞ்சம் தலை தூக்கிவிட்டது. ஏப்ரல், மே மாதங்களில் ஆழ்துளை கிணற்றிலாவது தண்ணீர் வருமா? என்பது சந்தேகம் தான். காரணம் நிலத்தடி நீர் மட்டம் கீழே போய்க்கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஓட்டல்கள்

கடும் கோடை நெருங்கி விட்டது. இப்போதே சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. தூக்கம் இன்றி மக்கள் தண்ணீருக்காக அடி பம்பைத் தேடி நள்ளிரவிலும் அதிகாலையிலும் நிற்பதை காண முடிகிறது. சென்னை நகரில் பெரும்பாலான அலுவலகங்கள், ஓட்டல்கள் மற்றும் பல கம்பெனிகளில் லாரிகளில் தண்ணீர் விலை கொடுத்து வாங்கப்படுகிறது. அவை அனைத்தும் குடிநீர் லாரிகளை நம்பித்தான் உள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024