Wednesday, March 15, 2017

முடியுமா?, முடியாதா? வெளிப்படையாக சொல்லிவிடுங்கள்

தமிழ்நாட்டில் 21 அரசு மருத்துவக்கல்லூரிகள் இருக்கின்றன. இந்த கல்லூரிகளில் ஆண்டுதோறும் 2,750 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்காக சேர்க்கப்படுகிறார்கள்.



மார்ச் 15, 03:00 AM

தமிழ்நாட்டில் 21 அரசு மருத்துவக்கல்லூரிகள் இருக்கின்றன. இந்த கல்லூரிகளில் ஆண்டுதோறும் 2,750 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்காக சேர்க்கப்படுகிறார்கள். இதுபோல, 15 தனியார் கல்லூரிகளில் 2,100 மாணவர்களும், சமீபத்தில் அரசு நிர்வாகத்தை ஏற்றுக்கொண்ட அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்பட 10 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில், ஒவ்வொரு ஆண்டும் 1,650 மாணவர்களும் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்கப்படுகிறார்கள். ஆக, ஒவ்வொரு ஆண்டும் 6,500 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்காக சேரும்நிலை தமிழ்நாட்டில் இருக்கிறது. கடந்த 2007–ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் மருத்துவப்படிப்பு என்றாலும் சரி, பொறியியல் படிப்பு என்றாலும் சரி, நுழைவுத்தேர்வு கிடையாது. மாணவர்கள் பிளஸ்–2 பொதுத்தேர்வில் எடுத்துள்ள மதிப்பெண் அடிப்படையிலேயே, இதுபோல தொழிற்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், ஏற்கனவே உச்சநீதிமன்றம் ‘நீட்’ தேர்வு மூலமாகத்தான் நாடு முழுவதும் தொழிற்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று கடந்த ஆண்டே உத்தரவு பிறப்பித்து, தமிழ்நாட்டுக்கு ஒரு ஆண்டுக்கு மட்டும் விலக்கு அளித்தநிலையில், நிச்சயமாக இந்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வு நடக்கும் என்ற நிலைதான் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிலுள்ள கல்வித்திட்டம் வேறு, ‘நீட்’ தேர்வு மத்திய கல்வித்திட்டம் அதாவது, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் 11–வது மற்றும் 12–வது வகுப்பு பாடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும் கேள்விகள் மூலமாகத்தான் நடக்கும் என்றநிலையில், நமது மாணவர்கள் நிச்சயமாக இந்தத்தேர்வை எழுதி வெற்றிபெற முடியாது என்பதால், தமிழ்நாடு முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி 31–ந்தேதி ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பதற்கான ஒரு மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, இப்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய அரசாங்கத்திடம் நிலுவையில் இருக்கிறது. பிரதமரை, முதல்–அமைச்சர் சந்தித்து கோரிக்கை விடுத்தார். மத்திய மந்திரிகளை, தமிழக அமைச்சர்கள் சந்தித்தனர். இன்று பிரதமரின் செயலாளரை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சந்திக்கிறார். ஆனால், இன்னும் இந்தக்கோரிக்கை நிறைவேற்றப்படுவதற்கான அறிகுறி தென்படவில்லை.

இந்த சூழ்நிலையில், கடந்த 10–ந்தேதி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் சார்பில், அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களையும் சேர்த்து, அனைத்து மாணவர்களுக்கும் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு, எம்.எஸ்., எம்.டி. போன்ற பட்டமேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கைக்கு பொதுகலந்தாய்வு நடத்தவேண்டும். இதில் யாருக்கும் விதிவிலக்கு கிடையாது என்று தெளிவாக குறிப்பிட்டுவிட்டது. கண்டிப்பாக ‘நீட்’ தேர்வு எழுதவேண்டும் என்பதுதான் இதன்பொருள். ஆக, தமிழக அரசு இன்னும் தாமதிக்காமல், ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெறமுடியுமா?, முடியாதா? என்பதை மாணவர்களுக்கு வெளிப்படையாக தெரிவித்துவிட்டால் நல்லது. ஏனெனில், கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு எழுதியதில் 41.9 சதவீதம் பேர்கள்தான் தேர்வாகியிருக்கிறார்கள். இப்போது 6,500 இடங்களுக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறவேண்டுமென்றால், ஒருவேளை ‘நீட்’ தேர்வு கட்டாயம் என்பது வந்துவிட்டால், கடைசிநேரம் அவசர அவசரமாக தங்களை தயார்படுத்திக்கொள்ளமுடியாது. எனவே, கடைசியாக ஒருபெரிய முயற்சியை மத்திய அரசாங்கத்திடம் தெரிவித்து நிறைவேற்றவில்லையென்றால், மே 7–ந்தேதி ‘நீட்’ தேர்வு எழுதுவதற்கான பயிற்சிகளை நமது மாணவர்களுக்கு கொடுக்கவேண்டும். அடுத்தஆண்டு முதல் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கும் ‘நீட்’ தேர்வு வரப்போகிறது என்று அறிவிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு முதலே பாடத்திட்டத்தை உயர்தரத்தில் மாற்றுவதே சாலச்சிறந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024