Wednesday, March 15, 2017

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற மீண்டும் முயற்சி



‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெறுவதற்கு மீண்டும் ஒரு முயற்சியாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் டெல்லியில் இன்று பிரதமரின் செயலாளரை சந்தித்து வலியுறுத்த உள்ளார்.
மார்ச் 15, 02:31 AM


சென்னை,
தமிழகத்தில் 2007–ம் ஆண்டு முதல் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு இல்லாமல் பிளஸ்–2 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே நடந்துவருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, இந்தியா முழுவதும் தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு (நீட்) மூலம் தான் மாணவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த ‘நீட்’ தேர்வு சி.பி.எஸ்.இ. என்ற மத்திய கல்வி திட்டத்தின்கீழ் நடத்தப்படும் பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகளை கொண்டது. ஆனால் தமிழக மாணவர்களுக்கு மாநில கல்வி திட்டத்தின் கீழ் பாடம் கற்பிக்கப்படுகிறது. எனவே இந்த தேர்வால் கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.சட்டசபையில் மசோதா

‘நீட்’ தேர்வில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்கவேண்டும் என்று தமிழக சட்டசபையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மத்திய அரசின் சில துறைகளின் பரிந்துரைகளுக்கு பிறகே ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பமுடியும்.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தினார். இதேபோல தமிழக அமைச்சர்களும், மத்திய மந்திரிகளை சந்தித்து வலியுறுத்தினர். ஆனாலும் இன்னும் ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கவில்லை.

‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது. இன்று (புதன்கிழமை) முதல் தேர்வுக்கான அனுமதி அட்டை மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மே மாதம் 7–ந்தேதி ‘நீட்’ தேர்வு நடக்கிறது. ஜூன் மாதம் 8–ந்தேதி முடிவு வெளியிடப்படுகிறது. ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.தமிழக அதிகாரிகள் குழு

மீண்டும் ஒரு முயற்சியாக தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அடங்கிய தமிழக அதிகாரிகள் குழு இன்று பிரதமரின் செயலாளரை டெல்லியில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளது. இதேபோல ‘நீட்’ தேர்வு தொடர்புடைய மற்ற துறைகளின் முக்கிய அதிகாரிகளையும் சந்திக்கிறார்கள்.

அப்போது, ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்காவிட்டாலும், 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு மட்டுமாவது விலக்கு அளிக்க வேண்டும். விலக்கு அளிக்கப்படும் காலகட்டத்தில் தமிழக அரசின் பாடத்திட்டங்களை மாற்றியமைத்து மாணவர்களை ‘நீட்’ தேர்வுக்கு தயார்படுத்திவிடுகிறோம் என்று கூற உள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024