Wednesday, March 15, 2017

மருத்துவ மேற்படிப்பு இடங்கள் தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: முதுகலை மருத்துவ படிப்புகளில், 50 சதவீத இடங்களை தனியார் மருத்துவ கல்லுாரிகள் நிரப்ப தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 இதற்கு பதிலளிக்கும்படி, தனியார் கல்லுாரிகளுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம், நெல்லுாரை சேர்ந்த டாக்டர் திவ்யா சரோனா தாக்கல் செய்த மனு: முதுகலை மருத்துவ படிப்பில் சேர, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு எழுதி, 50 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளேன். 'நீட்' மதிப்பெண் மற்றும் பணி அனுபவ மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால், அரசு மருத்துவ கல்லுாரி அல்லது தனியார் கல்லுாரிகளில், எனக்கு இடம் கிடைக்கும்.தனியார் மருத்துவ கல்லுாரிகளைப் பொறுத்தவரை, முதுகலை மருத்துவ படிப்புகளில், 50 சதவீத இடங்களை அரசும், மீதி இடங்களை கல்லுாரி நிர்வாகமும் நிரப்பி கொள்ள வேண்டும். ஆனால், 50 சதவீத இடங்களை, தனியார் கல்லுாரிகளிடம் இருந்து பெற, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.தனியார் கல்லுாரிகள், 50 சதவீத இடங்களை, அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால், நீட் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு, இடம் கிடைக்காமல் போகலாம்.எனவே, 50 சதவீத இடங்களை, தனியார் மருத்துவ கல்லுாரிகள் நிரப்ப தடை விதிக்க வேண்டும். 50 சதவீத இடங்களை அரசு பெற்று, நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி கிருபாகரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, தனியார் மருத்துவ கல்லுாரிகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024