Wednesday, March 15, 2017

எல்லாரும் நுகர்வோர்; எல்லாரும் மன்னர்!

By த. ஸ்டாலின் குணசேகரன்  |   Published on : 15th March 2017 01:48 AM  
அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவராகத் திகழ்ந்த ஜான்.எஃப். கென்னடி 1962-ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
"நுகர்வோர் என்ற வரையரைக்குள் நாம் அனைவருமே அடங்குகிறோம். நுகர்வோர்தான் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய குழுவாக விளங்குகின்றனர். ஆனால், அந்த முக்கியமான குழுவின் கருத்துக்கள் காதுகொடுத்துக் கேட்கப்படுவது இல்லை' என்று தெரிவித்ததோடு நுகர்வோருக்கு உள்ள நான்கு முக்கிய உரிமைகளைப் பிரகடனம் செய்தார். பாதுகாப்பிற்கான உரிமை, தகவல்பெறும் உரிமை, விரும்பியதைத் தேர்வு செய்யும் உரிமை, பிரதிநிதித்துவத்திற்கான உரிமை ஆகியவையே அவை.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1962-ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி இயற்றப்பட்டது. நுகர்வோர் உரிமை குறித்த விழிப்புணர்வு அதற்குப் பல்லாண்டுகளுக்கும் முன்பிருந்தே அமெரிக்காவில் இருந்திருந்தாலும் அதற்கென தனிச்சட்டம் அப்போதுதான் வந்தது.
அதற்குப்பிறகு வந்த குடியரசுத் தலைவர் ஜெரால்டு ஃபோர்டு, "அமெரிக்காவிலுள்ள நுகர்வோர் அனைவருக்கும் நுகர்வோர் கல்வி அளிக்காமல் கென்னடி அங்கீகரித்த நான்கு உரிமைகள் மக்களுக்கு எவ்விதப் பயனையும் அளிக்காது' என்று
கூறியதோடு நுகர்வோர் கல்வி உரிமையை ஆறாவது உரிமையாக இடம்பெற
வைத்தார்.
நுகர்வோர் சங்கங்களின் அனைத்துலக அமைப்பு 1975-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் தலைநகரான சிட்னி நகரில் தனது 8-ஆவது உலக மாநாட்டை நடத்தியது. இம்மாநாட்டில்தான் அமெரிக்க நுகர்வோர் உரிமைச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நுகர்வோர் பாதுகாப்பிற்கான உலக அளவிலான தீர்மானங்களை நிறைவேற்றி அவற்றை ஐ.நா.சபைக்கு அனுப்பிவைத்தனர்.
அத்தீர்மானங்கள் தொடர்பாக ஐ.நா.சபை சுமார் 10 ஆண்டுகள் யாதொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1985-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதிதான் ஐ.நா. சபை நுகர்வோர் உரிமைகளை அங்கீகரித்தது.
அமெரிக்காவில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட மார்ச் 15-ஆம் தேதி "உலக நுகர்வோர் விழிப்புணர்வு தின'மாக 1983-ஆம் ஆண்டிலிருந்து உலகமெங்கும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
இந்தியாவில் 1960-களில் நுகர்வோர் இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டு 1980-களில் அதற்கான ஒரு வடிவம் கிடைத்தது. 1982-இல் நுகர்வோர் பாதுகாப்பிற்கான ஆசியக் கருத்தரங்கு இந்தியா முழுவதிலுமுள்ள பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்டது. இதில் ஆசிய நாடுகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்திய நுகர்வோர் இயக்கத்தின் ஒரு மைல்கல்லாக விளங்கிய இந்த நுகர்வோர் விழிப்புணர்வு நடவடிக்கைதான் அன்றைய இந்தியப் பிரதமரான இந்திராகாந்திக்கு நுகர்வோர் பாதுகாப்பிற்கான தனிச்சட்டமொன்றைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.
இதன் பின்னர் பல வழிகளில் அதற்கான முயற்சிகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் "நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986' கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் 1986-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி குடியரசுத் தலைவரின் கையெழுத்துப் பெற்று நடைமுறைக்கு வந்தது.
இச்சட்டம் வருவதற்கு முன்பே நுகர்வோருக்கான பல சட்டங்கள் இருந்திருக்கின்றன. நாடு விடுதலையடைவதற்கு முன்பேகூட ஆங்கிலேயர்களால் நுகர்வோருக்கான சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தன.
"இந்தியப் பொருட்கள் விற்பனைச் சட்டம் 1930', "விவசாய உற்பத்திச் சட்டம் 1937', "உணவுக் கலப்படத் தடைச் சட்டம் 1954', "மருந்துகள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் சட்டம் 1940', "பூச்சி கொல்லிகள் சட்டம் 1968', "அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955', "கம்பெனிகள் சட்டம் 1956', "வணிகப் பொருட்களின் முத்திரைகள் சட்டம் 1958', "காப்புரிமைச் சட்டம் 1970' போன்ற பல சட்டங்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்திற்கு முன்பே நுகர்வோர் நலனுக்காக இருந்தன. இவை யாவும் இப்போதும் நடைமுறையில் இருக்கின்றன.
இந்தச் சட்டங்களுக்கும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்திற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. பழைய சட்டங்களின்படி, பாதிப்பை உண்டாக்கியவர்கள் தண்டிக்கப்படுவர். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி மனுச்செய்வோர் வழக்கில் வெற்றி பெற்றால் பாதிப்பை ஏற்படுத்தியவரிடமிருந்து தக்க நிவாரணமும் இழப்பீடும் பெற முடியும்.
நுகர்வோர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகளில் புரட்சிகரமான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக,சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் பேருந்து விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய சுமந்தா முகர்ஜி என்கிற பொறியியல் கல்லூரி மாணவரை அருகிலுள்ள ரூபா மருத்துவமனை என்கிற தனியார் மருத்துவமனைக்கு அங்கிருந்த வழிப்போக்கர்கள் தூக்கிச் சென்றார்கள்.
சிகிச்சை தொடங்கி முக்கால் மணிநேரம் கழித்து மேற்கொண்டு சிகிச்சை தொடரவேண்டுமானால் கட்டணமாக ரூ.15,000 செலுத்த வேண்டும் என்று மருத்துமனை நிர்வாகம் கேட்டது. அடிபட்ட மாணவரை அழைத்து வந்தவர்கள் மருத்துவமனையில் மனிதாபிமானத்தோடு சேர்த்த பின்னர் சிகிசையளிக்கிற போதும் அங்கேயே காத்திருந்தனர். அவர்களிடமிருந்த இருந்த ரூ.2,000-த்தைச் செலுத்தினர்.
அடிபட்ட மாணவரின் விலையுயர்ந்த இரண்டு சக்கரவாகனத்தை வேண்டுமானால் ஈடாக வைத்துக்கொண்டு அவரின் பெற்றோர் வரும் வரையில் சிகிச்சியைத் தொடர மன்றாடினர். மாணவர் நினைவிழப்பதற்கு முன்பே தன்னிடமுள்ள மருத்துவக் காப்பீட்டுச் சான்றிதழை மருத்துவர்களிடம் அளித்ததோடு தனது தந்தையும் ஒரு மருத்துவர்தான் என்றும் பணம் பற்றிப் பிரச்னையில்லையென்றும் கூறிய பின்னர் மயங்கிவிட்டார்.
அந்த மருத்துவமனையில் மேற்கொண்டு சிகிச்சையளிக்க முடியாது என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டனர். அம்மாணவனைக் கொண்டுவந்து சேர்த்த அதே வழிப்போக்கர்கள் அம்மாணவரை வேறுவாகனத்தில் வைத்து 20 கிலோமீட்டக்கு அப்பாலுள்ள அரசு மருத்துவமைக்கு வேகமாக எடுத்துச் சென்றனர். போகிற வழியில் மாணவர் சுமந்தா முகர்ஜி இறந்துவிட்டார்.
அம்மாணவரின் தந்தை தேசிய மனித உரிமை ஆணையத்தில் கொடுத்த வழக்கின் முடிவில் மாணவன் இறப்புக்காக, சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவமனை பத்துலட்ச ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டுமென்று ஆணையம் உத்தரவிட்டது.
அந்தத் தீர்ப்பில் உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு மனிதாபிமானத்தோடு சிகிச்சையளிப்பது மருத்துவமனைகளின் கடமை என அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது. "பணம் திரும்ப வரும் உயிர் வராது' என்ற முக்கியமான வாசகம் அத்தீர்ப்பில் இடம் பெற்றுள்ளது.
இதுபோல் மற்றொரு சம்பவம். ரயிலில் முன்பதிவு செய்து தூங்கியவாறு பயணம் மேற்கொண்ட பெண்ணின் நகையை நள்ளிரவில் ரயில் பெட்டிக்குள் நுழைந்து திருடன் பிடுங்கிச் சென்றுவிட்டான். அந்தப் பெண் சத்தம் போட்டார். சகபயணிகள் ரயிலை நிறுத்துவதற்கான சங்கிலியை இழுத்தார். ரயில் நிற்கவில்லை.
பாதிக்கப்பட்ட பெண் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி புகார் கொடுத்தும் பயனில்லை. நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இழந்த நகைக்கான நட்டஈட்டை ரயில்வே நிர்வாகத்திடமிருந்து பெற்றார் அந்தப் பெண்.
ரயில்வே நிர்வாகம் மாவட்ட குறைதீர் மன்றத்திலும் தோற்றது; மேல்முறையீடு செய்து மாநில ஆணையத்திலும் தோற்றது; கடைசியாக தேசிய ஆணையத்திலும் தோற்றது. பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்து வழக்காடி வெற்றிபெற்றார்.
அவர் பயணம் செய்த அந்த ரயிலில் மின்சாரம் இல்லை. ஆகவே விளக்கு எரியாமல் பெட்டியே இருட்டாக இருந்தது. விடியற்காலை மூன்று மணியாளவில் ரயில் ஒரு இடத்தில் மெதுவாகச் சென்றபோது திருடன் உள்ளே ஏறிவிட்டான்.
இது சேவைக்குறைபாடு. இதற்கு ரயில்வே நிர்வாகம் உரிய நட்டஈடு கொடுக்க வேண்டும் என்பதுதான் வழக்கு. "குறைவான சேவையும் சேவைக் குறைபாடே' என்று சட்டம் சொல்கிறது.
முன்பதிவு செய்யப்பட்ட ரயிலில் பெட்டியின் கதவு திறந்திருந்தது, ரயில் பெட்டிக்குள் மின்சாரம் இல்லாமல் இருந்தது, அவசரத்திற்கு சங்கிலி இழுக்கப்பட்டபோது ரயில் நிற்காமல் சென்றது ஆகிய அனைத்தும் அப்பட்டமான சேவைக் குறைபாடே என்று தேசிய ஆணையம் வரை அழுத்தமாகத் தெரிவித்ததோடு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நட்டஈடும் வழங்க உத்திரவிட்டது.
ஒரு பொருளை அல்லது பண்டத்தை விலை கொடுத்து வாங்குபவரும் கட்டணம் செலுத்தி சேவையைப் பெறுபவரும் நுகர்வோரே என சட்டம் சொல்கிறது. அப்படிப் பார்த்தால் பெரும் பகுதியான குடிமக்கள் நுகர்வோரே. பாதிக்கப்படும் யாரும் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகத் தகுதிபெற்றவர்கள்.
நுகர்வோர் நீதிமன்றங்களின் தனிச் சிறப்பே எளிய வழக்காடு முறைதான். சாமானியரும் இந்நீதிமன்றங்களைத் தடையின்றி அணுகுவதற்கு ஏற்றவகையில் இதன் விதிகளும் நடவடிக்கைகளும் வடிவமைக்கப்படுள்ளன.
இந்நீதிமன்றங்களில் வழக்காடுவதற்கு வழக்குரைஞர் தேவையில்லை. தானே முன்வந்து தான் அளித்த புகாரிலுள்ள விவரங்களை எந்தவிதச் சடங்குச் சொற்களோ வாக்கியங்களோ இல்லாமல் தெரிவிக்கலாம். நேரடியாகச் சென்று நீதிமன்றத்தில் புகாரை அளிக்கும் சூழ்நிலையில்லாதவர்கள் பதிவுத் தபாலிலும்கூட புகார் மனுவை நீதிமன்றத்திற்கு அனுப்பலாம்.
நீதிமன்றத்திற்குப் புகார் மனு கிடைத்த பிறகு இருதரப்பினரையும் ஒரு தேதியில் ஆஜராகக் கோரும் அறிவிப்பு நீதிமன்றத்திலிருந்து வரும். வழக்குரைஞர் வைக்காமலும் தானும் நேராகச் செல்லாமலும் நுகர்வோர் சங்கங்களின் பிரநிதிகளைக் கொண்டுகூட வழக்கை நடத்தலாம். வழக்கிற்கு ஆகும் செலவும் குறைவுதான்.
ரூ.20 லட்சம் வரையிலான புகார்களை மாவட்டக் குறைதீர் மன்றத்தில் தாக்கல் செய்யலாம். ரூ.20 லட்சத்திலிருந்து 1 கோடி வரையிலான புகாரை மாநில குறைதீர் ஆணையத்திற்குக் கொண்டு செல்லலாம். ரூ.1 கோடிக்கும் மேல் உள்ள பிரச்னைகளுக்கான புகாரை தேசிய நுகர்வோர் ஆணையத்திற்கு எடுத்துச் செல்லலாம்.
நுகர்வோரைச் சிந்திக்கவிடாமல் செயல்படத் தூண்டுகிற விளம்பர உத்திகளை தோற்கடித்து நம்மைப் பாதுகாத்துக்கொள்கிற விழிப்புணர்வு அவசியம். நுகர்வோர் ஒன்றிணைந்தால் அது மகத்தான மக்கள் சக்தியாக உருவெடுக்கும்.
"எல்லோரும் இந்நாட்டு மன்னர்" என்றார் பாரதியார். இங்கு எல்லோரும் நுகர்வோரே. அப்படியானால் நுகர்வோர் இந்நாட்டு மன்னர்தானே?
இன்று உலக நுகர்வோர்
விழிப்புணர்வு நாள்.
கட்டுரையாளர்:
தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024