Tuesday, April 11, 2017

தேர்தல் கமிஷன் செலவிட்ட ரூ.1.10 கோடி வீண்

இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், தேர்தல் கமிஷன் செலவழித்த, 1.10 கோடி ரூபாய் வீணாகி உள்ளது. ஒரு சட்டசபை தொகுதிக்கு, தேர்தல் நடத்த, 1.50 கோடி ரூபாய் செலவாகும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி, மார்ச் 9ல், அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. தேர்தலுக்காக, 256 ஓட்டுச்சாவடிகள் தயார் செய்யப்பட்டன. அங்கு, அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டன.

ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 1,842 பேர் தேர்வு செய்யப்பட்டு, இரண்டு கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, 720 துணை ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். ஐந்து தேர்தல் பார்வையாளர்களும், ஒரு சிறப்பு தனி அதிகாரியும் நியமிக்கப்பட்டனர். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தயார் செய்யப்பட்டன. நாளை, ஓட்டுப்பதிவு நடக்க இருந்தது. இந்நிலையில், தினகரன் அணியினரின், பணம் பட்டுவாடா ஆவணங்கள் சிக்கியதால், தேர்தல் ரத்து செய்யப்படுவதாக, நேற்று முன் தினம் இரவு அறிவிக்கப்பட்டது.

நேற்று முன் தினம் வரை, தேர்தல் பணிகளுக்காக, கமிஷன், 1.10 கோடி ரூபாய் செலவழித்து உள்ளது. தேர்தல் ரத்தால், அந்த செலவு வீணானது. மீண்டும் தேர்தல் நடத்தும் போது, இது போன்றே மறுபடியும் அனைத்து செலவுகளையும் செய்ய வேண்டும்.

- நமது நிருபர் -

அரசு ஊழியர் மருத்துவக் காப்பீடு பணமின்றி சிகிச்சை அளிக்க வழக்கு : உயர்நீதிமன்றம் 'நோட்டீஸ்'

மதுரை: அரசு ஊழியருக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், அனைத்து மருத்துவமனைகளிலும் பணமின்றி சிகிச்சை அளிக்க தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருமங்கலம் தாமோதரன் தாக்கல் செய்த பொதுநல மனு: அரசு உதவி பெறும் கல்லுாரியில் ஆய்வக பணியாளராக வேலை செய்கிறேன். மனைவி திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லுாரியில், தட்டச்சராக பணிபுரிகிறார். அரசு ஊழியர்களுக்கான, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மனைவியின் மாத சம்பளத்தில் 180 ரூபாய் பிடித்தம் செய்கின்றனர். இதனால், அத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற எனக்கும் தகுதி உள்ளது.எனக்கு 'ரூமாட்டிக்' காய்ச்சல் ஏற்பட்டு இருதயத்தின் இரட்டை வால்வுகள் பாதிக்கப்பட்டன. இதை மாற்றி அமைக்க கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு,' 2 லட்ச ரூபாய் செலவாகும். அரசு ஊழியருக்கான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு பணமின்றி சிகிச்சை பெறலாம். மீதி 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்' என்றனர்.

வேறொரு மருத்துவமனையில், 'கூடுதலாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்' என்றனர். சிகிச்சைக்கு செலவிட்ட தொகையை வழங்கக்கோரி, தமிழக அரசுக்கு விண்ணப்பித்தோம்; நடவடிக்கை இல்லை. அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும், பணமின்றி சிகிச்சை அளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு தாமோதரன் மனு செய்தார்.
தமிழக சுகாதாரத்துறை செயலர், நிதித்துறை செயலருக்கு 'நோட்டீஸ்' அனுப்பிய நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் கொண்ட அமர்வு, வழக்கை ஏப்.,28 க்கு ஒத்திவைத்தது.

வருமான வரித்துறை 'சம்மன்' தடை கோரி துணை வேந்தர் வழக்கு

சென்னை: வருமான வரி புலனாய்வு துறை அனுப்பிய சம்மனுக்கு, தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி மனு தாக்கல் செய்துள்ளார்.
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் டாக்டர் கீதாலட்சுமி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடுகளில், வருமான வரித்துறை, சில நாட்களுக்கு முன் சோதனை நடத்தியது. சோதனை தொடர்பாக, ஏப்., 10ல் ஆஜராகும்படி, சம்மன் அனுப்பியிருந்தது.

 சம்மனுக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கீதாலட்சுமி மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனு விபரம்: கடந்த, 15 ஆண்டுகளாக, வருமான வரி செலுத்தி வருகிறேன். என் வீட்டில், வருமான வரி துறை சோதனை நடத்தியது. ஏப்., 7ல் துவங்கிய சோதனை, 8ல் முடிந்தது. பணம், நகைகள், வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சோதனையின் போது, அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளித்தேன். ஏப்., 10ம் தேதி காலை, 11:30 மணிக்கு ஆஜராகும்படி, எனக்கு சம்மன் வழங்கப்பட்டது.

ஆனால், வருமான வரி சட்டப்படி, இந்த சம்மன் பிறப்பிக்கப்படவில்லை.சம்மனில், வருமான வரி செலுத்துபவர், சாட்சி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், தேவையில்லாத வார்த்தையை நீக்கி விட்டு, சம்மன் அனுப்பியிருக்க வேண்டும். சரியாக பரிசீலனை செய்யாமல், சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சோதனை முடியும் முன்னரே, 7ம் தேதி அன்று, சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் இல்லாத நடவடிக்கைகளுக்காக, சம்மன் அனுப்ப முடியாது. எனவே, சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும்; அதை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

எழும்பூர் கோர்ட்டில் சசிகலா ஆஜராக வேண்டும் : அமலாக்க துறை வலியுறுத்தல்

சென்னை: 'பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, அன்னிய செலாவணி மோசடி வழக்கில், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்' என, அமலாக்கத் துறை வலியுறுத்தி உள்ளது. வெளிநாடு வாழ் இந்தியரான சுசீலா என்பவர் உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து, சென்னையை சேர்ந்த பரணி பீச் ரிசார்ட்ஸ் நிறுவனம், இந்தியன் வங்கியில் இருந்து, 3 கோடி ரூபாய் கடன் பெற்றது. இதில், 2.20 கோடி ரூபாயை, கோடநாடு எஸ்டேட் வாங்க, சசிகலா பயன்படுத்தியதாகவும், இதில் அன்னிய செலாவணி சட்ட விதிகள் மீறப்பட்டதாகவும், அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தது. அத்துடன், ஜெஜெ 'டிவி'க்கு, கருவிகள் வாடகைக்கு எடுத்ததிலும், அன்னிய செலாவணி விதிகளை மீறியதாக, மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

வெளிநாட்டு நிறுவனங்களான, 'ரிம்சாட், சுபிக்பே மற்றும் அப்பூப்ஸ்' நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு பணத்தை மாற்றியதாகவும், அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. வெளிநாடுகளில், ஒயின் நிறுவனம் மற்றும் ஓட்டல்கள் துவங்க, சட்டவிரோதமாக தினகரன் முதலீடு செய்ததில், அன்னிய செலாவணி மோசடி நடந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.பரணி ரிசார்ட்ஸ் வழக்கில் இருந்து, சசிகலாவை, எழும்பூர் பொருளாதார நீதிமன்றம் விடுவித்தது. தினகரன் மீதான இரண்டு வழக்குகளிலும், அவர் விடுவிக்கப்பட்டார்.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனுக்கள் தாக்கல் செய்தது. மூன்று வழக்குகளில் இருந்தும் விடுவிக்கக் கோரி, சசிகலா தரப்பிலும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கில் இருந்து சசிகலா, தினகரன் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து, வழக்கை எதிர்கொள்ளும்படி உத்தரவிட்டது. சசிகலாவின் மனுக்களையும், தள்ளுபடி செய்தது

. இதையடுத்து, இந்த வழக்குகளை, எழும்பூர் பொருளாதார நீதிமன்ற மாஜிஸ்திரேட் மலர்மதி விசாரித்து வருகிறார். நேற்று, இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத் துறை சார்பில் வழக்கறிஞர் தண்டபாணி ஆஜரானார். அப்போது, சசிகலா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜராக, அவரது சார்பில் வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்ததற்கு, அமலாக்கத்துறை வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். சசிகலா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என, வலியுறுத்தினார். அவர் வாதாடியதாவது:தினகரன், வெளிநாடு வாழ் குடியுரிமை பெற்றவர். அதனால், அவர் வெளிநாடுகளில் முதலீடு செய்தது, அன்னிய செலவாணி மோசடி செய்ததாக ஆகாது என, அவரது வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர். இது, ஏற்கத்தக்கது அல்ல.சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும், தினகரன், இந்திய பிரஜை தான் என்பதை உறுதி செய்துள்ளன.

இதனால், அவர் வெளிநாடுகளில் முதலீடு செய்ததில், முறைகேடு நடந்து இருப்பதும், அன்னிய செலாவணி மோசடி நடந்து இருப்பதும் நிரூபணமாகிறது. அதுபற்றி, 12 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.அதேபோல, சசிகலாவும், அன்னிய செலவாணி மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபற்றி, மேலும் மூன்று சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டி உள்ளது.இவ்வாறு அவர் வாதிட்டார். அதற்கு, தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாஜிஸ்திரேட் மலர்மதி, தினகரன் மீதான வழக்கை, ஏப்., 13க்கும், சசிகலா மீதான வழக்குகளை, ஏப்., 18க்கும் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

ஊர் முழுவதும் காய்ச்சல்; காலியாகுது கிராமம் : இருவருக்கு டெங்கு

சிவகங்கை: சிவகங்கை அருகே மேப்பலில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்சலுக்கு பயந்து பலர் வெளியூரில் வசிக்கும் உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டனர். கொல்லங்குடி ஊராட்சி மேப்பலில் 500 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஆழ்துளை மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அது உவர்ப்பாக இருப்பதால் கிணற்று நீரை குடிக்கின்றனர். இரு வாரங்களுக்கு முன் கிராமத்தில் காய்ச்சல் பரவத் துவங்கியது. பாதிக்கப்பட்டவர்கள் காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

 சில நாட்களில் கிராமம் முழுவதும் காய்ச்சல் பரவியது. இதில் 40 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பலர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். காய்ச்சல் அபாயத்தால் பெரும்பாலானோர், வெளியூர்களில் வசிக்கும் உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டனர். கருப்பாயி, 68, என்பவர் உட்பட இருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிராமத்தை சேர்ந்த மல்லிகா, தனலட்சுமி கூறியதாவது: ஒரு குடும்பத்தில் ஒருவருக்காவது காய்ச்சல் உள்ளது; பலர் குடும்பத்துடன் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் பரிசோதித்தால், ஒவ்வொருவரும் ஏதாவதொரு காய்ச்சல் என்கின்றனர். முழங்கால், முழங்கை வலி ஏற்படுகிறது. மோசமாக பாதிக்கப்பட்ட ஐந்து பேர் அரசு மருத்துவ மனையில் உள்ளனர்.கிணற்றுநீரை குடித்ததால்தான் காய்ச்சல் பரவியது. இதனால், ஒரு குடம் தண்ணீரை 15 ரூபாய்க்கு வாங்குகிறோம். ஆனாலும், காய்ச்சல் குறைந்தபாடில்லை. இதனால், பலர் வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர்.இவ்வாறு கூறினர்.

சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கிராமத்தில் தங்கி தொடர்ந்து சிகிச்சை அளித்தோம். தற்போது பாதிப்பு குறைந்துள்ளது' என்றார்.

இமாச்சல் முதல்வருக்கு 'சம்மன்' : அமலாக்க துறை அனுப்பியது

புதுடில்லி: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், நேரில் ஆஜராகும்படி, இமாச்சலப் பிரதேச முதல்வர் வீர்பத்ர சிங்கிற்கு, அமலாக்கத் துறை, 'சம்மன்' அனுப்பி உள்ளது.

காங்., கட்சியைச் சேர்ந்த, இமாச்சல் முதல்வர் வீர்பத்ர சிங், 82, மத்திய அமைச்சராக இருந்தபோது, அவரும், அவர் குடும்பத்தினரும், வருமானத்தை விட, அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வீர்பத்ர சிங், அவர் மனைவி பிரதிபா சிங், எல்.ஐ.சி., ஏஜன்ட் ஆனந்த் சவுகான் உட்பட, 10 பேருக்கு எதிராக, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், 225 சாட்சியங்கள், 442 ஆவணங்களை, சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, வீர்பத்ர சிங்கிற்கு, அமலாக்கத் துறை, 'சம்மன்' அனுப்பி உள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், ஏற்கனவே அனுப்பப்பட்ட சம்மனுக்கு பதிலளிக்காத வீர்பத்ர சிங், அரசாங்க பணி இருப்பதாக கூறி, நேரிலும் ஆஜராகவில்லை. இதனால், தற்போது, புதிதாக, 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

மருத்துவ மாணவர் செய்த 'வாட்ஸ் ஆப்' பிரசவம்

நாக்பூர்: ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், மிகவும் சிக்கலான சிகிச்சையை, 'வாட்ஸ் ஆப்' மூலம் ஆலோசனை பெற்று, இரண்டு உயிர்களை காப்பாற்றியுள்ளார், ஒரு மருத்துவ மாணவர்.ஆமதாபாத் - புரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த, சத்தீஸ்கரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டது; கடும் ரத்தப் போக்கும் ஏற்பட்டது. அப்போது, அந்த ரயிலில் யாராவது டாக்டர்கள் உள்ளனரா என, ரயில்வே டிக்கெட் பரிசோதகர் தேடியுள்ளார்.

அந்த ரயிலில் பயணம் செய்த, மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர் விபின் காட்சே, 24, வேறு வழியில்லாமல் களத்தில் இறங்கினார்.அந்த பெண்ணை சோதித்தபோது, குழந்தையின் தலைக்கு பதிலாக, தோள் தெரிந்தது. மேலும், அந்தப் பெண்ணுக்கும் ரத்தப்போக்கு கடுமையாக இருந்தது. உடனடியாக, தனக்கு பாடம் எடுக்கும் டாக்டர்களுக்கு, வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அனுப்பினார். அவர்கள் சொல்லி கொடுத்தது போல், சரியாக செயல்பட, சுகப்பிரசவமானது. அதற்குள் ரயில், நாக்பூரை அடைய, முன்பே அளித்த தகவலின்படி, மருத்துவர்கள் தயாராக இருந்தனர். தாயும், குழந்தையும், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...