Tuesday, April 11, 2017

ஊர் முழுவதும் காய்ச்சல்; காலியாகுது கிராமம் : இருவருக்கு டெங்கு

சிவகங்கை: சிவகங்கை அருகே மேப்பலில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்சலுக்கு பயந்து பலர் வெளியூரில் வசிக்கும் உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டனர். கொல்லங்குடி ஊராட்சி மேப்பலில் 500 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஆழ்துளை மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அது உவர்ப்பாக இருப்பதால் கிணற்று நீரை குடிக்கின்றனர். இரு வாரங்களுக்கு முன் கிராமத்தில் காய்ச்சல் பரவத் துவங்கியது. பாதிக்கப்பட்டவர்கள் காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

 சில நாட்களில் கிராமம் முழுவதும் காய்ச்சல் பரவியது. இதில் 40 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பலர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். காய்ச்சல் அபாயத்தால் பெரும்பாலானோர், வெளியூர்களில் வசிக்கும் உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டனர். கருப்பாயி, 68, என்பவர் உட்பட இருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிராமத்தை சேர்ந்த மல்லிகா, தனலட்சுமி கூறியதாவது: ஒரு குடும்பத்தில் ஒருவருக்காவது காய்ச்சல் உள்ளது; பலர் குடும்பத்துடன் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் பரிசோதித்தால், ஒவ்வொருவரும் ஏதாவதொரு காய்ச்சல் என்கின்றனர். முழங்கால், முழங்கை வலி ஏற்படுகிறது. மோசமாக பாதிக்கப்பட்ட ஐந்து பேர் அரசு மருத்துவ மனையில் உள்ளனர்.கிணற்றுநீரை குடித்ததால்தான் காய்ச்சல் பரவியது. இதனால், ஒரு குடம் தண்ணீரை 15 ரூபாய்க்கு வாங்குகிறோம். ஆனாலும், காய்ச்சல் குறைந்தபாடில்லை. இதனால், பலர் வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர்.இவ்வாறு கூறினர்.

சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கிராமத்தில் தங்கி தொடர்ந்து சிகிச்சை அளித்தோம். தற்போது பாதிப்பு குறைந்துள்ளது' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024