Tuesday, April 11, 2017

வருமான வரித்துறை 'சம்மன்' தடை கோரி துணை வேந்தர் வழக்கு

சென்னை: வருமான வரி புலனாய்வு துறை அனுப்பிய சம்மனுக்கு, தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி மனு தாக்கல் செய்துள்ளார்.
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் டாக்டர் கீதாலட்சுமி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடுகளில், வருமான வரித்துறை, சில நாட்களுக்கு முன் சோதனை நடத்தியது. சோதனை தொடர்பாக, ஏப்., 10ல் ஆஜராகும்படி, சம்மன் அனுப்பியிருந்தது.

 சம்மனுக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கீதாலட்சுமி மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனு விபரம்: கடந்த, 15 ஆண்டுகளாக, வருமான வரி செலுத்தி வருகிறேன். என் வீட்டில், வருமான வரி துறை சோதனை நடத்தியது. ஏப்., 7ல் துவங்கிய சோதனை, 8ல் முடிந்தது. பணம், நகைகள், வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சோதனையின் போது, அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளித்தேன். ஏப்., 10ம் தேதி காலை, 11:30 மணிக்கு ஆஜராகும்படி, எனக்கு சம்மன் வழங்கப்பட்டது.

ஆனால், வருமான வரி சட்டப்படி, இந்த சம்மன் பிறப்பிக்கப்படவில்லை.சம்மனில், வருமான வரி செலுத்துபவர், சாட்சி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், தேவையில்லாத வார்த்தையை நீக்கி விட்டு, சம்மன் அனுப்பியிருக்க வேண்டும். சரியாக பரிசீலனை செய்யாமல், சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சோதனை முடியும் முன்னரே, 7ம் தேதி அன்று, சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் இல்லாத நடவடிக்கைகளுக்காக, சம்மன் அனுப்ப முடியாது. எனவே, சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும்; அதை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024