Tuesday, April 11, 2017

அரசு ஊழியர் மருத்துவக் காப்பீடு பணமின்றி சிகிச்சை அளிக்க வழக்கு : உயர்நீதிமன்றம் 'நோட்டீஸ்'

மதுரை: அரசு ஊழியருக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், அனைத்து மருத்துவமனைகளிலும் பணமின்றி சிகிச்சை அளிக்க தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருமங்கலம் தாமோதரன் தாக்கல் செய்த பொதுநல மனு: அரசு உதவி பெறும் கல்லுாரியில் ஆய்வக பணியாளராக வேலை செய்கிறேன். மனைவி திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லுாரியில், தட்டச்சராக பணிபுரிகிறார். அரசு ஊழியர்களுக்கான, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மனைவியின் மாத சம்பளத்தில் 180 ரூபாய் பிடித்தம் செய்கின்றனர். இதனால், அத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற எனக்கும் தகுதி உள்ளது.எனக்கு 'ரூமாட்டிக்' காய்ச்சல் ஏற்பட்டு இருதயத்தின் இரட்டை வால்வுகள் பாதிக்கப்பட்டன. இதை மாற்றி அமைக்க கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு,' 2 லட்ச ரூபாய் செலவாகும். அரசு ஊழியருக்கான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு பணமின்றி சிகிச்சை பெறலாம். மீதி 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்' என்றனர்.

வேறொரு மருத்துவமனையில், 'கூடுதலாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்' என்றனர். சிகிச்சைக்கு செலவிட்ட தொகையை வழங்கக்கோரி, தமிழக அரசுக்கு விண்ணப்பித்தோம்; நடவடிக்கை இல்லை. அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும், பணமின்றி சிகிச்சை அளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு தாமோதரன் மனு செய்தார்.
தமிழக சுகாதாரத்துறை செயலர், நிதித்துறை செயலருக்கு 'நோட்டீஸ்' அனுப்பிய நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் கொண்ட அமர்வு, வழக்கை ஏப்.,28 க்கு ஒத்திவைத்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024