Sunday, July 9, 2017

இதே நாளில் அன்று

பதிவு செய்த நாள் 08 ஜூலை
2017
21:49



1930 ஜூலை 9

கே.பாலசந்தர், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடியில், கைலாசம் - காமாட்சியம்மாள் தம்பதிக்கு மகனாக, 1930, ஜூலை 9 ல் பிறந்தார். அண்ணாமலை பல்கலையில், பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தார். மேடை நாடகத் துறையில் இருந்து திரைத் துறைக்கு வந்தவர். 1965ல், நாகேஷ் கதாநாயகனாக நடித்த, நீர்க்குமிழி இவர் இயக்கிய முதல் படம். முன்னணி நடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்தை அறிமுகம் செய்தவர். 1990க்கு பின், 'கையளவு மனசு' போன்ற பெரும் வரவேற்பை பெற்ற, 'டிவி' தொடர்களையும் இயக்கினார்.
'படாபட்' ஜெயலட்சுமி, ஸ்ரீபிரியா, விஜயகுமார், ஜெய்கணேஷ், ராதாரவி, டில்லி கணேஷ், சிவச்சந்திரன் போன்றோரை அறிமுகம் செய்தவரும் இவரே.பத்மஸ்ரீ, தாதா சாகிப் பால்கே விருதுகளை பெற்றவர். 2014 டிச., 23ல் காலமானார். அவர் பிறந்த தினம், இன்று.
வியர்த்தால் வெளியேறுகிறது ரத்தம் அதிசய சிறுமியால் டாக்டர்கள் அதிர்ச்சி

பதிவு செய்த நாள் 08 ஜூலை
2017
22:39



ஐதராபாத், ஐதராபாத்தைச் சேர்ந்த, 3 வயது சிறுமியின் உடலில் இருந்து, வியர்வைக்கு பதில் ரத்தம் வெளியேறுவதை பார்த்து, பெற்றோர் மற்றும் டாக்டர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் ஆட்சி நடக்கிறது. மாநில தலைநகர் ஐதராபாத்தில் வசிப்பவர், முகமது அப்சலின் மகள் அஹானா, 3. இந்த சிறுமியின் உடலில் இருந்து, வியர்வைக்கு பதில் ரத்தம் வந்ததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அஹானாவுக்கு சிகிச்சையளிக்கும், டாக்டர் சிரிஷா கூறியதாவது:

அஹானாவுக்கு, 2 வயதில், நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, மூக்கில் இருந்து ரத்தம் வந்துள்ளது. அதற்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அதன்பின், வாய், காது, மூக்கு என, அனைத்து துவாரங்களில் இருந்தும் அடிக்கடி ரத்தம் வரத் துவங்கியது.

தற்போது, அஹானாவின் உடலின் மேல் தோலில் உள்ள வியர்வை துவாரங்களில் இருந்தும், ரத்தம் வெளியேறுகிறது. அஹானாவுக்கு, 'ஹெமடிடிரோசிஸ்' எனப்படும், அரிய நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, ரத்தப் போக்கு ஏற்படுகிறது. சிகிச்சைக்கு பின், தற்போது ரத்தப் போக்கு குறைந்துள்ளது. இந்த நோய்க்கு தொடர் சிகிச்சை மிகவும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில், தன் மகளின் சிகிச்சைக்கு, மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டுமென, அப்சல் கோரிக்கை
விடுத்துள்ளார்.
முடங்கி போன புற்றுநோய் சிகிச்சை பிரிவு முதல்வர் மாவட்டத்தில் நோயாளிகள் அவதி

பதிவு செய்த நாள் 08 ஜூலை
2017
18:57

சேலம், சேலம் அரசு மருத்துவமனையில், டாக்டர்கள், பணியாளர்கள் இன்றி, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, பெயரளவில் செயல்படுவதால், நோயாளிகள், கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். 'முதல்வர் பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில், முடங்கியுள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவை, செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஏழு பேர்

சேலம், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சை பிரிவு உள்ளது. இப்பிரிவில், துறைத் தலைவர் தலைமையில், உதவி பேராசிரியர்கள், உதவி டாக்டர்கள் என, ஏழு பேர் பணியாற்ற வேண்டும். தற்போது, உதவி பேராசிரியர் வெங்கடேசன் மட்டுமே பணியாற்றி வருகிறார்.துறைத் தலைவர் மற்றும் ஆறு பணியிடங்கள், பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. அத்துடன், தொழில்நுட்ப பணியாளர்களும் இல்லை. நுண் கதிரியக்க பிரிவு பணியாளர், மாற்றுப் பணியாக, கதிரியக்க பிரிவில் பணியாற்றுவதால், புற்றுநோய் சிகிச்சை பிரிவு, பெயரளவில் செயல்படுகிறது.கடந்த, 2014ல், ஆண், பெண் முறையே, 400; 520 பேர், 2015ல், 344; 424 பேர், 2016ல், 363; 430 பேர், புற்றுநோய்க்காக தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். கடந்தாண்டில், வெளிப்புற நோயாளியாக ஆண்கள், 5,665 பேரும், பெண்கள், 9,438 பேரும், புற்றுநோய் பாதிப்புக்காக சிகிச்சை பெற்றுள்ளனர்.டாக்டர்கள் பற்றாக்குறையால், 40 நோயாளிகளுக்கு மட்டுமே, தற்போது தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்துடன், புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும், 'கோபால்தெரபி' மிஷின் இயக்குவதற்கான டாக்டர் இல்லாததால், அது, பயன்பாடின்றி கிடக்கிறது. எனவே, வெளிப்புற மற்றும் புதிய நோயாளிகள், 150 பேர் வரை, சிகிச்சை பெறுவது சிரமமாக உள்ளது.அவர்களை, காஞ்சிபுரம், சென்னை, கோவை அரசு மருத்துவமனைகளுக்கு, பரிந்துரை செய்து அனுப்புகின்றனர். நோய் பாதித்தவர்கள், வறுமை காரணமாக, அருகில் உள்ள அரசு மருத்துவமனையை நாடும் போது, டாக்டர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி, பெரு நகரங்களுக்கு பரிந்துரை செய்து அனுப்பும் போது, மேலும், பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

மேலும், இங்கு, புற்றுநோயாளிகளுக்கு தனியாக சிகிச்சை வார்டு கிடையாது. அவசர, அவசிய தேவைக்காக, பிரசவ வார்டின் ஒரு பகுதியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கின்றனர். 'கோமா' நிலையில் கிடக்கும் புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கு போதிய டாக்டர்கள், பணியாளர்கள், இனியும் நியமிக்கவில்லை என்றால், மூடும் நிலைக்கு தள்ளப்படும் என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.அறிக்கை'டீன்' கனகராஜ்கூறுகையில், ''இது தொடர்பாக, அரசுக்கு, பலமுறை அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும், அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும்,'' என்றார்.'முதல்வர் பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில், சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சை பிரிவு முடங்கி கிடக்கிறது. அப்பிரிவு முழுமையாக இயங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நோயாளிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பெண்களை துரத்தும் மனஅழுத்தம்

2017-07-05@ 12:52:33


இன்று மன அழுத்தம் இல்லாத மனிதர்களே இல்லை.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சர்வசாதாரணமாக டிப்ரெஷன் என்கிற வார்த்தையை உபயோகிப்பதைப் பார்க்கிறோம். மன அழுத்தம் அதிகரிக்கிறபோது அது வெறும் மனதை மட்டுமே பாதிப்பதில்லை. உடலிலும் வித்தியாச அறிகுறிகளைக் காட்டும் என்கிறார் மருத்துவர் நிவேதிதா. ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிற அந்த அறிகுறிகள் பற்றி விளக்குகிறார் அவர்.

மன அழுத்தத்தை மனதோடும் மண்டையோடும் மட்டும் தொடர்புப்படுத்திப் பார்க்காதீர்கள். அது அவற்றையெல்லாம் விட அதிகமாக உடலோடு தொடர்புடையது. குறிப்பாக வயிற்றோடு. திடீரென உடலில் உணர்கிற பிரச்னைகளை பல பெண்களுக்கும் மன அழுத்தத்துடன் தொடர்புப்படுத்திப் பார்க்கத் தோன்றுவதில்லை.

மன அழுத்தம் என்னவெல்லாம் செய்யும்?

- முதல் வேலையாக நரம்பு செல்களின் செயல்திறனைப் பாதிக்கும். மூளையுடன் தொடர்புடைய உணர்வுகளுக்கான ஏரியாவை பாதிக்கும். உடல் வலியைத் தூண்டும். மன அழுத்தம்ஏற்படுத்துகிற வலியானது, மன அழுத்தம் இல்லாதபோது ஏற்படுகிற உடல் வலிகளில் இருந்து முற்றிலும் வித்தியாசமாகவும் இருக்கும்.

*தலைவலி தொடர்ந்துகொண்டே இருக்கும். மைக்ரேன் எனப்படுகிற ஒற்றைத்தலைவலி பிரச்னை உள்ளவர்களுக்கு வலியின் தீவிரம் மிகவும் அதிகமாகும்.

*சம்பந்தமே இல்லாமல் முதுகு வலி ஏற்படும்.

*மூட்டுகளிலும் எலும்பு இணைப்புகளிலும் வலியை உணர்வார்கள்.

*திடீரென நெஞ்சு வலி ஏற்படும். வயிற்றுக் கோளாறு, நெஞ்செரிச்சல் அல்லது ஏற்கனவே உள்ள இதய நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இது போன்ற திடீர் நெஞ்சு வலி வரலாம். ஆனால் மன அழுத்தம் அதிகமாக இருக்கும் பெண்களுக்கு அதே நெஞ்சு வலி கூடுதல் சிரமத்தைத் தருவதை உணர்வார்கள்.

*செரிமானக் கோளாறுகளுக்கும் மன அழுத்தம் முக்கிய காரணமாகிறது. வாந்தி அல்லது வயிற்றைப் புரட்டுதல், பசியின்மை போன்றவை இருக்கலாம். சிலருக்கு வயிற்றுப்போக்கோ, கடுமையான மலச்சிக்கலோகூட ஏற்படலாம்.

*மன அழுத்தம் உள்ள பெண்களுக்குப் போதுமான அளவு தூக்கம் கிடைத்தாலும் எப்போதும் களைப்பாகவும் ஓய்வற்ற மனநிலையிலுமே இருப்பார்கள். மற்றவர்களைவிட அதிக நேரம் தூங்கினாலும் காலையில் படுக்கையைவிட்டு எழுந்திருப்பதும் அடுத்தடுத்த வேலைகளைத் தொடர்வதும் அவர்களுக்கு மிகப் பெரிய போராட்டமாகவே இருக்கும்.

*இதற்கு நேரெதிராக பல பெண்களுக்குத் தூக்கமின்மைப் பிரச்னை நிரந்தரமாகும். மிகத் தாமதமாகத் தூங்கச் செல்வது, பாதித்தூக்கத்தில் விழித்துக்கொள்வது, மீண்டும் தூக்கத்தைத் தொடர முடியாதது, ஆழ்ந்த உறக்கத்துக்குள் போக முடியாதது போன்றவற்றை எதிர்கொள்வார்கள்.

*மன அழுத்தம் உள்ள சில பெண்களுக்கு உணவின் மீதான நாட்டம் குறையும். அதன் விளைவாக உடல் இளைக்கும். இன்னும் சிலருக்கோ உணவின் மீது நாட்டம் அதிகரிக்கும். விதம் விதமான உணவுகளின் மீதான தேடல் அதிகரிக்கும்.கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் சாப்பிடுவார்கள். எடைஅதிகரிப்பால் அவதிப்படுவார்கள்.

*காரணமே இல்லாமல் தலைசுற்றல் இருக்கும், மயக்கமாக உணர்வார்கள்.மேற்கூறிய அறிகுறிகள் பெரும்பாலும் பெண்களுக்கு அவர்களது வயதுக்கேற்ப ஏற்படுகிற உடல் மாற்றங்களுடன் தொடர்புப்படுத்தியே பார்க்கப்படுபவை.

அதனால் மன அழுத்தத்துக்கான அறிகுறிகள் என சந்தேகப்பட வைப்பதில்லை. ஆரோக்கியமான உடல்வாகுள்ள பெண்களுக்கு திடீரென வாழ்க்கையில் ஏதோ ஒரு விஷயத்தால் மன அழுத்தம் உண்டாகி, அதன் தொடர்ச்சியாக இந்த அறிகுறிகளில் ஒன்றோ, ஒன்றுக்கு
மேற்பட்டவையோ தோன்றினால் எச்சரிக்கை அவசியம்.

மருத்துவரை அணுகி மனஅழுத்தம் இருப்பதைப் பற்றியும் பேசி, உடல் சந்திக்கிற பிரச்னைகளையும் சொல்ல வேண்டும். மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளையும் மனப்பயிற்சிகளையும் மேற்கொண்டு, வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை எதிர்கொண்டாலே
எல்லாம் சரியாகும்.

அவற்றை எல்லாம் தவிர்த்துவிட்டு உடல் வலிக்கும், தலைசுற்றலுக்கும், வயிற்றுப்போக்குக்கும் சுயமாக மருந்துகள் வாங்கிச் சாப்பிடுவது மன அழுத்தத்தையும் குறைக்காது. அது ஏற்படுத்திய உடல்ரீதியான பிரச்னைகளையும் குணப்படுத்தாது. மாறாக மருந்துகளின் பக்கவிளைவினால் தேவையற்ற வேறு சில புதிய பிரச்னைகள்தான் உருவாகும்.

நிகர்நிலை மருத்துவ பல்கலை அவமதிப்பு மனு முடித்து வைப்பு

பதிவு செய்த நாள் 08 ஜூலை
2017
23:40

சென்னை, புதுச்சேரியில் உள்ள நிகர்நிலை மருத்துவ பல்கலை கழகங்களுக்கு எதிராக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம்
கைவிட்டது.சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் மேனன் தொடர்ந்த வழக்கை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. புதுச்சேரியில் உள்ள, நிகர்நிலை மருத்துவ பல்கலைகளில், மருத்துவப் படிப்புக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, விரைவில் குழு அமைக்கவும், அதுவரை, முதுகலை மருத்துவ படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களிடம், 10 லட்சம் ரூபாயை கட்டணமாக பெறவும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.இந்த இடைக்கால உத்தரவு, 2017 ஜூன், 16ல் பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை சேர்ப்பதற்கு, நிகர்நிலை பல்கலைகள் மறுப்பதாகவும், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததால், அவர்களை தண்டிக்கும்படியும், உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு மனுவை, வழக்கறிஞர் மேனன் தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:

நிகர்நிலை பல்கலைகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கு முன், இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன; ஒரு சில இடங்கள் மட்டுமே காலியாக இருந்தன' என, கூறப்பட்டுள்ளது.நீதிமன்றத்தின் மாண்பை குறைக்கும் வகையில், வேண்டுமென்றே உத்தரவு மீறப்பட்டுள்ளதா என்பதை மட்டுமே, அவமதிப்பு வழக்கில் பார்க்க முடியும்.இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும் போது, நான்கு இடங்கள் தவிர, வேறு காலியிடங்கள் இல்லை. எனவே, நீதிமன்ற
உத்தரவை, நிகர்நிலை பல்கலைகள் மீறியதாக கூற முடியாது. அதனால், அவர்களுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு, கைவிடப்படுகிறது.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
'டூவீலர்' வாங்க நல்ல நேரம் இது ஜி.எஸ்.டி.,யால் ரூ.4000 வரை விலை சரிவு

பதிவு செய்த நாள் 09 ஜூலை
2017
01:22

 மதுரை, ஜி.எஸ்.டி.,யால் டூவீலர்கள் விலை குறைந்துவிட்டது. எந்தெந்த நிறுவனங்களின் மாடல்கள் எவ்வளவு விலை குறைந்துள்ளது என, மதுரையில் உள்ள டீலர்கள் கூறியதாவது:

ேஹாண்டா

சீத்தராமன், பொதுமேலாளர், கல்யாணி ேஹாண்டா : 'பர்சேஸ் ' விலையைப் பொறுத்தவரை 2 சதவீதம் குறைந்து விட்டது. ஜி.எஸ்.டி., வரிவிதிப்பால் ஆக்டிவா டூவீலருக்கு ரூ.969, ஆக்டிவா 125 மாடல் ரூ.1,273 குறைந்துள்ளது. சி.பி.யூனிகார்ன் 160 ன் விலை ரூ. 1,689, சி.பி., கார்னெட் ரூ.1,934 குறைந்துள்ளது. இதை விட பெரிய டூவீலர்களுக்கு அதிகபட்சமாக ரூ.4,000 வரை விலை குறைகிறது. டூவீலர் விற்பனை கூடவோ, குறையவோ இல்லை. கடந்த மாதமே ஆக்டிவா வாங்கி வைத்து விட்டோம். ஆனால் விலை குறைவாக விற்பனை செய்வதால் வாடிக்கையாளருக்கு லாபம்.

யமாஹா

கணேசன், பங்குதாரர், பிரனீல் ஜி மோட்டார்ஸ்: ஸ்கூட்டர் மாடலில் யமாஹா ரே இசட், ரே இசட் ஆர், பெசினோ, ஆல்பா ரகங்கள் ரூ.1,500 வரை குறைந்துள்ளன. எப் இசட் வி2, ஆர்ஒன் 5, எப்இசட் 25 மாடல்கள் ரூ.3,000 வரை குறைந்துள்ளன. ஜி.எஸ்.டி., வரி விதிப்புக்கு பின், விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. வாடிக்கையாளருக்கு குறைந்தளவு விற்பனை விலைக்கு தருவதால், அதற்கான ஈட்டுத்தொகையை யமாஹா உற்பத்தியாளர்களே தந்து விடுகின்றனர். எங்களுக்கும் நஷ்டமில்லை. இதனால் வாடிக்கையாளருக்கு மட்டும் கூடுதல் லாபம்.

டிவிஎஸ்

விஜயன், சத்யஜோதி மோட்டார்ஸ் (பி) லிட் பொதுமேலாளர் : டிவிஎஸ்., எக்ஸல் 100 ரகத்திற்கு ரூ.250 குறைந்துள்ளது. ஸ்கூட்டி, பெப், இசட் இ எஸ், வீகோ, ஜூபிடர் ரகங்களுக்கு ரூ.1,000 வரையும், ஸ்டார் சிட்டி, ஸ்போர்ட்ஸ், விக்டர் ரகங்களுக்கு ரூ.750 ம், அப்பாச்சி 150 சிசி ரகங்களுக்கு ரூ.2,000 குறைந்துள்ளது. வரிக்குறைவு இன்னும் வாடிக்கையாளர்களை சென்றடையவில்லை. இது வாடிக்கையாளர்களுக்கான நல்ல தருணம். ஸ்பேர் பார்ட்ஸ் விலையும் குறைந்துள்ளது.

பஜாஜ்

ஹரீஷ் அகர்வால், உரிமையாளர், ஆர்.கே.பஜாஜ் : ஜி.எஸ்.டி., வரிவிதிப்பால் இன்னும் வர்த்தகம் முழுமையாக சீராகவில்லை. தொலைநோக்கு பார்வையில் பார்த்தால் ஜி.எஸ்.டி., வரிவிதிப்பால் ஆட்டோமொபைல் வளர்ச்சி அதிகரிக்கும். சிடி100, பிளாட்டினா ரூ.1,000 வரையும், அவெஞ்சர் மாடல் ரூ.2000, பல்சர் ரூ.2,500 வரை குறைந்துள்ளது. டாமினர் 400 மற்றும் கே.டி.எம்., மாடல் 350 சி.சி., க்கு மேற்பட்ட டூவீலர்களுக்கு 3 சதவீத வரி அதிகரித்து ரூ. 3,000 ரூபாய் அதிகரித்துள்ளது. 350 சி.சி., க்கு மேற்பட்ட வாகனங்களுக்கு அதிகபட்சமாக ரூ. 6,000 அதிகரித்திருந்தாலும் விற்பனை குறையவில்லை.
தென்காசி எலுமிச்சை கிலோ ரூ.50 க்கு விற்பனை

பதிவு செய்த நாள் 09 ஜூலை
2017
00:35

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலத்தில் நேற்று நடைபெற்ற வாரச்சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு வந்திருந்தன. அதேபோன்று தென்காசி புளியங்குடி பகுதியில் இருந்து எலுமிச்சை பழங்களும் விற்பனைக்கு வந்திருந்தன. சிறிய வகை எலுமிச்சை பழங்கள் கிலோ ரூ 40க்கும், பெரிய பழங்கள் ரூ 50க்கும் விற்பனை செய்யப்பட்டன. இந்த எலுமிச்சை பழங்கள் ஊறுகாய் தயாரிப்பிற்கு ஏற்ற தன்மையுடையதாக இருந்ததால் அதிகளவில் விவசாயிகள் வாங்கிச் சென்றனர்.

NEWS TODAY 20.08.2026