Sunday, July 9, 2017

முடங்கி போன புற்றுநோய் சிகிச்சை பிரிவு முதல்வர் மாவட்டத்தில் நோயாளிகள் அவதி

பதிவு செய்த நாள் 08 ஜூலை
2017
18:57

சேலம், சேலம் அரசு மருத்துவமனையில், டாக்டர்கள், பணியாளர்கள் இன்றி, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, பெயரளவில் செயல்படுவதால், நோயாளிகள், கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். 'முதல்வர் பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில், முடங்கியுள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவை, செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஏழு பேர்

சேலம், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சை பிரிவு உள்ளது. இப்பிரிவில், துறைத் தலைவர் தலைமையில், உதவி பேராசிரியர்கள், உதவி டாக்டர்கள் என, ஏழு பேர் பணியாற்ற வேண்டும். தற்போது, உதவி பேராசிரியர் வெங்கடேசன் மட்டுமே பணியாற்றி வருகிறார்.துறைத் தலைவர் மற்றும் ஆறு பணியிடங்கள், பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. அத்துடன், தொழில்நுட்ப பணியாளர்களும் இல்லை. நுண் கதிரியக்க பிரிவு பணியாளர், மாற்றுப் பணியாக, கதிரியக்க பிரிவில் பணியாற்றுவதால், புற்றுநோய் சிகிச்சை பிரிவு, பெயரளவில் செயல்படுகிறது.கடந்த, 2014ல், ஆண், பெண் முறையே, 400; 520 பேர், 2015ல், 344; 424 பேர், 2016ல், 363; 430 பேர், புற்றுநோய்க்காக தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். கடந்தாண்டில், வெளிப்புற நோயாளியாக ஆண்கள், 5,665 பேரும், பெண்கள், 9,438 பேரும், புற்றுநோய் பாதிப்புக்காக சிகிச்சை பெற்றுள்ளனர்.டாக்டர்கள் பற்றாக்குறையால், 40 நோயாளிகளுக்கு மட்டுமே, தற்போது தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்துடன், புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும், 'கோபால்தெரபி' மிஷின் இயக்குவதற்கான டாக்டர் இல்லாததால், அது, பயன்பாடின்றி கிடக்கிறது. எனவே, வெளிப்புற மற்றும் புதிய நோயாளிகள், 150 பேர் வரை, சிகிச்சை பெறுவது சிரமமாக உள்ளது.அவர்களை, காஞ்சிபுரம், சென்னை, கோவை அரசு மருத்துவமனைகளுக்கு, பரிந்துரை செய்து அனுப்புகின்றனர். நோய் பாதித்தவர்கள், வறுமை காரணமாக, அருகில் உள்ள அரசு மருத்துவமனையை நாடும் போது, டாக்டர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி, பெரு நகரங்களுக்கு பரிந்துரை செய்து அனுப்பும் போது, மேலும், பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

மேலும், இங்கு, புற்றுநோயாளிகளுக்கு தனியாக சிகிச்சை வார்டு கிடையாது. அவசர, அவசிய தேவைக்காக, பிரசவ வார்டின் ஒரு பகுதியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கின்றனர். 'கோமா' நிலையில் கிடக்கும் புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கு போதிய டாக்டர்கள், பணியாளர்கள், இனியும் நியமிக்கவில்லை என்றால், மூடும் நிலைக்கு தள்ளப்படும் என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.அறிக்கை'டீன்' கனகராஜ்கூறுகையில், ''இது தொடர்பாக, அரசுக்கு, பலமுறை அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும், அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும்,'' என்றார்.'முதல்வர் பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில், சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சை பிரிவு முடங்கி கிடக்கிறது. அப்பிரிவு முழுமையாக இயங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நோயாளிகள் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024