Sunday, July 9, 2017

பெண்களை துரத்தும் மனஅழுத்தம்

2017-07-05@ 12:52:33


இன்று மன அழுத்தம் இல்லாத மனிதர்களே இல்லை.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சர்வசாதாரணமாக டிப்ரெஷன் என்கிற வார்த்தையை உபயோகிப்பதைப் பார்க்கிறோம். மன அழுத்தம் அதிகரிக்கிறபோது அது வெறும் மனதை மட்டுமே பாதிப்பதில்லை. உடலிலும் வித்தியாச அறிகுறிகளைக் காட்டும் என்கிறார் மருத்துவர் நிவேதிதா. ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிற அந்த அறிகுறிகள் பற்றி விளக்குகிறார் அவர்.

மன அழுத்தத்தை மனதோடும் மண்டையோடும் மட்டும் தொடர்புப்படுத்திப் பார்க்காதீர்கள். அது அவற்றையெல்லாம் விட அதிகமாக உடலோடு தொடர்புடையது. குறிப்பாக வயிற்றோடு. திடீரென உடலில் உணர்கிற பிரச்னைகளை பல பெண்களுக்கும் மன அழுத்தத்துடன் தொடர்புப்படுத்திப் பார்க்கத் தோன்றுவதில்லை.

மன அழுத்தம் என்னவெல்லாம் செய்யும்?

- முதல் வேலையாக நரம்பு செல்களின் செயல்திறனைப் பாதிக்கும். மூளையுடன் தொடர்புடைய உணர்வுகளுக்கான ஏரியாவை பாதிக்கும். உடல் வலியைத் தூண்டும். மன அழுத்தம்ஏற்படுத்துகிற வலியானது, மன அழுத்தம் இல்லாதபோது ஏற்படுகிற உடல் வலிகளில் இருந்து முற்றிலும் வித்தியாசமாகவும் இருக்கும்.

*தலைவலி தொடர்ந்துகொண்டே இருக்கும். மைக்ரேன் எனப்படுகிற ஒற்றைத்தலைவலி பிரச்னை உள்ளவர்களுக்கு வலியின் தீவிரம் மிகவும் அதிகமாகும்.

*சம்பந்தமே இல்லாமல் முதுகு வலி ஏற்படும்.

*மூட்டுகளிலும் எலும்பு இணைப்புகளிலும் வலியை உணர்வார்கள்.

*திடீரென நெஞ்சு வலி ஏற்படும். வயிற்றுக் கோளாறு, நெஞ்செரிச்சல் அல்லது ஏற்கனவே உள்ள இதய நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இது போன்ற திடீர் நெஞ்சு வலி வரலாம். ஆனால் மன அழுத்தம் அதிகமாக இருக்கும் பெண்களுக்கு அதே நெஞ்சு வலி கூடுதல் சிரமத்தைத் தருவதை உணர்வார்கள்.

*செரிமானக் கோளாறுகளுக்கும் மன அழுத்தம் முக்கிய காரணமாகிறது. வாந்தி அல்லது வயிற்றைப் புரட்டுதல், பசியின்மை போன்றவை இருக்கலாம். சிலருக்கு வயிற்றுப்போக்கோ, கடுமையான மலச்சிக்கலோகூட ஏற்படலாம்.

*மன அழுத்தம் உள்ள பெண்களுக்குப் போதுமான அளவு தூக்கம் கிடைத்தாலும் எப்போதும் களைப்பாகவும் ஓய்வற்ற மனநிலையிலுமே இருப்பார்கள். மற்றவர்களைவிட அதிக நேரம் தூங்கினாலும் காலையில் படுக்கையைவிட்டு எழுந்திருப்பதும் அடுத்தடுத்த வேலைகளைத் தொடர்வதும் அவர்களுக்கு மிகப் பெரிய போராட்டமாகவே இருக்கும்.

*இதற்கு நேரெதிராக பல பெண்களுக்குத் தூக்கமின்மைப் பிரச்னை நிரந்தரமாகும். மிகத் தாமதமாகத் தூங்கச் செல்வது, பாதித்தூக்கத்தில் விழித்துக்கொள்வது, மீண்டும் தூக்கத்தைத் தொடர முடியாதது, ஆழ்ந்த உறக்கத்துக்குள் போக முடியாதது போன்றவற்றை எதிர்கொள்வார்கள்.

*மன அழுத்தம் உள்ள சில பெண்களுக்கு உணவின் மீதான நாட்டம் குறையும். அதன் விளைவாக உடல் இளைக்கும். இன்னும் சிலருக்கோ உணவின் மீது நாட்டம் அதிகரிக்கும். விதம் விதமான உணவுகளின் மீதான தேடல் அதிகரிக்கும்.கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் சாப்பிடுவார்கள். எடைஅதிகரிப்பால் அவதிப்படுவார்கள்.

*காரணமே இல்லாமல் தலைசுற்றல் இருக்கும், மயக்கமாக உணர்வார்கள்.மேற்கூறிய அறிகுறிகள் பெரும்பாலும் பெண்களுக்கு அவர்களது வயதுக்கேற்ப ஏற்படுகிற உடல் மாற்றங்களுடன் தொடர்புப்படுத்தியே பார்க்கப்படுபவை.

அதனால் மன அழுத்தத்துக்கான அறிகுறிகள் என சந்தேகப்பட வைப்பதில்லை. ஆரோக்கியமான உடல்வாகுள்ள பெண்களுக்கு திடீரென வாழ்க்கையில் ஏதோ ஒரு விஷயத்தால் மன அழுத்தம் உண்டாகி, அதன் தொடர்ச்சியாக இந்த அறிகுறிகளில் ஒன்றோ, ஒன்றுக்கு
மேற்பட்டவையோ தோன்றினால் எச்சரிக்கை அவசியம்.

மருத்துவரை அணுகி மனஅழுத்தம் இருப்பதைப் பற்றியும் பேசி, உடல் சந்திக்கிற பிரச்னைகளையும் சொல்ல வேண்டும். மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளையும் மனப்பயிற்சிகளையும் மேற்கொண்டு, வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை எதிர்கொண்டாலே
எல்லாம் சரியாகும்.

அவற்றை எல்லாம் தவிர்த்துவிட்டு உடல் வலிக்கும், தலைசுற்றலுக்கும், வயிற்றுப்போக்குக்கும் சுயமாக மருந்துகள் வாங்கிச் சாப்பிடுவது மன அழுத்தத்தையும் குறைக்காது. அது ஏற்படுத்திய உடல்ரீதியான பிரச்னைகளையும் குணப்படுத்தாது. மாறாக மருந்துகளின் பக்கவிளைவினால் தேவையற்ற வேறு சில புதிய பிரச்னைகள்தான் உருவாகும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024