Thursday, September 7, 2017

இந்தியா வர விரும்பும் மியான்மர் மக்களுக்கு இலவச விசா: பிரதமர் மோடி அறிவிப்பு


இந்தியா வர விரும்பும் மியான்மர் மக்களுக்கு இலவச விசா இந்தியா வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 06, 2017, 04:05 PM
நேபிதாவ்,


இந்தியா வர விரும்பும் மியான்மர் மக்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மியான்மர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று அந்நாட்டு அரசு ஆலோசகர் ஆங் சான் சூகியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பிரதமர் மோடி, இலவச விசா குறித்த அறிவிப்பை வெளியிட்டார். மோடி கூறுகையில்,” இந்தியா வர விரும்பும் அனைத்து மியான்மர் மக்களுக்கும் இலவச விசா வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது என்பதை நான் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். மேலும் இந்தியாவின் பல்வேறு சிறைகளில் உள்ள மியான்மர் கைதிகள் 40 பேரை விடுதலை செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.

வரும் காலங்களில் பரஸ்பர நலனுக்காக இருநாடுகளும் இணைந்து வலுவான உறவை மேற்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். மியான்மருடன் உறவை வலுப்படுத்துவது என்பது இந்தியாவுக்கு முதன்மையானவைகளில் ஒன்றாகும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 16 வயதில் குழந்தை பெற்ற மாணவி சாவு


பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 16 வயதில் குழந்தை பெற்ற மாணவி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

செப்டம்பர் 07, 2017, 05:30 AM

சேலம்,

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் பிளஸ்–1 படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் குழந்தை பெற்ற நிலையில் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கடந்த மாதம் 29–ந்தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அந்த மாணவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிளஸ்–1 படித்து வந்த அந்த மாணவிக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வாலிபர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதனால் மாணவி கர்ப்பமடைந்தார். மாணவியின் உடல் சற்று பருமனாக இருந்ததால் அவர் கர்ப்பம் அடைந்தது பெற்றோரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாய உத்தரவு எதிரொலி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அலைமோதும் வாகன ஓட்டிகள்


வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது அசல் ஓட்டுனர் உரிமத்தை கட்டாயம் வைத்து இருக்க வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து

செப்டம்பர் 07, 2017, 05:00 AM


பூந்தமல்லி,

ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன ஓட்டிகள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டத்தை சமாளிக்க கூடுதல் கவுண்ட்டர்களும் திறக்கப்பட்டு உள்ளன.

வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கும்போது அவர்களது அசல் உரிமத்தை வைத்து இருக்க வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு நேற்று முதல் அமல் படுத்தி உள்ளது. இந்த உத்தரவு வாகன ஓட்டிகளிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாகன ஓட்டிகள் பழைய ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்கவும், புதிய ஓட்டுனர் உரிமம் பெறவும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன ஓட்டிகள் கூட்டம் அலைமோதுகிறது. சிலர் அலுவலகங்களுக்கு விடுப்பு எடுத்து ஓட்டுனர் உரிமம் எடுக்க குவிந்துள்ளனர்.

வழக்கத்தை விட கூட்டம் அதிகமானதால் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்தவர்கள் வரிசையாக உட்கார வைக்கப்பட்டு, உரிமம் தொடர்பாக சேவைகள் அளிக்கப்பட்டது. இதற்கு வாகன ஓட்டிகள் அதிகநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வாகன ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்காமலும், உரிமத்தை தவற விட்டவர்களும், ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களும் அதிகஅளவில் வாகனங்களை ஓட்டி வந்து உள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசின் இந்த உத்தரவு அதிர்ச்சியை அளித்தது. அவர்கள் அனைவரும் உரிமம் பெறுவதற்காக வட்டார அலுவலகங்களை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் வழக்கத்தை விட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கூட்டம் திரண்டு உள்ளது.

இதில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறவர்கள் மூலம் உரிமம் பெறுவதற்காக பெரும்பாலோனோர் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை நகரில் உள்ள பூந்தமல்லி மற்றும் குன்றத்தூர், ஆலந்தூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் எடுக்க பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர்.

இதனால் கூட்டத்தை சமாளிக்க வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் கூடுதலாக சில கவுண்ட்டர்களை திறந்து வாகன ஓட்டிகளின் சிரமத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதுகுறித்து பூந்தமல்லி ஆர்.டி.ஓ. நெடுமாறன் கூறுகையில் : அசல் ஓட்டுனர் உரிமத்தை வாகன ஓட்டிகள் வைத்து இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்ததையடுத்து பூந்தமல்லி ஆர்.டி.ஓ எல்லைக்குஉட்பட்ட பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அதிக அளவில் ஓட்டுனர் உரிமம் வாங்குவதற்கு வருகின்றனர். அவர்களின் தேவையை அறிந்து கூடுதலாக 3 கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி இதற்கு முன்பு எல்லாம் காலை தொடங்கி மதியம் 12 வரை மட்டுமே ஓட்டுனர் உரிமம் எடுக்க ஆன்லைனில் பதிவு செய்யப்படும். தற்போது அதிக அளவில் பொதுமக்கள் வருவதால் காலை தொடங்கி மாலை வரை புதிய ஓட்டுனர் உரிமம், புதுப்பித்தல் உள்ளிட்டவைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அசல் ஓட்டுனர் உரிமம் தொலைத்தவர்கள் போலீஸ் நிலையத்தில் சென்று புகார் சான்று ஏதும் பெறத்தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பித்து அந்த சான்றை கொண்டு வந்து கொடுத்து தொலைந்த ஓட்டுனர் உரிமத்திற்கு பதிலாக புதிய ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக்கொள்ள முடியும்‘ என்று தெரிவித்தார்.

குன்றத்தூர் ஆர்.டி.ஓ. சுந்தரேசன் கூறுகையில் : அரசு அறிவிப்பை தொடர்ந்து அதிக அளவில் பெண்களும், வாலிபர்களும் ஓட்டுனர் உரிமம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். காலை முதல் மாலை வரை ஓட்டுனர் உரிமம் எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர். முன்பெல்லாம் தினமும் குறைந்த அளவு மக்களே ஓட்டுனர் உரிமம் எடுக்க வருவார்கள் ஆனால் தற்போது அதிக அளவில் வருகின்றனர். அவர்களுக்கு உரிய தேவைகள் உடனுக்குடன் செய்து கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்

ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக கொளத்தூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று காலை முதலே கூட்டம் அலைமோதியது. சுமார் 200–க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்தனர். வட்டார போக்குவரத்து அதிகாரி சம்பத்குமார் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் அலுவலர்கள் வாகன ஓட்டிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்‘ பெரும்பாலானோர் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்காதவர்களும் தான் அதிகளவில் வாகனங்களை ஓட்டி வந்து உள்ளனர். தமிழக அரசின் இந்த உத்தரவினால் அவர்கள் ஓட்டுனர் உரிமம் பெற ஆர்வம் காட்டி வருகிறார்கள்.‘ என்றார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் இன்று முதல் தொடங்குமா?


ஜாக்டோ-ஜியோ அமைப்பில் பிளவு ஏற்பட்டதால் இன்று (வியாழக்கிழமை) முதல் வேலை நிறுத்தம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

செப்டம்பர் 07, 2017, 05:30 AM

ஈரோடு,

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தன. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இன்று (வியாழக்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் அறிவித்து இருந்தனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் குழு உறுப்பினர்களுடன் அரசு சார்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் நடந்தது. அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் ஈரோட்டில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இந்த விழாவிற்கு வரும் முதல்-அமைச்சர், ஜாக்டோ- ஜியோ அமைப்பு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று மதியம் 1.30 மணி அளவில் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பி.இளங்கோ, ஜே.கணேசன் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். சுமார் 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடந்தது.

அதைத் தொடர்ந்து ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சர்வேயர் அரங்கத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற பி.இளங்கோ, ஜே.கணேசன் ஆகியோர் ‘போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்’ என்று கூறினார்கள். ஆனால் இவர்களுடைய கருத்துகளை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

மேலும் இளங்கோ, கணேசனை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளாக சுப்பிரமணியன், மாயவன் ஆகியோரை நியமித்து கூட்டம் நடத்தினர். அதன்பின்னரே புதிய ஒருங்கிணைப்பாளர்கள், ‘திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும்’ என்று அறிவித்தனர்.

கூட்டம் முடிந்த பின்னர் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், மாயவன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

எங்களுடைய கோரிக்கைகளை முதல்-அமைச்சர் தீர்த்து வைப்பார் என்று நினைத்தோம். ஆனால் அவர் எங்களுடைய எந்த கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பில் இணைந்துள்ள சங்கங்கள் ஒன்று கூடி முடிவு எடுத்துள்ளோம். அதன்படி திட்டமிட்டபடி நாளை முதல் (இன்று) காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடரும்.

அதே போன்று நாளை (இன்று) அனைத்து தாலுகா அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என்றும், 8-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் வருகிற 9-ந் தேதி சென்னையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பில் இணைந்திருக்கக்கூடிய சங்கங்கள் பேசி அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதைத் தொடர்ந்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

இதற்கிடையே கூட்டத்தை விட்டு வெளியே வந்த, பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோ மற்றும் கணேசன் ஆகியோர் நிருபர்களிடம் கூறும்போது, ‘எங்களுடைய கோரிக்கைகளை முதல் -அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார். அவருடைய வாக்குறுதியை நம்பி எங்களுடைய காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதிக்குள் எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம்’ என்றார்கள்.

போராட்ட அமைப்பில் பிளவு ஏற்பட்டு இருவேறுபட்ட அறிவிப்புகளால் இன்று (வியாழக்கிழமை) வேலை நிறுத்தம் நடைபெறுமா என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

Wednesday, September 6, 2017

’நீட் தேர்வில் நான் பாஸ்... ஆனாலும் நீட் வேண்டாம்’: அரசுப் பள்ளி மாணவியின் ஆதங்கம்!


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா கே.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி கமலிஸ்வரி. மத்திய அரசு அறிவித்த நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனாலும் இவர் படித்தது எல்லாம் தமிழ் வழிக் கல்வியில்தான். ராஜகம்பீரத்தில் பத்தாம் வகுப்பும் மதுரை திருமங்கலத்தில் பன்னிரண்டாம் வகுப்பும் படித்திருக்கிறார். அரசுப் பள்ளியில்தான் தனது பள்ளிக்கல்வியை முழுவதுமாக நிறைவு செய்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பில் 1028 மதிப்பெண்கள் பெற்ற கமலீஸ்வரி சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் கட் ஆப் 109 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்திருக்கிறார். ஆனாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார்.
kamaleeswari
 
நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மனு கொடுக்க வந்திருந்த கமலீஸ்வரி மற்றும் அவரது தாயார் வீரலெட்சுமி ஆகியோரிடம் பேசும்போது, ’நாங்கள் விவசாயக் குடும்பம். என்னோட அண்ணன் தம்பிகளுக்கு எல்லாம் வங்கியிலும் வெளியாட்களிடமும் கடன் வாங்கித்தான் எங்க அம்மா படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். இந்தச் சூழ்நிலையில் நான் நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் தமிழ் வழி என்பதால் எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்குமா என்பதில் சந்தேகம் இருக்கிறது. ஆகையால், தமிழக அரசும் மாவட்ட ஆட்சித்தலைவரும் எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்க உதவிட வேண்டும். நான் தேர்வுபெற்றபோதிலும் என்னைப்போன்ற கிராமப்புற மாணவர்கள்தான் நீட் தேர்வினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்துக்கு நீட் தேர்வு என்பது தேவையற்றது. ஆகையால், மத்திய அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தமிழக அரசு 85 சதவிகித மருத்துவ மாணவர் சேர்க்கை கேட்டதையும் நீதிமன்றம் நிராகரித்தது, என்னைப் போன்றவர்களுக்குப் பாதிப்புதான்’ என்று தெரிவித்தார்.
அக்யூட் டிராமா..! - அனிதா தற்கொலைக்கு உளவியல் விளக்கம்

VIKATAN

"என் அம்மா நோயுற்றுத் தவித்தபோது சரியான மருத்துவம் கிடைக்கவில்லை. அதனால், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். என் கிராமத்தில் போதிய மருத்துவ வசதி இருந்திருந்தால் என் அம்மாவைக் காப்பாற்றி இருக்கலாம். இனி எங்கள் கிராமத்தில் எந்தப் பிள்ளையும் மருத்துவ வசதி கிடைக்காமல் அம்மாவை இழக்கக்கூடாது. அதற்காகவே, நான் மருத்துவம் படிக்கப்போகிறேன்...' ஏன் நீங்கள் மருத்துவத்தைத் தேர்வு செய்தீர்கள் என்று கேட்ட நிருபருக்கு அனிதா சொன்ன பதில் இது.



எந்தப் பின்புலமும் இல்லாத அடித்தட்டுக் குடும்பத்தில் பிறந்தவர் அனிதா. சிறுவயதிலேயே அம்மா இறந்துவிட்டார். அம்மாவின் மரணம் தான், அனிதாவின் மனதில் மருத்துவக் கனவை விதைத்தது.

அப்பாவும், 4 சகோதரர்களும் அனிதாவை மருத்துவராக்குவதற்காக உழைத்துத் தேய்ந்தார்கள். அனிதா, எந்தச் சூழலிலும் தன் இலக்கில் இருந்து திசை திரும்பவில்லை. ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் குவித்தார். மெடிக்கல் கட் ஆப் 196.75.

இரவு பகல் பார்க்காத படிப்பு, கவனச்சிதறல் இல்லாத உழைப்பால் தான் இலக்கு வைத்த மருத்துவப் படிப்பை எட்டிப்பிடிக்கும் விளிம்பில் நின்றபோதுதான் 'நீட்' தடையாக வந்து மறித்தது.

அனிதா மட்டுமல்ல... அவரது குடும்பமே நிலைகுலைந்தது. வாழ்நாள் உழைப்பைக் கொட்டி மகளை மருத்துவராக்கிப் பார்க்க நினைத்த அனிதாவின் தந்தை சண்முகமும், சகோதரர்களும் செய்வதறியாது திகைத்து நின்றார்கள்.

குழப்பம் நீக்கி, மாணவர்கள் பக்கம் நிற்க வேண்டிய தமிழக அரசு, தன்னைத் தற்காத்துக் கொள்ளவே போராடிக் கொண்டிருந்தது. ஒரு பக்கம், நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று விடுவோம் என்று மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்துக்கொண்டு, மறுபக்கம். மத்திய அரசுக்கு அதற்கான அழுத்தத்தைத் தர எந்த முயற்சியும் எடுக்காமல் சமரசம் செய்துகொண்டு விட்டார்கள். மத்திய அமைச்சர்கள் தமிழகம் வரும்போது, நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றுத்தருவோம் என்று பேசுவதும், டெல்லி சென்றபிறகு, மற்ற மாநிலங்களுக்கு ஒரு சட்டம், தமிழகத்துக்கு ஒரு சட்டமெல்லாம் உருவாக்க முடியாது என்று வேறு முகம் காட்டினார்கள்.

கடந்த ஆறுமாத காலமாக மாணவர்களை உச்சபட்சமான குழப்பத்திலேயே வைத்திருந்த மத்திய, மாநில அரசுகள், இறுதியில் கைவிரித்து விட்டார்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்தபோது, 'மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை ஒத்தி வையுங்கள்' என்று உச்ச நீதிமன்றத்திடம் சொல்லி, தீர்ப்பை நிறுத்திய மத்திய அரசு, 'நீட் தேர்வு கட்டாயம் என்று கோர்ட் சொல்லிவிட்டது, எங்களால் ஒன்றும் செய்ய முடியாது' என்று கை விரித்துவிட்டது.



கண்டிப்பாக விலக்கு கிடைத்துவிடும் என்று நம்பிக்கையோடு இருந்த அனிதாவுக்கு, அதற்கு வாய்ப்பில்லை என்று தெரியவந்தபோது வேறு வாய்ப்பிருக்கவில்லை. லட்சங்களில் கொட்டிக்கொடுத்து, தனிப்பயிற்சி எடுக்கவும் சாத்தியமிருக்கவில்லை.

இருந்தும் தேர்வு எழுதினார். தேர்ச்சி பெறும் அளவுக்கு மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, மொத்தமுள்ள மருத்துவ இடங்களில் தமிழக மாணவர்களுக்கு 85 சதவிகிதம், சிபிஎஸ்சி மாணவர்களுக்கு 15 சதவிகிதம் என்று அரசாணை போட்டது தமிழக அரசு. அந்த ஆணை வெளிவந்தபோதே, வலுவற்ற இந்த ஆணை நீதிமன்றத்தில் நிற்கப்போவதில்லை என்று கல்வியாளர்கள் சொன்னார்கள். அதுதான் நடந்தது.

இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார் வழக்கறிஞர் நளினி சிதம்பரம். இந்த வழக்கில் எதிர்வாதியாக அனிதா தன்னை இணைத்துக்கொண்டார். ஆனால், நீதிமன்றத்தின் காதுகளில் அனிதாவின் அவலக்குரல் விழவில்லை. 'தமிழக அரசின் உத்தரவால், சிபிஎஸ்சி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றார் நளினி சிதம்பரம்.

அத்தனை கதவுகளும் மூடப்பட்டப் பின்னர், அனிதா மிகுந்த குழப்பத்துக்கும், மன அழுத்தத்துக்கும் ஆளாகியிருந்தார். ஒரு கட்டத்தில், 'இனி தான் கண்ட கனவு பழிக்கப்போவதில்லை... தன் தந்தையும், சகோதரர்களும் உழைத்த உழைப்பு வீணாகிவிட்டது என்பதைப் புரிந்துகொண்ட அனிதா தற்கொலை முடிவை எடுத்துவிட்டார்.

வறுமை, ஏற்றத்தாழ்வுகள், சிறு வயதிலேயே தாயை இழந்த சோகம் என எல்லாத் தடைகளையும் விடாமுயற்சியால் உடைத்தெறிந்து ப்ளஸ் டூ-வில் 1176 மதிப்பெண்கள் வரை பெற்று முன்மாதிரியாக உயர்ந்து நின்ற அனிதாவைத் தற்கொலை நோக்கித் தள்ளியது எது?



தமிழகத்தில் கடந்தாண்டு 8 லட்சம் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதினார்கள். அதில் அறிவியல் பிரிவை எடுத்துப் படித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம். அதில் 1 லட்சம் மாணவர்கள் மருத்துவப் படிப்பை இலக்கு வைத்துப் படித்திருப்பார்கள். அவர்களின் முழுக்கவனமும் பிளஸ் டூ-வில் அதிக மதிப்பெண் பெறுவதாக மட்டுமே இருந்திருக்கும். ஏராளமான மாணவர்கள் 1000-த்துக்கு மேல் மதிப்பெண் பெற்றிருப்பார்கள். தமிழக அரசின் உண்மை முகம் அறிந்து, முன்கூட்டியே நீட் தேர்வுக்குத் தயாரான கொஞ்சம் மாணவர்கள் மட்டுமே முட்டிமோதி எம்பிபிஎஸ் சீட்டைப் பெற்றிருக்கிறார்கள். தமிழக அரசின் வார்த்தைகளை நம்பி நீட் தேர்வுக்குத் தயாராகாத எல்லா மாணவர்களுமே செய்வதறியாது நிற்கிறார்கள். அவர்களை எப்படி மீட்கப்போகிறோம்?

"எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை தீர்வில்லை என்று சில 'நடுநிலை வாதிகளும், 'சமூகப் போராளிகளும்' இப்போது பேசுகிறார்கள். நீட் தேர்வுக்கு சமூக நீதிக்கு எதிரானது; அனிதா போன்று அடித்தட்டில் இருந்து தடையுடைத்து மேலெழுந்து வரும் மாணவர்களுக்கு விரோதமானது; பணத்தைக் கொட்டி தனிப்பயிற்சிக்குச் செல்ல முடியாத ஏழைக்குடும்பத்துப் பிள்ளைகளுக்கு விரோதமானது என்று தொடக்கத்தில் இருந்தே சமூக ஆர்வலர்கள் எதிர்த்து வருகிறார்கள். ஆனால், மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. மாநில அரசும் பிரச்னையின் உண்மையான மையத்தைப் புரிந்துகொள்ளவில்லை. அதற்கு விலையாகத்தான் அனிதா என்ற மகளை அள்ளிக் கொடுத்திருக்கிறோம். அனிதா தமிழகத்தின் மகள். அவர் தற்கொலையை தமிழகத்தில், உரிய தகுதிகள் இருந்தும் நீட் தேர்வால் தகுதியிழந்து நிற்கும் பல ஆயிரம் மாணவர்களின் மனநிலையை உணர்த்தும் பிம்பமாகப் பார்க்க வேண்டும். இது சமூகத்தின் மிகப்பெரிய தோல்வி. அனிதாவின் மரணத்துக்கு இந்த அரசுகள் மட்டும் காரணம் அல்ல. சிறிதும் உணர்வின்றி வாழும் நீங்களும் நானும் கூட காரணம்தான்.

மாணவர்கள் இந்தச் சூழலை எதிர்கொள்ள வேண்டும். அவர்களுக்கு இந்த சமூகம் துணை நிற்க வேண்டும்..." என்கிறார் மருத்துவர் புகழேந்தி.

" அனிதாவின் தற்கொலை என்னை மிகவும் பாதித்திருக்கிறது. மனம் நொறுங்கும் அளவுக்கு ஓர் மோசமான சம்பவம் நடக்கும்போது தற்கொலையைத் தீர்வாக நினைப்பது சராசரியான ஒரு மனிதச் செயல்பாடு. அதைக் கடந்து நிற்கப் பழக வேண்டும்." என்கிறார் மனநல மருத்துவர் ஷாலினி.

"அனிதா மருத்துவப் படிப்பைக் கனவாகக் கொண்டிருந்தார். அது வாய்க்காது என்றபோது பெரும் ஏமாற்றம் அவரைச் சூழ்ந்து விட்டது. இதுபோன்ற ஏமாற்றங்கள் மனதளவில் மிகக் கொடூரமான காயங்களை உண்டாக்கிவிடும். இந்த நிலைக்கு 'அக்யூட் டிராமா' (acute trauma) என்று பெயர். ' இனி நமக்கு எதிர்காலமே இல்லை' என்று எண்ணத் தோன்றும்.

இந்த நிலை உருவானபிறகு, மனம் நிலையிழந்து வாழ்க்கையையே முடித்துக்கொள்ளலாம் என்ற அளவுக்கு யோசிப்பார்கள். இதுதான் அனிதா விஷயத்திலும் நடந்திருக்கிறது. அனிதாவுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இனி என்ன செய்தாலும் அவரின் இழப்புக்கு ஈடாக இருக்காது.

இனியொரு சம்பவம் நிகழாமல் இருக்க, மத்திய மாநில அரசுகள் எவ்வித தயக்கமும் நிபந்தனையும் இன்றி நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும். சுகாதாரத்தில் பிற மாநிலங்களை விட தமிழகம் மிகச் சிறப்பாக முன்னேறியிருக்கிறது. அதற்கு இங்கிருந்த தலைவர்களே காரணம். தமிழக மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டுதான் இந்த கல்வி நிறுவனங்களை அவர்கள் உருவாக்கினார்கள். அந்த வாய்ப்பை, உரிமையை மத்திய அரசு பறிப்பது மிகப்பெரும் அநீதி.." என்கிறார் ஷாலினி.



மத்திய மாநில அரசுகள் அனிதாவின் மரணத்துக்குப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்!
நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை - வேலூர் சி.எம்.சி நிர்வாகம் தகவல்!
கா.முரளி

நீட் தேர்வு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி (சி.எம்.சி), மருத்துவ மாணவர் சேர்க்கையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக சமூக வலைதளத்தில் படுவேகமாகச் செய்திகள் பரவி வருகின்றன. இது தவறான தகவல் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.



இது குறித்து சி.எம்.சி கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் துரை ஜேஸ்பரிடம் பேசினோம்."தவறான தகவல் இது. நீட் தேர்வில், தேர்வான மாணவர்களை மட்டுமே நாங்கள் அட்மிசனுக்கு அழைக்க உள்ளோம். நீட் தேர்வில் தேர்வான 300 மாணவர்களை நாங்கள் நடத்தும் மூன்று நாள் கலந்தாய்வுக்கு அழைப்போம், அதில் அந்த மாணவர்கள் கிராமப்புறத்தில் பணியாற்றக்கூடிய தன்மையையும், லீடர்ஷிப் தகுதியையும் மருத்துவராகக்கூடிய இயல்பும் உள்ளதா என எங்கள் கல்லூரி தேர்வுசெய்யும். அதில் தேர்வான மாணவர்களுக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கு சீட் தருவோம். இந்த முறையைத்தான் நாங்கள் இதுநாள் வரை கடைப்பிடித்தோம். ஆனால், தற்போது தனியார் கல்லூரிகள் தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்த மருத்துவக் கவுன்சில் தடை செய்துள்ளது.

இதற்கு எதிராகவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதற்கான விவாதங்கள் முடிந்து அக்டோபர் 11-ம் தேதி தீர்ப்பு வருகிறது. அதன்பிறகே நாங்கள் 99 எம்.பி.பி.எஸ் மற்றும் 61 சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையை நடத்தவுள்ளோம். நீட் தேர்வை எதிர்த்து, நாங்கள் அட்மிசனை நிறுத்தி வைத்திருப்பதாக வரும் தகவல்கள் முற்றிலும் தவறானது. நீட் தேர்வில் தேர்வான மாணவர்களை மட்டுமே நாங்கள் கலந்தாய்வுக்கு அழைப்போம். 1918-ம் ஆண்டு தொடங்கியது எங்கள் கல்லூரி, இந்தியாவிலேயே முதல் தனியார் மருத்துவக்கல்லூரி. அடுத்த ஆண்டு 100 வது ஆண்டு விழா கொண்டாட உள்ளோம்" என்றார்.

NEWS TODAY 27.07.2026