Thursday, September 7, 2017

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் இன்று முதல் தொடங்குமா?


ஜாக்டோ-ஜியோ அமைப்பில் பிளவு ஏற்பட்டதால் இன்று (வியாழக்கிழமை) முதல் வேலை நிறுத்தம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

செப்டம்பர் 07, 2017, 05:30 AM

ஈரோடு,

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தன. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இன்று (வியாழக்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் அறிவித்து இருந்தனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் குழு உறுப்பினர்களுடன் அரசு சார்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் நடந்தது. அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் ஈரோட்டில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இந்த விழாவிற்கு வரும் முதல்-அமைச்சர், ஜாக்டோ- ஜியோ அமைப்பு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று மதியம் 1.30 மணி அளவில் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பி.இளங்கோ, ஜே.கணேசன் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். சுமார் 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடந்தது.

அதைத் தொடர்ந்து ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சர்வேயர் அரங்கத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற பி.இளங்கோ, ஜே.கணேசன் ஆகியோர் ‘போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்’ என்று கூறினார்கள். ஆனால் இவர்களுடைய கருத்துகளை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

மேலும் இளங்கோ, கணேசனை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளாக சுப்பிரமணியன், மாயவன் ஆகியோரை நியமித்து கூட்டம் நடத்தினர். அதன்பின்னரே புதிய ஒருங்கிணைப்பாளர்கள், ‘திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும்’ என்று அறிவித்தனர்.

கூட்டம் முடிந்த பின்னர் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், மாயவன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

எங்களுடைய கோரிக்கைகளை முதல்-அமைச்சர் தீர்த்து வைப்பார் என்று நினைத்தோம். ஆனால் அவர் எங்களுடைய எந்த கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பில் இணைந்துள்ள சங்கங்கள் ஒன்று கூடி முடிவு எடுத்துள்ளோம். அதன்படி திட்டமிட்டபடி நாளை முதல் (இன்று) காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடரும்.

அதே போன்று நாளை (இன்று) அனைத்து தாலுகா அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என்றும், 8-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் வருகிற 9-ந் தேதி சென்னையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பில் இணைந்திருக்கக்கூடிய சங்கங்கள் பேசி அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதைத் தொடர்ந்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

இதற்கிடையே கூட்டத்தை விட்டு வெளியே வந்த, பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோ மற்றும் கணேசன் ஆகியோர் நிருபர்களிடம் கூறும்போது, ‘எங்களுடைய கோரிக்கைகளை முதல் -அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார். அவருடைய வாக்குறுதியை நம்பி எங்களுடைய காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதிக்குள் எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம்’ என்றார்கள்.

போராட்ட அமைப்பில் பிளவு ஏற்பட்டு இருவேறுபட்ட அறிவிப்புகளால் இன்று (வியாழக்கிழமை) வேலை நிறுத்தம் நடைபெறுமா என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024