’நீட் தேர்வில் நான் பாஸ்... ஆனாலும் நீட் வேண்டாம்’: அரசுப் பள்ளி மாணவியின் ஆதங்கம்!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா கே.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி கமலிஸ்வரி. மத்திய அரசு அறிவித்த நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனாலும் இவர் படித்தது எல்லாம் தமிழ் வழிக் கல்வியில்தான். ராஜகம்பீரத்தில் பத்தாம் வகுப்பும் மதுரை திருமங்கலத்தில் பன்னிரண்டாம் வகுப்பும் படித்திருக்கிறார். அரசுப் பள்ளியில்தான் தனது பள்ளிக்கல்வியை முழுவதுமாக நிறைவு செய்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பில் 1028 மதிப்பெண்கள் பெற்ற கமலீஸ்வரி சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் கட் ஆப் 109 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்திருக்கிறார். ஆனாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார்.
நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மனு கொடுக்க வந்திருந்த கமலீஸ்வரி மற்றும் அவரது தாயார் வீரலெட்சுமி ஆகியோரிடம் பேசும்போது, ’நாங்கள் விவசாயக் குடும்பம். என்னோட அண்ணன் தம்பிகளுக்கு எல்லாம் வங்கியிலும் வெளியாட்களிடமும் கடன் வாங்கித்தான் எங்க அம்மா படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். இந்தச் சூழ்நிலையில் நான் நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் தமிழ் வழி என்பதால் எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்குமா என்பதில் சந்தேகம் இருக்கிறது. ஆகையால், தமிழக அரசும் மாவட்ட ஆட்சித்தலைவரும் எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்க உதவிட வேண்டும். நான் தேர்வுபெற்றபோதிலும் என்னைப்போன்ற கிராமப்புற மாணவர்கள்தான் நீட் தேர்வினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்துக்கு நீட் தேர்வு என்பது தேவையற்றது. ஆகையால், மத்திய அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தமிழக அரசு 85 சதவிகித மருத்துவ மாணவர் சேர்க்கை கேட்டதையும் நீதிமன்றம் நிராகரித்தது, என்னைப் போன்றவர்களுக்குப் பாதிப்புதான்’ என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment