Monday, November 6, 2017


மழை நிலவரங்களை எளிதில் தெரிந்துகொள்ள வானிலை ஆய்வு மைய இணையதளம் தமிழில் வடிவமைப்பு: தவறான தகவல்கள் பரப்புவதைத் தடுக்க ஏற்பாடு

Published : 05 Nov 2017 09:44 IST

ச.கார்த்திகேயன்சென்னை

மக்களை அச்சுறுத்தும் வகையில் தவறான வானிலை நிலவரங்கள் பரப்பப்படுவதைத் தடுக்க, சென்னை வானிலை ஆய்வு மையம் தனது பிரத்யேக இணையதளத்தை தமிழில் வடிவமைத்துள்ளது. இதன்மூலம் மழை எச்சரிக்கை உள்ளிட்ட விவரங்களை பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

கடந்த 2015-ல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள் ளம் காரணமாக, வானிலை முன்னெச்சரிக்கை நிலவரங்களைத் தெரிந்துகொள்வதில் மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வானிலை முன்னெச்சரிக்கை நிலவரங்கள் உலா வருகின்றன. அவற்றில் பல தகவல்கள் நம்பகத்தன்மை அற்றவையாகவும், சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட வானிலை முன்னெச்சரிக்கை நிலவரங்களாகவும் உள்ளன.

இதுபோன்ற செயல்கள் மக்கள் மத்தியில் தேவையற்ற பீதியை ஏற்படுத்துகின்றன. இவற்றைத் தடுக்கும் விதத்தில், நம்பகமான, சரியான வானிலை நிலவரங்களை பொதுமக்கள் எளி தில் தெரிந்துகொள்ளும் வகையில், சென்னை வானிலை ஆய்வு மையம், தனது http://imdchennai.gov.in இணையதளத்தில் வானிலை நிலவரம் குறித்த விவரங்களை தமிழில் படிக்கும் வகையில் மாற்றி அமைத்துள்ளது. முகப்பு பக்கத்திலேயே அனைத்து விவரங்களும் கிடைக் கும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறியது:

வடகிழக்கு பருவமழைக் காலம் என்பது, தமிழகத்துக்கு முக்கிய மழைக்காலமாக உள்ளது. இந்த காலகட்டத்தில் வானிலை முன்னெச்சரிக்கை நிலவரங்களை தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பார்கள். அண்மைக் காலமாக அத்தகைய ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

எங்கள் இணையதளத்தில், இதுநாள் வரை ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்கள் கொடுக்கப்பட்டு வந்தன. அனைத்து தகவல்களையும் முகப்பு பகுதியில் வைக்க முடியாது. வானிலை முன்னெச்சரிக்கை நிலவரங்கள், ஏதாவது ஒன்றினுள் பதிவு செய்யப்பட்டிருக்கும். அந்த இணையதளத்தை, தொடர்ந்து பார்வையிட்டு வருபவர்களுக்கு மட்டுமே, எந்தெந்த தகவல்கள், எதனுள் இருக்கிறது என்பது தெரியும். சாதாரண மக்கள் பார்வையிடுவது சிரமமாக இருக்கும்.

மேலும் சமூக வலைதளங்களில் தவறான வானிலை நிலவரங்கள் பரப்பப்படுகின்றன. அதனால் மக்கள் பீதி அடைகின்றனர். இதைத் தடுக்கும் விதமாகவும், மக்களுக்கு சரியான வானிலை நிலவரம் சென்று சேரவும், சென்னை வானிலை ஆய்வு மைய இணையதளம் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எவ்வளவு மழை பெய்துள்ளது, எந்தெந்த மாவட்டத்தில், எவ்வளவு மழை பெய்துள்ளது, கனமழைக்கு என்று ஏதேனும் எச்சரிக்கை இருக்கிறதா என்பதை, வானிலை ஆய்வு மைய இணையதளத்தை திறந்த உடனே, அதன் முகப்பு பக்கத்தில் கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். இந்த விவரங்கள் அனைத்தும் தமிழில் இடம்பெற்றுள்ளன. அதை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

வடகிழக்கு பருவமழை காலத்துக்காக பிரத்யேகமாக இந்த இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற்று, இந்த வசதியை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இது மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற இணையதளம். இதில் வானிலை தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே வெளியிடுவோம். சமூக வலைதளங்களில் வானிலை தொடர்பாக எந்த தகவல் வந்தாலும், வானிலை ஆய்வு மைய இணையதளத்தை திறந்து பார்த்து, உண்மை நிலையை மக்களே தெரிந்துகொள்ள, இந்த சேவை வசதியாக இருக்கும் என்றார்.

தவறுக்கு என்ன தண்டனை?

By எஸ்ஏ. முத்துபாரதி  |   Published on : 06th November 2017 01:21 AM  |
'ஒரு பாவமும் செய்யல, நம்ம வாழ்க்கையில் மட்டும் ஏன் விதி இப்படி விளையாடுது?', 'இருக்கற எல்லா தவறும் செய்திட்டு அவன்பாரு எவ்வளவு சுகமா வாழ்ந்திட்டு இருக்கான்' என்கிற புலம்பல் நம்மில் பெரும்பாலும் கேட்டிருப்போம், ஏன் நாமேகூட சொல்லியிருப்போம். 
இந்த உலகில் மனிதனாகப் பிறந்தவர்கள் யாரும் தவறு செய்யாமல் இருக்க முடியாதா? என்கிற கேள்வி நம் மனத்தில் எழலாம். 
ஆனால், இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இன்றைய நிமிடம் வரை மனிதகுலம் பல்வேறு பரிமாணங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பது உண்மை. தவறுகளிலிருந்துதான் மனிதன் பாடம் கற்றுக்கொள்கிறான்.
தவறு எங்கே ஆரம்பமானது என உற்றுநோக்கும்போது, மனிதனிடம் தோன்றும் சுயநலமே தவறுக்கு அடிப்படையாக விளங்குவதை நாம் காணலாம். 
ஆதி மனிதனிலிருந்து இன்றைய மனிதன் வரை, சுயநலம் என்கிற ஒற்றை வார்த்தையில் தன்நிலை தடுமாறி விடுகிறான். தவறுகள் அங்கேதான் ஆரம்பமாகிறது. 
தகுதியானவர்கள் தங்களின் உடல் மற்றும் மனவலிமையினால் எதையும் சாதித்துக் கொள்கின்றனர். மற்றவர்கள் தங்கள் நிலையை மேம்படுத்த குறுக்கு வழியில் செல்கின்றனர். 
இங்கேதான் தவறுகள் ஆரம்பமாகிறது. மனிதனிடம் தோன்றும் சுயநலமே தவறுக்கு அடிப்படையாக விளங்குகிறது. இன்றைய மனிதர்கள் சுயநலம் என்கிற வார்த்தையில் நிலைதடுமாறி விடுகின்றனர். 
குழந்தை, குடும்பம் என்று வரும்போது எதிர்காலம் வளமாக இருக்க வேண்டும் என்று நினைத்துச் செயல்படும்போது சுயநலம் தலைதூக்குகிறது. இதனால் 
நேர்மையான வழியில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த மனிதர்கள், போட்டி, பொறாமை காரணமாக நேர்மையற்ற வழியில் செல்லவும் முடிவெடுக்கின்றனர்.
சரி, திறமையுள்ளவன் இப்படித் தவறு செய்து முன்னேறுவதும், தனக்கான எல்லாவற்றையும் சாதித்துக் கொள்வதும் எத்தனைநாளைக்குத் தொடர்ந்து கொண்டேயிருக்கும்? நேர்மைக்கும் உண்மைக்கும் மதிப்புகிடையாதா? என்கிற கேள்வி மக்களிடையே எழத்தானே செய்யும்.
இன்றைய உலகில் ஆட்சியாளர்களையும், நீதியையும், எதிர்ப்பவர்களையும் எளிதில் விலைக்கு வாங்கிவிடக் கூடியவர்கள் இருக்கின்றனர். அவர்கள் செய்யும் தவறுகளுக்கு தண்டனை கிடையாதா?
சாதாரண மனிதன் தொழில் செய்ய வங்கியில் கடன் வாங்கி, அதைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்தி வரும்போது தொழிலில் ஏற்பட்ட திடீர் நஷ்டம் காரணமாக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால், வங்கி அதிகாரிகள் கடன் தொகைக்கு ஈடாக வைத்திருக்கும் பொருளை பறிமுதல் செய்துவிடுகின்றனர். 
இத்தகைய சூழலில் அந்த நபர் தொழில் செய்ய முடியாத நிலை உருவாகிறது. அதுமட்டுமல்ல வேறு வங்கிகளிலும் கடன்பெற முடியாது. இதுதான் பாமரனின் இன்றையநிலை.
ஆனால், இதற்கு நேரெதிராக அல்லவா நாட்டில் வசதி படைத்தவர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் நடக்கிறது. அவர்களை எளிதில் நெருங்குவது இயலாது. அவர்கள் வங்கிக் கடன் வாங்கினால் அந்த வங்கியில் அவர் தனிமரியாதையுடன் நடத்தப்படுகிறார். 
காரணம், அவரால் பலரும் ஆதாயம் அடைகின்றனர். எனவே, அவர் கடன் தொகை திரும்பச் செலுத்தாத போதும் அவருக்குக் கூடுதல் கால சலுகைகள் வழங்குகின்றனர். 
ஒருவேளை கடனைத் திருப்பிச் செலுத்த இயலாவிடில் 'வாராக்கடன்' பட்டியலில் அந்தத் தொகையை கணக்குக் காண்பித்து சரிசெய்து விடுகின்றனர். 
இப்படியாக அரசாங்கத்தின் பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாகப் பெற்று தொழில் நிறுவனங்கள் நடத்தி சம்பாதித்து அதன் மூலம் பலவசதிகள் பெற்ற பின்னர், கடனை திருப்பிச் செலுத்தாமல்விட்ட உண்மைச் சம்பவங்கள் பல உண்டு. இவர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிடுகின்றனர். தவறு செய்யும் இவர்களை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.
இதுபோன்ற சம்பவங்களில் உண்மைகளை வெளிக்கொணர்ந்து தவறு ஏற்படாமல், தடுத்து விழிப்பு ஏற்படுத்தும் பத்திரிகைகளும் எதோ தங்கள் கடமைக்கு அந்த விதிமீறல் செய்தியை வெளியிடுவதோடும், ஊடகங்கள் அச்செய்தியை ஒளிபரப்புவதோடும் தங்கள் கடமை முடிந்ததாக இருந்து விடுகின்றனர்.
எந்த ஒரு தவறான சம்பவம் நடைபெற்றாலும் அவை ஒருவாரத்துக்குத்தான் செய்தியாக பேசப்படுகின்றன. அதன்பிறகு அந்த செய்தியை மறைக்கும்படியும், மறையும்படியான வேறு ஒரு சம்பவம் நடந்துவிடுகிறது. 
மக்கள் மனத்தில் எந்த பாதிப்பும் நீண்ட நாள்கள் தங்கி விடாதவாறு ஆட்சியாளர்களும் கவனமாக இருக்கிறார்கள்.
தவறு செய்பவர்கள் எதற்கும் பயப்படாமல் தங்கள் தவறுகளைத் தொடர்கிறார்கள். தவறு செய்தவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை யோசிப்பதைவிட, நேர்மையாக வாழ்வது எப்படி என்று யோசிக்க வேண்டும். 
நாம் செய்யும் ஒரு செயல் நமக்கு சரியாக இருக்கலாம், பிறருக்குத் தவறாகத் தெரியலாம். அப்படி அவர் கூறும்போது அதை ஆராய்ந்து பார்த்து தவறெனில் திருத்திக் கொள்வதுதான் அறிவுடைமை. 
அப்படிச் செய்வதன் மூலம் சமூகத்தில் குற்றங்கள், முறைகேடுகள் நடைபெறுவதை நாம் குறைக்க முடியும்.
 

    இப்போதே இப்படி என்றால்...

    By ஆசிரியர்  |   Published on : 06th November 2017 01:22 AM
    மழை வந்துவிட்டால், சென்னை மாநகரம் ஒரு மாநரகமாக மாறுவது என்பது ஆண்டுதோறும் தொடரும் அவலம். அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் நிலையில், ஆழிப்பேரலை, தானே புயல், வார்தா புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ள முடியாமல் தவித்தால், அதில் நியாயமிருக்கிறது. ஆனால், ஆண்டுதோறும் சந்திக்கும் பருவமழையைக்கூட நம்மால் எதிர்கொள்ள முடியாமல் போவது என்பதை என்னவென்று சொல்வது?
    சென்னை ஒரு கடலோர நகரம். இயற்கையாகவே வெள்ளம் வடிந்தோடும்படியான நகரமைப்பு, வங்கக் கடலை ஒட்டியுள்ள சென்னைக்கு உண்டு. போதாக்குறைக்கு சென்னை மாநகரம் வழியாக இரண்டு ஆறுகளும், பக்கிங்ஹாம் கால்வாயும் பாய்ந்தோடி கடலில் கலக்கின்றன. மழைநீர் உடனடியாக வெளியேறாமல் சாலைகளில் தேங்கி நிற்க வேண்டிய அவசியமே இல்லை. பிறகும் மழை வந்துவிட்டால், சென்னை மாநகரம் வெள்ளத்தில் மிதக்கிறதே, ஏன்? 
    முன்பே கூறியதுபோல, கூவம், அடையாறு என இரண்டு ஆறுகள் சென்னை மாநகரின் வழியாகப் பாய்ந்து கடலில் கலக்கின்றன. போதாக்குறைக்கு பக்கிங்ஹாம் கால்வாயும் வேறு இருக்கிறது. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 16 கால்வாய்களும் சென்னை பெருநகர மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 30 கால்வாய்களும் இருக்கின்றன. இது போதாதென்று பல கழிவு நீர் ஓடைகளும், திட்டமிட்டு நிறுவப்பட்டிக்கும் மழைநீர், கழிவு நீர் கால்வாய்களும் இருக்கின்றன. 
    மழைக்காலம் எப்போது வரும் என்பதும், பருவமழை எப்போது தொடங்கும் என்பதும் திடீர் நிகழ்வுகள் அல்ல. பருவமழைக்கு முன்னால், கால்வாய்களையும், கழிவுநீர் ஓடைகளையும் மழை நீர், கழிவு நீர் வடிகால்களைச் சுத்தம் செய்து அடைப்புகளை அகற்றித் தயார் நிலையில் வைத்திருப்பது என்பது நிர்வாகம் செய்திருக்க வேண்டிய முன்னேற்பாடு.
    அடையாறும், கூவம் ஆறும் கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் தினம்தோறும் மண் சேர்ந்து விடுகிறது. ஒவ்வொரு நாளும் முகத்துவாரத்திலிருந்து மணலை அகற்றி, கழிவு நீர் கடலில் கலப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒப்பந்தம் எடுப்பதில் மணல் ஒப்பந்ததாரர்களின் போட்டா போட்டியும், அவர்கள் முறையாக தினந்தோறும் மணலை அகற்றுகிறார்களா என்பதைப் பொறுப்புடன் உறுதிப்படுத்தாத அதிகாரவர்க்கத்தின் மெத்தனமும் கூவமும் அடையாறும் கடலில் கலப்பதை தடுத்து விடுகின்றன.
    சென்னை பெருநகர மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் 30 கால்வாய்களிலும், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 16 கால்வாய்களிலும், அன்றாடம் தெருக்களில் சேரும் குப்பையை அகற்றுவதுபோல, தூர்வாரி சுத்தமாக பராமரித்திருந்தால், இப்படி தண்ணீர் தேங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. தெருவோர குப்பைகளை அகற்றுவதையேகூட முறையாகச் செய்யாத நிலையில், சாக்கடைக் கால்வாய்களை மாநகராட்சி ஊழியர்களும், அதிகாரிகளும் மூக்கைப் பொத்திக்கொண்டு செய்துவிடவா போகிறார்கள்?
    சென்னையில் குடிநீர் வடிகால் வாரியத்தின் பங்களிப்பாக ஏறத்தாழ இரண்டு லட்சத்துக்கும் அதிமான கழிவு நீர் இணைப்புகள் உள்ளன. இவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீர், மழைநீர் வடிகால் குழாய்களில் விடப்படுகின்றன. கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் மீது கட்டடங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்பதற்கு இவையெல்லாம்கூடக் காரணம்.
    சென்னை பெருநகர மாநகராட்சியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போது, அவர்கள் நல்லவர்களோ - கெட்டவர்களோ, மக்களால் அவர்களைச் சந்தித்து முறையிட முடிந்தது. மண்டலக் குழுக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து, குறைந்தபட்சப் பணியையாவது அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். 
    இப்போது சென்னை பெருநகர மாநகராட்சி 15 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஐந்து மண்டலங்களுக்கு ஒருவர் என மூன்று துணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆணையர் பதவியும், சிறப்பு அதிகாரி பதவியும் ஒரே நபரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சென்னைப் பெருநகர மாநகராட்சியின் எல்லை அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், மூன்று அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் செயல்படும்போது, நிர்வாகம் பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்யாமல் இருந்ததில் வியப்பே இல்லை.
    1,200 கி.மீ. மழை நீர் வடிகால் குழாய்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. இவை முறையாகக் கால்வாய்களுடன் இணைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதில் ஐயப்பாடு இருக்கிறது. மழை நீர் வடிகால் குழாய்களை அமைப்பது ஒரு துறை. அதை பராமரிப்பது இன்னொரு துறை. மழை நீர் வடிகால் குழாய்களைக் கழிவு நீர் குழாய்களை பராமரிப்பதுபோல, பராமரிக்க நிரந்தர ஊழியர்கள் கிடையாது. இதுபற்றி எல்லாம் முறையான, தெளிவான திட்டமிடல் இல்லாமல் போனதும்கூட, மழை வந்தால் சென்னை பெருநகர மாநகராட்சி மழையில் மிதப்பதற்கு முக்கியமான காரணம்.
    சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு பெருமழை வந்தபோது, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் ஆட்சியில், அதற்கு முன்னால் 30 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த 16 கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. அதற்குப் பிறகு கால்வாய்களை முறையாகத் தூர்வாரி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கான எந்த முனைப்பும், எந்த ஆட்சியிலும் எடுக்கப்படாததன் விளைவுதான், மழை வந்தால் சென்னை வெள்ளத்தில் மிதக்கும் அவலம். இப்போதுதான் பருவமழையே தொடங்கியிருக்கிறது...
     


    வெளியாகும் தீர்ப்புகள்: தமிழக கட்சிகள் கிலி
    சென்னை: இரட்டை இலை சின்னம் மற்றும், '2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்குகளில், தீர்ப்பு குறித்த முக்கிய அறிவிப்புகள், இன்றும், நாளையும் வெளியாகலாம் என்பதால், தமிழக அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.



    ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., கட்சி, பன்னீர் அணி, சசிகலா அணி என, இரண்டாக பிளவுபட்டது.

    இரட்டை இலை

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. உடனே, முடிவு எடுக்க முடியாததால், கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை, தேர்தல் கமிஷன் முடக்கியது.

    பணப்பட்டுவாடா புகாரில், இடைத்தேர்தல்

    ரத்தானது. இதையடுத்து, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தன. இணைப்புக்கு பின், கட்சி பொதுக்குழு கூடியது. பின், புதிய பிரமாண பத்திரங்களை, முதல்வர் பழனிசாமி அணியினர் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்தனர்.

    'முதல்வர் பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப் பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்து, போலியானது' என, தினகரன் தரப்பினர், தேர்தல் கமிஷனில் புகார் தெரிவித்தனர். இதற்கிடையே, 'நவ., 10க்குள், இரட்டை இலை சின்னம் குறித்த இறுதி முடிவை தேர்தல் கமிஷன் அறிவிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன் படி, இரட்டை இலை சின்னம் குறித்த விசாரணை, அக்., 6, 16, 23, 30, நவ., 1ம் தேதிகளில், டில்லியில், தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் நடந்தது.ஆறாம் கட்ட விசாரணை, இன்று மாலை, 3:00 மணிக்கு துவங்குகிறது. இதில் பங்கேற்க, பழனிசாமி, தினகரன் தரப்பினர் டில்லியில் முகாமிட்டுள்ளனர்.விசாரணை முடிந்து, இன்று தீர்ப்பு வெளியாகலாம் அல்லது தீர்ப்பு வழங்கப்படும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

    '2ஜி' வழக்கு

    அது போல, தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர்

    ராஜா உள்ளிட்டோர் தொடர்பான, '2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு, டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதி மன்றத்தில், ௧௦ ஆண்டு களாக நடந்து வந்தது. இதில், விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. தீர்ப்பு எந்தத் தேதியில் வெளியிடப் படும் என்பது, நாளை அறிவிக்கப் பட உள்ளது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேதியை அறிவிக்க உள்ளார்.

    தமிழகத்தின் முக்கியமான இரு அரசியல் கட்சிகளான, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய, முக்கியமான அறிவிப்புகள் இன்றும், நாளையும் வெளியாக உள்ளதால், அந்தக் கட்சிகள் மட்டுமின்றி, மற்ற ஆதரவு கட்சிகளும் கலக்கம் அடைந்துள்ளன.

    நீதிமன்றத்தை விமர்சித்ததாக சம்மன்: ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் விளக்கம்

    சிவகங்கை:நீதிமன்றத்தை விமர்சித்ததாக போலீசார் சம்மன் அனுப்பியதை அடுத்து, சிவகங்கை, நெற்குப்பை போலீஸ் ஸ்டேஷன்களில் ஆஜராகி சிவகங்கை மாவட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் விளக்கமளித்தனர்.
    பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; தொகுப்பூதியத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்கோ-ஜியோ சார்பில் செப்., 7 முதல் வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. உயர்நீதிமன்றம் உத்தரவையடுத்து போராட்டத்தை கைவிட்டு, செப்., 15 ல் மீண்டும் பணிக்கு திரும்பினர். அதே சமயத்தில் நீதிபதிகளை சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.நீதிபதிகளை விமர்ச்சித்தோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சிவகங்கை மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோ, தமிழரசன், முத்துப்பாண்டியன் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். அவர்கள் சிவகங்கை, நெற்குப்பை போலீஸ் ஸ்டேஷன்களில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
    நிர்வாகிகள் கூறியதாவது: எட்டாவது ஊதியக்குழு மாற்றத்தை செயல்படுத்தாமல் அரசு தாமதப்படுத்தியது. அதேபோல் எங்களது மற்ற கோரிக்கைகளையும் ஏற்கவில்லை. இதனால் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம். இதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அதன் பின்பும் போராட்டம் செய்ததால் எங்கள் மீது அவதுாறு வழக்கு தொடரப்பட்டது.
    இதில் எங்களது நிர்வாகிகள் ஆஜராகி, போராட்டத்திற்கான நியாயங்களை தெரிவித்தனர். இதை ஏற்று கொண்ட நீதிபதிகள் ஊதிய மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் போராட்டத்தின் போது எங்களது அமைப்பினர் நீதிமன்றம் குறித்து அவதுாறாக பேசவில்லை. அதேபோல் சமூக வலைதளங்களிலும் எந்தவித அவதுாறும் பரவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளில் எப்போதும் ஈடுபட மாட்டோம், என விளக்கமளித்தனர்.

    மயிலாடுதுறையில் மழை நீடிப்பு : இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு


    மயிலாடுதுறை: மயிலாடுதுறையில், ஏழாவது நாளாக கனமழை பெய்து வருவதால், மீனவர்கள், விவசாயிகள் என, அனைத்து தரப்பினரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
    நாகை மாவட்டம், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் பகுதியில், ஏழாவது நாளாக நேற்றும் கனமழை கொட்டித் தீர்த்தது. 

    பாய், போர்வை : வெள்ளம் சூழ்ந்த பகுதி களில் உள்ள மக்களை மீட்டு, 13 முகாம்களில் தங்க வைத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில், உணவு, வேட்டி, சேலை, பாய், போர்வை வழங்கப்பட்டது.
    தலைச்சங்காடு, கருவேலி, எருமல் உள்ளிட்ட பல இடங்களில், வரத்து வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு, விளை நிலங்களில் தண்ணீர் புகுந்ததால், 1 லட்சம் ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. சீர்காழி அடுத்த எடமணல் கிராமத்தில், 3,000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி, அழுகும் நிலையில் உள்ளன. தண்ணீரை வெளியேற்ற உதவுமாறு, பொதுப்பணி துறைக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். 
    வருவாய் துறை அதிகாரிகள், சமாதானப்படுத்தினர். மறியலால், சீர்காழி-- திருமுல்லைவாசல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பவுன்ராஜ், பூம்புகாரில் நேற்று, மழை பாதிப்பை பார்வையிட வந்தார். அவரை மீனவர்கள் சூழ்ந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
    தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றுமாறு பொதுப்பணி துறையினரை, எம்.எல்.ஏ., கேட்டுக் கொண்டார்.
    கனமழை மற்றும் கடல் சீற்றத்தால், சந்திரபாடி துவங்கி கொடியம்பாளையம் வரை, 26 கிராம மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. 1,000 விசைப்படகுகள், 5,000த்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள், துறைமுகம் மற்றும் துாண்டில் வளைவுகளில், பாதுகாப்பாக நிறுத்தப் பட்டுள்ளன.
    பழநியில் கொட்டியது
    பழநியில் கொட்டிய மழையால், நேற்று இரவு, தங்க ரத புறப்பாடு நிறுத்தப்பட்டது; 'ரோப் கார்' சேவையும் பாதிக்கப்பட்டது.
    பழநியில், நேற்று மாலை 4:45 மணி முதல், மழை பெய்தது. இதனால், ஒரு மணிநேரம் மின் தடை ஏற்பட்டது. பஸ் ஸ்டாண்ட் அருகே, குளம்போல தேங்கிய தண்ணீரால் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் மிதந்து சென்றன.
    மழையால், 'ரோப் கார்' சேவை நிறுத்தப்பட்டு, 'வின்ச்' படிப்பாதையில் பக்தர்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். 
    இரவு 7:00 மணிக்கும் மழை தொடர்ந்ததால், தங்கரதம் நிறுத்தப்பட்டு, தேர்நிலையில் பூஜைசெய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தங்கரதம் இழுக்க கட்டணம் செலுத்திய, 160 பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    பழநியில், 66.5 அடி உயரம் உள்ள வரதமாநதி அணை, 65 அடியை எட்டியுள்ளது. வினாடிக்கு, 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 
    'இன்று காலையில் அணை இரண்டாவது முறையாக நிரம்பும்' என, பொதுபணித்துறையினர் தெரிவித்தனர்.

    மாணவர்களுக்கு தண்டனை : தலைமை ஆசிரியை, 'சஸ்பெண்ட்'

    திருச்சி: திருச்சியில், தீபாவளி கொண்டாடிய பள்ளி மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய விவகாரத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் உடற்கல்வி ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.

    திருச்சி, கீழப்புதுாரில் சர்வைட் என்ற மெட்ரிக் பள்ளி உள்ளது. 10ம் வகுப்பு வரை, 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். அக்., 18ல் தீபாவளி முடிந்து, பள்ளி திறந்த அடுத்த நாள், தீபாவளிக்கு பட்டாசு வெடித்த மாணவர்களையும், மருதாணி வைத்திருந்த மாணவியரையும் தனியே அழைத்து, பட்டாசு வெடித்ததற்கு, தலை குனிந்து, இயேசுவிடம் மன்னிப்பு கேட்க, ஆசிரியர்கள் நிர்ப்பந்தப்படுத்தியதாக தெரிகிறது. மேலும் மருதாணி வைத்திருந்த மாணவியரை, உடற்கல்வி ஆசிரியர் ஆண்ட்ரூ போஸ், பிரம்பால் கையில் அடித்து துன்புறுத்தியுள்ளார். மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஹிந்து அமைப்புகள், கல்வி அதிகாரிகளிடமும், போலீசிலும் புகார் அளித்தனர். குழந்தைகள் நல வாரியம் மூலமாகவும் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியை லில்லி, உடற்கல்வி ஆசிரியர் ஆண்ட்ரூ போஸ் ஆகிய இருவரையும், சஸ்பெண்ட் செய்து, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் விமலா, நேற்று முன்தினம் உத்தரவிட்டார்

    NEWS TODAY 03.07.2026