Monday, November 6, 2017


தவறுக்கு என்ன தண்டனை?

By எஸ்ஏ. முத்துபாரதி  |   Published on : 06th November 2017 01:21 AM  |
'ஒரு பாவமும் செய்யல, நம்ம வாழ்க்கையில் மட்டும் ஏன் விதி இப்படி விளையாடுது?', 'இருக்கற எல்லா தவறும் செய்திட்டு அவன்பாரு எவ்வளவு சுகமா வாழ்ந்திட்டு இருக்கான்' என்கிற புலம்பல் நம்மில் பெரும்பாலும் கேட்டிருப்போம், ஏன் நாமேகூட சொல்லியிருப்போம். 
இந்த உலகில் மனிதனாகப் பிறந்தவர்கள் யாரும் தவறு செய்யாமல் இருக்க முடியாதா? என்கிற கேள்வி நம் மனத்தில் எழலாம். 
ஆனால், இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இன்றைய நிமிடம் வரை மனிதகுலம் பல்வேறு பரிமாணங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பது உண்மை. தவறுகளிலிருந்துதான் மனிதன் பாடம் கற்றுக்கொள்கிறான்.
தவறு எங்கே ஆரம்பமானது என உற்றுநோக்கும்போது, மனிதனிடம் தோன்றும் சுயநலமே தவறுக்கு அடிப்படையாக விளங்குவதை நாம் காணலாம். 
ஆதி மனிதனிலிருந்து இன்றைய மனிதன் வரை, சுயநலம் என்கிற ஒற்றை வார்த்தையில் தன்நிலை தடுமாறி விடுகிறான். தவறுகள் அங்கேதான் ஆரம்பமாகிறது. 
தகுதியானவர்கள் தங்களின் உடல் மற்றும் மனவலிமையினால் எதையும் சாதித்துக் கொள்கின்றனர். மற்றவர்கள் தங்கள் நிலையை மேம்படுத்த குறுக்கு வழியில் செல்கின்றனர். 
இங்கேதான் தவறுகள் ஆரம்பமாகிறது. மனிதனிடம் தோன்றும் சுயநலமே தவறுக்கு அடிப்படையாக விளங்குகிறது. இன்றைய மனிதர்கள் சுயநலம் என்கிற வார்த்தையில் நிலைதடுமாறி விடுகின்றனர். 
குழந்தை, குடும்பம் என்று வரும்போது எதிர்காலம் வளமாக இருக்க வேண்டும் என்று நினைத்துச் செயல்படும்போது சுயநலம் தலைதூக்குகிறது. இதனால் 
நேர்மையான வழியில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த மனிதர்கள், போட்டி, பொறாமை காரணமாக நேர்மையற்ற வழியில் செல்லவும் முடிவெடுக்கின்றனர்.
சரி, திறமையுள்ளவன் இப்படித் தவறு செய்து முன்னேறுவதும், தனக்கான எல்லாவற்றையும் சாதித்துக் கொள்வதும் எத்தனைநாளைக்குத் தொடர்ந்து கொண்டேயிருக்கும்? நேர்மைக்கும் உண்மைக்கும் மதிப்புகிடையாதா? என்கிற கேள்வி மக்களிடையே எழத்தானே செய்யும்.
இன்றைய உலகில் ஆட்சியாளர்களையும், நீதியையும், எதிர்ப்பவர்களையும் எளிதில் விலைக்கு வாங்கிவிடக் கூடியவர்கள் இருக்கின்றனர். அவர்கள் செய்யும் தவறுகளுக்கு தண்டனை கிடையாதா?
சாதாரண மனிதன் தொழில் செய்ய வங்கியில் கடன் வாங்கி, அதைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்தி வரும்போது தொழிலில் ஏற்பட்ட திடீர் நஷ்டம் காரணமாக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால், வங்கி அதிகாரிகள் கடன் தொகைக்கு ஈடாக வைத்திருக்கும் பொருளை பறிமுதல் செய்துவிடுகின்றனர். 
இத்தகைய சூழலில் அந்த நபர் தொழில் செய்ய முடியாத நிலை உருவாகிறது. அதுமட்டுமல்ல வேறு வங்கிகளிலும் கடன்பெற முடியாது. இதுதான் பாமரனின் இன்றையநிலை.
ஆனால், இதற்கு நேரெதிராக அல்லவா நாட்டில் வசதி படைத்தவர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் நடக்கிறது. அவர்களை எளிதில் நெருங்குவது இயலாது. அவர்கள் வங்கிக் கடன் வாங்கினால் அந்த வங்கியில் அவர் தனிமரியாதையுடன் நடத்தப்படுகிறார். 
காரணம், அவரால் பலரும் ஆதாயம் அடைகின்றனர். எனவே, அவர் கடன் தொகை திரும்பச் செலுத்தாத போதும் அவருக்குக் கூடுதல் கால சலுகைகள் வழங்குகின்றனர். 
ஒருவேளை கடனைத் திருப்பிச் செலுத்த இயலாவிடில் 'வாராக்கடன்' பட்டியலில் அந்தத் தொகையை கணக்குக் காண்பித்து சரிசெய்து விடுகின்றனர். 
இப்படியாக அரசாங்கத்தின் பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாகப் பெற்று தொழில் நிறுவனங்கள் நடத்தி சம்பாதித்து அதன் மூலம் பலவசதிகள் பெற்ற பின்னர், கடனை திருப்பிச் செலுத்தாமல்விட்ட உண்மைச் சம்பவங்கள் பல உண்டு. இவர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிடுகின்றனர். தவறு செய்யும் இவர்களை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.
இதுபோன்ற சம்பவங்களில் உண்மைகளை வெளிக்கொணர்ந்து தவறு ஏற்படாமல், தடுத்து விழிப்பு ஏற்படுத்தும் பத்திரிகைகளும் எதோ தங்கள் கடமைக்கு அந்த விதிமீறல் செய்தியை வெளியிடுவதோடும், ஊடகங்கள் அச்செய்தியை ஒளிபரப்புவதோடும் தங்கள் கடமை முடிந்ததாக இருந்து விடுகின்றனர்.
எந்த ஒரு தவறான சம்பவம் நடைபெற்றாலும் அவை ஒருவாரத்துக்குத்தான் செய்தியாக பேசப்படுகின்றன. அதன்பிறகு அந்த செய்தியை மறைக்கும்படியும், மறையும்படியான வேறு ஒரு சம்பவம் நடந்துவிடுகிறது. 
மக்கள் மனத்தில் எந்த பாதிப்பும் நீண்ட நாள்கள் தங்கி விடாதவாறு ஆட்சியாளர்களும் கவனமாக இருக்கிறார்கள்.
தவறு செய்பவர்கள் எதற்கும் பயப்படாமல் தங்கள் தவறுகளைத் தொடர்கிறார்கள். தவறு செய்தவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை யோசிப்பதைவிட, நேர்மையாக வாழ்வது எப்படி என்று யோசிக்க வேண்டும். 
நாம் செய்யும் ஒரு செயல் நமக்கு சரியாக இருக்கலாம், பிறருக்குத் தவறாகத் தெரியலாம். அப்படி அவர் கூறும்போது அதை ஆராய்ந்து பார்த்து தவறெனில் திருத்திக் கொள்வதுதான் அறிவுடைமை. 
அப்படிச் செய்வதன் மூலம் சமூகத்தில் குற்றங்கள், முறைகேடுகள் நடைபெறுவதை நாம் குறைக்க முடியும்.
 

    No comments:

    Post a Comment

    Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters

    Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters  TIMES NEWS NETWORK 24.10.2024 Dindigul : Tamil Nadu governor R N Ravi awarded  degrees to...