வெளியாகும் தீர்ப்புகள்: தமிழக கட்சிகள் கிலி
சென்னை: இரட்டை இலை சின்னம் மற்றும், '2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்குகளில், தீர்ப்பு குறித்த முக்கிய அறிவிப்புகள், இன்றும், நாளையும் வெளியாகலாம் என்பதால், தமிழக அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.
ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., கட்சி, பன்னீர் அணி, சசிகலா அணி என, இரண்டாக பிளவுபட்டது.
இரட்டை இலை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. உடனே, முடிவு எடுக்க முடியாததால், கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை, தேர்தல் கமிஷன் முடக்கியது.
பணப்பட்டுவாடா புகாரில், இடைத்தேர்தல்
ரத்தானது. இதையடுத்து, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தன. இணைப்புக்கு பின், கட்சி பொதுக்குழு கூடியது. பின், புதிய பிரமாண பத்திரங்களை, முதல்வர் பழனிசாமி அணியினர் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்தனர்.
'முதல்வர் பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப் பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்து, போலியானது' என, தினகரன் தரப்பினர், தேர்தல் கமிஷனில் புகார் தெரிவித்தனர். இதற்கிடையே, 'நவ., 10க்குள், இரட்டை இலை சின்னம் குறித்த இறுதி முடிவை தேர்தல் கமிஷன் அறிவிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் படி, இரட்டை இலை சின்னம் குறித்த விசாரணை, அக்., 6, 16, 23, 30, நவ., 1ம் தேதிகளில், டில்லியில், தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் நடந்தது.ஆறாம் கட்ட விசாரணை, இன்று மாலை, 3:00 மணிக்கு துவங்குகிறது. இதில் பங்கேற்க, பழனிசாமி, தினகரன் தரப்பினர் டில்லியில் முகாமிட்டுள்ளனர்.விசாரணை முடிந்து, இன்று தீர்ப்பு வெளியாகலாம் அல்லது தீர்ப்பு வழங்கப்படும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
'2ஜி' வழக்கு
அது போல, தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர்
ராஜா உள்ளிட்டோர் தொடர்பான, '2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு, டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதி மன்றத்தில், ௧௦ ஆண்டு களாக நடந்து வந்தது. இதில், விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. தீர்ப்பு எந்தத் தேதியில் வெளியிடப் படும் என்பது, நாளை அறிவிக்கப் பட உள்ளது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேதியை அறிவிக்க உள்ளார்.
தமிழகத்தின் முக்கியமான இரு அரசியல் கட்சிகளான, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய, முக்கியமான அறிவிப்புகள் இன்றும், நாளையும் வெளியாக உள்ளதால், அந்தக் கட்சிகள் மட்டுமின்றி, மற்ற ஆதரவு கட்சிகளும் கலக்கம் அடைந்துள்ளன.
No comments:
Post a Comment