Friday, November 24, 2017

விபத்தில் சிக்கியவர்களை மீட்காமல் மீன்களை அள்ளிய மக்கள்

Added : நவ 23, 2017 23:48



அராரியா: பீஹார் மாநிலம், அராரியா மாவட்டத்தில், மீன்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவாமல், மீன்களை அப்பகுதி மக்கள் அள்ளிச் சென்றனர்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. நேற்று முன்தினம் காலை, அராரியா மாவட்டம், சிமராஹா பகுதியில், மீன்களை ஏற்றி வந்த வேன், சாலையில் திரும்பும்போது, திடீரென கவிழ்ந்து, விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில், வேன் டிரைவரும், உதவியாளரும், பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த, அப்பகுதி மக்கள், காயமடைந்த டிரைவர் மற்றும் உதவியாளருக்கு உதவாமல், மீன்களை அள்ளிச் சென்றனர்.

கார்த்திகை தீபத்திருவிழா : சிறப்பு ரயில்கள் இயக்கம்


Added : நவ 24, 2017 00:08

மதுரை: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பயணிகள் நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கோவையில் நவ., 30 இரவு 7:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(06022) மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு திருநெல்வேலி செல்லும். போத்தனுார், உடுமலைப்பேட்டை, பழநி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர்,சாத்துார், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சியில் இந்த ரயில் நிற்கும்.


திருநெல்வேலியில் டிச., 1 மாலை 5:00 மணிக்கு புறப்படும் ரயில்(06024) மறுநாள் காலை 7:00 மணிக்கு திருவண்ணாமலை செல்லும். அங்கிருந்து டிச., 2 இரவு 11:30 மணிக்கு புறப்படும் ரயில்(06023) மறுநாள் காலை 11:45 க்கு திருநெல்வேலி செல்லும். இந்த ரயில் வாஞ்சிமணியாச்சி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், திருக்கோவிலுாரில் நிற்கும்.


திருநெல்வேலியில் டிச., 3 மாலை 5:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(06020) மறுநாள் காலை 9:00 மணிக்கு சென்னை எழும்பூர் செல்லும். இந்த ரயில் வாஞ்சிமணியாச்சி, மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கற்பட்டு, தாம்பரம்வழியாக செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு நேற்று துவங்கியது.

26, 27ல் கன மழை வாய்ப்பு

Added : நவ 23, 2017 23:51

'தமிழக கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களில், நவ., 26, 27ல், பரவலாக மழை பெய்யும்' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை மையம்கூறியுள்ளதாவது: வட கிழக்கு பருவ மழை, வலு குறைந்து காணப்படுகிறது. தென் மாவட்டங்களில் மட்டும், கடந்த வாரம் மிதமாக மழை பெய்துள்ளது. தற்போது, வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது, தமிழகத்தின் தென்மேற்கு பகுதியை, இருநாட்களில் நெருங்கும். அதனால், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருது நகர் உள்ளிட்ட மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும். 26ல், தெற்கு கடலோர மாவட்டங்களிலும், 27ல், மத்திய கடலோர மாவட்டங்களிலும், கன மழை பெய்யலாம். நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, சிவகங்கை, அம்பாசமுத்திரம், மணிமுத்தாறில், 3 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அந்த மையம் கூறியுள்ளது.

- நமது நிருபர் -
ஷீரடிக்கு சிறப்பு ரயில்

Added : நவ 23, 2017 23:25

சென்னை: இந்திய ரயில்வே உணவு சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., ஷீரடிக்கு சிறப்பு ரயில் இயக்குகிறது. இந்த ரயில், மதுரையில் இருந்து, டிச., 12ல் புறப்படுகிறது. ஏழு நாள் சுற்றுலாவில், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக, மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஷீரடி, பண்டரிபுரம், ஆந்திர மாநிலத்தில் உள்ள மந்திராலயத்துக்கு சென்று வரலாம். ஒருவருக்கு, 6,615 ரூபாய் கட்டணம். மேலும் தகவல்களுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் சென்னை சென்ட்ரல் அலுவலகத்தை, 90031 40681 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Thursday, November 23, 2017


ஒற்றைக் குழந்தை முறை

By எஸ்ஏ. முத்துபாரதி | Published on : 23rd November 2017 01:43 AM |

இனிவரும் தலைமுறையினருக்கு அரிதிலும் அரிதாகத் தென்படும் வார்த்தைகளாக இருக்கப்போவது பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி, தாத்தா, பாட்டி, கொழுந்தனார், நாத்தனார் முதலிய வார்த்தைகள். 

மாமா, அத்தை என்பது பொதுவாக அனைவரையும் அழைப்பதால் யார் உறவுமுறை மாமா, நட்புக்கான மாமா எனத் தெரியாமல் போய்விடும்.
தாத்தா, பாட்டி, சம்பந்தி போன்ற உறவுகளை கண்களில் காண்பது அரிதாகி, ஆண்டுக்கு ஒருமுறை தங்களின் பிறந்த நாள், திருமண நாளில் அவர்கள் இருக்கும் முதியோர் இல்லம் சென்று சந்தித்து ஆசிபெறும் தினமாக மாறும்.
கிட்டத்தட்ட மேலைநாட்டுக் கலாசாரம் முழுவதும் நம்மை ஆட்கொள்ளும் நிலைதான் தற்பொழுது. தனிமனித சட்ட பாதுகாப்பு ஒன்றைத் தவிர 18வயது வரை வேறு வழியின்றி குழந்தைகள் நம்மோடு இருப்பார்கள். அதுவும் விரும்பியா விரும்பாமலா என்பது நமது நடவடிக்கையைப் பொருத்தது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குடும்பத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை ஐந்திலிருந்து பத்துவரை இருக்கும்; இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டில் குழந்தைகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து ஆறு வரை இருக்கும்.
ஆனால், கடந்த ஐந்து அல்லது பத்தாண்டுகளில் ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தைதான் அல்லது அதிகபட்சமாக இரண்டு குழந்தைகள்தான் இருக்கும். இது தற்போது ஒற்றைக் குழந்தை கலாசாரமாக மாறிக் கொண்டிருக்கிறது. இதை ஒரே குழந்தை என பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. 



இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் பொதுவாக, தாங்கள் பெற்ற குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்து கல்வி, வேலை, திருமணம், வீடு, வாகன வசதி என அமைத்துக் கொடுப்பதை நினைத்து அனைத்து பெற்றோரும் பெரிய சுமையாக நினைத்துத் தங்களின் குழந்தை பெறும் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டனர். உண்மையில் குழந்தைகளை முறையாக வளர்த்துவிட்டாலே போதும், அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். 


அதற்காக குடும்ப சூழல் தெரியாமல் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றில்லை. குழந்தைகள் அவர்களுக்குள் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்கிற உறவுகளோடு இருக்கும்பொழுது அவர்களுக்குள் நல்ல மனப்பாங்கு இருப்பதை நம்மால் உணர முடியும். 


இதை எந்தப் பள்ளிக்கூடத்திலும் கற்றுக் கொள்ள முடியாது. குடும்பத்தில் நல்லது - கெட்டது என்றால் அக்கா வீட்டிற்கோ தங்கை வீட்டிற்கோ சென்று உதவுவது அல்லது அண்ணன் வீடு, தம்பி வீடு என சென்று வருவது, அவர்களின் உதவி கிடைப்பது, அவர்களோடு இன்ப - துன்பங்களைப் பகிர்ந்து வாழ்வது என்பதெல்லாம், நம் வாழ்வில் கிடைக்கக்கூடிய அரிய அனுபவங்கள். 


ஒரு குழந்தை இருக்கும் வீட்டில் அவர்கள் இந்த அனுபவங்களை தங்கள் வாழ்நாளில் காணவே முடியாது. எனவேதான், இன்றைய குடும்ப அமைப்புகளில் உறவு எனச் சொல்லிக்கொள்ள குறைந்தது இரண்டு முதல் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப குழந்தைகளின் எண்ணிக்கை அமையலாம்.
அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி, வேலை, திருமணம், வீடு, வாகனம் முதலிய அளவீடுகளை நாமே நிர்ணயித்துக் கொண்டதால்தான், நமக்குள்ளாக ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை காரணமாகக் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டோம்.


இருப்பினும் வேறொரு நோக்கத்தில் இந்தச் சமூக சூழலை நாம் அணுக வேண்டியுள்ளது. ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை என இருக்கும் குடும்பத்தில் வாழ்ந்து பழகியவர்கள் தங்கள் வாழ்வில் மிகுந்த பொறுப்புணர்வு கொண்டும், வாழ்க்கையில் எவ்வித சூழல் அமைந்தாலும் சமாளித்துச் செல்லும் திறனும் இயற்கையாகவே பெற்று விடுகின்றனர். 


காரணம், அவர்களின் வளர்ந்து வரும் சூழல் அத்தகையது. பல குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் குடும்பத்தில் அடிக்கடி விருந்து, விசேஷம், பண்டிகை, கொண்டாட்டம் எனப் பலவித உறவுப் போக்குவரத்தினை பார்த்துப் பழக்கம் ஏற்படுகிறது. உறவு முறைகளைப் பராமரிக்கும் முறையையும் கற்றுக் கொள்கின்றனர். 


இதனால், உறவினர்களுக்கு மத்தியில் எப்பொழுதும் ஓர் இணக்கமான சூழல் நிலவுகிறது. ஏதாவது ஒரு குடும்பத்தில் யாருக்காவது நல்லது அல்லது கெட்டது நடந்தால் அனைவரும் துணைநின்று உதவுகிறார்கள். இப்படியான கட்டமைப்பு இன்றைய சூழலில் கேள்விக்குறியாகி விட்டது. 


குழந்தைகள் விடுமுறை காலங்களில் உறவினர் வீடுகளுக்குச் செல்லும் இப்படியான அணுகுமுறைகளை இன்றைய தலைமுறையினர் மறந்து, தங்கள் விடுமுறை காலங்களை தொலைக்காட்சி முன்பும் கணினி முன்பும் அமர்ந்து செலவிட்டு என்னதான் கற்றுக் கொண்டாலும், நேரடியாகச் சென்று கிடைக்கும் அனுபவத்திற்கு ஈடாகாது.


இன்றைய குடும்ப சூழல் சுயநலத்தின் உச்சமாகவே காணப்படுகிறது. முன்பு உறவுகளின் அன்பில் வளர்ந்த விதம், அதனால் ஏற்பட்ட நிம்மதி, மகிழ்ச்சி தற்போது குறைந்துள்ளது. ஒரே வீட்டில் தனித்தனி அறைகளில் தனித்தனித் தீவுகளாக வசிக்கும் நிலை. 


உறவுகள் சுருங்கி, உறவு முறைகளும் சுருங்கி, வாழ்க்கை முறையும் சுருக்கி, மனதும் சுருங்கி மனிதப் பண்புகளை இழந்து சற்றேறக்குறைய இயந்திரங்களாக வாழும் நிலை. 


உறவுகள் அதிகமில்லாத சூழலில் வளரும் குழந்தைகள் ஒருவித தனிமைச் சூழலை விரும்பும் மனப்பான்மையில் இருப்பார்கள். கூட்டமாக சந்தோஷமாக இருக்கும் சூழலை விரும்பமாட்டார்கள்.
எனவே, கூடுமானவரை குழந்தைகள் தங்கள் உடன்பிறப்புகளுடன் வளரும் ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டும். உறவுகளும் இருக்க வேண்டும், அவர்களுக்குள் மனமகிழ்ச்சியான போக்குவரத்தும் இருக்க வேண்டும். உறவுகள் பராமரிக்கப்படவும் வேண்டும். 


தொழில்நுட்ப வசதியில் உலகம் சுருங்கிவிடலாம், ஆனால் உறவுகள் சுருங்கிவிடக் கூடாது. உடன்பிறப்பு என்பது நமக்காக மட்டுமல்ல, நமது குழந்தைகளுடனான உறவுமுறைகள் தொடரவும் அளிக்கும் நல்வாய்ப்பாகும்.

பொறியியல் மாணவி தற்கொலை கண்டித்து வன்முறை: சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கு ஜன.1 வரை விடுமுறை அறிவிப்பு

By DIN  |   Published on : 23rd November 2017 08:30 AM  |

சென்னை: பொறியியல் மாணவி தற்கோலை கண்டித்து மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதன் எதிரொலியாக சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கு ஜன.1 வரை விடுமுறை அறிவித்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம்.

சென்னை அருகே தனியார் சத்யபாமா பொறியியல் கல்லூரி மாணவி புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டதை அடுத்து ஆத்திரமடைந்த மாணவ, மாணவியர் கல்லூரி, விடுதிகளில் உள்ள பொருள்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் ஸ்ரீலிங்கபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா ரெட்டி மகள் துருவ ராகமௌனிகா (19), சென்னை செம்மஞ்சேரி தனியார் பொறியியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவி. கல்லூரி விடுதியில் புதன்கிழமை மௌனிகா தனியாக இருந்தாராம். நண்பகல் வகுப்பு முடித்து வந்த மாணவிகள், மௌனிகா அறையில் தூக்கிட்டு இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். செம்மஞ்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில், மௌனிகா கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் காப்பியடித்ததாகவும், அதை ஆசிரியர்கள் கண்டித்ததால் மனமுடைந்து காணப்பட்டது தெரியவந்தது.

தகவல் அறிந்த கல்லூரி மாணவ, மாணவியர் வகுப்பறைகள் மற்றும் விடுதியில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் அப்பகுதிக்குச் சென்று தீயை அணைத்தனர். அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அப்பகுதியில் போடப்பட்டது.

இந்நிலையில், சத்யபாமா பொறியியல் கல்லூரிக்கு வரும் ஜனவரி 1-ஆம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக டிசம்பர் 6-ஆம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று பிறகு விடுமுறை அளிக்கப்படும். இப்போது வன்முறை காரணமாக முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கல்லூரிக்கு வந்த மாணவர்கள் இன்று பாதியிலேயே அனுப்பி வைக்கப்பட்டனர். ஜனவரி 2-ம் தேதி முதல் மீண்டும் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. 
யார் இந்த அன்புசெழியன்?

Published : 22 Nov 2017 18:48 IST

இணையதள செய்திப் பிரிவு



அன்புசெழியன் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் மதுரையிலிருந்து தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருபவர் என்று சொல்லலாம். தயாரிப்பாளர் ஒருவருக்கு பைனான்ஸ் தேவைப்பட்டால், அன்புசெழியனைத் தொடர்பு கொண்டால் போதும். உடனடியாக எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும், ரொக்கப் பணமாக வந்துவிடும் என்று சொல்லப்படுவதுண்டு.

இது குறித்து திரைத்துறையினர் சிலரிடம் விசாரித்தோம். அப்போது அவர்கள் கூறியதாவது:


''அன்புசெழியன் பணம் கொடுக்கக்கூடிய சமயத்தில் 3% வட்டி என்று கூறிவிடுவார். ஆனால் ஒப்பந்தம் எதையுமே போட்டுக் கொள்ளாமல், வெற்றுப் பத்திரத்தில் மட்டும் கையெழுத்திட்டுக் கொள்வார். 'உங்கள் மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது. ஒன்றும் பிரச்சினையில்லை பார்த்துக் கொள்ளலாம்' என்று கூறி வெற்றுக் காசோலை ஒன்றையும் வாங்கிக் கொள்வார். அன்று முதலே உங்களது படம் சம்பந்தப்பட்ட அனைத்தையுமே அன்புசெழியன் தான் முடிவு செய்வார்.

ஒரு மாதம் வட்டி கொடுக்க தாமதமானால் கூட, வட்டிக்கு ஒரு வட்டி போட்டுவிடுவார். ஒரு கட்டத்தில் உங்களால் வட்டி கட்ட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டவுடன் "உங்கள் படத்தை நானே வெளியிடுகிறேன்" என்று கூறி, படத்தின் விநியோக உரிமையை எழுதி வாங்கிக் கொள்வார். அந்த விநியோக முறைக்கு ஒரு கமிஷனும் போட்டுக் கொள்வார். பணம் கேட்டு வரும் மற்றொரு தயாரிப்பாளரிடம் "ஒரு படம் பார்த்தேன். அற்புதமாக இருக்கிறது. நீங்கள் வெளியிட்டால் கண்டிப்பாக வெற்றிதான்" என்று கூறி அவரிடம் படத்தையும் கொடுத்து கமிஷன் வாங்கிக் கொள்வார். அப்படத்தை விளம்பரப்படுத்துவதற்கு பணம் கொடுத்து, அதற்கும் வட்டி போட்டுக் கொள்வார்.

ஒவ்வொரு தயாரிப்பாளராக தன்னுடைய வட்டிக்கு அடிமையாகிக் கொண்டே செல்ல, இறுதியாக விநியோகஸ்தராகவும் உருவானார்.

மதுரையில் ஒரு படம் வெளியாக வேண்டுமானால், அது இவரால் மட்டுமே முடியும் என்று சூழல் வந்தது. அங்குள்ள அனைத்து திரையரங்குகளுமே இவருடைய கைக்குள்தான். இவருடைய பேச்சுக்கு கட்டுப்படாத திரையரங்குகளுக்கு பெரிய நடிகர்களின் படங்கள் கொடுக்கப்படாது. இதனாலே அனைவரும் இவரைத் தெய்வமாக பேசத் தொடங்கினர். ஆனால், அவரால் வரும் ஆபத்துகளை அவர்கள் அறியவில்லை'' என்றார் ஒரு விநியோகஸ்தர்.

வட்டி வாங்கும் விதத்தில் அன்புசெழியனின் ஸ்டைல் அதிர்ச்சியாகவும் அதிரடியாகவும் இருக்கும் என்று ஒரு திரை பிரமுகர் விரிவாகச் சொன்னார்.

''தமிழ் திரையுலகில் ஏ.வி.எம்.சரவணன், ஆர்.பி.செளத்ரி, ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே எவ்வித பைனான்ஸும் வாங்குவதில்லை. மற்ற அனைவருமே யாரிடமாவது பைனான்ஸ் வாங்கித்தான் படமே தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர்களாக மாறிய நடிகர்களுக்கு கடன் கொடுத்து வட்டி கட்ட முடியாமல் போனபோது, என் நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்துக் கொடுங்கள் என்று கூறிவிடுவார். அப்படத்திற்கு சம்பளம் கிடையாது, கொடுக்க வேண்டிய பணத்தில் குறைத்துக் கொள்வார். ஆனால், தன்னுடைய நிறுவனத்தில் படம் நடிக்கும் போது கூட, அந்த மாதத்திற்கு வட்டி போட்டுவிடுவார். இது தான் அன்பு ஸ்டைல்.

இவருடைய தயாரிப்பில் வெளியான படமொன்றை கார்ப்பரேட் நிறுவனமென்று தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றியது. ஆனால், பணம் கொடுக்கவில்லை. நீண்ட நாட்கள் பார்த்துவிட்டு, காலையில் மும்பைக்கு சென்று மாலையில் மொத்த பணத்தோடு திரும்பியவர் அன்புசெழியன். கார்ப்பரெட் நிறுவனங்கள் என்றாலே ஒருத்தருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றால் அனைவரது ஒப்புதலுடன் கொடுக்க முடியும். அது ஒரே நாளில் நடக்காது. ஆனால் போனவர் பெயர் அன்புசெழியன். அவர் டீல் செய்யும் விதமே வேற மாதிரி இருக்கும்'' என்றார்.

அன்புசெழியன் மட்டுமல்ல, அவர் தம்பி அழகரும் இதில் முக்கியப் புள்ளி என்றார் ஒரு தயாரிப்பாளர்.

''வட்டி கட்ட முடியாமல் தயாரிப்பாளர்கள் எதிர்த்து பேசத் தொடங்கிய போது மட்டுமே அன்புசெழியனின் தம்பி அழகர் தலை காட்டுவார். அழகரின் ஸ்டைல் என்பது ஆவேசம் காட்டுவது, தயாரிப்பாளர்களின் வீட்டுக்குச் சென்று பெண்களை மிரட்டுவது, தயாரிப்பாளர்களின் அப்பா - அம்மாவை பயமுறுத்தியவது என நீளும். இதற்குப் பயந்து மீண்டும் தயாரிப்பாளர்கள் அன்புசெழியனை சந்திக்கச் செல்வார்கள். அப்போது "ஒன்றும் பிரச்சினையில்லை. வட்டி அதிகமாகிவிட்டது. மற்றொரு படக்குழுவை இறுதி செய்யுங்கள். இப்படத்திலுள்ள வட்டியை எல்லாம் அப்படத்தில் இணைத்துக் கொள்கிறேன். அப்படத்திற்கும் பைனான்ஸ் தருகிறேன்" என்று இனிப்பாகப் பேசுவார்.

இதற்கு மயங்கிய சில தயாரிப்பாளர்களும் செய்வார்கள். மீண்டும் வட்டி, அதற்கொரு வட்டி என மீளமுடியாத கடனுக்கு தள்ளப்படுவார்கள். அப்போது தம்பி அழகரை விட்டு மிரட்டி, அவர்களிடம் உள்ள மொத்த சொத்துகளையும் எழுதி வாங்கிவிடுவார். அப்போது கூட இந்த சொத்துகள் எல்லாம் அசலுக்கு ஒகே. வட்டிக்கு? என்ற கேள்வியை போட்டுவிட்டு செல்வார். வாழ்க்கை முழுவதும் நீங்கள் அன்புசெழியனுக்கு வட்டிகட்ட வேண்டும்.

விநியோகஸ்தர் கூட்டமைப்பிலும் அன்புசெழியனின் ஆட்களே இருப்பதால், பிரச்சினை என்று எங்குமே செல்ல முடியாது. அரசியல் மற்றும் காவல்துறை என எங்குமே அன்புசெழியனின் கை ஒங்கியே இருக்கும். ஒருமுறை காவல்துறையில் இவரைக் குறித்து புகார் அளித்துவிட்டு வெளியே வந்தவருக்கு தொலைபேசி வாயிலாக 'என்ன சார்.. புகார் கொடுத்திருக்கீங்களா?' என்று கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்'' என்றார் அந்தத் தயாரிப்பாளர்.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக அன்புசெழியனிடம் தான் பைனான்ஸ் வாங்கி படம் தயாரித்து வந்தார்கள். 'உத்தமவில்லன்' திரைப்படம் கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அப்படம் வெளியீட்டு பஞ்சாயத்து நடைபெறும்போது, அன்புவின் வட்டி கணக்கைப் பார்த்து ஆடிப் போய்விட்டார் லிங்குசாமி. 'ரஜினி முருகன்' படத்தைப் பார்த்துவிட்டு, படம் நன்றாக இருக்கிறது. கண்டிப்பாக வெளியிட்டு உங்களுடைய பணத்தில் குறைத்துக் கொள்ளலாம் என்று கூறி வெளியிட்டார். படமும் மிகப்பெரிய வெற்றி. ஆனால், அதற்குப் பிறகு அன்புசெழியனிடமிருந்து இதுவரை எந்தவொரு கணக்குகளுமே வரவில்லை.

'ரஜினி முருகன்' வெற்றிக்கு கண்டிப்பாக லிங்குசாமி கொடுக்க வேண்டிய பணத்தில் சுமார் 70% கழிந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். கடன் அப்படியே இருக்கிறது. 'இடம் பொருள் ஏவல்' உள்ளிட்ட அவருடைய எந்தவொரு தயாரிப்பு படத்தையுமே வெளியிட முடியாமல் தவித்து வருகிறது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.

இதற்கு என்ன காரணம் என்று விசாரித்த போது, ''எனக்கு இவ்வளவு பணம் தர வேண்டும் என்று லேப்பில் அன்புழெசியன் குறிப்பிட்டு வைத்திருக்கிறார். அவரிடமிருந்து தடையில்லா சான்று வாங்கினால் மட்டுமே படம் வெளியாகும். பெரிய நடிகர்களிடம் படம் தயாராகும் போது, தயாரிப்பாளருக்கு பணம் தேவையே இல்லாவிட்டால் என்றாலும் கூட, அன்புசெழியனிடமிருந்து போன் வரும். பணம் வாங்கினால், படம் தயாராகி ஃபர்ஸ்ட் காப்பி எடுக்கும் வரை எந்தவொரு பிரச்சினையுமே செய்ய மாட்டார்.

படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கும் போதுதான், அன்புசெழியனின் வட்டிக்கணக்கு வரும். அப்போது தான் அவருடைய விஸ்வரூபம் தெரியும். இந்த வட்டிக்கு மதுரை ஏரியா, இந்த வட்டிக்கு தொலைக்காட்சி உரிமை, இந்த வட்டிக்கு வெளிநாட்டு உரிமை என எழுதி வாங்கிக் கொண்டு இறுதியாக தயாரிப்பாளரின் கையில் ஒன்றுமே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்'' என்றார்கள்.

தற்போது தமிழ் திரையுலகில் அன்புசெழியனிடம் மாட்டிக் கொண்டு பல்வேறு தயாரிப்பாளர்கள் தத்தளித்து வருகிறார்கள். தமிழ் திரையுலக சங்கங்களும், பைனான்ஸியரை எதிர்த்து எப்படிக் குரல் கொடுப்பது என்று அமைதியாகி விடுகின்றன. இந்த அமைதி பல ஆண்டுகளாக நீடித்து வந்ததால்தான் 2003-ம் ஆண்டில் மணிரத்னம் சகோதரர் ஜி.வி. தற்கொலை செய்துகொண்டார். ஜி.வி. தற்கொலையின் போதே அன்புசெழியனின் பெயர் அடிபட்டது. அதை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டதாலோ என்னவோ இப்போது இன்னொரு உயிர் பலியாகி இருக்கிறது.

அன்புசெழியனின் பிடியில் 60க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடமுடியாமல் உள்ளதாக சொல்லப்படுகிறது.

NEWS TODAY 07.07.2026